சாந்தி மாரியப்பன்

என் ஒற்றைச் சொல்லொன்று

உரசிப் பார்த்ததால்

கொப்பளித்துத் துப்பிய

உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம்,

இதழோரம் கசியவிட்ட

தேய்பிறைப் புன்னகை மூலம்

கழுவிச் சுத்தப் படுத்த முயன்று,

இன்னும் அழுக்காகி நிற்கிறாய்.

மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும்

உன் பேதமை எழுப்பிய

அவநம்பிக்கை அலைகளில்

கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து

காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ

ஆட்டத்திலிருந்து

நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே..

உன் மனப்பூட்டைத்

திறந்த சாவி

இப்போதேனும் கிடைத்ததேயென்ற பூரிப்புடன்

அகல விரித்த என் கைகளில்

நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின்

நிர்மலமான நீல வானில்

இறக்கையற்றுப் பறக்கிறோம்

நானும்

என் தக்கை மனசும்,

விடுதலையைச் சுவாசித்தபடி

 

படத்திற்கு நன்றி: http://stockfresh.com/image/828729/hand-holding-heart-shape-cloud-and-blue-sky

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “விடுதலையைச் சுவாசித்தபடி

  1. சிந்திக்க வைக்கிற கவிதை…வாழ்த்துக்கள் உங்கள் படைப்பிற்கு..கடைசி வரியில் சுதந்திரம் என்று சொன்னாலும், ஒரு உறவு முறிந்த வலி லேசாகத் தெரிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *