சு.கோதண்டராமன்

உடற் பிணி நீக்கிய உத்தமர்

இரெட்டியப்பட்டி என்பது அருப்புக்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள ஒரு சிற்றூர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு சித்தியடைந்த ஒரு மகான், ஊரின் பெயரால் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார். இவரது சீடர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளனர். சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர்கள் தியாகராய நகரில் அவரது விழாவை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். இரெட்டியப்பட்டியிலும் ஆண்டு தோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

சுவாமிகளின் போதனைகள் அவரது சீடர்களால் சட்டம் என்று அழைக்கப்படுகின்றன. அரசாங்கம் இயற்றும் சட்டம் போல, சுவாமிகளின் போதனைகளும் பயபக்தியுடன் மதிக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.

1. விடியல் நீராடல்
சுவாமிகளின் சட்டத்தில் முக்கியமானது விடியல் நீராடல். சுவாமிகளின் சீடர்கள் நாள் தோறும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விட வேண்டும். ஐந்து மணிக்குள் குளிர்ந்த நீரில் தலை முழுகிக் குளிக்க வேண்டும். அது ஆற்று நீர், குளத்து நீர், கிணற்று நீர் அல்லது குழாய் நீர் – எது வேண்டுமானாலும் இருக்கலாம். கோடை ஆனாலும் குளிர்காலம் ஆனாலும் குளிர்ந்த நீர் தான். இதற்கு எந்த விதி விலக்கும் கிடையாது. நோய் வாய்ப்பட்டிருந்தாலும் குளிர்ந்த நீரில் குளித்தாக வேண்டும். சட்டத்தைப் பின்பற்றுபவர் பிரசவித்தால், பிரசவித்த நாள் அன்றும் தொடர்ந்தும், தாய்க்கும் குழந்தைக்கும் குளிர்ந்த நீரில் தலை முழுக்காட்டுவர். கடும் காய்ச்சல் போன்ற நிலைகளில் மேலும் ஒரு முறை மாலையிலும் குளிக்க வேண்டும். இதனால் நோய் மிகுதிப்படாதா, பிரசவித்தவர்களுக்கு இது உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்ற கேள்விகளுக்கு இடமில்லை. இது சட்டம். பின்பற்றியே ஆகவேண்டும்.

உறுதியுடன் இவ்வாறு குளிப்பவர் ஆரோக்கியமாகவே உள்ளனர். முன் சொன்ன ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர்கள் குடும்பங்களில் இது விடாமல் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் இவ்வாறு குளிப்பதால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை என்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கூறினார்.

2. இயற்கையோடு இயைந்த வாழ்வு

மேனாட்டு மருத்துவம் விரைந்து குணம் தருவது போலக் காட்டினாலும் பிற்காலத்தில் பெருங்கேட்டிற்கு வழி வகுக்கும். பக்க விளைவுகள் தருவதையும் பெரும் செலவு வைக்கிறபடியால் ஏழைகளுக்கு ஏற்றதல்ல என்பதையும் அதைப் பயிலும் மருத்துவர்களில் பலர் அறநெறிப் பண்புக் குறைவு காரணமாகத் தன் சொந்த லாபமே குறிக்கோளாகக் கருதி நோயாளிகளின் செல்வத்தைச் சுரண்டுவதையும் நாம் இன்று அறிந்திருக்கிறோம். சுவாமிகள் காலத்திலும் இத்தகைய நிலை இருந்ததை அறிகிறோம். அவர் தன் சீடர்களிடம் இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றச் செய்தார்.

இன்று இயற்கை மருத்துவத்திலும் ஆடம்பரங்களும் திசை திருப்பங்களும் புகுந்து விட்டன. பஞ்சபூதச் சிகிச்சை, மண்பட்டி, நீர்ப்பட்டி, தொட்டிக் குளியல், சூரியக் குளியல், பல விதமான மூலிகைச் சாறுகள் என்று இயற்கை மருத்துவமும் செலவுள்ளதாக, அறநெறிப் பண்பு குறைந்தோர் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது.

சுவாமிகளின் இயற்கை வைத்திய முறையோ மிக எளிது. உடலாலும் உள்ளத்தாலும் தூயவராக ஒழுகி வந்தால் நோயே வராது என்பது அவரது திண்ணம். ஆரோக்கிய நிலையில் சிறு தடுமாற்றம் இருப்பின் அது விடியல் நீராடல், திருநீறு, வழிபாடு, வெள்ளி தோறும் உண்ணா நோன்பு இவற்றின் மூலம் போய்விடும். இதையும் மீறி முன்வினைப் பயனால் நோய் ஏற்பட்டால் எந்த வகையான மருந்தும் உண்ணவோ மேலுக்குத் தடவிக் கொள்ளவோ கூடாது. மருத்துவரிடம் போகக் கூடாது. குளித்த பின் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும், அதில் சிறிது வாயில் இட்டுக் கொள்ளலாம். அதுவே மருந்தாகும். திருநீறு பூசாத சமயத்தவராக இருந்தால் சுத்தமான மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற விலக்கு தரப்பட்டிருந்தது. சுவாமிகளின் சீடர்களில் இஸ்லாமியரும் உண்டு, கிருத்துவரும் இருந்தனர். அவர்கள் குளித்தபின் மேற்சொன்னவாறு மண்ணை நெற்றியில் தரித்துக் கொண்டனர்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் குளிர்ந்த நீரில், விடியற்காலையில் நீராட வேண்டும், மருந்து உண்ணக் கூடாது என்னும் விரதத்தைக் கடைப்பிடித்தல் ஆரோக்கியம் பற்றி நாம் சாதாரணமாக நினைப்பதற்கு மாறானதாக இருக்கிறது. இதைப் பின்பற்றுபவர் சுவாமிகளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்தால் அன்றி இது நடைபெறாது. சுவாமிகள் ஒரு போதும் என்னை நம்பு என்று உபதேசித்ததில்லை. மாறாக இறைவனை நம்புங்கள், அவன் நமக்கு நலம் மட்டுமே செய்வான், நாம் தவறு செய்யின் தந்தை போல நமக்குச் சிறு தண்டனை தந்து வழிப்படுத்துவான் என்பதை உறுதியாக நம்புங்கள் என்று உபதேசித்தார். நோய் என்பது நாம் செய்த பாவங்களுக்காக, இறைவன் நமக்குத் தரும் ஒரு தண்டனை. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலக் கூடாது. அதை அனுபவித்துத் தீர்க்க வேண்டும் என்பது அவரது கருத்து. பல மருத்துவரிடமும் சென்று பலனில்லா நோயாளிகள் பலர் இறுதியில் சுவாமிகளிடம் வந்து நோய் நீங்கப் பெற்றனர். பலருடைய தீராத நோய்களைச் சுவாமிகள் தீர்த்து வைத்தார். அவர்கள் அவரது தீவிர பக்தர்கள் ஆனார்கள்.

 

படத்திற்கு நன்றி:http://www.arulsattam.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *