தினைத் துணை நன்றி

0

விமலா ரமணி

Vimala_Ramaniபெரியவர் படுத்த படுக்கையாகி கிட்டத் தட்ட ஒரு மாதமாகப் போகிறது. அதுவும் இந்த ஒரு வாரமாக ஏகப்பட்ட குழறுபடிகள். சிறுநீரகம் வேலை செய்யவில்லை, சுவாசப் பையில் கோளாறு, இதயத்தின் வால்வும் இயங்கவில்லை, நுரையீரலில் திரவம் சேர்ந்ததுள்ளது…. இத்தனை பிரச்சினைகளுடன் பெரியவரை ஐ ஸி யூவில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.

கோமா நிலை திடீரென்று நினைவு வருவதும் போவதுமான நிலை. செய்தி கேட்டவுடன் அமெரிக்காவிலிருந்த பெரிய பையன் கிருஷ்ணனும் சின்னவன் அர்ஜுனும் வந்துவிட்டார்கள். டெல்லியிலிருந்த மகள் சுஜாதாவும் வந்துவிட்டாள்.

கண் விழித்திருக்கிறாரே என்று அப்பா என்று கூப்பிட்டால் ஒரு கணம் கண் திறந்து பார்க்கிறார். மறுகணம் கோமா நிலை. டாக்டர் பெரியவரின் கன்னத்தில் தட்டி, ”பெரியவரே பசங்க வந்திருக்காங்க பாருங்க” என்பார். ஒரு பலனும் இல்லை. நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

இரண்டு பையன்களுக்கும் எத்தனை எத்தனையோ வேலைகள். அத்தனையும் ஒதுக்கிவிட்டு ஓடி வந்தால், கிழவர் சாகாமலும் பிழைக்காமலும் இப்படிப் பிராணனை வாங்குகிறார். ஒரே மகள் சுஜாதா, கணவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு டெல்லியிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கும் கஷ்டம் தான். மூவரும் சேர்ந்து பேசினார்கள்.

”இப்படி எத்தனை நாள் காத்திருக்கிறது? எனக்கு ஒரு பேப்பர் பிரண்டேஷன் பண்ண இத்தாலி போகணும்” என்றான் பெரியவன்.

”எனக்குக் கூடத்தான். புளோராவுக்கு லீவே இல்லை. எனக்காக எத்தனை நாள் வெயிட் பண்ணுவா பாவம்” இது இரண்டாமவன். அவன் மேற்படிப்புக்கு அமெரிக்கா போய், அங்கேயே காதல் திருமணம் செய்துகொண்டவன்.

”எனக்கும் தான் அண்ணா. அவர் கோவிச்சுப்பார். சாப்பாடுக்கு என்ன பண்றாரோ?” இது சுஜாதா.

”சரி வழக்கம் போல் சந்துருவைப் பாத்துக்கொள்ளச் சொல்ல வேண்டியது தான்…” என்றாள் சுஜாதா.

சந்துரு,,,,?

அவர்கள் வீட்டுச் சமையல்காரன்.

பல வருடங்களாகப் பெரியவரிடம் வேலைக்கு இருப்பவன். அந்த வீட்டின் அத்தனை நிகழ்ச்சிகளிலும் அவனுக்குப் பங்கு உண்டு. பெரியவனுக்கு அஷராப்யாசம் செய்ததிலிருந்து, சின்னவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதிலிருந்து, சுஜாதாவை நடன வகுப்புக்குக் கூட்டிப் போவதிலிருந்து… எல்லாமே இவன் தான். பெரியவரின் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்த பிறகு, இவனே எல்லாமாகிப் போனான். அனைவரின் திருமணத்திற்கும் ஓடி ஓடி உழைத்தவன் இவன் தான்.

”சந்துரு, இன்னிக்கு சுஜாதாவைப் பெண் பாக்க வராங்க. டிபன் அமக்களமாக இருக்கட்டும்” என்பார் பெரியவர்.

”சரிங்க” எஜமான் என்பான் இவன்.

”இதோ பார், எஜமான்னு எல்லாம் சொல்லாதே”

”சரிங்க எஜமான்.”

இருவரும் சிரிப்பார்கள்.

சந்துரு திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த வீட்டிற்கு உழைப்பதைத் தன் தவமாகக் கருதி வந்தான். அவன் தன் செலவுக்கு என்று பெரியவரைப் பணம் எதுவும் கேட்பதில்லை. சாப்பாடு, தங்க இடம், துணி மணி இப்படி எல்லா வசதிகளும் இருக்கத் தனியாக எதற்குப் பணம்?

”ஏன்டா உனக்குச் சம்பளமே வேண்டாமா?’‘ என்பார் பெரியவர்.

”எதுக்கு எஜமான் சம்பளம்? உங்க பிள்ளைங்களுக்குச் சம்பளம் தர்றீங்களா?” என்று எதிர்க் கேள்வி கேட்பான் இவன்.

”டேய் அவங்களுக்குச் சொத்துலே பங்கு வரும்டா…”

’உங்க அன்பிலே பங்கு இருந்தா போதும் எஜமான்” என்பான் இவன்.

இப்படியே பல வருடங்கள்….

பெரியவனுக்குத் திருமணமாகி அமெரிக்கா சென்ற பிறகு, இளையவனும் அமெரிக்கப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டபின் அவர்களின் இந்திய வரவு அனேகமாக நின்று போனது. சின்ன மருமகளைப் புகைப்படத்தில் பார்த்ததுடன் சரி. சுஜாதாவும் வருடத்திற்கு ஒரு சில நாட்கள் வருவதே அபூர்வமாகிப் போன நேரத்தில் பெரியவருக்குச் சந்துருவே எல்லாமாகிப் போனான்.

சுஜாதா ஒருத்தியின் திருமணம் தான் முறைப்படி நடந்தது. ஜவுளி வாங்குவதிலிருந்து, நகைகள் வாங்குவதிலிருந்து, கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்வதிலிருந்து, பெரியவருக்கு உறு துணையாக உடன் நின்றவன் இவன்தான்.

பெரியவர் கேட்டார்… ”டேய் சந்துரு, சுஜாதா கல்யாணத்துக்கு உனக்கு என்ன வேணும்? ஜரிகை வேஷ்டி சட்டை எல்லாம் வாங்கிட்டேன். மோதிரம் வாங்கித் தரட்டுமா?” என்று பெரியவர் கேட்ட போது இவன் சொன்னான்…

”என்ன எஜமான் இது? நான் என்ன மாப்பிள்ளையா? சமையல் ரூம்லே சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, மோதிரம் மாவுக்குள்ளே  விழுந்திடும். அதை வேற தேடணும்…”

இப்படி எல்லாவற்றையும் மறுத்தவன்தான் இவன்.

இப்போது மரணத்தை மறுக்கத் தெரியாமல் படுத்துக் கிடக்கும் பெரியவருக்காக அழுதுகொண்டிருக்கிறான். என்ன செய்வது என்று புரியாமல் பிரார்த்தனை மட்டும் செய்தபடி, பரிதவித்துக்கொண்டிருக்கிறான்.

அப்போது….? மருத்துவமனையிலிருந்து போன். பெரியவருக்கு சுவாசம் இழுக்கிறதாம்… உடனே வரச் சொல்லி அவசரத் தகவல். அனைவரும் கிளம்ப, சந்துரு அவசரமாக ஓடி வந்து காரில் ஏற வந்த போது, பெரியவன் தடுத்தான்.

”நீ எங்கே வரே சந்துரு? காரிலே இடமில்லை… அப்பா இப்போ க்ரிடிகல் பொஸிஷன். நாங்க பாத்துக்கறோம். நீ வீட்டைப் பாத்துக்கோ. எதுக்கும் வெந்நீர் போட்டு வை. நாங்க கிளம்பறோம்.”

காரின் கதவை அறைந்தபடி பெரியவன் சொல்ல, சுஜாதா, ”சந்துரு என்னோட இஸ்திரி டேபிள்லே துணி வைச்சிருக்கேன். இஸ்திரி போட்டு வை. எல்லாத்தையும் பெட்டியிலே வைச்சுட்டேன். டிரஸ் சேன்ஜ் பண்ணணும்னா வேற இல்லை…”

வரிசையாகக் கட்டளைகளைப் பிறப்பித்த அவர்கள் கிளம்பினார்கள்.

சந்துரு வாய் பொத்தி அழுதான்,,,,,

அங்கே ஆஸ்பதிரியில் பெரியவரின் கண்கள் திறந்தன.

”அப்பா நான் கிருஷணன் வந்திருக்கேன்…”

”அப்பா நான் அர்ஜுன்…”

”அப்பா நான் சுஜாதா…”

பெரியவரின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்த பின், ஒரேயடியாக மூடிக்கொண்டன.

”அப்பாடா…” இவர்கள் பெருமூச்சு விட்டனர். இனி ஊர் கிளம்பத் தடையில்லை.

பெரியவரின் சடலம் அந்த வீட்டுச் கூடத்தில் வைக்கப்பட்ட போது சந்துருவை யாராலும் அடக்க முடியவில்லை.

”எஜமான், சந்துரு டிபன் ரெடியான்னு கேட்பீங்களே எஜமான்… இப்போ வாய் மூடிப் படுததிருக்கீங்களே எஜமான்… எழுந்து, ‘டேய் சந்துரு’ன்னு கூப்பிடுங்க எஜமான்… இந்த வீட்டுக் கல்யாணங்களுக்குத்தான நான் காரியம் பண்ணி இருக்கேன். இப்போ உங்களுக்குக் காரியம் பண்ண வைச்சுட்டீங்களே எஜமான்… இதுலே உப்புக் குறைச்சல்னு சொல்லுவீங்களே எஜமான். இப்போ உப்பில்லாமலே சமைக்க வைச்சுட்டீங்களே ஐயா…”

விம்மி விம்மி அழுதான்.

ஆயிற்று, எல்லா சடங்குகளும் முடிந்துவிட்டன. அவரவர்களுக்கு ஊர் திரும்ப வேண்டிய அவசரம். பெரியவன் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பாவின் இறுதிச் சடங்குக்கு நிறையச் செலவாகிவிட்டது. கணக்குப் பார்த்து, ஆளாளுக்கு இவ்வளவு என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழைய வீட்டை என்ன செய்வது என்று  யோசித்தார்கள்.

“பிளாட் கட்டலாம்” என்றான் இளையவன்.

“வேண்டாம், பாதி பில்டர்கள் ஏமாற்றுக்காரர்கள். நாம அமெரிக்காவிலே இருக்கோம். அடிக்கடி வந்து பாத்துக்க முடியாது. அதனால வந்த விலைக்கு வித்துட்டு, ஆளாளுக்குப் பணத்தைப் பிரிச்சுக்கலாம்” என்று தீர்மானம் செய்தார்கள்.

அப்போது தான் சந்துரு தன் பழைய தகரப் பெட்டியுடன் அங்கே வந்தான். அவன் அந்த வீட்டில் நுழையும் போது இந்தப் பெட்டியுடன் தான் வந்தவன்…

”எங்கே கிளம்பிட்டே சந்துரு?”

“இனிமே இந்த வீட்டிலே என்ன இருக்கு? எஜமான் வாழ்ந்த இடம்… ஐயா இல்லாம இங்கே இருக்க முடியாது… அதோ அந்த ஊஞ்சலைப் பாத்தா… டேய் சந்துருன்னு அதிலே ஆடிண்டு என்னைக் கூப்பிட்டது நினைவுக்கு வரும். இந்த ஈஸி சேரைப் பார்த்தா, டேய் சந்துரு இன்னிக்கு என்ன டிபன்னு என்னைக் கேட்டது ஞாபகத்துக்கு வரும். பெட் ரூமைப் பாத்தா, சந்துரு கால் வலிடா, கொஞசம் தைலம் தடவி விடுன்னு எஜமான் கேட்டது நினைவுக்கு வரும். வேண்டாம் நான் எங்க ஊரோட கிராமத்துக்குப் போறேன்…”

பெரியவனுக்கு ஒரு நிம்மதி…. ஏதோ பணம் கொண்டா என்று கேட்காமல் தானே போகிறானே. இருந்தாலும் ஒரு நூறு ரூபாய் நோட்டுக் கட்டை  தன் பௌச்சிலிருந்து எடுத்தான் கிருஷணன்.

”இந்தா, இதுலே பத்தாயிரம் ரூபாய் இருக்கு. ஊருக்குப் போய் ஏதாவது தொழில் செய்து பிழைச்சுக்கோ…”

சந்துரு சிரித்தான்…

”வேண்டாம், நான் காசுக்காக இந்த வீட்டிலே உழைக்கல்லை… நான் வரேன்…”

சந்துரு கிளம்பினான்…

பெரியவன் அந்த நோட்டுக் கட்டை மறுபடியும் தன் பௌச்சில் பத்திரப்படுத்திக்கொண்டான்.

விட்டது சனி என்று  எல்லோருக்கும் ஒரு நிம்மதி.

அன்று போன் ஒலித்தது.

‘யாராவது வீட்டைப் பாக்க வருகிறார்களோ?’

கிருஷ்ணன் ரிசீவரை எடுததான்.

இவர்களது குடும்ப வக்கீல்…

“அப்பா இறந்துட்டாராமே, நான் ஒரு கேஸுக்காக டெல்லி போயிருந்தேன். இப்பத்தான் வந்தேன். நான் இப்போ அங்கே வரேன்…”

“பரவாயில்லை, அதான் போன்லேயே துக்கம் கேட்டுட்டீங்களே… இப்போ நாங்க வீட்டை விக்கறதுலே பிஸியா இருக்கோம்…”

ஒரு நிமிட மௌனத்திறகுப் பிறகு அட்வகேட் சொன்னார்…

”உங்க அப்பா உயில் எழுதி ரிஜிஸ்டர் பண்ணி, டாகுமெண்ட்ஸை என்கிட்டே ஒப்படைச்சிருக்கார். அவரோட மரணதுக்குப் பிறகு, இந்த உயிலை  உங்களுக்குப் படிச்சுக் காட்டச் சொன்னர்…”

”உயிலா?”

”இதை அப்பா எங்ககிட்டே சொல்லவே இல்லையே…”

”நீங்க எங்கே பக்கத்துலே இருந்தீங்க சொல்ல? சரி சந்துரு இருக்காரா?“

”யார் அந்தச் சமையல்காரனா?”

”அப்படி சொல்லாதே கிருஷ்ணா… உங்க அப்பாவுக்குச் சிறுநீரகக் கோளாறு வந்தப்போ எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்காம தன்னோட கிட்னியைத் தந்திருக்கார்… சந்துரு… ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம இத்தனை வருஷம் உழைச்சிருக்கார்… அப்பா எங்கிட்டே எல்லா விபரமும் சொல்லி இருந்தார். ஒரு சமயம் உங்க அப்பாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையிலிருந்து எழக் கூடாதுன்னு டாக்டர்  எச்சரித்தபோது ‘பெட் பேன்’ வைச்சு, அசுத்ததை எல்லாம் துடைச்சி, பணிவிடை பண்ணி இருக்கார். உங்களுக்கெல்லாம் நல்ல கல்வி தந்து  வாழ்க்கையிலே செட்டிலாக வைச்சிருக்கார்… சுஜாதாவுக்கும் தடபுடலாய்க் கல்யாணம் பண்ணி வைச்சுட்டார்… இது அப்பாவோட சுய சம்பாத்தியம். எனக்குப் பிறகு சந்துரு நடுத்தெருவிலே நிக்கக் கூடாது. அவனும் என் வாரிசு தான். தினையளவு செய்த நன்றியைக் கூட மறக்கக் கூடாதும்பாங்க. சந்துரு பனையளவு செய்தவன். அதனால எனக்குப் பிறகு இந்த வீடு சந்துருவுக்குத் தான். பாங்க் பாலன்ஸ் கொஞசம் இருக்கும் அதை வேணா, பசங்க எடுததுக்கட்டும்ன்னு சொல்லி வீட்டை சந்துரு பேருக்கு எழுதி வைச்சிருக்கார். நான் அங்கே வரேன். சந்துருவோட விருப்பமில்லாம நீங்க எதையும் செய்ய முடியாது…”

வக்கீல் பேசி முடித்த போது, அதிர்ந்து போன அவர்கள், சந்துருவைத் தேட ஆரம்பிக்கிறார்கள்…

(கதை முடியவில்லை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *