ஏன் இந்த தடுமாற்றம்…?
தலையங்கம்
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை மிகக் கொடூரமாகக் கொன்ற காட்சிகள், மனித உரிமை மீரல்கள் குறித்த காட்சிகள், இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த சோகக் காட்சிகள் காணச்சகிக்காதவை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற 12 வயது பாலகன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் ஈரக்குலையையே உறையச் செய்வதாக உள்ளது. போரற்ற பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட பாதுகாப்பு கிடைக்காமல் மக்கள் சித்திரவதைப்பட்டு இறந்திருக்கிறார்கள். நம் சக மனிதர்களுக்கு நேரும் இந்த கொடூரமான, துளியும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டு மனம் பதைபதைக்கிறது. கைகளை தூக்கிக் கொண்டு சரணடைய வந்தவர்களைக்கூட இரக்கமற்ற முறையில் நிர்வாணப்படுத்திக் கொன்று குவித்திருக்கார்கள் காட்டுமிராண்டித்தனமாக்! நோயாளிகள் இருக்கும் மருத்துவமனையைக் கூட குண்டு வீசித் தாக்கியுள்ளார்கள் கொலைவெறி கொண்ட பாதகர்கள். சர்வ தேச மனித உரிமைச் சட்டம் முற்றிலுமாக மீறப்படும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த பரிதாபப்பட்டவர்களுக்கு, உணவும், மருந்துகளும் கூடக் கொடுக்காமல் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கையின் போதும் இலங்கைப் படையினர் அப்பாவி மக்களைக்கூட வேட்டையாடியுள்ளனர். சேனல் 4 வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை , உண்மை அல்ல என்று இலங்கை ராணுவம் சொல்லி வந்தாலும், இங்கிலாந்தின் பிரபலமான தடயவியல் நிபுணரான டெரிக் பெளன்டர் என்பவர் இதை முழுமையாகப் பரிசீலித்து இந்த காணொலிக் காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நம் இந்திய அரசாங்கம் இந்த நேரத்திலும் மௌனம் காப்பது வேதனைக்குரிய விசயம். உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் இவ்வேளையில் கூட, பஞ்சசீலக் கொள்கைகளைப் பேசியும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தும் வரும் நம் இந்தியா ஏன் இப்படி மௌனம் சாதிக்க வேண்டும். தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கப் போகிறதென்பதை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாலும், 2009 ம் ஆண்டில் இது போன்றதொரு நிலை வந்த போது இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா மேற்கொண்டது குறித்தும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. தம் ஆதரவான வாக்கை பதிவு செய்ததன் மூலம் இலங்கையைச் சிக்கலில் இருந்து காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்கது. சீனா, இலங்கையுடன் நெருங்கி உறவு கொண்டாடுவதுதான் இந்த ஐ.நா . சபையின் தீர்மானத்தின் காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதினாலும், இது குறித்த பரபரப்பு வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாததும் ஆச்சரியமேற்படுத்துகிறது. இந்த மனித உரிமைப் பிரச்சனைய்க்கூட சட்டை செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். நம் தங்கத் தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல்! மனிதாபிமானத்தைக் கொன்று அரசியல் செய்யப்பார்க்கிறார்கள்! நம் இந்திய நாட்டின் சுற்றறிக்கையில், நம் நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி, ஒரு தனிப்பட்ட நாட்டிற்காக இத்தகைய தீர்மானம் கொண்டு வருவது முரண்பாடானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் மார்ச் 19 அல்லது 22ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மனித உரிமைக் கவுன்சிலின் மொத்தம் 47 உறுப்பினர்களில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நம் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி மிகப்பெரிய் எதிர்பார்ப்பு இருப்பதும் உண்மை. ஏற்கனவே முழுமையான அதிகாரமும் இல்லாமல், ஜனநாயகம் என்று பெயரளவிலான உரிமைகள் மட்டுமே பெற்று, வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சகோதரர்களின் வேதனைக்கு களிம்பிடும் முகமாக இலங்கையைப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கும் ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவு வாக்களிப்பது ஓரளவிற்காவது பாப விமோசனமாக இருக்கும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நம்பிக்கையை நம் இந்திய அரசு காப்பாற்ற வேண்டும்!