தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 24

2

இன்னம்பூரான்

வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது. அதை படித்தவுடன் நினைவில் வந்தது, 1956/57ல் அக்காலத்து சென்னை மாகாண அரசாணை ஒன்றை தணிக்கை செய்தது. அந்த அரசாணை குறிப்பிட்ட நபரின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. அவருடைய சந்ததியின் மனம் புண் படலாகாது என்று அதைச் சொல்ல வில்லை. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. மக்களிடையே நற்பெயர். நல்ல பெர்சனாலிட்டி. மிகவும் அரிதாக உபயோகப்படுத்தும் ஒரு விதியை பயன்படுத்தி, அவரை தடாலடியாக டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அந்த விதிப்படி சில விவரங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். அதில் ஒன்று, அவர் வாங்கிய மாதாந்திர மாமூல் பட்டியல். அதிலிருந்து, மாதிரிக்கு, மூன்று உதாரணங்கள்: இந்த பேட்டை கசாப்புக்கடையிலிருந்து தினந்தோறும் கோழி இரண்டு: இந்தக் கடையிலிருந்து தினந்தோறும் லட்டு ,:ரெளடி ‘முத்து’ விடமிருந்து தினந்தோறும் ஆயிரம் ரூபாய். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், லஞ்சத்தின் ஊற்று, தேவையற்ற பொருள்களின் மீது பேராசை. இன்றைய செய்தியும் அதைத்தான் சொல்கிறது. 122 2ஜி உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதி மன்றமும் அதைத்தான் சொல்கிறது. தணிக்கை அறிவிக்கைகளும் அதைத்தான் சொல்கின்றன.

இரு நாட்களுக்கு முந்திய செய்தியின் சுருக்கம்: முத்திரையிட்ட கவர்களில் பெற்ற ஏலத்தொகை ஆவணங்களை வைத்து, பேத்துமாத்து செய்த வகையில், கன்னா பின்னா என்று போலீஸ்/சுங்க அதிகாரிகள் லஞ்சலாவண்ய பேயாட்டம் புரிந்ததை, பிங்கலி மோஹன் ரெட்டி என்ற வாரங்கல் வாசியான ஒரு சாராய வியாபாரி கொட்டித் தீர்த்து விட்டார். ஒரு பட்டியல்:

6 லக்ஷம் ரூபாய் ஆறு கடைகளுக்கு; இது மேல் மட்டத்துக்கு. மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய், கீழ்மட்டத்தில். நடுமட்டம் தனியாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிப்போகும். கொஞ்சம் உயர் மட்டம், வருடம் இருமுறை கஜினி படையெடுப்பு. சிறப்பு அதிகாரிகள் படை ஒன்று, அவ்வப்பொழுது எம்மை வதைக்க, வந்து சேரும். அவர்களுக்கு 36000 ரூபாய் அழவேண்டும். ஆந்திரப் பிரதேசத்து டாஸ்மாக்கர்கள், அவர்கள் பங்குக்கு கறந்து விடுவார்கள். இது கொடுத்தவரின் சோகக்கதை.

வாங்கியவர்களின் ஒப்புதல் வாக்கு: நடுமட்ட அதிகாரிகளில் இருவர் இதை உண்மையென்றனர். ஒரு கான்ஸ்டபிள் மாமூல் வரலாற்றை ஒப்புவித்தார். ஜூலை 2010ல் ஏலம் விட்டதிலிருந்து பெருமளவு மாமூலம் வாடிக்கை என்றும் சொன்னார்கள். வாரங்கல் மாநிலம் தாண்டி, இரண்டைரைக்கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக ஒருவர் கூறினார். இங்கு சொல்லப்பட்டது ஒரு துளி என்க. பல லஞ்சோஸ்தவர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல். நான் பெயர்களைத் தவிர்த்து விட்டேன். அதுவல்ல பாயிண்ட். அந்த மாநிலத்தை மட்டும் குற்றம் சாற்றுவதிலும் பயனில்லை.

பின்னூட்டத்தில் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதில்: வேலியே பயிரை மேய்ந்தால், அது புற்று நோய் போன்றது.கொளுத்த தான் வேண்டும்.

படத்திற்கு நன்றி:

http://www.telecoms.com/wp-content/blogs.dir/1/files/2011/07/auction-guy.png

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 24

  1. நாட்டுநலன் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் சிந்தித்துத் தெளிய வேண்டிய கருத்துகள்.  

  2. ம்ம்ம், நாட்டு நலனில் பெரும்பாலோருக்கு அக்கறை இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் பூனைக்கு மணி கட்டுபவர் யார்?? அதான் புரியவில்லை.  ஏதோ ஒரு வகையான எழுச்சி தேவைப்படுகிறது.  எப்போது, எங்கிருந்து, யார் மூலம் வரும்? குழப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *