விமலா ரமணி

Vimala Ramaniபிருந்தாவிற்கு ஆச்சர்யம். தன் கணவன் ரவியா இப்படிச் சொல்வது?

“நமக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாப் போகுது… இன்னமும் தேன் நிலவுன்னு ஒரு இடம் உன்னைக்  கூட்டிட்டுப் போகலை… நம் தேன் நிலவு எல்லாம் நம் பெட் ரூமோடு சரி. இப்போ எனக்கு சம்பள உயர்வு கிடைச்சிருக்கு. அரியர்ஸ் எல்லாம் வேற வந்திருக்கு. பேசாம ஒரு வாரம் லீவு எடுத்துட்டு எங்கேயாவது வெளியூர் போய்விட்டு வரலாம். என்ன சொல்றே?“

என்று  ரவி சொன்னபோது இவள் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள்.

”நாளைக்கே நமக்குக் குழந்தை கிழந்தை பிறந்தாலும்…”

”குழந்தை போதும், கிழந்தை எல்லாம் வேண்டாம்”

”சரி சரி, எங்கே போகலாம் சொல்லு”

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லா இடங்களுக்கும் திட்டம் போட்டார்கள்…

”நார்த் எல்லாம் ரொம்ப மோசம்,, எப்பப் பார்த்ததாலும் கலவரம்… ரயில் எல்லாம் சரியான நேரத்திற்கு வராது. நம்ம தென்னிந்தியா போதும்,,”

”மதுரை மீனாட்சி அம்மன கோவில்,,?”

“நாம என்ன ஷேத்திராடனமா போறோம்? இது ஜாலி டிரிப்…”

கடைசியாக கேரளாவில் மழை, கர்நாடகாவில் குழப்பம்… இப்படி ஒவ்வோர் இடமாக ஒதுக்கிக் கடைசியில் ஊட்டியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஊட்டியைப் பார்க்காதவர்களுக்கு அது ஆல்ப்ஸ் மலை தான்…

ஹில் ஸ்டேஷன். ஹனிமுனுக்கு இது போதாதா?

“அப்படியே கோவைக்குப் போய் கோனியம்மனைத் தரிசனம் பண்ணிட்டு மருதமலை போய்…”

“காவடி எடுக்கலாமா? இவ ஒருத்தி… நேரே ஊட்டி தான்… புளூ மவுண்டன்லே போறோம். மேட்டுப்பாளைத்துலே ஊட்டிக்கு பஸ் ஏறுறோம்…”

“எங்கே தங்கறது?”

“எங்க சித்தி ஒருத்தி இருக்கா… கல்யாணம் ஆனதிலே இருந்து கூப்டுட்டே இருக்கா… அங்கே போய்த் தங்கிக்கலாம்”

ரவியைப் பற்றி இவளுக்கு நன்றாகத் தெரியும்… எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்ப்பவன், தலைக்குத் தடவும் தேங்காய் எண்ணெய் வாங்கினால் கூட பாட்டிலில் விட்டு ஒரு நாளைக்கு இவ்வளவு என்று மார்க்கரில் குறித்து வைத்துக்கொள்பவன். அந்த அளவு பார்த்துத் தான் செலவழிப்பான்.

ஆட்டோவை விட பேருந்தில் போனால் மிச்சம் என்று கணக்குப் பார்ப்பவன்… ஒரு அவசரத்துக்குக் கூட தன்  கொள்கையை விட்டுக் கொடுக்காதவன்… சினிமாவிற்குப் போகவே மாட்டான்… அப்படி போனால் கூட குறைந்தபட்ச டிக்கெட் தான்… திரைக்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்வான்…

இல்லையென்றால் நண்பர்கள் செலவில் அப்படியே ஆபீஸிலிருந்து போய் சினிமா பார்த்துவிடுவான்… என்றாவது இவளுக்கு உடம்பு சரியில்லாமல் போய், சமைக்க முடியவில்லை என்றால் ஹோட்டலுக்குப் போய் டிபன் வாங்கி வர மாட்டான்…

“பேசாம நானே சோறு சமைச்சுடறேன்… ஊறுகாய் தொட்டுட்டு சாப்பிட்டுக்கலாம்…” என்பான்.

இப்படிப்பட்டவன் தன் சம்பள உயர்வைக் கொண்டாட, ஊட்டி அழைத்துச் செல்வதே பெரிய விஷயம்.

ஆனால் சித்தி வீட்டில் தங்குவதென்பது…?

,இவர்கள் நினைத்தபோது வெளியே கிளம்ப முடியுமா?

”இதோ பார்… சித்தி வீடு, பெரிய வீடு. எஸ்டேட் மேனேஜர் எங்க சித்தப்பா… கம்பெனி குவார்ட்டர்ஸ் ரொம்பப் பெரிசு. கார் இருக்கு.  ஹோட்டல்லே தங்கினா செலவு… பேசாம அங்கேயே தங்கிக்கலாம். சித்தப்பாவே தன்னோட கார்லே நம்பளை ஊட்டியெல்லாம் சுத்திக் காட்டிடுவார்… எதையும் பிளான் பண்ணிச் செய்தா சரியா ஒர்க் அவுட் ஆகும் ஓகேவா?’

“ஓகே” என்றாள் இவள். வேறு வழி?

பெட்டியில் துணிமணிகளை அடுக்கும் போது கூட இது மாலைக்கு, இது குறிஞ்சி ஆண்டவர் கோவில் போகும் போது, இது பொட்டானிகல் கார்டன்
செல்லும் போது…. என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாள்.

“எதுக்கு இத்தனை டிரஸ்?” என்றான் ரவி.

“நாலு இடம் போகும்பொது தினுசு தினுசா கட்ட வேண்டாமா?”

இத்தனை நாட்கள் வீட்டில் சமையல் அறைக்குள் முடங்கிக் கிடந்தாயிற்று. இப்போது தான் வெளிக் காற்றை சுவாசிக்கப் போகிறாள். இத்தனை நாள்  சமையல் அறையில் நைட்டியுடன் உலா வந்தாயிற்று. அத்தனை வேலைகளை முடிக்கும் வரை நைட்டிதான் இவள் உடலில் இருக்கும். இவள் வேலைகளை முடித்து குளித்து வேறு புடவை அணிவதற்குள் மாலை ஆகிவிடும்… ரவி அலுவலகத்திலிருந்து வருவதற்குள் டிபன் தயாராக வேண்டும்… மறுபடியும் நைட்டி தான்.

இப்போது தான் நல்ல நல்ல புடவைகளை அணியும் நேரம் வந்திருக்கிறது…

அவர்கள் கிளம்பினார்கள்,,,,

இவர்கள் கல்யாணத்திறகு யாரோ அன்பளிப்பாகத் தந்த டப்பா காமிரா ஒன்று,,,

இப்போது டிஜிடல் கேமிரா எல்லாம் வந்துவிட்டது… எடுத்த படங்களை உடனுக்குடன் பார்த்துவிடலாம்… இந்தக் காமிராவில் பிலிம் போட்டு படம் எடுத்து, ஊருக்குத் திரும்பி வந்து லேபில் கொடுத்து, பிரிண்ட் போட்டு, பருவ காலமே மாறிவிடும்… இருந்தாலும் இதுவாவது இருக்கிறதே.

பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து அந்த எஸ்டேட்டைத் தேடிக் கண்டுபிடித்து இறங்கினார்கள்.

ஊட்டி குளிர் சில்லிட்டது.. புடவைத் தலைப்பால் தன்னைப் போர்த்ததிக்கொண்டாள் இவள்.

சித்தி இவர்களை அன்புடன் வரவேற்றாள்…

சித்தப்பா அலுவலகம் போயிரூந்தார்.

“உல்லன் டிரஸ் இல்லாமலா ஊட்டி வந்தீங்க?“

சித்தி அன்புடன் கடிந்துகொண்டாள்.

“முதல் ஷாப்பிங் என்ன தெரியுமா? உங்களுக்கு உல்லன் ஸ்வெட்டர்.“

ரவி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“இங்கே வந்து வாங்கலாம்னு தான் ஊரிலேயே ஸ்வெட்டர் வாங்கல்லை..“

இவளுக்குச் சிரிப்பு வந்தது.

‘என்னங்க மார்கழிக் குளிர் கை காலெல்லாம் விறைச்சுப் போகுது, ஒரு  ஸ்வெட்டர் வாங்கலாமா?’ என்று இவள் கேட்டபோதெல்லாம்,,,

‘உனக்கு நான் ஸ்வெட்டர். எனக்கு நீ ஸ்வெட்டர்’ என்று காதல் வசனம் பேசியே காலத்தைக் கடத்தியவன் இவன்… என்னமாய்ப் பொய் சொல்கிறான்?

சித்தியின் வீடு, மிகப் பெரிய வீடு. வீட்டின் முன் பெரிய லான். இவர்களுக்கு என்று தனி அறை ஒன்றினைச் சித்தி ஒதுக்கித் தந்திருந்தாள்,,,

அன்று தன் அதிர்ஷ்டத்தைப் பற்றிப் பேசிப் பேசியே அவர்கள் பொழுது கழிந்தது. மாலையில் சித்தப்பா, லானின் புற்களை மெஷினால் டிரிம் செய்துகொண்டிருந்தபோது இவனும் கூடச் சென்று உதவினான். இவர்களின் வரவால் சித்தப்பா சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்துவிட்டார்.

சித்தி தடபுடலாய் சமைத்திருந்தாள். இவள் சமையல் அறையில் சித்திக்காக உதவினாள்.

“எதுக்கு சித்தி இத்தனை?“ என்றான் ரவி.

கேசரி, பாதாம்கீர், பிஸிபேளாபாத், தயிர்வடை… எக்கச்சக்க மெனு,,,,

“கல்யாணமாகி முதன் முதலாய் இங்கே வந்திருக்கே. ஈவினிங் என்ன மெனு தெரியுமா? மசால் தோசை… சித்தப்பா வேற சீக்கிரம் வந்துட்டார்… நாளைக்கு வெளியே போய்க்கலாம். இன்னிக்குப் பூரா ரெஸ்ட் தான்”

இவளுக்கு மகிழ்ச்சி ஒரு புறம், கோபம் ஒரு புறம். ஊர் சுத்திப் பார்க்க வந்துவிட்டு, இப்படி ஹோட்டல் மாதிரி, வேளா வேளைக்குத் தின்று கொண்டு,,,

சரி இன்று தான் முதல் நாள் இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறதே,,,,,

இவர்கள் சாப்பிட்டு, தூக்கம் போட்டு, டி.வி. பார்த்து ஏப்பம் விட்டுப் படுக்க, இரவு மணி பத்தாகிவிட்டது.

மறுநாள் காலை கிளம்பும் போதே சித்தப்பா சொல்லிவிட்டார்…

“மாலை சீக்கிரமே வந்துவிடுவேன், எல்லோரும் டிரஸ் பண்ணிட்டு ரெடியா இருங்க. முதல்லே குறிஞ்சி ஆண்டவர் கோவிலிலே இருந்து ஆரம்பிப்போம்.“

இவளுக்கு மிக்க மகிழ்ச்சி. மாலை நாலு மணிக்கே தயாராகி விட்டாள்.

நேரமாகிக் கொண்டிருந்தது. இலேசாக துறல் வேறு. ஐந்து மணிக்கே இருட்ட ஆரம்பித்துவிட்டது,,,

சித்தப்பா வரவில்லை,,,

போன் வந்தது. இன்று ஏதோ அவசர வேலையாம். வர நேரமாகும் என்றார்.

இவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

“என்னங்க சித்தப்பா இல்லேன்னா என்ன? நாமே ஏதாவது ஆட்டோ பிடிச்சுப் போனா என்ன…?“

இவள் கேட்டாள்.

“இதோ பார்… இது எஸ்டேட் வீடு… ஊருக்கு அப்பால இருக்கு. இங்கே ஆட்டோ எல்லாம் கிடைக்காது… பேசாம இரு. சித்தப்பாவே நம்பளைக் கூட்டிட்டுப் போவார்”

இவள் எரிச்சலுடன் உடைமாற்றிக் கொண்டு, நைட்டி அணிந்து, சித்திக்குச் சமையல் அறையில் உதவினாள்.

இப்படியே இரு தினங்கள் கழிந்துவிட்டன.

மீட்டிங், எஸ்டேட், தொழிலாளர்கள் பிரச்சனை,,, ஆடிடிங் அது இது என்று நாலு நாட்கள் கடந்துவிட்டன,,,

“ஆனது ஆயாச்சு. ரெண்டு நாளிலே ஞாயிறு வருது.. அன்னிக்கு காலைலே இருந்து வெளியேதான். நோ வீட்டுச் சாப்பாடு… ஷாப்பிங், ஷாப்பிங், பொட்டானிகல் கார்டன், லேக், அக்வேரியம்…“

சித்தப்பா இடங்களைப் பட்டியலிட்டார்.

சித்திக்கு உதவியாகச் சமையல் அறையில் இருப்பதும் சித்தி தந்த ஸ்வெட்டரை நைட்டிக்கு மேல் போட்டுக் கொண்டு டிவி பார்ப்பதும்…

பொழுது இப்பபடியே போய்விட்டது.

இவள் பேசவில்லை. ஊரிலிருந்து எடுத்துவந்த துணிகள், இஸ்திரி மடிப்புக் கலையாமல் பெட்டியில் அப்படியே இருந்தன…

அன்று இரவு ரவி சொன்னான்…

”போதும் நாம ஊர் சுத்திப் பார்தத லஷணம்… இன்னும் லீவு முடிய ரெண்டு நாள் தான் இருக்கு. நாளைக்கே கிளம்பறோம்… ஒரு ஹோட்டல்லே தங்கறோம்… ரெண்டு நாள் ஜாலியா ஊர் சுத்திப் பாக்கறோம்…”

“சித்தி கேட்டா என்ன சொலுவீங்க?“

“அர்ஜண்டா வரச் சொல்லி ஆபீஸிலே இருந்து போன்னு சொல்லிப்பேன்… அதை பத்திக் கவலைப்படாதே,,“

கடைசியில் ரவிக்கே புரிந்துவிட்டது… அவன் பிளான் பண்ணிப் போட்ட சிக்கன பட்ஜட் சரிப்படாது என்பது….

எப்படியோ இங்கிருந்து கிளம்பினால் போதும் என்று ஆகிவிட்டது….

சித்தி தான் வருத்தப்பட்டாள். இப்படி ஒரு இடமும் பார்க்காமல் கிளம்புகிறார்களே என்று…

அவள் பெட்டியில் துணிமணிகளை எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள்,,,,

அப்போது,,,,,?

“தடால்“ என்று ஒரு சத்தம்,,,,

இவள் ஓடிப் போய்ப் பார்த்தாள்….

ரவி… ரவி தான்…. குளியல் அறையில் வழுக்கி விழுந்து… தலையில் அடிபட்டு, மயங்கி…

சித்தி ஓடி வந்தாள்…

அப்புறம் என்ன…? சித்தப்பாவைச் சித்தி தொலைபேசியில் கூப்பிட,

அவர் பதறி அடித்துக்கொண்டு காரில் பறந்து வர, ஆம்புலன்ஸுக்குச் சொல்லி, ஏக அமர்க்களம்…

மருத்துவமனையில் அனுமதித்து, ஐ.ஸி.யு.வின் முன் காத்திருந்து..

எலும்பு முறிவு… அறுவை சிகிச்சை… பத்து நாட்கள் ஆஸ்பத்திரி வாசம்… இப்படி நாட்கள் பறந்தன. சித்தப்பாவே இவன் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு இவன் வர இயலாத நிலை பற்றிக் கூறி….

இந்தப் பத்து நாட்களும் ஓடியதே தெரியயவில்லை…

மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அல்லாடி, சித்தப்பாவின் காரில் பயணித்து… போகிற வழியெல்லாம் ஊட்டியின் அழகைக் கண்களால் பார்த்து ரசித்து…. இது இவள் ஜாதகக் கோளாறு

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தர்ர்கள்.

அன்று,,,,

அவர்கள் ஊர் திரும்பும் நாள்…

வாசலில் டாக்ஸி காத்திருந்ததது.

ரவி கையில் ஸ்டிக்குடன் நடந்து வர, பிருந்தா அவனைத் தாங்கிப் பிடித்தபடி வர…

சித்தி பிருந்தாவிற்கு ஒரு தட்டில் புடவை, ரவிக்கைத் துணி வைத்துத் தர…

சித்தப்பா ரவிக்கு டிஜிடல் காமிரா ஒன்றைப் பரிசளிக்க, இவர்கள் கிளம்பினார்கள்.

“தேனிலவுக்கு வந்த இடத்தில் திருஷ்டிபட்ட மாதிரி இப்படி…”

சித்தி வருத்தப்பட்டாள்…

‘இல்லே சித்தி எனக்கு வருத்தமே இல்லை. அடிபடணும்னு தலை எழுத்து இருந்தா, ஊரிலே கூட அடிபட்டிருக்கும்… நான் செஞ்ச புண்ணியம், நீங்க அத்தனை பேரும் எனக்கு உதவியா இருந்தீங்க… மருத்துவமனைக்குப் பணம் கொடுத்து, அவசரத்துக்கு உதவி செய்து, வேளாவேளைக்கு கார் அனுப்பி, சாப்பாடு அனுப்பி, மருந்து வாங்கிக் கொண்டுவந்து தந்து… இதைவிட வேறு என்ன வேணும்? ஊரிலே இருந்திருந்தா நான் தன்னந்தனியே அல்லாடி இருந்திருப்பேன்… கடவுள் செயலாலே உங்க அத்தனை பேரோட அன்பும் ஆதரவும் அரவணைப்பும் எனக்குக் கிடைச்சது.. அந்த ஆண்டவனுக்கு நன்றி,,,“

சித்தி, பிருந்தாவைக் கட்டிக்கொண்டு அவள் கண்ணீர் துடைத்தாள்.

ரவி பார்க்கிறான்… பயணத் திட்டம் போட இவன் யார்?

ஏற்கனவே அந்த ஆண்டவன் ஒரு திட்டம் போட்டிருக்கிறான்…

அவர்கள், டாக்ஸியில் ஏறி அமர்ந்து டாடா சொல்கிறார்கள்…

ரவியின் கைகளில் சித்தப்பா பரிசளித்த டிஜிடல் காமிரா…

“அடுத்த தடவை வரும்போது… இந்தக் காமிராவில்…“

ரவி பேசப் பேச, அவன் வாயைப் பொத்துகிறாள் பிருந்தா.

டாக்ஸி வேகம் எடுக்க, ஊட்டியின் இயற்கைக் காட்சிகளை ரவியின் தோளில் சாய்ந்தபடி பார்க்கிறாள் பிருந்தா…

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தேன் நிலவு

 1. very nice story.
  I shed tears For Brindha.
  So many Brindhas are there in our society.

  – Roopa Hariharan

 2. I love the story.There r so many brindhas in India.expecially in Tamil Nadu

  Awearness should be created by such nice stories

  With Regards

  Shantha Kesavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *