இந்தியாவின் முதல் உளவு பார்க்கும் செயற்கைக்கோள்! தமிழக பெண் விஞ்ஞானியின் சாதனை!

 

 

தலையங்கம்

ராடார் இமேஜிங் சாட்டிலைட் – ரிசர்ட் 1 என்ற அதிநவீன உளவு வகை செயற்கைக்கோள் நம் இந்தியாவில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போதுவரை பனிமூட்டம் அதிகமான பருவநிலைகளில் தெளிவான படங்கள் பெற வேண்டிய நேரங்களில் கனடா நாட்டின் செயற்கைக் கோளையே நம்பியிருக்க வேண்டியதாக உள்ளது ஆனால் இந்த ரிசார்ட் -1 ராக்கெட் மூலமாக அடர் மழை மற்றும் பனிக் காலங்களிலும் துல்லியமாக படங்களை நம் நாட்டிலேயே எடுத்துத் தரும் வசதி கொண்ட இது, பி.எஸ்.எல்.வி சி-19 ராக்கெட் மூலம் நேற்று வானில் செலுத்தப்பட்டது. இதற்கான 71 மணி நேர கவுண்ட் டவுன் சென்ற திங்களன்று காலை 6.47 மணிக்குத் தொடங்கியது. தனது சுற்றுப்பாதையில் மிகச்சரியான திசையில் ஏவப்பட்டதும், மிக்க மகிழ்ச்சியடைந்தனர் விஞ்ஞானிகள். மூன்றாவது முறையாக இது போன்ற எக்ஸ்.எல் வகை ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ரிசர்ட் – 1 செயற்கைக் கோள் ஆயிரத்து எண்ணூற்றி ஐமபத்து எட்டு கிலோ எடையுள்ளது. இந்த செயற்கைக்கோளை வடிவமைக்க ரூ.378 கோடியும் மற்றும் இதனை தயாரிக்க ரூ.120 கோடியும் செலவிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இச்செயற்கைக்கோள் மற்ற நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திட்டத்தின் இயக்குநர் வளர்மதி தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பெண் விஞ்ஞானி.. ரிசாட்-1 செயற்கைக்கோள் 10 ஆண்டு காலமாக விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பினால் இந்தியாவிலே‌யே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதியிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான இத்திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதையடுத்து அதன் திட்ட இயக்குனராகபொறுப்பேற்ற வளர்மதியின் தலைமையிலான குழுவினர் அல்லும், பகலும் அரும்பாடுபட்டு செயற்கை கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் படித்து, கடந்த 1981ம் ஆண்டில், இலத்திரனியல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பட்டம் பெற்று, கிண்டியில் எம்.இ. படித்தார். கல்லூரியில் நடந்த கேம்பஸ் நேர்முகத் தேர்வில் இவருக்கு இஸ்ரோவிலும், டெல்லி டிஆர்டிஓவிலும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. 1984ம் ஆண்டில் இஸ்ரோவின் பணியை ஏற்றுக் கொண்டார். இன்சாட் 2ஏ செயற்கைக் கோள் திட்டப் பொறியாளர், ஐஆர்எஸ்ஐ-சி திட்ட மேலாளர், ஐஆர்எஸ்ஐ- டி திட்ட மேலாளர், டிஇஎஸ் செயற்கை கோள் துணைத் திட்ட இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். இவரது தந்தை நடராஜன், வேப்பூர் பஞ்சாயத்து யூனியனில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ராமகீதா. கணவர் வாசுதேவன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். பெங்களூருவில் விஜயா வங்கி சீனியர் மேலாளராக பணியில் உள்ளார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தீபிகா என்ற மகளும் உள்ளனர். இவருடைய சாதனையைக் கண்டு, ஊர் மக்களும் குடும்பத்தினரும் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இவர் இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரித்த 2-வது பெண்மணி.. முதலாவது பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா. இவர் ஜி சாட்-12 என்ற செயற்கைக்கோளைத் தயாரித்தவர்.

தற்போதைய இந்த ரிசர்ட் – 1 செயற்கைகோள் மூலம், பூமியின் பரப்பை மிகத்துல்லியமாக கண்காணிக்கவும், 1மி.மீ நீள, அகலமுள்ள மிகச்சிறிய பொருடகளைக்கூட துல்லியமாக படம் பிடிக்க இயலுமாகையால், கோதுமை, நெல் போன்ற தானியங்களின் விவசாய பயிர்ப்பரப்பு எவ்வளவு என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும். இதன் அடிப்படையில் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கவும் அரசிற்கு ஏதுவாகும். இதுமட்டுமன்றி, அண்டை நாடுகளைக் கண்காணிக்கவும், பயங்கரவாதிகளின் நடமாட்டம் மற்றும் குற்றச்செயல்களையும் கண்காணிக்க இயலும். அத்தோடு, புயல், வெள்ளம், அதிக நீர்வரத்து, உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களையும் கணிக்கவும் வழி வகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம் இந்திய நாட்டின் அறிவியல் வரலாற்றில் மற்றொரு மைல் கல் இது என்று ஒவ்வொரு இந்தியரும் தலை நிமிர்ந்து மார்தட்டிக் கொள்ளும் காலமிது!

படங்களுக்கு நன்றி :

http://in.news.yahoo.com/photos/isro-launches-new-spy-satellite-risat-1-slideshow/isro-launches-new-spy-satellite-risat-1-photo-1335413028.html


http://hindi.biharprabha.com/

 

About editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க