பாஸ்கர பாரதி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! மனிதன் ஆயிரம் பேசட்டுமே!

எந்த மனிதனையும் இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வா வா என்று வரவேற்பதில்லை. நாம்தான் உழைத்து உழைத்து உழைத்து, தடைகளை உடைத்து உடைத்து உடைத்து, எதிர்த்து எதிர்த்து எதிர்த்து முன்னேற வேண்டியதிருக்கிறது. இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டிருக்கிற விதி.

இதிலே அச்சப்பட ஏதுமில்லை. இந்த வையத்து மாந்தர் எல்லோரும் ஒருமித்து எதிர்த்து நிற்பினும் அச்சம் கொள்ள அவசியமில்லை. ஊர் நம்மை உதாசீனப்படுத்தலாம். எள்ளி நகையாடலாம். தூசுக்குச் சமானம் எனத் தூரத்தில் வைக்கலாம். பரவாயில்லை.

இதிலே பயத்துக்குச் சிறிதும் இடமில்லை. செல்வங்கள் அனைத்தும் கரைந்தோடிப்போகலாம். உடைமைகள் அனைத்தும் இழந்து நிற்கலாம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலையில் இரந்து வாழ்வது ஒன்றே வழி என்றும் ஆகலாம்.

பாதகமில்லை. அச்சம் மட்டும் அண்டுவதற்கு அனுமதியோம். அச்சமின்மை, என்றும் மனதை விட்டு அணுவளவும் அகலாது; குறையாது.

கன்னியரின் கண் வீச்சில் கடமைகள் மறக்கலாம். கண்ணீர் மட்டும் சிந்துவது இல்லை. ஆலகால விஷத்தை ஆருயிர் நண்பர்கள் வஞ்சகமாய் வாயில் ஊட்டி விடலாம். அதற்கும் நாம் அசைந்து கொடுப்பதில்லை. வில், வேல் கொண்டு எதிரி வீரர்கள் நேர் வந்து தாக்கலாம். இல்லை, அச்சத்துக்கு இடம் தருவதாய் இல்லை.

கனத்த பேரிரைச்சலுடன் இதோ.. தலைக்கு மேலிருந்து ஒரு பெரிய இடி கீழிறங்குகிறது. வானமே கீழிறங்கி நம்மை நசுக்கி விடப் பார்க்கிறது. முயன்று பார்க்கட்டும். என்ன இருந்தாலும், என்றைக்கு இருந்தாலும் இறுதியில் மரணம்தானே? மரண பயமா மன உறுதியைக் குலைத்து விடும்?

பாரதியின் பாடல் எதுவென்று புரிந்திருக்குமே..?

வேதாந்தத்தைச் சாறு பிழிந்து வீரச் சொற்றொடர்களில் உலா விடுகிறான் பாரதி. படித்துப் பாருங்கள் – மகாகவி என்று அழைக்கப் படுவதன் சூட்சுமம் புரியும்.

இதோ வீரம் செறிந்த அப் பாடல்…

அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதிப் பெருங்கடல் – 9

  1. 1. பாரதியை எல்லோரும் பாராட்டுகின்றோம். ஆனால் ஒரிஜினல் உருவத்தை ஏற்க மறுக்கின்றோமே ஏன்? அசல் இருக்கப் போலி எதற்கு?
    2. அண்மையில் ஓர் பெயரில் பரதியின் நூல் வெளிவந்தது. எத்தனையோ பெயர்கள் இருக்க இந்தப் பெயர் அவசியம் தானா? மறுப்பே யாரிடமிருந்தும் இல்லையே ஏன்?
    அருந்தவப் பன்றி சுப்பிரமணிய பாரதி இவை நியாயமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *