காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: பெண்கள் உறவினர்களுக்குப் பண உதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், உறவுகள் எப்போதும் இணக்கமாக இருக்கும். மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவைப் பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்குத் தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் சுய தொழில் புரிபவர்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும். முதியவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளித்தால் புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபட இயலும்.

ரிஷபம்: பணியில் இருக்கும் பெண்கள் எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட்டால், பிரச்னைகள் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது, தகுந்த பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியம். சொந்த மனை வாங்க எடுக்கும் முயற்சிக்குத் தேவையான பணமும், ஊக்கமும் சேரும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற இலாக்காவில் பணி புரியும் வாய்ப்புக் கிடைக்கும். கலைஞர்கள் பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது. இந்த வாரம் வியாபாரிகள் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேறுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பிடிவாதத்தைச் சற்றுத் தளர்த்திக் கொண்டால், உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். சுய தொழில் புரிபவர்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பிருந்தாலும், லாபம் கையில் கிட்டும் வரை பொறுமை அவசியம்.

மிதுனம்: கலைஞர்கள் வெளி நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, ஆவணங்களையும், விதிமுறைகளையும் சரி பார்த்துச் செயல்படுதல் நல்லது. பெண்கள் தவணை முறையில் பொருள்கள் வாங்குவதற்குப் பதிலாகப் பண இருப்புக்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுங்கள். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். பணியில் இருப்பவர்கள் முக்கியமான கோப்புகளைக் கையாள்கையில், மறதிக்கு இடம் அளிக்காதவாறு செயல்படுவது நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள் தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். இந்த வாரம் நண்பர்களிடையே சிறு சிறு பூசல்கள் வந்து போகும். எனவே மாணவர்கள் கடந்த கால விஷயங்களைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால், வேண்டிய சலுகைகளைப் பெறலாம்.

கடகம்: பெண்கள் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனிக் கவனம் செலுத்தி வந்தால், அயர்வின்றி வேலைகளை முடிக்க முடியும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தால், உடல் நலம் குன்றாமலிருக்கும். பணிவான பேச்சு, இதமான அணுகுமுறை இரண்டையும் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களோடு பணவரவும் வந்து சேரும். கசப்பான அனுபவங்களைத் தவிர்க்க, பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் நிலைமையைச் சீர் தூக்கிப்பார்த்துச் செயல்படுங்கள். இந்த வாரம் கடன் பிரச்னைகள் வியாபாரிகளுக்குச் சற்றுத் தொல்லை கொடுத்தாலும், தங்கள் வாக்கு வன்மையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். சுய தொழில் புரிபவர்கள் அரசாங்க விவகாரங்களில் தக்க ஆலோசனையுடன் செயல்படுவதன் மூலம் பண விரயத்தைக் குறைத்து விடலாம். பணியில் இருப்போர்கள், உயரதிகாரிகளிடம் பணிவாய் நடந்தால், உங்களுக்குத் தேவையான சலுகைகள் நழுவாமலிருக்கும்.

சிம்மம்:. பெண்கள் பண வரவிற்கேற்றவாறு செலவுகளை வரிசைப்படுத்திக் கொண்டால், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது கடினமாக இராது. மாணவர்கள் சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி வம்பு செய்பவரிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதம், கண்டிப்பு இரண்டையும் தக்கவாறு பயன்படுத்தினால், அவர்களால் பிரச்னைகள் ஏதுமிராது. இந்த வாரம் கூட்டுத் தொழிலில் அவசியமில்லாத மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். மாணவர்கள் நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அரவணைத்துச் சென்றால், உங்களுக்குத் தோள் கொடுக்கத் தயாராய் இருப்பார்கள். கலைஞர்கள் வெற்றி கிடைக்கும் வரை எதிலும் அலட்சியம் இன்றிக் கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்குதல், பெரிய அளவில் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் நிதானமாகச் செயல்பட்டால் பல நன்மை பெறலாம்.

கன்னி: பெண்கள் மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அஜீரணம் தலை காட்டாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் பணப் பரிமாற்றத்தால் நல்ல நட்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் முக்கியமான அலுவல்களில் உங்கள் முழுக் கவனத்தையும் திருப்பினால், விரும்பிய பலன் கிடைப்பது உறுதி. வியாபாரிகள் வங்கிக் கணக்கு வழக்கு ஆகியவற்றை நேரடியாகக் கவனித்து வந்தால், பொருளாதாரம் இறங்காமலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் முக்கியப் பொறுப்புகளைத் தள்ளிப் போடாமல் செய்து முடித்தால், வெற்றி உங்களைத் தேடி வரும். சிலருக்குப் பணியிட மாற்றமும், அதனால் அதிருப்தியும் ஏற்படலாம். முதியவர்கள் உடற் பயிற்சி, உணவுப் பழக்கம் இரண்டிலும் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த வாரம் அநாவசியச் செலவுகளுக்காகக் கடன் படும் நிலை வராதவாறு, கலைஞர்கள் விழிப்புடனிருப்பது அவசியம்.

துலாம்: மாணவர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதை உடனடியாகச் சீர் செய்தால், அதிகச் செலவுகள் இருக்காது. வியாபாரிகள் வரவில் காட்டும் அக்கறையைச் செலவிலும் காட்டி வந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு இனிமைப் பூச்சு கொடுத்தால், எதிராளிகளையும் எளிதில் வென்று விடலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாகக் குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால், நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளிதாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்குச் சிபாரிசு செய்வதைத் தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.

விருச்சிகம்: பெண்கள் உங்கள் சக்திக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வரவுக்குள் செலவுகளைச் செய்வதில், சிரமம் இராது. மாணவர்கள் புதிய இடங்களில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருந்தால், சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் திருப்தியைச் சம்பாதிக்க சற்று அதிகமாகப் பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல் நலம், மன நலம் இரண்டையும் நல்ல விதமாகப் பராமரித்து வந்தால், அவர்களின் பாதையில் வெற்றியும், வாழ்த்தும் வந்து சேரும். வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளைப் புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளைத் தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம்.

தனுசு: பொறுப்பில் இருப்பவர்கள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்த பின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ள பணிச் சுமையைச் சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும். இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறவும், தக்க வைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கைக் கைக்கொண்டால், விரும்பிய வளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்.

மகரம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்துச் செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விருப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய்ச் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே. பணியில் இருப்பவர்கள் முக்கியப் பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களைப் புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளைக் குறித்துச் செயலாற்றினால், பணம், லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும்.

கும்பம்: வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்குப் பயணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள். ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும். இந்த வாரம் தாய் வழிச் சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.

மீனம்: இது வரை நெருக்கம் காட்டி வந்த உறவுகள் இந்த வாரம் சற்று விலகியே இருக்கும். ஆதலால், பெண்கள் பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றிச் செயல்பட்டால் பாதிப் பிரச்னைகள் குறையும். மாணவர்கள் எதிர்பார்த்ததை விடச் செலவுகள் சில சமயம் கை மீறிச் செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். கலைஞர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள். சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரியப் பலிதம் கட்டாயம் உண்டு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.