பவள சங்கரி

நேர்காணல் – திருமதி வசந்தா சுத்தானந்தம்

கணவரின் படத்தின் முன் பணிவாக வணங்கி அன்றைய பணிகள் செவ்வனே நடைபெற அவர்தம் ஆசியும் வேண்டி அவருடைய இருக்கையில் அமர்ந்த மறு நிமிடத்திலிருந்து சுறுசுறுப்பாகத் தம் பணிகளைத் துவங்கியவர், இடையிடையே ,

திடீரென ஒரு நாள் இப்பணிச் சுமையை எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தது? என்ற நம் கேள்விக்கு அவ்வப்போது பதிலும் அளித்துக் கொண்டேயிருந்தார். ஈரோடு எம்.பி. என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளர், திருமதி வசந்தா சுத்தானந்தம்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

மகாகவியின் நற்சிந்தையை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ நினைத்தால் வாழ்க்கை பூஞ்சோலையாகும் அன்றோ? வாழ்க்கை என்பது வெறும் மலர் மஞ்சம் அல்ல. கல்லும், முள்ளும் நிறைந்த தோட்டம். அதில் அவ்வப்போது அழகிய வண்ண மலர்களும் மலர்வதுண்டு. மலரும் மலர்களின் மணம் வீசும் போது மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும், இருப்பது போன்று கல்லும், முள்ளும் கடக்கும் போது வலியும், வேதனையும் கடந்து வர வேண்டியும் இருக்கும். இப்படியே மாறி, மாறி வரும் வாழ்க்கையில் அவ்வப்போது வீசும் புயற்காற்றிலும், காட்டு வெள்ளத்திலும் எதிர் நீச்சல் போடக்கூடியவர்களே வெற்றியாளர்களாகிறார்கள்!

சுகமாக உண்டு, உறங்கி, கணவனின் பணிவிடைகளைக் கடமையாகக் கொண்டு காலம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென புயல் வீச ஆரம்பித்தால் அதை எதிர் கொள்ளும் துணிவு எங்கிருந்து வரும்? தென்றல் வீசும் போதே, புயலையும் எதிர்நோக்கி மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டுமோ? அப்போதுதான் புயலிலும் துவண்டு வீழ்ந்து விடாமல் நிலைத்து நிற்க இயலும் அல்லவா.

வாழ்க்கையில் போராடி , அடி மட்டத்திலிருந்து , சிறுகச் சிறுக உயர்ந்து மேல் நிலைக்கு வந்து, சாதனைகள் பல புரிந்து கொண்டிருக்கும் வேளையில் விதியின் விளையாட்டு தன் கோர முகத்தைக் காட்டும் போது உடன் இருப்பவரின் கதி என்னவாகும். அப்படித்தான் ஒரு சாதாரண வியாபாரியாகத் தன் வாழ்க்கையைத் துவக்கிய திரு சுத்தானந்தன் , தம் கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும், பல்வேறு சாதனைகளும், செய்து கொண்டிருந்தாலும், கல்விப்பணியில் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. மூன்று மேல் நிலைப்பள்ளிகள், மூன்று இளநிலைப்பள்ளிகள் மற்றும் இரண்டு பொறியியல் கல்லூரிகள் என அனைத்தையும் நன்முறையில் நிர்வகித்து, சமுதாயப் பணியிலும் சிறந்த சேவையும், உண்மையான அக்கறையும், இளந்தலைமுறையினரின் வளர்ச்சியில் ஊக்கமும், உறுதியும் கொண்டிருந்த நல்மனம் படைத்த ஒரு மனிதர்.

சமுதாயப் பணிகள், பொதுச் சேவைகள் என்று வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டவர் , பயணத்திலேயே பல நாட்களை கழிக்க வேண்டிய தேவையும் இருந்தது. ஒரு நாள் அப்படி மனைவியின் கையால் தாம் விரும்பிய தக்காளி சட்னியும், இட்லியும் வாங்கி உண்டு, பல முறை அதைப் பாராட்டியும் விட்டு, போய் வருகிறேன் என்று என்றும் இல்லாத திருநாளாக அன்று மட்டும் மூன்று முறை சொல்லிச் சென்றவர் திரும்பி வந்த நிலையே வேறு. ஆம் வழியனுப்பிவிட்டு அடுத்த நாளே மனதிற்குள் தன்னையறியாமல் ஏதோ பாரம் அழுத்திக் கொண்டேயிருக்க, ஆண்டவரிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும் என்று கோவிலுக்கும் சென்று பூசைகள் செய்துவிட்டு வந்து, அதில் கிடைத்த நிம்மதியில் உறங்கச் சென்ற மனைவிக்கு நடு இரவில் வந்து வாயிற்கதவை தட்டி உடன் பிறந்தோர்கள் ஒட்டு மொத்தமாக வந்து நிற்க, ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்திருக்கிறார் திருமதி வசந்தா சுத்தானந்தம். ஆம், மதுரை சென்று ஒரு கூட்டம் முடித்துவிட்டு காரில் வீடு திரும்புவதற்காக ஏறி அமர்ந்தவர், அடுத்த 10 நிமிடத்தில் எப்.எம் வானொலி கேட்பதற்காக, திருகியை , திருகியிருக்கிறார், அப்படியே தலை சாய்ந்திருக்கிறது. ஓட்டுநர், தலைவர் மயங்கி விட்டார் என்று நினைத்து உடனே நேரே அருகில் உள்ள மருத்துவ மனைக்கு வண்டியை செலுத்தியிருக்கிறார்.

அங்கு அவரைச் சோதித்த மருத்துவர், உயிர் பிரிந்து விட்டது என்று கூறிவிட்டனர், மாசிவ் அட்டாக் என்றெல்லாம என்னென்னவோ காரணம் சொன்னாலும், போன உயிரை மீட்கும் சக்தி ஒருவருக்கும் இல்லையே , புராணக் கதைகளின் நாயக, நாயகியரைப் போன்று! உறவினர்களுக்கு விசயத்தைத் தெரியப்படுத்தவும், தனியாக வீட்டில் இருக்கும் மனைவியிடம், நன்றாகச் சென்ற கணவர் இப்போது உயிரற்ற உடலாகத் திரும்பப் போகிறார் என்று நடு இரவில் கூப்பிட்டுச் சொன்னால் எந்த மனைவியால் தாங்கிக் கொள்ள முடியும். அதனால், உறவினர்கள் ஒன்று கூடி முதலில் வந்து விசயத்தை பக்குவமாகச் சொல்லி , அவர் உடல் வருவதற்குள் அவரை தயார் செய்திருக்கின்றனர்… இப்படி ஒரு சூழலை கனவிலும் நினைத்துப் பார்க்காத திருமதி வசந்தா, அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே பெரும்பாடு பட்டிருக்கிறார்.

காலங்கள் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லையே! உறவினர்கள் சில நாட்கள் உடனிருந்து, செய்ய வேண்டிய காரியங்களை முடித்து விட்டு கிளம்பிய பிறகுதான், தனிமையின், வெறுமை உரைத்திருக்கிறது. ஆறுதல் பெற குழந்தையும் இல்லாத நிலையில் , தனிமையும், சோகமும் மனதை அழுத்த, இப்படியே காலத்தை ஓட்டுவதைவிட, கணவரின் பணிகளில் சிலவற்றையாவது எடுத்து செய்தால், மனதிற்கும் அமைதி கிடைக்கும், அவருடைய ஆன்மாவும் வாழ்த்தும் என்ற எண்ணம் மேலோங்க, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த இடத்தில் தான், தான் ஒரு பெண் என்பதால் எந்த அளவிற்கு அதிகமாக போராட வேண்டியிருந்தது என்பதை நினைவுகூர்ந்து பெருமூச்சை வெளிப்படுத்துகிறார்.

ஏற்கனவே ஒரு மேல்நிலைப்பள்ளியை எடுத்து நடத்திய அனுபவமும், 35 குழந்தைகளுடன் ஆரம்பித்த பள்ளியை, 870 குழந்தைகள் படிக்கக்கூடிய பள்ளியாக, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைப்பில் செய்த பெருமை இருந்தாலும், இடையில் குடும்பத்தில், பெற்றோர் மற்றும் நாத்தனாரின் (கணவரின் சகோதரி) உடல் நிலை காரணமாக வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் எற்பட, இன்று வீட்டில் இருக்கும் பெண்ணால் என்ன சாதிக்க முடியும், நிர்வாகப் பொறுப்பேற்பதெல்லாம் சாமான்ய காரியமல்ல, ஆண்கள் செய்வதே பெரும்பாடு என்றெல்லாம் முட்டுக்கட்டை போட, எப்படியோ நல்மனம் கொண்டோரின் உதவியுடன் எதிர்நீச்சல் போட்டு, போராடி இன்று ஈரோடு எம்.பி.என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும், செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் உப தலைவர், செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மகளிரணி தலைவி , ரோட்டரி சங்கத்தின் இன்னர் வீல் கிளப்பின் உப தலைவராகவும், செங்குந்தர் கல்விக் கழகம் – மொட்டையப்பா இளநிலை பள்ளியின் உப தலைவராகவும், இப்படி பல்வேறு பொறுப்புகளைச் சுமந்து கொண்டு, அவைகளை பம்பரமாகச் சுழன்று திறம்பட நடத்திக் கொண்டு , பெண் நினைத்தால் எதையும் சாதிக்க வல்லாள் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் திருமதி வசந்தா சுத்தானந்தம். அவர் பணி மேலும் நல்ல முறையில் தொடர, நாமும் வாழ்த்துவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனதில் உறுதி வேண்டும்!

  1. “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வாக்குக்கு ஏற்ப
    திருமதி வசந்தா சுத்தானந்தம் அவர்கள் செயல்படுவது பெண்களுக்கு
    மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டுதான்! தென்காசி
    அருகே உள்ள ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் ஸ்தாபகர்
    திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு விபத்தில் ஏற்பட்ட பாதிப்பில்
    இடுப்புக்குக் கீழே அவயங்கள் செயல் படாத நிலையில் அவரை
    சித்ரா என்ற பெண்மணி துணிந்து திருமணம் செய்து கொண்டு
    அவருடைய தொண்டுக்கு உறுதுணையாக இருப்பதோடு ஒரு
    பள்ளியையும் நடத்திக்கொண்டிருக்கிறார். அமர் சேவா சங்கத்தின்
    செயலர் சங்கரராமன் அவர்களும் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.
    இவர்களின் செயல்பாடுகளை எண்ணிப் பார்த்தால் நாம் திறனாளிகள்
    என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படமுடியாது என்பதே உண்மை.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *