தலையங்கம்

இரக்கமற்ற செயல்!

தலையங்கம்

பவள சங்கரி

மருத்துவம் என்பது மற்ற பணிகளைப் போன்று அல்லாமல் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டியது என்பது அவர்கள் படித்துப் பட்டம் பெறும் போது அளிக்கப்படும் உறுதிமொழியிலேயே உறுதி செய்யப்படுகிறது. அந்தச் சேவை மனப்பான்மை மட்டுமே மருத்துவர்களை , பாதிக்கப்பட்ட நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் கடவுளாகவே பார்க்கத் தோன்றச் செய்வதும் சத்தியமான உண்மை. அப்படிப்பட்ட சேவையைச் செய்பவர்கள் தங்கள் கடமையையை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமல்லவா?

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமி என்ற , சுபம் கிளீனிக் என்ற தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரின் படுகொலை சம்பந்தமாக , நால்வர் கைது செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில், இச்சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தமும், இன்று தனியார் மருத்துவர்களும் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்வது மனிதாபிமானமற்ற செயல். நோயாளிகளும், முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் , எவ்வளவு சிரமத்திற்குள்ளாவார்கள் என்பது அவர்கள் அறியாததா? உயிர் என்பது அனைவருக்கும் முக்கியம் அல்லவா? ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர் ,அதுவும் அவர் மீதும் தவறு இருப்பதாக தெரியவரும் வேளையில், உறவினர்கள் உணர்ச்சிவசத்தில் செய்த தவறுக்கு , நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கப்போகும் சூழலில் மருத்துவர்கள் தங்கள் ஒற்றுமையை காட்டவேண்டிய தருணமாக இதை எடுத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்வது முற்றிலும் நியாயமற்ற செயல். ஒரு உயிர் போனதற்கு பல உயிர்களை பணயம் வைப்பது எப்படி நியாயமாகும்?

அதுவும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும், வெளியூர்களிலிருந்து, நோயுடன், மிகுந்த சிரமத்திற்கிடையில் மருத்துவமனை வருகிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் வேலை நிறுத்தம் என்று உட்கார்ந்து கொண்டிருந்தால் அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு? சக மருத்துவருக்கு நேர்ந்த படுகொலை குறித்த ஆவேசம் கொள்வதில் அர்த்தம் இருந்தாலும், மற்ற உயிர்களுக்கும் அதே மரியாதை கொடுக்க நினைக்க வேண்டுமல்லவா? சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கோர விபத்தில் , 90 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்காக இந்த மருத்துவ உலகம் எந்த வருத்தமும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்ட அந்த விபத்தைக் கண்டித்து, குறிப்பிட்ட அந்த மருத்துவமனை மீது எந்த எதிர்ப்பும் காட்டவும் இல்லை. படித்தவர்கள் செய்கிற நல்ல காரியமா இது?

மருத்துவமனைகளில் அன்றாடம் எத்தனையோ உயிர் இழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தனைக்கும் இது போன்றா சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது? சத்தமில்லாமல் உறவினர்கள் திரும்பிச் சென்று கொண்டுதானே இருக்கிறார்கள். ஏதோ சிலநேரங்களில் உணர்ச்சிவயப்பட்ட சிலரால் இது போன்று தவறுகள் நடக்கும் போது அதைக் கண்டிக்க காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கும் போது இவர்களுடைய வேலை நிறுத்தம் தேவைதானா என்பதே மக்களின் கேள்வி. அரசு மருத்துவமனைகளில் குறித்த நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதலால் எத்தனை அவசர நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சில கிராம மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகள் வரும்போது ,போய் அழைத்து வர வேண்டிய நேரத்தில் ஒரு சில மணி நேரங்களாவது அந்த நோயாளிகள் வேதனையில் துடிப்பதும், அதனால் உயிரிழப்பு கூட நேர்வதும் சகஜமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது. அது போன்ற செய்திகள் வெளிவரும் போது கண்டு கொள்ளாமல் மெத்தனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவ உலகம், இன்று ஒரு மருத்துவருக்கு, அதுவும் தனியார் மருத்துவமனை மருத்துவர், இஎஸ்ஐ தலைமை மருத்துவர் என்ற காரணம் மட்டும் கொண்டு, ஒட்டு மொத்த அரசு மருத்துவர்கள் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு வருவதும், பொது மக்களை அதுவும் பரிதாபமான நோயாளிகளைப் பழி வாங்குவதும் அரக்கதனாமான செயல் அல்லவா?

எத்துனை தவறான சிகிச்சைகள் காரணமான மரணங்கள், காலந்தாழ்ந்த சிகிச்சை மற்றும் பணத்திற்காக உயிரைப் பணயம் வைக்கும் கொடுமை எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. சக மருத்துவரின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்பதில் தவறில்லை என்றாலும், அதற்கான முறை வேலை நிறுத்தம் அல்ல. இதனால் மேலும் பல உயிர்கள் இழப்பிற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்போது உயிருக்கு உயிர் என்ற பழி வாங்கும் எண்ணம் மருத்துவத் தொழிலுக்கு அழகல்ல. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற , வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. Avatar

  துயர்துடைக்கும் மருத்துவர்கள்,
  மக்களைத்
  துயருறச் செய்வதைத்
  துணிச்சலாய்த் தட்டிக்கேட்கும்
  தரமான தலையங்கம்…
  தொடரட்டும்…!
         -செண்பக ஜெகதீசன்…

 2. Avatar

  well said madam !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க