உழைப்புக்கேத்த ஊதியம்.. ஒழுக்கத்துக்கேத்த சேமிப்பு!

 

 

வண்டிக்கார பழனியம்மாள் – சிறப்பு நேர்காணல்

அன்றாடம் ”வீட்டில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறேன்” என்று குளுகுளுவென்று மின்விசிறியின் [மின்வெட்டு இருந்தாலும்.. இன்வேர்ட்டர் வைத்துக் கொண்டாவது] கீழ் உட்கார்ந்து கொண்டு வீட்டு வேலைகள் செய்வதற்கு, ஒரு உதவி ஆளையும் வைத்துக் கொண்டு, புலம்பித் தீர்க்கும் பெண்கள் மத்தியில் 31 வருடங்களாக மாடாகவே உழைக்கும் ஒரு பெண்மணியைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு குடம் தண்ணீர் தூக்கினால், உடம்பிற்கு ஒத்துக் கொள்வதில்லை, டாக்டர் என்னை கனமான பொருட்கள் தூக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு சாதாரண காய்கறிப் பையைக்கூட தூக்குவதற்கு அஞ்சி இன்னொருவர் உதவியை நாடும் பல பெண்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அத்தகையோருக்கிடையில் நாளொன்றிற்கு குறைந்தது 1500 கிலோ வரையான சுமைகளை சுமக்கிற பழனியம்மாளைக் காணும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.. ஆண்களுக்குச் சமமாக சுமை தூக்கும் தொழிலாளியாக வண்டிக்கார பழனியம்மாள் என்றால் வியாபார வட்டாரத்தில் தெரியாதவரே இல்லை எனலாம். ஆம், டெக்ஸ்டைல் சிட்டியான ஈரோடு மாநகரில் காலை பத்து மணி முதல் இரவு 10 மணி வரை கடைவீதி முழுவதும் திருவிழா போலத்தான் இருக்கும். சரக்கு லாரிகளும், மாட்டு வண்டிகளும், நிறை பாரத்துடன் உலா வருவதைக் காணலாம். ஜவுளி பைகள் சராசரியாக 115 முதல் 150 கிலோ எடை வரை இருக்கும். இதனை தான் ஒரு தனி ஆளாக தூக்கிக் கொண்டு வந்து தன் மாட்டு வண்டியில் அடுக்கி, அந்த வண்டியை ஓட்டிச் சென்று இறக்க வேண்டிய இடத்தில் தானே இறக்கிக் கொண்டுபோய் அடுக்கி வைத்து விடவேண்டியதுதான் இவருடைய அன்றாட தொழில். இது எப்படி சாத்தியம் என்று அவரைச் சந்திக்கும் வரை எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது…. இன்று உழைப்பாளர் தினத்தில் இவரைச் சந்திப்பது சாலச் சிறந்தது அல்லவா…?

ஆண்கள் செய்யக்கூடிய இந்த கடினமானத் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

என்ற ஊட்டுக்காரவக இதே வேலைதானுங்க.. அவருக்கு துணையாத்தான் கூட போயிட்டிருந்தேனுங்கோ.. கொஞ்ச நாள் பழகின பொறவு, தனியா
 எனக்கும் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தாங்க…. அன்றிலிருந்து இந்த 31 வருசமா இதுதானுங்கோ பொழப்பு..

குடும்பம் பற்றி…?

எனக்கு நாலு பெண்ணுங்க… நாலு பேத்துக்கும் நல்ல இடத்துல கட்டிக் குடுத்திருக்குறோம். காதுக்கு, மூக்குக்குன்னு 3 பவுனு போட்டு கட்டிக் குடுத்தோம்.

உங்க கணவர் வரவில்லையா? தனியாக இந்த வயதில் சிரமப்ப்டுகிறீர்களே?

என்னங்க வயசாச்சி.. 49தான் ஆவுது. என்ற ஊட்டுக்காரரு கால்ல அடிபட்டு எலும்பு முறிஞ்சு போனங்காட்டி, வேலைக்கு வாறதில்லீங்க…

இப்பதான் மகள்களுக்கெல்லாம் திருமணம் செய்து விட்டீர்களே. இனி ஓய்வெடுக்கலாமே?

அதில்லீங்க. எம்பட தங்கச்சி இரண்டு குழந்தைகளையும் உட்டுபோட்டு ஊரைவிட்டே போயிட்டா. அவ புள்ளைகளை நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கனுமில்லீங்களா. அதுகளை ஹாஸ்டல் பள்ளிக்கூடத்துல சேத்தி படிக்க வக்கிறேனுங்கோ. அதான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பாடுபடலாம்னு..

உங்களோட வேலை எத்த்னை மணிக்கு தொடங்கும், வருமானம் என்ன அதைப்பற்றி சொல்லுங்களேன்?

காலைல ஒம்பது மணிக்கு வண்டி கட்டிக்கிட்டு வந்தா பொழுதோட ஆறு மணிக்கும் மேலயே ஆவுமுங்க வூடு போய்ச்சேர ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1500 வரை சம்பாதிக்கலாமுங்க. எவ்ளோ நேரம், எவ்ளோ விரைசா (விரைவாக) வேலை பாக்குறோமோ அதப் பொறுத்துதானுங்கோ….. ஒரு நாளைக்கு முடியலேன்னா சீக்கிரமா போயிடுவோம்..

வீடு வாசல்…?

அதெல்லாம் சொந்த ஊட்டுலதான் இருக்குறோமுங்க. காலைல பறக்க, பறக்க சோத்தை ஆக்கி வச்சிப்புட்டு, ஓடியாறணும்… எப்ப்டியோ காலம் ஓடிக்கிட்டிருக்குங்க….. உடம்புல தெம்பு இருக்குற வரை ஓடிக்கிட்டு இருப்போம்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது போல இத்துனை சிரமமான ஒரு பணியைக்கூட தன்னால் முடியும் என்று நிரூபித்து உள்ளதோடு, ஆண்களுக்கு நிகராக பாடுபட்டு, குழந்தைகளையும் கரை சேர்த்து, இன்று தங்கையின் குழந்தைகளுக்காக, இந்த 50 வயதிலும் 115 கிலோ மூட்டை எடையுள்ள ஜவுளி மூட்டைகளைச் சுமந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். காலையில் வரும் பொழுது கையில் ஒருதூக்குச் சட்டியில் பழைய சாதத்தை கொண்டு வந்து வைத்துக் கொண்டு, மதியம் நேரம் கிடைக்கும் போது அவசர அவசரமாக நான்கு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு, மாலை 7 மணி வரை கடுமையாக உழைத்து விட்டு வீட்டிற்குச் சென்று திரும்ப சமைத்து கணவனுக்கும் போட்டுவிட்டு தானும் நிம்மதியாக உடகார்ந்து சாப்பிட்டுவிட்டு படுத்தால் நிம்மதியாக ஒரு உறக்கம் எப்படி வரும் என்பதை அவருடன் இருந்த அந்த சில மணித்துளிகள் நன்றாகவே உணர்த்தியது… ஒரு சின்ன வியாதி கூட தன்னை நெருங்காமல் தன்னுடைய உழைப்புதான் இன்றுவரை தன்னையும், தன் குடும்பத்தையும் காத்து வருகிறது என்று திடமாக நம்பிக்கை கொண்டிருக்கும் பழனியம்மாவை மனதார வாழ்த்திவிட்டு வந்தோம்.

 உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், பருகும் நீரும் அனைத்தும் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகளின் உன்னத உழைப்பால் நமக்குக் கிடைக்கிறது என்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டிய இந்நந்நாளில் அனைத்து உழைப்பாளி மக்களையும் மனதார வாழ்த்துவோம்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் நண்பர்களே.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உழைப்புக்கேத்த ஊதியம்.. ஒழுக்கத்துக்கேத்த சேமிப்பு!

 1. சிறப்பு செய்தீர்!
  நேர் காணல்,காலப் பொருத்தமாய் வந்தது சிறப்பினும் சிறப்பு!
  உமக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  களப்பணி என்பது சும்மா பொம்மை விளையாட்டல்ல!

  விடையேறி வாழ்வின் விடைகாணும்
  தடை தாண்டி, மிளிர் நடைபோடும்
  படைகூடி வந்தாலும் யாம் உடையோமென
  முடையாவும் பொடித்தகர்த்தோட்டும்
  அடையாளம் தந்தாளிவள் பழனி!
  உடைமாறி உருமாறி பழனிப்பணிமாறி
  இடைமாறிக் கிடை மடியாதே எனவே
  கடைச்சொல்லாய் பழனியம்மை மொழி!!

  வாழ்த்துவோம், வணங்குவோம் உழைக்கும் மகளிரை!!
  உறுதி கூட்டுவோம் அவரின் முயற்சிக்கும் முனைப்புக்கும்!!!

 2. வீட்டிற்காக வீட்டின் உள்ளும் வெளியிலும் பெண்களின் உழைப்பு வணங்கத்தக்கது. உழைப்பாளர் தினத்தன்று கட்டுரை வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *