சென்ற வார வல்லமையாளர் விருது!

9

திவாகர்

ஒவ்வொரு வாரமும் வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு ஒரு சிறிய திருப்தியும் வருத்தமும் உண்டு. அது அந்த வார வல்லமையாளராக நான் என்னையே தேர்ந்தெடுக்க முடியாது அல்லவா!!

அண்ணா கண்ணன் எனக்குக் கொடுத்திருந்த பொறுப்பில் எனக்கென ஒரு பயன் உள்ளது. அதாவது வல்லமையில் வரும் அனைத்துக் கட்டுரை, கதைகள் படிக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வழி செய்துவிட்டார். இது ஒன்றே அவர் கேட்டுக்கொண்டவுடன் ஒப்புக்கொள்வதற்கான் அடித்தளமாக அமைந்துவிட்டது. படிப்பது என்பது எழுதுவதற்கு முதலில் தேவையான அளவுகோல்.

சரி, வள வளவென வளர்ப்பது எதற்கு? சுருக்கென விஷயத்தை முடித்து விடுவோம். சென்ற வார வல்லமை (இதழ், குழுமம்) பதிவுகளை ஆராய்ந்து நோக்கியதில் எல்லா வல்லமைப் பதிவுகளுமே நன்றாகத்தான் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்த்தில் முக்கியமானவை என்றே தோன்றியது. ஆகையினால் சற்றுக் குழம்பி பின்னர் தெளிந்து மறுபடியும் உற்று நோக்கியதில் காலத்துக்கேற்ற ஒரு பதிவு கண்ணில் பட்டது.

அது ராமலக்ஷ்மியின் ’புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்’ தான். கான்கிரீட் காடாகி வரும் நகரங்களில்தான் மரங்கள் அழிக்கப்படுகின்றன என்றால், இப்போது ஏனைய இடங்களிலும் மரங்களை உயிர்ப்பது பற்றிய கவலைகள் இல்லை என்றுதான் படுகிறது. நகரங்கள் பரப்பளவு அதிகமாக அதிகமாக மரங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் மிக மோசமாகக் குறைந்து கொண்டே போகிறது. சென்னையைச் சுற்றி கிழக்கே மகாபலிபுரம், கல்பாக்கம், தெற்கே செங்கல்பட்டு, மதுராந்தகம், வடக்கே பொன்னேரி, மேற்கே ஸ்ரீபெரும்பூதூரையும் தாண்டி நகரமயமாக்கம் பணி மிக வேகமான முறையில் வளர்த்து வருகிறார்கள். நடுவே இந்த வண்டலூர் மிருகக்காட்சி சாலை இன்னமும் எத்தனை நாள் விட்டு வைத்திருப்பார்களோ, ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். பாவம் இப்போதே தண்ணீர் இல்லாமல் மிருகங்கள் தவிக்கின்றன.

நடுவில் ஒரு நல்ல செய்தி. சென்னை படைப்பை அருகே ஒரு சிறிய காடு ஒன்றை உருவாக்கி, அதன் நடுவில் ஒரு குடில் அமைத்துள்ளார் எம் தெலுங்கு நண்பர் ஒருவர். ஆனால் தனிமரம் தோப்பாகுமா என்றால் ஆகாது. ஊர் கூட்டித் தேர் இழுத்தால்தான் உண்டு.

இதைத்தான் ராமலஷ்மி தம் பதிவில் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். தனி மனிதர்கள் ஏதோ செய்கிறார்கள். அது ஒரு கை ஓசையாகக் கூடாது. பலரும், எல்லோரும் சேர்ந்து கை கோர்த்திட வேண்டும்.

”உலகம் போற அபாயமான பாதையை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு இருக்கிற வளத்தையாவது விட்டு
வைக்கணுமேங்கிற அக்கறையிலே அங்க இங்கக் கூட்டு முயற்சியாக செயல்படுகிற இயற்கை ஆர்வலர்களையும் வேலையத்தவங்கன்னு நினைக்கிறாங்க சிலரு. கொஞ்சம் பேராவது உரக்க எடுத்துச் சொல்லிக் களமிறங்கி செயல்படுறதாலதான், பூமியக் காக்க நம்மால என்ன முடியும்ங்கிற சிந்தனை தனி மனுசங்களுக்கு ஏற்படுது. நாட்டுல எத்தனையோ பிரச்சனைங்க இருக்கையில எதுக்கு புவி தினம், சுற்றுப்புறச் சூழல் தினம்னா, அங்க சுத்தி இங்க சுத்தி பசி பஞ்சத்துக்கான காரணங்களுல முக்கியமானதா இருக்கிறதே இயற்கையை மதிக்காத நம்ம போக்குதான்ங்கிற புரிதல் வரும்.”

ராமலஷ்மியிம் மேற்கண்ட வரிகள் மிக வலுவான கருத்தை எடுத்துரைப்பதோடு புவியின் அடுத்த கட்டத்தை வளமாகக் காணவேண்டும் என்ற அவரின் ஏக்கத்தையும் காண்பிக்கின்றது. சமுதாயம் சீர்படவேண்டும் என்பதோடு, நாட்டின் வளங்களும் செழிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறிய ராமலக்ஷ்மியை சென்ற வார வல்லமையாளர் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன்.

 http://tamilamudam.blogspot.in/2012/04/blog-post_25.html

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “சென்ற வார வல்லமையாளர் விருது!

 1. முதல் வல்லமையாளர் விருது என் நண்பர் ஒருவர் பெறுகிறார் என அறியும் போது பெரும் மகிழ்ச்சி !

  கவிதை, சிறுகதை, புகைப்படம், சமூக பார்வை, மின்னிதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் என பல தளங்களிலும் இயங்கும் ராமலட்சுமி இவ்விருதுக்கு மிக தகுதியானவர்

  வாழ்த்துக்கள்

 2. தங்களுக்கும் வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

  நன்றி உமா மோகன்.

  நன்றி மோகன் குமார்.

 3. பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி!
  உள்ளப்பூரிப்புடன்

  அட்லாண்டாவிலிருந்து
  அவ்வைமகள்

 4. முதல் வல்லமையாளர் விருது பெறும் சகோதரி ராமலக்ஷ்மிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மேலும் பலப்பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

 5. வல்லமையாளருக்குப் பாராட்டுகள்.

  இன்னும் நிறைய விருதுகள் ராமலக்ஷ்மியை வந்தடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

 6. நண்பர் மோகன்குமார் சொன்னதை வழிமொழிந்து, முதல் வல்லமை விருதைத் தட்டிச் சென்ற சகோதரி ராமலட்சுமிக்கு என் அகமகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 7. ஓருகை ஓசையாய்
  ஒடுங்கிப் போய்விடாமல்
  பயன்தரும் முயற்சிகள்,
  பலகை ஓசையாகி
  பாருக்கே வளம்சேர்க்கப்
  பரிந்துரைக்கும் 
  முதல் 
  வல்லமையாளர் சகோதரி ராமலட்சுமிக்கு
  வாழ்த்துக்கள்…!
         -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *