தண்டோரா:1 சொட்டு மருந்து
இன்னம்பூரான்
இதனால் சகலமானவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் கூறி, ‘ஒழித்து விட்டோம்’, ‘ஒழித்து விட்டோம்’ என்று மகிழ்ச்சியுடன் கூப்பாடு போட்டு, நல்ல செய்தி ஒன்று சொல்ல வாரேன். எல்லாரும் செவி சாய்த்துக் கேட்கணுங்க. டும்! டும்!
இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற கொடிய முடக்கு வாதத்தை ஒழித்து விட்டோம் என்று ஜயபேரிகை கொட்டுவோம். இப்போதைக்குத் தண்டோரா. ஊருக்கும், உலகத்துக்கும் இந்த நற்செய்தி சொல்லுவோம். வெள்ளிக்கிழமையாக இருந்தால் என்ன? 13ம் தேதியாக இருந்தால் என்ன? நன் நிமித்தங்களே! மூட நம்பிக்கைகளையும் மூட்டைக் கட்டி வைத்து விடுவோம். டும்! டும்!
சிறு துளி பெரு வெள்ளம்! இந்தச் ‘சொட்டு மருந்தின்’ மஹாத்மியம் கேளுங்க, சாமியோவ்! டும்! டும்!
இளம் பிள்ளை வாதம் பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்கும் தொத்து வியாதி. கெட்டுப் போன உணவு, கலங்கிய நீர் மூலமாக, குடலைக் குலைத்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் கொடிய வியாதி. ஆயுசு பூரா முடக்கி விடும், பிழைத்தெழுந்தால், கூட. இதற்கு நிவாரணம் கிடையாது. டும்! டும்! ஆனால், ‘சொட்டு மருந்து’ அதை வராமல் விரட்டி விடும். இந்திய அரசு பல வருடங்களாக, உலகமே வியக்கும் வகையில், 17 கோடிக் குழந்தைகளுக்கு, இதை அளித்தது. இது தான் உண்மை இலவசம். டும்! டும்!
நம் நாடு இந்த சமூகப்பணியை தொடங்கியது, 1970களில். ‘சொட்டு மருந்து’ தொத்திக் கொண்டது, 1995ல். 12 கோடி ரூபாய் நல்ல விதத்தில் செலவழிந்தது, டும்! டும்!
வருடாவருடம் அளித்து வருகிறது. பாமர மக்களிடமிருந்து அபாரமான வரவேற்பு டோய்! லாஸ்ட் கேஸ்: ஜனவரி 13, 2011. ஒரு வருடம் ஆகி விட்டது. இனி வாராது. ஆனால், சாக்கிரதையாக, சுகாதாரமாக இருக்கணும், தம்பி. இந்தியாவின் வெற்றி மாடல், மற்ற நாடுகளுக்கு முன்னோடி.
நன்றி நவிலாமல், முரசு கொட்டலாமோ? தடுப்பூசி மன்னன் எட்வர்ட் அந்தோனி ஜென்னெருக்கு ஜே! இளம்பிள்ளை வாதத்துக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த ஜோனாஸ் எட்வர்ட் ஸாக் அவர்களுக்கும் ஜே! ‘சொட்டு மருந்து’ ஜாம்பவான் ஆல்பர்ட் ப்ரூஸ் சபைன் அவர்களுக்கும் ஜே! பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த பில் கேட்ஸுக்கு நன்றி.
சொல்வதற்குச் செய்திகள் பல உண்டு. படிப்பினைகள் பல உண்டு. சின்னச் சின்ன உத்திகள் உண்டு. கேட்டால் தான் சொல்லுவோம். டும்! டும்! இலவச ஆலோசனையை யார் கேட்பாங்க, சொல்லுங்கோ! டும்! டும்!
(வழக்கமான கேள்வி: தொடரலாமா? விட்றுலாமா?)
