பி டி விதைகளும் – விவசாயிகளின் நிலையும்
தலையங்கம்
சென்ற 2012 மார்ச் மாதம் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் முன்பு மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்யும் 10வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் விவசாயிகள் மிகக் கோபமாக, இந்த மரபணு விதைகளைத் தடை செய்வது குறித்த பேச்சு வார்த்தைக்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது நினைவிருக்கலாம். பாம்ப்ரஜா, என்னும் கிராமத்தின் விவசாயிகள், “எங்கள் கிராமத்தில் 14 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்” என்று மறியல் செய்துள்ளனர். அதில் 9 பேர்களை இந்து பத்திரிக்கை அடையாளம் கண்டுள்ளது. மேலும் விவாசாயிகள், பிடி பருத்தி விதையினால், மண் முழுவதும் உயிர்ச்சத்து இழந்து, வேறு பயிரும் பயிரிட முடியாமல், மனம் நொந்துபோன விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் இலாபம் குறைந்தாலும், சீவனத்திற்காகவாவது ஆகட்டும் என்று சோயா பயிரை விளைவித்திருக்கிறார்கள். ஆந்திரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் மகாராஷ்டிரம், ஆகிய மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்தது. பல விவாசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகினர். குறிப்பாக மஹாராஷ்டிர மாநிலத்தில்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 10000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சோதனை முயற்சியாக அமெரிக்க நாட்டின் மோன்சேண்ட்டோ நிறுவனத்திற்கு நமது அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. சிறுகச் சிறுக பல்கிப்பெருகி இன்று 12 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 90 சதவிகித பஞ்சு விவசாயிகளுக்கு, குறிப்பாக மஹாராஷ்டிரத்தில் வணிக நோக்கத்திலான அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் கிட்டத்தட்ட 45 இலட்சம் டன் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தில் மாநில அரசின் கணக்கெடுப்பின்படி, பயிரிடப்பட்ட 47 லட்சம் ஏக்கர் நிலத்தில், 2011ம் ஆண்டில் 33.73 லட்சம் ஏக்கர் நிலத்தில் (71%) விளைச்சலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. 20.46 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, ரூ.30716 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்றனர். விளைச்சல் இரட்டிப்பாகும் என்ற இடைத்தரகர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து போனவர்களின் பரிதாபத்துக்குரிய கதை இது. ஜவுளித் துறையின் அடிப்படை மூலப்பொருளான பஞ்சு விளைச்சலில் ஏற்பட்ட இந்த பாதிப்பு பல குடும்பங்களை பாதிக்கக்கூடியது.
மரபணு மாற்றம் செய்து ஆராய்ச்சி செய்வதற்கு நம் நாட்டை தேர்ந்தெடுத்ததற்கு அனுமதி அளித்ததனால் வந்தவினையே இது. பி டி பஞ்சு என்பது, மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட பஞ்சு. இந்த விதையில் Cry1Ac என்ற் மரபணுவை செலுத்தி உருவாக்கப்பட்டது. இந்த Cry1Ac என்ற மரபணு Bacillus thuringiensis என்ற, மண்ணில் காணப்படும் பாக்டீரியாவில் இருந்து பெறப்பட்டது ஆகும். இந்த ஆய்வுகள், Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco) என்ற இந்திய நிறுவனம், அமெரிக்காவின் மான்சண்ட்டோ என்ற நிறுவனத்துடன் இணைந்து எட்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தியுள்ளார்கள்.
பி டி கத்தரிக்காயும் இதே முறையில்தான் பயிரிடப்படும் என்றனர். கத்தரிக்காயின் விதைகளை விற்பதற்கும் அனுமதி கோரியுள்ளது இந்நிறுவனம். பூச்சிகளுக்கு எதிரான அதிகப்படியான எதிர்ப்புச் சக்தியை வளர்ப்பதனால் விளைச்சலும், இலாபமும் மிக அதிகமாக இருக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் தொடர் வாதத்தினால் இந்த முயற்சியும் நிறுத்தி வைக்கப்பட்டது. இது போன்ற ஆய்வுகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகே வெளியே தெரியவரும். ஐரோப்பிய யூனியனும் இந்த பி.டி கத்தரிக்காயை ஏற்கனவே தடை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் இவ்வனைத்து நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகளின் ஆய்வுகள் மற்றும ஆலோசனைகள் மூலமாக நம் தாய்த்திரு நாட்டையும், நாட்டின் முதுகெலும்பான அவர்தம் வாழ்க்கையையும் காப்பாற்றி, மண்ணின் வளத்தையும் காப்பாற்ற வேண்டியது தலையாய கடமையாகும்.
படங்களுக்கு நன்றி :
http://www.meta-helix.com/main/pbt_cotton.html
http://eaglefabrics.com/tag/india/
http://business.rediff.com/slide-show/2010/jan/27/slide-show-1-all-about-bt-brinjal.htm