நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியா வளர்ந்து வருகிறது, அதன் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன.  தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது, பல வெளிநாட்டுக் கம்பெனிகள், குறிப்பாக அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் கிளைகளை ஆரம்பித்து இந்தியாவில் பல கணினி வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பையும் நல்ல ஊதியத்தையும் கொடுக்கின்றன என்பது உண்மைதான்.  இப்படிச் சிலருக்கு வருமானம் கூடியிருப்பதால் அதனால் ஏற்படும் நன்மைகள் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஓரளவு போய்ச் சேரும் என்பதும் உண்மைதான்.  ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கை வளப்பட்டு விட்டது என்று சொன்னால் அதை விட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது.  வாழ்க்கை வசதிகள் மட்டுமல்ல, மற்ற பல துறைகளிலும் – தலித்துக்களின் நிலைமை, ஊழல்கள், ஏழைகளுக்கு வைத்திய வசதி கிட்டாமை – இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து ஏழு ஆண்டுகள் ஆகியும் எவ்வளவு தூரம் பின் தங்கியிருக்கிறது என்பதைச் சமீபத்தில் வெளி வந்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

2010-இல் ஒரு லட்சம் ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சியில் 42 சதவிகிதம் குழந்தைகளின் எடை தேவையான அளவிற்கு இல்லையென்றும் 59 சதவிகிதம் குழந்தைகளின் உயரம் தேவையான அளவிற்கு இல்லையென்றும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.  எடை குறைந்த குழந்தைகளின் சதவிகிதம் ஐம்பத்தி எட்டிலிருந்து நாற்பத்தி இரண்டு சதவிகிதமாகக் குறைந்திருப்பது ஓரளவு நல்ல முன்னேற்றம் என்றாலும் இன்னும் நாற்பத்தி இரண்டு சதவிகிதக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பது தலை குனிய வேண்டிய விஷயம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

இது மட்டும்தான் தலை குனிய வேண்டிய விஷயமா?  மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சரின் சொந்த ஊரில் தலித் பையன் ஒருவன் அதே ஊரைச் சேர்ந்த உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்துக் கூட்டிக் கொண்டு ஊரை விட்டுப் போய் விட்டான்.  பெண்ணின் உறவினர்கள் பன்னிரெண்டு பேர் பையனின் தாயை ஒன்றரை மணி நேரம் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  “இதில் என்ன தவறு இருக்கிறது?  கீழ் ஜாதிப் பையன் உயர் ஜாதிப் பெண்ணோடு ஓடிப் போனால் வேறு எப்படி நடந்து கொள்ள முடியும்?” என்று கேட்டிருக்கிறார் அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர்!  இந்தப் பெண்ணை அத்தனை பேர் அடித்துத் துன்புறுத்தியதைப் பலர், அந்தப் பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்களே கூடப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்கிறார்கள்.  ஏனெனில் உயர் ஜாதியினரைப் பகைத்துக் கொண்டால் அவர்களால் அந்த ஊரில் தொடர்ந்து வாழ முடியாதாம்.  இருபத்தைந்து தலித் குடும்பங்களும் நூறு உயர் ஜாதிக் குடும்பங்களும் வாழும் அந்த ஊரில் இம்மாதிரிக் குற்றங்களைக் கிராமத்துப் பஞ்சாயத்தே விசாரித்து விடுமாம்.  ஆனால் இப்போது உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் அந்தப் பஞ்சாயத்து அவர்களில் ஒருவர் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எப்படிப் போக்கும்?  எப்படி நடுநிலை நின்று அந்தக் கீழ் ஜாதிப் பெண்ணைக் காப்பாற்றும்?  போலீஸில் புகார் கொடுத்த அந்தப் பெண் “தலித் இனத்தைச்சேர்ந்த பெண்ணாக நான் இல்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொடுமையை எனக்கு இழைத்திருப்பார்களா?”என்று கேட்கிறார்.‘கலப்புத் திருமணம் பெரிய ஊர்களில் வேண்டுமானால் நடக்கலாம்.  எங்கள் கிராமத்தில் அது நடைபெறுவது சாத்தியமா?  சட்டப்படிக் கலப்புத் திருமணங்கள் நடக்கலாம்தான்.  ஆனால் இன்னும் எங்கள் ஊரில் அப்படி நடப்பது சாத்தியமில்லை’ என்று கீழ் ஜாதிப் பெண்ணின் உறவினர் ஒருவரே கூறியிருக்கிறார்.  அறுபத்து ஏழு ஆண்டுகளாக ஜனநாயகமாகத் திகழும் இந்தியாவில் இன்னும் உயர் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடா?  இந்தியர்கள் எல்லோரும் தலை குனிய வேண்டிய விஷயம்.

கல்கத்தாவில் ஏழைத் தம்பதிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னொரு அநீதி இது.  சேரியில் வாழ்ந்து வந்த ஒரு பெண் இரவு பதினோரு மணிக்கு வீதியிலேயே இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைப் பிரசவித்திருக்கிறாள்.  இரண்டாவது குழந்தையையும் அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் பெற்றெடுத்திருக்கிறாள்.  அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல பல வாடகைக் கார்கள் மறுத்து விட்ட பிறகு ஏதோ ஒரு புண்ணியவான் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டு அங்கு கூட்டிச் சென்றிருக்கிறான். முதலில் சென்ற சித்தரஞ்சன் மருத்துவ மனையில் அந்தப் பெண்ணைச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்.  பின் ஷம்புநாத் பண்டிட் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.இவை இரண்டும் அரசு மருத்துவமனைகள்.  அங்கும் அவளைச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டு முதலில் சென்ற சித்தரஞ்சன் மருத்துவ மனைக்கே செல்லும்படி யோசனையும் கூறியிருக்கிறார்கள்.  அப்படி அந்தப் பெண்ணை அங்கு அழைத்துச் செல்வதற்குள் அந்தப் பெண் இறந்து விட்டாள்.  ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் இவ்வளவு தாமதமா?  இவ்வளவு பாரபட்சமா?  இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் இதற்குத் தலை குனிய வேண்டும்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று இந்தியாவைப் பற்றிப் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் சொல்லியாயிற்று.  இப்போது இன்னொரு ஊழல் செய்தி.  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் செல்லமுத்து என்பவர் மேல் தமிழ்நாடு அரசுப் பதவிகளுக்காகப் பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்குத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கொடுத்து வேலைகளும் வாங்கிக் கொடுத்ததாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.  2010-இல் இவருக்குத் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.  அதன் பிறகு இந்த ஊழல் சமாச்சாரங்களை ஆரம்பித்திருக்கிறார்.  இவர் செய்து வந்த ஊழல்களைத் தமிழ்நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் செயலர் அரசுத் தலைமைச் செயலருக்குத் தெரிவித்திருக்கிறார்.  புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.  இவரிடம் தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்துப் பதவிகள் பெற்ற பலரை விசாரித்திருக்கிறார்கள்.  பலருக்கு வேலையும் கிடைத்திருக்கிறது.   கணினி மூலம் ஊழல் புரிபவர்களை விசாரிக்கும் துறை இந்தப் புலனாய்வை மேற் கொண்டுள்ளது.  விரைவிலேயே அது விசாரணையின் முடிவைச் சமர்ப்பிக்கும்.

இதில் ஒரு கிளைக் கதை.  முன்னாள் கீழவைத் தலைவராக இருந்த காளிமுத்து என்பவரின் தம்பி நல்லதம்பி தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக உமா மஹேஸ்வரி என்னும் பெண்ணிடம் அறுபத்து ஏழு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர் உறுப்பினர் பதவியும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.  அந்தப் பெண்ணோ புகார் கொடுத்த நல்லதம்பி யாரென்றே தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.  போலீஸ் கமிஷனர் திரிபாதி விசாரிக்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்திருக்கிறார்.  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உறுப்பினர் ஆவதற்கே 67 லட்சம் என்றால் தலைமைப் பதவியைப் பெற செல்லமுத்து எவ்வளவு பணம் கொடுத்தாரோ?  தகுதியின் பேரில் இவர்களை நியமித்த காலமெல்லாம் மலையேறி விட்டது போலும்.  இதை விடத் தலை குனிய  வேண்டிய விஷயம் வேறு ஏதாவது இருக்கிறதா?

 

படத்திற்கு நன்றி: http://hindurepublic.blogspot.com/2010/08/should-we-start-armed-revolution.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *