காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் வியாபாரிகள், வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்திக் காட்டி அதற்கு உரிய லாபத்தை அடைவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து வாழ கிரகங்கள் உதவி செய்யும். பொறுப்பில் உள்ளவர்கள் எதையும் யோசித்துச் செய்வதே நல்லது. உடல் ஆரோக்கியம் ஒத்துழைப்பு குறையலாம். எனவே மாணவர்கள் பாடங்களைச் சேர்த்து வைத்துப் படிப்பதைத் தவிர்க்கவும். விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மருத்துவ ஆலோசனைக்கு என்று ஒரு தொகை செலவாகும். சுய தொழில் புரிபவர்களுக்குச் செலவுகள் இருப்பினும், வருமானம் திருப்தியாகவே இருக்கும். சீரான வரவு நிலைக்கக் கலைஞர்கள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேண்டாத பிரச்னைகள் தலை தூக்கும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் உறவுகளிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பணியில் உள்ளவர்கள் நல்ல பெயரையும், பாராட்டையும் பெற்று மகிழ்வர்.

ரிஷபம்: சுயதொழில் புரியும் பெண்களுக்குச் சில தடைகள் தோன்றி மறையும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூலால் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் கவனம் தேவை. இந்த ராசிக்காரர்களுக்கு, நண்பரின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். வெளியூர்ப் பயணத்தால் கலைஞர்கள் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்டால், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று, எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதலைக் கவனத்தில் கொண்டு பணிகளைச் செய்தால், வேலை நெருக்கடிகளைத் தவிர்த்து விடலாம். சுய தொழில் புரியும் சிலருக்குக் கடன் பெற வேண்டிய நிலைமை உண்டாகலாம். வீடு, வாகனம் வாங்குகையில் நம்பகத் தன்மை குறைவானவர்களுக்கு இடம் தருவது நல்லதல்ல.

மிதுனம்: பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் நற்செயலால் கவுரவம் பெறுவார்கள். வியாபாரிகள் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது. இந்த வாரம் கல்வி தொடர்பான விவகாரங்களில், பெற்றோரின் பேச்சைக் கேட்பதில் பிள்ளைகள் முரண்படுவர். எனவே அவர்களைப் பக்குவமாகக் கையாளவும். சிறு தொழில் புரிபவர்கள், பொருட்களை அனுப்பும் விஷயத்தில், தகுந்த பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். பெண்கள் தக்க சமயத்தில், உறவுகளின் தேவையை நிறைவேற்றுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வழக்கு விவகாரத்தில் வெற்றி ஏற்படும். கலைஞர்கள் வெளியூர் பயணங்களைப் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் பெற, அக்கறையுடனும், ஆர்வத்துடனும் செயல்படுவர். பொது வாழ்வில் இருப்பவர்கள் தகுதிக்கு மீறிக் கடன் பெறுவது, கடன் கொடுப்பது கூடாது.

கடகம்: மாணவர்களுக்குப் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் சில மனக் கவலைகள் வந்து போகும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பது அவசியம். இந்த வாரத்தில் பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். எனவே கலைஞர்கள் அதற்கேற்றவாறு திட்டமிட்டுச் செயல்படவும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். பொது வாழ்வில் இருப்பவர்கள், பண விஷயங்களில் கவனமாக இருந்தால், நல்ல பெயரோடு, சில ஆதாயங்களையும் தேடிக் கொள்ள முடியும். பெண்கள், வரவு செலவுகளில் சிக்கனமாக இருந்தால், குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. சுய தொழில் புரிபவர்களுக்கு, வெளிவட்டாரச் சூழ்நிலை பெரும்பாலும் சாதகமாக இருக்காது. எல்லாவற்றையும் பொறுமையாகத்தான் சமாளிக்க வேண்டுமென்பதை நினைவில் வைக்கவும்.

சிம்மம்: சுய தொழில் புரிபவர்கள், புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்வார்கள். இந்த வாரம் பெண்கள் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு தங்கள் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டி இருக்கும். வியாபார நிர்வாகம் தொடர்பாக உண்டாகும் வாக்குவாதங்களை வியாபாரிகள் பக்குவமாகக் கையாண்டால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பினை எளிதில் பெறலாம். நல்ல பெயர் இருந்தாலும், பணியில் இருப்பவர்கள், அதிகப்படியான உழைப்பு காரணமாக அடிக்கடி சோர்ந்து போகக் கூடும். எனவே சத்தான உணவு வகைகளை உண்டு வரவும். கலைஞர்கள் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்வதைக் குறைத்துக் கொண்டால், எந்தச் சூழலையும் தாண்டி விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள், எடுக்கும் முடிவுகள் தவறாக மாறாமல் இருக்க, தகுந்த ஆலோசனைப்படிச் செயல்படவும். மாணவர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டுவதால், அவர்களின் மகிழ்ச்சிக்குக் குறைவிராது.

கன்னி: மாணவர்களுக்குக் காசு, பணம் நெருக்கடி இருந்தாலும் சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்கள். வெளியூர்ப் பயணங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் வாய்ப்பிருப்பதால், வெளியூர் செல்பவர்கள் கையில் அதிகப் பணம் கொண்டு செல்வதைத் தவிர்த்து விடவும். கலைஞர்கள் புதிய நண்பர்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையாக இருங்கள். பிரச்னையின்றித் தொழிலில் கவனம் செலுத்த முடியும். வியாபாரிகள் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க, வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி விடும். பணியில் இருப்பவர்கள் எடுத்தெறிந்து பேசுவது, கோபப்படுவது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால், வேலைகள் தேங்காமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் தங்களது எண்ணங்களைச் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு, வெற்றியைப் பெறுவர். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற கெடுபிடிகளைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும்.

துலாம்: பொது வாழ்வில் உள்ளவர்கள் சிறு திட்டங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்குரிய வெற்றி கிட்டும். பொதுவாக இந்த வாரத்தில், மாணவர்கள் யாரிடம் உதவி கேட்டாலும், சற்றுப் பாரமுகமாகவே இருப்பார்கள். எனவே வேலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. வேலை பார்ப்பவர்கள் அலுவலக வேலையில் கவனமாக இருந்தால், வீண் ஏச்சு, பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் கலைஞர்களின் பேச்சில் இருக்கும் வேகம் செயலிலும் இருக்கும். பெண்கள் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள உறவுகள் கை கொடுக்கும். வியாபாரிகளுடைய உழைப்பு முழுமையும் உங்களுக்கு வேண்டிய இலாபத்தைத் தேடிக் கொடுக்கும். புதிதாகத் தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். பொறுப்பில் உள்ளவர்கள், தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: சுய தொழில் புரிபவர்கள், தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வெற்றி காண, கிரகங்கள் கை கொடுக்கும். கலைஞர்களுக்கு கைக்குப் பணம் வருவது குறைவாகவும் ஏற்படும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். வேலை பார்ப்பவர்களின் கடின உழைப்பும், நேர்மையையும் மேலதிகாரிகளின் பாராட்டை அழைத்து வரும். பெண்களுக்குத் தாய்வழி உறவினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் உடல் நலனில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் திடீரென்று சிக்கல்களும் நெருக்கடிகளும் தோன்றி நீங்கும். எனவே புதிய முயற்சிகளைச் சற்று ஒத்திப் போடவும் பொது வாழ்வில் இருப்பவர்கள், கடமைகளை நிறைவேற்றுவதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் இருந்தால், அவர்களின் கல்வியில் தொய்விராது.

தனுசு: பெண்களுக்குப் பிள்ளைகளின் ஆடம்பரப் போக்கால், குடும்பத்தில் பல வகையான செலவுகள் ஏற்படும். கருத்து வேற்றுமை காரணமாகத் தள்ளி நின்ற நண்பர்கள் நெருங்கி வருவதால், மாணவர்களின் மனதில் உற்சாகம் பூக்கும். பெற்றோர்கள் எந்த ஒரு செயலையும், திறம்படச் செய்யும் பிள்ளைகளைத் தக்க சமயத்தில் பாராட்டுங்கள். அது அவர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களில் இறங்கும் முன் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது. சுய தொழில் புரிபவர்கள் தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான யோசனையோடும் செயல்படுவார்கள். கலைஞர்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைத்தால், பிறரிடம் கைமாற்றாய்ப் பணம் பெற வேண்டிய அவசியமிராது. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே கௌரவமான பதவியில் உங்களை அமர வைத்து விடும். கோடை நெருங்கி வருவதால், முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிப்பதால், சவாலான பணிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த வாரம் உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், அதற்கேற்ற செலவுகளும் கூடும். பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கனிந்து வரும். பெண்களுக்கு ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுவதிலேயே நேரம் போய் விடும் என்றாலும், ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் கொஞ்சம் கவனம் தேவை. கலைஞர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை தலைகாட்டாமல் இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றமான நிலை காண்பர்.

கும்பம்: இந்த வாரம் வியாபாரிகள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் லாபத்தைக் குறைவின்றி பெறலாம். தினசரிப் பணிகளில் குழப்பங்கள் உருவாகாமலிருக்கப் பணியில் இருப்பவர்கள், கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பல சலுகைகளில் சிலவை மட்டுமே நிறைவேறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். பெண்கள், சின்ன விஷயங்களுக்காகப் பிறர் மேல் சீறிப் பாய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதி குலையாது. வேலையின் பொருட்டு அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர்கள் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது. மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்தும், திட்டமிட்டும் செயல்பட்டால் எதிலும் வெற்றிதான்! போட்டிகள் மற்றும் பொறாமைகளின் நடுவே எதிர்நீச்சல் போட்டுக் கலைஞர்கள் தங்கள் வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வர்.

மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் இயல்பும், குணமும் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனைகளை வழங்குவது புத்திசாலித் தனம். கணிசமான லாபம் கிட்ட, தொழில் புரிபவர்களும், வியாபாரிகளும், வியாபார நிலவரத்திற்கேற்றவாறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்ப கணக்கு வழக்கு, நிர்வாகம் ஆகியவற்றில் பதற்றமான முடிவுகளுக்கு இடம் கொடாமலிருந்தால், பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் உங்கள் நற்பெயர் என்னும் மந்திரச் சாவியைத் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.கலைஞர்கள் தொழிலில் முழுக் கவனம் செலுத்தி வர, தங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பணியில் இருப்போர் அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *