சாந்தி மாரியப்பன்

எதையாவது பேச வேண்டுமென்பதற்காக எதையோ பேசிக் கடுப்படைய வைப்பதைக் காட்டிலும் எதுவுமே பேசாமல் மௌனம் காப்பதே மேல்.

நிமிடத்தின் கடைசித்துளிகள் சொட்டித்தீரும் வரைக்கும் அந்த நிமிடத்தின் மதிப்புப் புரிவதில்லை.

நிகழ்காலத்தில் என்ன கனவு காண்கிறோம் என்பதே நாம் வருங்காலத்தில் என்னவாக ஆகப்போகிறோம் என்பதற்கு அடிப்படையான முதல் விஷயம். அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினால் அன்றோ கட்டிடத்தின் ஆயுள் கூடும்..

வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி அடங்கியிருக்கிறது.

மகிழ்ச்சியை வேண்டியபடி, ஒவ்வொரு கணத்திலும் அவை ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடியாமல் கை நழுவ விடுவதைப்போலவே, கோடையில் மழையையும் மழை மற்றும் குளிர் காலங்களில் வெய்யிலையும், எதிர்பார்த்து ஏக்கப்பட்டு, அவை தன்னியல்பாக நிகழும்போது அனுபவிக்கத் தெரியாமலேயே எல்லாப் பருவங்களும் கடந்து விடுகின்றன.

எல்லோருக்கும் பொதுவாக மேகத்தையும், சூரியனையும், நிலவையும் நட்சத்திரங்களையும், தென்றலையும், புயல் காற்றையும் படைத்ததைப் போலவே இன்ப துன்பங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரவரின் முதலீட்டிற்கேற்ப, ஒவ்வொருவர் பங்கிலும் வரவும் செய்யப்படுவதில்தான் ஒளிந்திருக்கிறது அவரவர் லாப, நஷ்ட வாழ்க்கைக்கணக்கு.

அழுது கரைப்பதற்கோ, இல்லை ஆர்ப்பரித்து ஆடி முடித்து விடுவதற்கோ ஒன்றுமில்லாத நேரங்களில் சிறிது வாழ்ந்தும் பார்ப்போம்.

கல் இடித்து விட்டது, முள் குத்தி விட்டது என்று தான் செய்த தவறுகளை மறைத்து விட்டு, தப்பிக்கும் மனப்பான்மையுடன், எப்போதும் பிறரைப் பழி கூறியே வாழ்பவர்கள் அதிலேயே சுகம் கண்டு விடுகின்றனர். இவர்களின் சொல்லம்புகள் அவர்கள் வட்டத்துக்குள் நுழையும் நல்லிதயங்களையும் விட்டு வைப்பதில்லை.

வெகு நாட்களாய்க் கனவு கண்டு வந்த எதிர்காலத் திட்டத்தில் எடுத்து வைக்கும் முதலடி எப்போதும் சற்று அழுத்தமாகவே இருக்கட்டும். அப்போதுதான் சறுக்கல்களை வென்று நிற்க முடியும், பாறையில் கட்டப்பட்ட வீடு போல்..

ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.

3 thoughts on “வாழ்தலின் ருசி

  1. நல்ல படைப்பு…எது எதுக்கோ முயற்சித்து வெற்றி பெறும்போது, சந்தோஷமாய் இருக்கவும் கொஞ்சம் முயற்சி  (effort) எடுத்தால் என்ன?.. இன்றைய இயந்திர வழ்க்கைக்கு  ஏற்ற கருத்துக்க்ள்.. வாழ்த்துக்கள்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க