நூ.த.லோகசுந்தரம்

எண்‘ என்றவுடன் என் நினைவில் வருவது அதனிலுள்ள நுண்ணிய தரவு விளக்கம். எழுபத்தியிரண்டு ஆண்டு வயதினில் இதுவரை கண்முன் கண்ட எவரும் ‘எண்‘ எனும் சொல்லின் மெய்யான விளக்கத்தை அறிந்தவராகவில்லை. ஏனெனில் மிக நுட்பமான நிலையில் ‘எண்‘ பற்றி விளக்கம் கற்கவில்லை. அல்லது அவர்களுக்குக் கற்பிக்கப் படவில்லை.

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு – குறள்

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்

இவ்வரிகளில் உள்ள எழுத்தும் எண்ணும் சிறிது நுண்ணிய வழியில் வேறுபாடுள்ள வரி வடிவங்களை உணர்த்துகின்றன. நம் யாவருக்கும் எண் என்னும் சொல் ஒன்று இரண்டு என ஒரு பொருளைக் கணக்கிடும் போது எண்ணுகின்றோமோ அதனைக்காட்ட மட்டும்தான் எனக் கற்பிக்கப்படுகின்றது. ஆகையால் வரிவடிவங்களாகிய 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 , 9, மட்டும்தான் என நினைக்கின்றோம். ஆனால் எண் எனும் சொல் எண்ணம் என்பதிலிருந்து பிறந்தது. எண் என்றால் ஓர் எண்ணத்தை அல்லது கருத்தைக் காட்டும்/குறிக்கும் ஓர் வரி வடிவம்தான். ‘2’ என எழுதும்போது நாம் ஓர் பொருள் இரட்டித்த நிலையில் உள்ளது என்னும் கருத்தைத்தான் அக்குறிவழிக் காட்டுகின்றோம். ஒலிநிலையில் இரண்டு எனும் சொல் கொண்டு ஒலிக்கின்றோம். அதே ஒலியைக் காதினில் இரண்டு என சொல்லைக் கேட்கும் பொழுது எண்ணாக எழுத வேண்டின் ‘2’ என எழுதுவோம்

நாம் நாளும் பழகும் தட்டச்சுக்கருவி, கணினி விசைப்பலகையில் காணும் @ # $ % & போன்ற வரிவடிவங்களும் கணினித் திரையின் ஊடே காட்டப்படும் வேவ்வேறு படக்குறிகளும் (icons) ஓர் எண்ணத்தைக் குறிக்க வைக்கப்பட்டனவால் அவை யாவும் எண்களே. அதான்று, பெருவழிச் சாலைகளில் ‘பள்ளிச்சிறார் சாலை கடக்கும் இடம்’ என்பதையோ, ‘அருகில் குறுகிய பாலம் வருகின்றது’ என்பதையோ காட்ட வைக்கப்பட்டுள்ள படங்களும் புதியதாக எழுந்த எண்கள்தாம். ஏனெனில் அவை யாவும் ஒலிவழி இன்றி எண்ணத்தை நேராகக் காட்ட வைக்கப்பட்டவையே.

தமிழகத்தில் பழங்காலம் முதல் நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற வாணிப அளவைகளைக் காட்ட பலவிதமான குறிகளைப் பயன் கொண்டனர். அவை யாவும் ஒலிவழி அல்லாது நேராகக் கோல், மரக்கால், மணங்கு என ஓர் அளவையைக் குறிக்கும். மற்றும் திங்களை (மாதம்) மீ, என்றும் நாள், ஆண்டு, மேற்படி, செலவு, வரவு (பற்று) நாள் எனும் கருத்துக்களுக்கும் குறிகள் அமைத்து எழுதினர். எனவே ஒருவர் தமிழ் மொழி கற்குங்கால் அ இ க ங எனும் எழுத்துக்களைப் போன்றே இக்குறியீட்டு எண்களையும் அவை காட்டும் கருத்தினையும் கற்க வேண்டிய நிலையைத்தான் கண்ணிற்கு இணையாக வள்ளுவர் தன் குறளில் காட்டினார்.

‘அ”ம்”மா’, என்னும் வடிவங்களைக் காணும் நாம் ‘அ’,’ம்’,’மா’ என ஒலிப்போம் அல்லது ‘அம்மா’ என்னும் ஒலியைக் கேட்டால் அதனை ஆவணப்படுத்த ‘அம்மா’ என எழுதுவோம். எழுத்து என்பதில் வரி வடிவமும் ஒலி வடிவமும் ஒன்றிற்கு ஒன்று கற்பு நிலையுடன் ‘துகள்’ நிலையில் நிகரானது/இணையானது. ஆனால் எண் என்பதில் காணும் வரிவடிவ ஒலிவடிவ தொடர்புத் துகள்நிலை ஒலியாக அல்லாது முழு எண்ணமாக/கருத்தாக அமையும்.

‘இங்கு புகை பிடிக்கக் கூடாது’, ‘இடது பக்கம் திரும்பலாம்’ பேன்றவற்றைக் காட்ட உள்ள வரிவடிவங்கள் யாவும் எண்களே ஆகும். ஏனெனில் இவை யாவும் ஒலிவழி அல்லாது ஓர் கருத்தைக் காட்டவே படமாக / குறியாக எழுதி வைக்கப்படுகின்றன. தற்கால எண்களில் சில போது குறிகள் / படங்கள் மொழி வழியும், அல்லாமலும் அமையும்.

(ஒன்று),(இரண்டு),(மூன்று),(நான்கு),(ஐந்து),(ஆறு),(எழு),(எட்டு)(ஒன்பது),(பத்து),(நூறு),(ஆயிரம்)(நாள்),(மாதம்),(ஆண்டு ),(செலவு),(வரவு),(மேற்படி)(ரூபாய்) என்பனவற்றில் தமிழ்மொழியினில் உள்ள குறிகளாகும்/எண்களாகும்.

மீன், வில், புலி, காளை, பனை, வீணை முதலிய கொடிகளில் வரையப்பட்ட பொறிகளும் எண்களே. இவை பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், பலராமன், இராவணன் எனும் அரசவழியினரைக் குறிப்பதை நன்கே அறிவோம்.

‘இங்கு லாரிகள் போகக் கூடாது’, ‘இது ஆண்களுக்கான அறை’, ‘இங்கு ஈட்டிஎறி போட்டி நடைபெறும்’
‘இது ரிஷப ராசியருக்கான பலன்’, இது வட்டசுற்றளவிற்கும் விட்டத்திற்குமுள்ள உறவு (Π=pi), இவை சமம் (=),
என்பனவற்றிற்கு காட்ட உள்ள வரிவடிவங்கள் மொழி கடந்து கற்ற மக்கள் யாவற்கும் பொதுவான குறியீட்டு மொழியாக நிற்கின்றன.

இவை ஆங்கிலத்தில் Pictograph, Ideogram Logo glyph, என நுண்ணிய பாகுபாடுகளுடைய சொற்களில் கையாளப்படுகின்றன. பொது நிலையில் Symbols, Marks, Sign, Devices, Emblems எனவும் குறிக்கின்றனர்.

நம் தட்டச்சுக் கருவியில்/கணினி விசைப் பலகையில் காணும் கால்/அரை/முழுப் புள்ளிகள், பிறை/பகரக்கட்டுக் குறிகள், வியப்புக்குறி, கேள்விக்குறி, போன்றவையும் (Punctuation marks) ஒலிவழி இன்றி அவற்றிற்கு உரிய கருத்தினை உணர்த்தி, செய்ய வேண்டிய செயலை அல்லது மரபுப்படிப் பயன் கொள்ளப்பட்ட/கையாளப்பட வேண்டிய பொருளைக் குறிக்கின்றன. என இவற்றையும் எண்கள் என வேண்டும்.

 

படத்திற்கு நன்றி:http://www.tamiltranslator.com/Tamil_Numbers.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *