செய்திகள்பொது

சாரல் விருது விழா – செய்திகள்

ஜனவரி – 7, சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேயப்பாவணர் அரங்கத்தில் விளம்பரப்பட உலகின் முன்னனி இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியின் தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சாரல் விருது இவ்வருடம் எழுத்துலகின் முன்னனி எழுத்தாளர்களான திரு. வண்ணநிலவன் மற்றும் திரு. வண்ணதாசனுக்கு
வழங்கப்பட்டது.

இவ்விருது சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க விருது சிற்பமும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது.

எழுத்தாளர் திரு. வண்ணநிலவனின் “எதையேனும் சார்ந்திரு” பாடலோடு விழாவை திரு. ரவிசுப்ரமணியன் அவர்கள் தொடங்கினார்.

இயக்குநர் திரு. ஜேடி தனது வரவேற்புரையில், கல்லூரி நாட்களில் இருந்தே வண்ணதாசனும், வண்ணநிலவனும் எங்கள் விருப்பத்திற்குறிய எழுத்தாளர்கள் ஆனார்கள். கம்மா நதியும், ரெயினிஸ்
அய்யர் தெருவும், கலைக்க முடியாத ஒப்பனைகளும், வீட்டிற்கு வெளியே சில பூக்களும் தந்த அனுபவம் மிக அதிகம்.. வாழ்க்கையை, அதன் வீரியத்தை, எளிய சந்தோஷத்தை, உறவின் மீதான அளப்பரிய நம்பிக்கைகளை கற்றுத்தந்தன இந்த கதைகள். அவர்கள் காட்டிய கதைமாந்தர்கள், மனதில் ஏற்படுத்திய பிம்பங்கள். நினைவில் தங்கி எத்தனையோ சமயங்களில், வேறு வேறு படைப்பாக வெளிவந்திருக்கிறது. நன்றிகள் சொல்ல இது சரியான தருணம் என்றும்
நெகிழ்ந்து பேசினார்.

மூத்த எழுத்தாளர் திரு. பா. ஜெயப்பிரகாசம் பேசும்போது இவ்விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை மிகச்சரியானவர்களை தேர்ந்தெடுத்து விருது அளிப்பதாகவும் கூறினார். திரு. நாஞ்சில் நாடன் பேசும்போது, வண்ணநிலவன் மற்றும் வண்ணதாசன் அவர்களின் வருகைக்குப்பிறகு பத்துவருடம் கழித்துதான், தான் எழுத ஆரம்பித்ததாக கூறினார். அவர்கள் பாதிப்பில் பல கதைகளை எழுதியிருக்கிறேன் என்றும் கூறினார்.

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ன ன் பேசும்பொழுது, இருவரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வளர்ந்தவர்கள் என்றும், இவர் ஒரு கரை என்றால் அவர் மற்றொரு கரை என்றார். வண்ணநிலவனை யானைக்கு ஒப்பிட்டும் வண்ணதாசனை தேருக்கு ஒப்பிட்டும் பேசிய இவர், வண்ணநிலவன் எழுதிவிட்ட இடத்தில் தான் எழுததொடங்கியதாக கூறினார். வண்ணநிலவனின்
எஸ்தர், பதிலில்லாத கேள்விகள் என்று அவருடைய சிறுகதைகளை சிலாகித்து பேசினார்.

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பேசியபொழுது, வண்ணதாசனின் கவிதைகளையும், வண்ணநிலவனின் சிறுகதைகளையும் ஒப்பிட்டு அதிலுள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் குறிப்பிட்டார்.

வண்ண தாசன் இவ்விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இவ்விருது இந்நாள் முதல் தொட்டு என் வீட்டு முகப்பில் அலங்கரிக்கப் போகிறது என்றும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளைக்கு நன்றி கூறினார்.

வண்ண நிலவன் வழக்கம் போலவே மற்றவர்களின் பாராட்டுக்கு, விழாவில் புன்னகையை மட்டுமே பதிலாக தந்து மெளனம் காத்தார்.

இயக்குநர் திரு. ஜெர்ரி தனது நன்றியுறையில், 20 வருடங்களுக்கு முன்பு விமர்சனா என்ற இலக்கிய அமைப்பிற்கு, தான் பொருப்பாளராக இருந்து நடத்தியதை நினைவு கூர்ந்து, அது இப்பொழுது இந்த சாரல் விருதாக உருமாறியிருக்கிறது என்று கூறி விழாவை சிறப்பித்த
அனைவருக்கும் நன்றி கூறினார்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க