உலக சுகாதார மையத்தின் அபாயச் சங்கு!
தலையங்கம்
உலகளவில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தமும், பத்தில் ஒருவருக்கு சக்கரை வியாதியும் இருக்கிறதாம்!
2012இன் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின் அறிக்கையில் இந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்கள் தொகையின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதி அளவு, பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் ஏற்படுகிறது என்கின்றனர். மேலும் இந்த அறிக்கையில், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கான ஆதாரங்களாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள இருப்பதாக டாக்டர் மார்கரெட் சான், உலக சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடுகளிலும் இதே நிலை இருக்கிறது என்கின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு என்ற இந்த இரண்டு வியாதிகளும் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தப்படாவிடின், உயிர்க்கொல்லி நோயாக மாறும் அபாயமேற்படுத்துகிறது. உடல் நலத்தில் சரியான அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டி உலக சுகாதார மையம் கொடுக்கும் அபாயச்சங்காக இதைக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய வாழ்க்கைத்தரத்தின் அடிப்படையிலேயே இந்த நோய்களின் பாதிப்பு அதிகரித்திருப்பது வெள்ளிடைமலை. உலகமயமாக்கலில் இன்று போட்டிகள் மிக அதிகமாக நிறைந்ததொரு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அன்றாட வாழ்க்கை முறையே போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. வாழ்க்கையின் தேவைகளும் கூடுதலாகி அதை அடையும் துடிப்பில் மன அழுத்தம் அதிகமாகி, இறுதியில் இதுபோன்று வியாதிகளில் கொண்டுவிடுகிறது. இந்த ஓட்டத்தில் உடல்நலம் பேணும் சங்கதியெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. ஆரோக்கியமாக சமைத்து, அமைதியாக சுவைத்து உண்ணும் கலையும் கூட மறைந்தே வருகிறது. அவசர உலகிற்கேற்றவாறு அவசர உணவுகளும் அதிகமாக விரும்பி ஏற்கப்படுகிறது.
இளம் வயதிலேயே நோயின் தாக்கங்களுக்கு ஆட்பட்டு, அதனால் மேலும் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. உடற்பயிற்சியும், தேவையான ஓய்வு இன்மையும் பெரும் பாதிப்புகளுக்கு காரணமாகிறது. நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இருதய கோளாறில் முடிவடைந்து உயிருக்கு சேதம் ஏற்படுத்துகிறது. இது குறித்த விழிப்புணர்வு பெற வேண்டிய அவசியத்தை உணரச்செய்திருக்கிறது உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கை.
நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பெரும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும். இதற்கு செலவு அதிகமில்லாத இரத்தச் சோதனை முறைகள் இருக்கிறது. சரியான நேரத்தில் கவனம் கொள்ளாவிட்டால், அது கண்பார்வை பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, போன்ற பெரும் பிரச்சனைகளுக்கு அடிகோலிவிடும். தேவையானதெல்லாம் உடல் நலத்தின்மீது அக்கரை மட்டுமே!
வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களின் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது, சர்வதேச அளவில் உலக நீரிழிவு நாள் (நவம்பர்14) கொண்டாடுவதன் மூலம் அந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் வழிவகுக்கிறது. நீரிழிவு நோய்த் தடுப்பு பற்றிய அறிவியல் வழி முறைகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அறிக்கையில், மே 2012, 21 – 26 தேதிகளில் ஜெனீவாவில் நடைபெறப்போகும் உலக சுகாதார நிறுவனத்தின் அறுபத்து ஐந்தாவது அமர்வில், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, மனநிலை பாதிப்புகள், ஊட்டச்சத்து குறைபாடு, விடலைப்பருவ கர்பங்கள், போலியோ ஒழிப்பு போன்ற பல பிரச்சனைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிக்கக்கூடிய விசயம்.
ஆக, நவீன வாழ்க்கை முறையுடன், நம் பண்டைய வாழ்க்கை முறையான, உணவுக் கட்டுப்பாடு, யோகாசனம் போன்றவைகள் மூலம் உடல் நலமும் மன நலமும் ஒருசேரப் பேணுதல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே இந்த அபாயத்திலிருந்து எளிதாக மீள முடியும் என்பது தெளிவாகிறது.
அன்புடையீர்
எனக்கும் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பதால் தங்களின் கட்டுரையை ஆர்வமுடன் வாசித்தேன். நவீன வாழ்க்கை முறையோடு நமது பண்டைய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் கடைப்பிடிப்பது நல்லதொரு தற்காப்பு முறை என தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியே!…நான் ஏற்கனவே அம்முறையில் தான் எனது ரத்த அழுத்தத்தை சீர் செய்து கொண்டிருக்கிறேன்.
நன்றி
முகில் தினகரன்
கோயமுத்துார்.