காயத்ரி பாலசுப்ரமணியன் 

மேஷம்: குரு 1-ல். பணியில் உள்ளவர்கள் தங்கள் கடமையைச் சரி வரச் செய்தால், உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்புகள் தேடி வரும். 2-ல் கேது.  மாணவர்கள் படபடப்பான பேச்சு, சில நேரங்களில்   விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுவது புத்திசாலித்தனம். 5-ல் செவ்வாய்.  சுய தொழில் புரிபவர்கள் சில மறைமுக எதிர்ப்புகளைச் சமாளித்துத் தனக்கு வர வேண்டிய தொகையினைப் பெறும் சூழலுக்குத் தள்ளப்படுவர். 7-ல் சனி. பொது வாழ்வில் இருப்போர் பிறரின் தனிப்பட்ட விஷயங்களில்  தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும். 8-ல் ராகு. கலைஞர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் தங்கள் திறமையை வீணடிக்காதிருப்பது நல்லது.  10-ல் சூரியன். பொது வாழ்வில் உள்ளவர்கள், போட்டா போட்டியில்  வெற்றி பெற, அனுபவ அறிவு கை கொடுக்கும். 11-ல் சுக்ரன், புதன். வியாபாரிகள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளைத் தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டுத், தன் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வர்.  

இ(ந)ல்லறம்: பெண்கள் அலுவலகத்தில், ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டைக் கடைப்பிடியுங்கள். நல்ல பெயர் நிலைத்திருக்கும். அத்துடன் பிள்ளைகளுக்குப்,  பணம் தரும் விஷயங்களில் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கவும். 

ரிஷபம்: 1-ல் கேது.  முக்கியமான பொறுப்புக்களைக் கையாள்பவர்கள் தங்கள் வேலைகளைச் சீராகச் செய்யத் திட்டமிட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. 4-ல் செவ்வாய். இந்த வாரம் வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அங்கும், இங்கும் அலைய நேரிடும்.  6-ல் சனி. சுய தொழில் புரிபவர்களுக்கு இது ஏற்ற வாரமாகும். சிறு தொழிலில்   இருப்பவர்களின்  பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும். 7-ல் ராகு. பணி புரிவோர்  இரவலாகப்  பொருள்களைத் தருவதையும், பெறுவதையும், தவிர்த்து விடுங்கள். பாதிப் பிரச்சினைகள் குறைந்து விடும். 9-ல் சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்கள், முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில்,  அவசரப்பட வேண்டாம். நிலைமைக்கேற்றவாறு முடிவெடுப்பது அவசியம். 10-ல் சுக்ரன், புதன். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும். மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள்.  

இ(ந)ல்லறம் : பெண்கள் தங்கள் பிள்ளைகளின்  உடல் நலத்தில் விசேஷக் கவனம் செலுத்தி வந்தால், மருத்துவ செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும், புதிதாய்த் திருமணம்  ஆன பெண்களுக்கு, உறவினர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்புக்கள் வந்து சேரும். 

மிதுனம்: 3-ல் செவ்வாய். சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கி விட்டு வியாபாரிகள் லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களையும் பெறுவர். 5-ல் சனி. பொது வாழ்வில் உள்ளவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது. 6-ல் ராகு. இது வரைத் தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய மாணவர்களுக்குப் பாராட்டு வந்து சேரும்.  8-ல் சூரியன். பணியில் உள்ளவர்கள், உடன் பணி புரிபவர்களிடம்  பணம் கை மாற்றாய் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. 9-ல் புதன், சுக்ரன். கலைஞர்களுக்கு விழா, விருந்து என்று பொழுது போனாலும்,  அவற்றிற்குக் கணிசமான பணமும் செலவழியும். 11-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். 12-ல் கேது. வீடு, மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே தொழிலதிபர்கள் பணத்தை அதில் முடக்க வேண்டாம்.  

இ(ந)ல்லறம்: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லத்திலும், அலுவலகத்திலும் வேலைகள் சுலபமாய் முடியும். இந்த வாரம் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே, பெண்கள் செலவுப் பட்டியலைக் குறைவாக்குங்கள். 

கடகம்: 2-ல் செவ்வாய். இது நாள் வரை சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருந்த வேலையில், சிறிது தேக்க நிலை உருவாகும் வாய்ப்பிருப்பதால், பணியில் உள்ளவர்கள் எந்த வேலையையும் தள்ளிப் போடாதிருப்பது அவசியம். 4-ல் சனி. இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். 5-ல் கேது.  மாணவர்கள் கேளிக்கைக்காக நேரம் செலவழிப்பதைக் குறைப்பது நல்லது. 7-ல் சூரியன். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்,    புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்துச் செயல்படுவது நல்லது. 8-ல்,  சுக்ரன் புதன், வியாபாரிகள் அனுசரித்து நடந்து கொள்ளும் அளவுக்கேற்பக், கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். 10-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்கள் பண விவகாரங்களில் விழிப்போடு இருக்கவும். 11-ல் கேது. கலைஞர்களுக்கு மனதிற்குப் பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். 

இ(ந)ல்லறம்: பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். தேவையில்லாமல்  பிறரிடம் கை மாற்றாகப் பணம் பெற்றுச் செலவழித்தலைக் குறைத்துக் கொண்டால், வீண் தலைவலிகளையும், பிரச்னைகளையும் தவிர்த்து விடலாம். 

சிம்மம்: 1-ல் செவ்வாய். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகளால், கவனம் சிதறும். 3-ல் சனி. சுய தொழில் புரிபவர்களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். 4-ல் ராகு.  வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல், இருந்தாலே பாதிக் கவலை குறைந்து விடும்.   6-ல் சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சிக்கலான வேலைகளைச் சிரமமின்றிச் செய்து முடிக்கும் திறன் பெருகும். 7-ல் புதன், சுக்ரன். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்கு வாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம். 9-ல் குரு. கலைப் பொருட்களை வாங்கி விற்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் ஆதரவால், புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். 10-ல் கேது. கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே  இழுத்தடிக்கலாம்.      

இ(ந)ல்லறம்:  அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். எனவே  நினைத்த காரியம் கை கூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

கன்னி:  2-ல் சனி.  சில நேரங்களில் பங்கு தாரர்கள் வியாபாரிகளை முழுமையாய்ப் புரிந்து கொள்ளாமல் செயல் படலாம். எனவே பண விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. 3-ல் ராகு. கலைஞர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கி, ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர் விட ஆரம்பிக்கும். 5-ல் சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்கள்,  பொறுப்பில் உள்ளவர்கள், சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது புத்திசாலித் தனம்.  6-ல் புதன், சுக்ரன்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், வேலைகளை முடிப்பது சிரமமாய்த் தோன்றாது. 8-ல் குரு. சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால், வர வேண்டிய நிலுவைத் தொகையில் தொய்வு இல்லாமலிருக்கும். 9-ல் கேது. கலைஞர்கள் எந்தச் சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம். 12-ல் செவ்வாய். மாணவர்கள் சுற்றியிருப்பவர்களின் வீண் புகழ்ச்சியில் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருப்பது நலம்.

இ(ந)ல்லறம்: சுயதொழில் புரியும் பெண்கள், இழப்புக்களை நினைத்து வருந்தாமல் முன்னேறிச் சென்றால், வெற்றியும் புகழும் உங்கள் வசமாகும். அத்துடன், குடும்பத்தில், கூட்டு முயற்சி மூலம் மேற் கொள்ளும் காரியங்களில் வீண் விவாதம், அவநம்பிக்கை ஆகியவை குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 

துலாம்: 1-ல் சனி.  பொது வாழ்வில் உள்ளவர்கள், முக்கிய விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காமலிருப்பது புத்திசாலித் தனம். 2-ல் ராகு. பணியில் இருப்பவர்கள் மற்றவருக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்த்து விடவும்.  4-ல் சூரியன்.  வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். 5-ல் சுக்ரன், புதன். உயர்ந்த பதவியில் இருப்பவரோடு, நட்பு பாராட்டும் வாய்ப்பு வரும். எனினும் பொது வாழ்வில் இருப்பவர்கள் கவனமாக இருந்தால், வீண் புரளிகள், தாமே பிசுபிசுத்து விடும்.  7-ல் குரு.  வெளி இடங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய வாய்ப்பு, உதவிகளும் வந்து சேரும். 8-ல் கேது.  பொறுப்பில் இருப்பவர்கள், அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுதல் நலம்.   இல்லை என்றால், நல்ல பெயருக்குப் பங்கம் உண்டாகலாம். 11-ல் செவ்வாய். சிலரின் சூழ்ச்சிகளை முறியடித்துக் கலைஞர்கள் வரும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வர். 

இ(ந)ல்லறம்: பெண்கள் சோர்வுக்கும், சோம்பலுக்கும் இடம் தராமல்  இருந்தால், இல்லத்திலும், அலுவலகத்திலும் வேலைகள் தேங்காமலிருக்கும். பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குமுன் அவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வது அவசியம். 

விருச்சிகம்: ராசியில் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்கள், பகைவரிடமிருந்து விலகி இருந்தால், சங்கடங்களிலிருந்து எளிதில் விடுபட முடியும். சூரியன் 3-ல் இருப்பதால், கணினிப் பயன்பாட்டில் மாணவர்களின்  திறமை மேலும் சிறப்படையும். 4-ல்.  புதன், சுக்ரன். நண்பர்களிடையே இருந்த நெருக்கம் அதிகமாகும். எனினும் பங்குச் சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், எதிலும் ஓர் எல்லைக்குள் இருப்பதே நல்லது. குரு 6-ல் இருப்பதால், பணியில் உள்ளவர்கள், தேவையற்றச் சின்ன விஷயங்களுக்காக அதிகம் பணம் செலவழிக்க நேரிடும். 7-ல் கேது. உங்களின் பலவீனத்தைப் பிறர் சாதகமாக்கிக் கொள்ள இடமளிக்காதீர்கள். 10-ல் செவ்வாய். கலைஞர்கள், கருத்துப் பரிமாற்றத்தில் கடுமை கூடாமல் பார்த்துக் கொண்டால் உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பிருக்கும். 12-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள், சரக்குகளைப் பாதுகாப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். 

இ(ந)ல்லறம்: பெண்களுக்குச் சுப விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்ளுதல், நீண்ட காலம் கழித்து உறவினர்களைச் சந்தித்து மகிழ்தல் ஆகியவைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மருத்துவ உதவியால் மகப்பேறு கிட்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. 

தனுசு: 5-ல் குரு. இது வரை மனதில்  இருந்த கலக்கம், விலகுவதால், சிறு தொழில் புரிபவர்கள், தெளிவான சிந்தனையுடன் களமிறங்குவார்கள். 6-ல் கேது. வியாபாரத்தில் முன்னேற முடியவில்லையே என்று வருந்தியவர்களுக்குப் பொன்னான வாய்ப்புகள் வரும். 11-ல் சனி. அயல்நாடு செல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். 2-ல் சூரியன். பொது வாழ்வில் உள்ளவர்கள், தகுதிக்கு மீறிய செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பது சிறந்தது. 3-ல் சுக்ரன், புதன். நட்பு வட்டம் பலமாக இருந்தாலும், கலைஞர்கள் சக கலைஞர்களின் தனிப்பட்டக் குண நலன்களை விமர்சனம் செய்ய வேண்டாம். செவ்வாய்  9-ல். பொறுப்பில் உள்ளவர்கள், ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகாமல் பார்த்துக் கொண்டால், விரும்பியபடி வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். 12-ல் ராகு.  சேரிடம் அறிந்து சேர் என்பதை மாணவர்கள்  நட்பு விஷயத்தில் கடைப்பிடிப்பது நல்லது. 

இ(ந)ல்லறம்: பெண்கள் விலை உயர்ந்த மின் சாதனங்களைப் பத்திரமாக வைக்கவும். பிள்ளைகளுக்கு அதிகப் பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், விரும்பத் தகாத வழிகளும், வேண்டாத பழக்கங்களும் அவர்களின் வாழ்வைப் பாழாக்காமல் இருக்கும்.    

மகரம்: 11-ல் ராகு. பொது வாழ்வில் உள்ளவர்கள், தடைகளைத் தாண்டி வெற்றிப் பாதையில் வலம் வருவார்கள். 1-ல் சூரியன். மாணவர்கள், தங்கியிருக்கும் விடுதியில்,  பிறரின் உடைமைகளுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்த்து விடுங்கள். பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். 2-ல் புதன், சுக்ரன். கலைஞர்களுக்குச், சில சில்லறைத் தொந்தரவுகள் இருந்தாலும், தொழில் வளம் சீராக இருக்கும். 4-ல் குரு. பூர்வீகச் சொத்துக்களின் பாராமரிப்பில் தனிக் கவனம் செலுத்தி வந்தால், புதிய தொல்லைகள் முளைக்காமலிருக்கும். 5-ல் கேது. பணியில் உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களைப் பகடைக் காயாய் உபயோகிக்க இடம் கொடாமலிருந்தால், அதிக இழப்புகள் இராது. 8-ல் செவ்வாய். மனைகளை வாங்கி விற்பவர்களின், திட்டங்களில் சிறு தேக்க நிலை இருக்கும். 10-ல் சனி. பயணங்களின் போது புதிய உணவு வகைகளுக்கு அருகில் செல்லாமலிருந்தால், ஜீரணக் கோளாறுகள் இல்லாமல் உடல் நிலை சீராக இருக்கும்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம், பெண்களுக்குக்  கடினமான பணி என்றாலும், களைப்பும், சோர்வும் உங்கள் அருகே வராதவாறு ஆரோக்கியத்தைக் கவனிப்பது நல்லது. இல்லத்தில், பிள்ளைகளின் சின்ன பிரச்னைகளை உறவுகள் பெரிதாக்க இடம் கொடாதீர்கள். 

கும்பம்: 1-ல் சுக்ரன், புதன்.  எதிர்ப்புகளுக்கு நடுவே கலைஞர்கள் தங்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி விடுவார்கள். 3-ல் குரு. பணியில் இருப்பவர்கள்  விடுபட்ட சலுகைகளைப் பெறுவதற்காக அதிகம் போராடும் நிலை இருக்கும். 4-ல் கேது.  வாகன வசதியின் குறைவு காரணமாகச் சரக்குகளை அனுப்புவதில், வியாபாரிகளுக்குச்  சில தடைகள் தோன்றி மறையும். 7-ல் செவ்வாய். மாணவர்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல் பட்டாலும், சில சமயம் நல்ல பெயரைப் பெறுவது கடினமாக இருக்கும். 9-ல் சனி. புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். 10-ல் ராகு. பொது வாழ்வில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய்ச் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது அவசியம். 12-ல் சூரியன். சுய தொழில் புரிபவர்கள் இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கி விடும். 

இ(ந)ல்லறம்: பொருளாதாரச் சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். பெண்கள்   பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தென்படும், விரும்பத் தகாத  மற்றும் வேண்டாத மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களைப் புரிந்து கொள்வார்கள். 

மீனம்: 2-ல் குரு. வியாபாரிகள் ஆரோக்கியமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். 3-ல்  கேது.  சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.   6-ல் செவ்வாய்.  கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். 8-ல் சனி.  மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பொது வாழ்வில் இருப்பவர்களின் வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். 9-ல் ராகு. சிறிய சச்சரவுகளைப் பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகச் சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். 11-ல் சூரியன். சரளமான பண வரவால்  சுய தொழில் புரிபவர்களின் கடன் பிரச்னைகள் தீரும். 12-ல் சுக்ரன், புதன்.  பங்குச் சந்தையில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. 

இ(ந)ல்லறம்: பெண்கள், பிள்ளைகளை நல்ல பழக்க வழக்கங்கள் என்னும் பாதை வழித் திருப்பி விட்டால், பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்வார்கள். அலுவலகத்திலும், இல்லத்திலும், பணிகளைப் பட்டியலிட்டுச் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டால், நேரமும், பொருளும் விரயமாவதைத் தடுக்க இயலும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *