இசைக்கவி ரமணன்

Ramanan_RM.Veerappan

சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக வல்லமையில் வாசிக்கலாம். முதல், இரண்டாம் பகுதிகளைத் தொடர்ந்து, இதோ மூன்றாவது & இறுதிப் பகுதி:

===========================================

நமக்கு நம் மீது ஏன் கோபம் வருகிறது?

* மறதி, திறமைக் குறைவு, மனம் குவியாமை — இவை போன்றவை மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படும் போது

மனம் குவியாமையே திறமைக் குறைவுக்குக் காரணம். அதன் விளைவுகளில் ஒன்று மறதி. நேரம் தப்பி உணவருந்தல், முறையற்ற உணவு, வாழ்க்கை, போதுமான ஓய்வின்மை இவையே காரணம்.

உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஒவ்வொரு நாளும் தனிமையில் தன்னைக் கவனித்தல், இரவு படுக்கச் செல்லுமுன் நாள்முழுதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூரல் இவை உதவும்.

* நம் கோபம் நியாயமற்றது என்பது நிரூபணம் ஆகும்போது

காயப்படுவது ஆணவமே. காயப்படுத்துவதும் ஆணவமே. அழுகையும் ஆணவமே. மற்றவர்களை ஆணவக்காரர்களாகப் பார்க்கும் நாம் நம்மிடம்தான் எத்தனை கரிசனத்தோடு நடந்துகொள்கிறோம்!

* நாம் கோபப்பட்டுவிட்டோமே என்பதனால் கூட நமக்கு நம் மீது கோபம் வருகிறது

நமக்கு பிரத்யேகமான அந்தஸ்தை நாமே வழங்கிக்கொள்வதால் வரும் துன்பம், இது. தனது நிறைகளையும் குறைகளையும் விடாமல் கவனித்து தன்னைச் செப்பம் செய்துகொள்ளும் மனிதனுக்கு இந்தத் துன்பம் கிடையாது. எத்தனையோ கோடானு கோடி உயிரினங்களில் நாமும் ஒருவர், அவ்வளவுதானே!

நமக்குப் பிறர் மீது ஏன் கோபம் வருகிறது?

* எதிர்பார்ப்புகளால் விளைந்த ஏமாற்றம்

உறவுகளில் விரிசல்களுக்குக் காரணம் எதிர்பார்ப்புகளே. பிறர் நம் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை நாம் அநியாயம் என்று கருதுகிறோம். ஆனால், பிறர் மீது நம் எதிர்பார்ப்புகளைத் திணிக்கிறோம், சுமத்துகிறோம்; அவர்கள் அதன்படி நடக்கவில்லை என்றால் கோபம் கொள்கிறோம்! நல்ல நியாயம் நம் நியாயம்!

ஆசை எழுகிறது. அது நிறைவேறினால் அடங்குகிறதா? இல்லையே! ஆசையென்னும் தீ, தான் விழுங்குவதற்கு மேலும் மேலும் காடுகளைக் கேட்கிறது. ஆசை, நிறைவேறி, பேராசையாகிறது! நிறைவேறாத ஆசையோ கோபமாய் மாறுகிறது. (உதாரணம் சூர்ப்பனகை) அது வேண்டும் என்று அலைவது ஆசை; அது கிடைக்கவில்லையென்றால் ஆத்திரம்; அது கிடைத்தால், அதை இழந்துவிடுவோமோ என்ற அச்சம்; நமக்குக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அது இன்னொருவரிடம் இருந்தால் பொறாமை; நமக்கே வேண்டுமென்ற பேராசை; நம்மைத் தவிர இன்னொருவரிடம் இருக்கக் கூடாதென்ற வெறி. இதுதான் சினத்தின் சித்திரம். கோபம் ஓர் உடம்பென்றால், அதில் ஓடுவது ஆசை என்னும் ரத்தம்; அச்சம் அதனது ஸ்வாசம். `ஓலைவீடு ஓட்டு வீட்டுக்கேங்கும் ஓட்டுவீடு மாடிவீட்டுக்கேங்கும் மாடிவீடு மாளிகைக்கு ஏங்கும் அந்த மாளிகையோ மரணம் வந்தால் தூங்கும்` என்கின்ற உண்மை ஏனோ நமக்கு நிதர்சனமாவதில்லை.

* பதவி, பணம், போன்றவற்றால் தோன்றும் அதிகார மனப்பான்மை

* பொறுமையின்மை — இன்ன வேலைக்கு இத்தனை நேரம் தேவை, இவரால் முடியும், அவரால் முடியாது போன்ற விவரங்களைக் கவனத்தில் கொள்ளாமை

தோரணைகள், தோரணங்கள் போலே, அதுவும் காய்ந்துவிட்ட தோரணங்கள். அவற்றைக் களைந்தெறிய வேண்டும். குடிசையோ, மாடி வீடோ மனித சுபாவம் ஒரே போல்தான். கணவன், மனைவியை விடத் தனக்கு எல்லாம் தெரியும் என்றும், அவளுக்கு ஒன்றும் தெரியாதென்றும் நினைத்துக்கொள்கிறான். ஒரு பெட்டிக் கடை போடுபவன், தான் அதட்டி மிரட்டுவதற்காகவே வேலைக்கு ஆள்வைத்துக் கொள்கிறான். பணக்காரன், தான் எல்லாத் துறைகளிலும் அறிவாளி என்று கருதிக்கொள்கிறான்.

வாழ்வின் நிலையாமையை எப்போதும் நினைவில் கொள்பவனிடம் அதிகார த்வனி இருக்காது. தன்னைப் போல் பணம், பதவி இல்லாதவர்களிடம் அனுதாபம் இருக்கவேண்டும்.

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, எதிர்பார்க்கிறோமோ, அப்படி மற்றவர்களை நடத்தவேண்டும் நாம்.

நம்மைப் போல்தான் எல்லோரும்; எல்லோரையும் போலத்தான் நாமும் என்ற உண்மையை மனத்தில் வைத்து, அன்பையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

‘If you are right, you need not lose your temper. If you are wrong, you have no right to lose your temper,’ என்பதை உணர்ந்து நடக்கவேண்டும்.

பிறர் நம் மீது காட்டும் கோபம்

* நமது திறமைக் குறைவு
* அவர்களது அதிகார மனப்பான்மை
* அவர்களது பொறுமையின்மை

உணர்வோடு நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் சரியாக, நியாயமாக நடந்துகொள்ளும் போதும் நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதும் நம்மீது குற்றம் சாட்டப்படுவதும் நடக்கக் கூடிய விஷயங்களே. அப்படி நேரும்போது அதிர்ந்து போகாமல் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். நமக்கு இல்லாத சிறப்புகள் இருப்பதாகக் கருதப்பட்டு நாம் புகழப்படும்போது, இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மற்றவரது குறைகளுக்கோ, அல்லது விதியின் நடப்புக்கோ நாம் பொறுப்பேற்க முடியாது. அதை மாற்றவும் முடியாது. பொறுமையே ஆணவத்திற்கு முறிவு.

நமது அமைதியும் பண்பும் அவற்றால் நாம் கவனிக்காது நம்முள் எழுந்திருக்கும் ஆன்மிக ஒளியும்தான் பிறரது கோபத்திலிருந்து நம்மைக் காக்கும். உதாரணம், கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?

நமக்கு உலக வாழ்க்கை மீது ஏற்படும் கோபம்

* வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமை
* போட்டியினால் ஏற்படும் அழுத்தம்
* மாற வேண்டியவற்றை மாற்ற முடியாமை

தேவைக்கும் ஆசைக்கும் இடையே உள்ள நுண்மையான ஆனால் மிகப் பெரியதான வேறுபாட்டை அறிந்துகொண்டவன், உலகத்தின் வேகத்தால் விரட்டப்படுவதில்லை. நிறைவே பெறற்கரிய பெருஞ்செல்வம் என்று நிற்பவனுக்கு யாரோடும் போட்டியில்லை. ஒரு குடிமகன் என்ற அளவில், நாம் வாழும் சமுதாயத்தில் உள்ள குறைகளைக் களையவும் அநீதிகளை எதிர்க்கவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வது நமது தலையாய பொறுப்பே. ஆனால், நாம் நினைத்தால் எதையும் மாற்றிவிட முடியும் என்று நினைப்பது அறியாமை. மாறவில்லையே என்று புலம்புவது பேதைமை.

சூழ்நிலைகளை மாற்ற நினைப்பதற்குப் பதிலாக, அவற்றை விட உயர்ந்து நிற்க முயல்வதே பொருத்தமானது, அறிவார்ந்தது. நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்; நாம் மாற முயல வேண்டும்.

Ramanan_shawl

இன்னும் சில யோசனைகள்:

1.  ஓங்கும் சினத்தை ஒருநொடி கட்டிவைத்தால், வீக்கம் வடிந்து விடும். சினம் வரும்போது, நாம் வார்த்தைகளைக் கொட்டிவிடாமல், பேசுவதைச் சற்றே ஒத்திப் போட்டால் பெரும் நன்மை விளையும். அல்லது தீமை தவிர்க்கப்படும். ஒத்திப் போட்டால் உள்ளம் தணியும். பிறகு, நாம் நம்மை நிறுவிக்கொண்டு முறையாக நடந்துகொள்ளலாம்.

2.  விட்டுக் கொடுப்பதில் நட்டமில்லை. இந்த அழகான நீதியைப் புரிந்துகொண்டால் எப்போதும் நமக்கு வெற்றிதான்.

3.  கோபத்தில் நியாயம் அடிபட்டுப் போகும். நாம் ஒரு கொள்கையை, வாதத்தை, அல்லது உண்மையை நிறுவ நினைத்தால் கோபம் கொள்ளாதிருக்க வேண்டும். உலகிற்கு, கோபம்தான் கண்ணில் நிற்கும். நியாயம் தென்படாது.

4.  வெளிப்படையாக மன்னிப்புக் கோருதல். இது நம் மனத்தைத் தூய்மையாக்கும்; நம் மனிதப் பண்பு வளரும்; மற்றவர் நடுவே நம் மதிப்பை உயர்த்தும்; சினத்தின் தீவிரம் தணியும்.

5.  ஆவக்காய் உத்தி. ஆவக்காய் ஊறுகாயில் ஒன்றுக்கு ஒன்று எதிரி அல்லது மாற்று, முறிவு. எண்ணெய், உப்பு, புளிப்பு, காரம், கடுகு, எள், வெந்தயம் இவை ஒன்றுக்கொன்று மாற்று அல்லது முறிவு. இதே உத்தியை நாம் நமது அந்தரங்கத்திலும் பிரயோகிக்கலாம். ஆசை மீது கோபம். மோகத்தில் கஞ்சத்தனம்.

6.  மற்ற எல்லாவற்றையும் போல சினம் என்பது ஓர் உணர்ச்சி.  உணர்ச்சிகள், விவேகத்தின் தளமான புத்தியை ஆளும்போது அமைதியின்மை, கசப்பு இவையே மேலிடுகின்றன. புத்தி, உணர்ச்சிகளை ஆளும்போது சினம் என்னும் உணர்ச்சி ஓர் ஆற்றலாக மாறி, சரியான நேரத்தில், சரியான விகிதத்தில், சரியான காரணங்களுக்காக வெளிப்படுத்தப்படுகிறது. கம்பி மத்தாப்பைப் போல்.

7.  உடல் உழைப்பு உதவும். கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்கின்ற உத்திகளால் பயனில்லை. அதை எப்படி வெளியேற்றுவது என்பதையே அறிந்துகொள்ள வேண்டும். விரைவான நடை, வீட்டைச் சுத்தம் செய்தல், புத்தகங்களை ஒழுங்குசெய்தல் போன்ற உடல் உழைக்கும்படியான செயல்களில் ஈடுபடுவதன் மூலம், வெளிப்படுத்த முடியாத கோபங்கள் உள்ளே தங்கிவிட முடியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

8.  கலையோடு தொடர்பு. நுண்கலைகள் யாவும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகள் என்றாலும், அவை அமைதி என்னும் இலக்கில் நம்மைச் சேர்க்கும் வாகனங்களே. எந்தக் கலையும் உணர்ச்சிகளுக்கு ஒரு கெளரவமான இலக்கைக் காட்டி அவற்றை நிர்வகிக்கத் தோதானவை. அவற்றுள் இசை மிகவும் உதவியானது. இசையில் ரசனை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நுட்பங்களை அறிவது அறிவு, இதயத்தைப் பறிகொடுப்பதே ரசனை.

9.  மறப்போம் மன்னிப்போம். மறதி ஒரு வரம். எந்த வரமும் அதை வளர்த்துக்கொள்வதன் மூலமே வளர்கிறது! பிறர் செய்த உதவியை எப்போதும் நினைவில் வைத்திருப்பதே நல்ல நினைவாற்றல். பிறர் நமக்கிழைத்த அநீதியை மறப்பதே ஆரோக்கியமான மறதி. மறப்பதே மன்னித்தல்.

10. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது

முடிவுரை:

கோபம் என்பது மிகத் தீவிரமான ஒரு வெறுப்புணர்ச்சி, extreme feeling of displeasure என்கிறது அகராதி. கோபம் எதனால் எழுகிறதாம்? உண்மையான அல்லது கற்பனையான அநீதி அல்லது அவமானம் இதனாலாம். பொதுவாக, திருப்பியடிக்க வேண்டும் என்ற ஆசையோடேதான் இது எழுமாம்.

அகராதி, கோபத்திற்கு விளக்கம் கூறுமேயொழிய அதை விலக்க உதவாது. தலையணையைக் குத்துதல், மலையை ஓடி ஏறுதல், முதலாளியின் பொம்மை மீது அம்பெறிதல், கண்ணாடிகளை உடைத்தல், நிறையத் தண்ணீர் குடித்தல், ஒன்றிலிருந்து பத்து வரை மிக மெதுவாக எண்ணுதல் போன்ற பலப்பல யோசனைகளை மனோவியல் நிபுணர்கள் நமக்குச் சொல்கிறார்கள். இவையும் அதேபோல்தான். நெய்யூற்றி நெய்யூற்றி நெருப்பணையுமா என்று கேட்கிறார் ரமண மஹரிஷி. கோபம் என்பது எங்கிருந்து கிளம்புகிறது என்பதை அறியாமல் அதை நீக்குவது இயலாது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்ற ஒரு குறள் போதும். சர்வரோக நிவாரணி போல் இது சர்வதுக்க நிவாரணி. இது தவம் என்னும் அதிகாரத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்மூலம், சமுதாயத்தில், இல்லறத்தில் வாழும் எவரும் தவம் பயில முடியும் என்ற அரிய குறிப்பு நமக்குக் கிடைக்கிறது.

பகவத் கீதை மனிதரிற் சிறந்தவன் முனிவன் என்று மனம்நிலை பெற்றவனை, ஸ்திதப்ரக்ஞனை விவரிக்கிறது:

’எவனது மனம் துன்பத்தால் அதிர்ந்து போவதில்லையோ, வளமையில் இன்பத்தை நாடி ஓடுவதில்லையோ, எவன் பற்று, பயம், சினம் இவற்றிலிருந்து விடுபட்டு நிற்கிறானோ அவனே தெளிவில் நிலைபெற்ற  முனிவன்.’ (2:56) ஸ்தித தீர முனிச்யதே

தெளிவில் நிலைபெறுவ்தே ஆன்மிகப் பயணத்தில் முதற்படி என்று கேள்விப்படும்போது, மலைப்பு ஏற்படுகிறது!

சினத்தின் வேர் எது என்பதைக் கண்ணன் வாய்மொழியாகக் கேட்போம்:

’புறப்பொருள் மீது பொருந்திக்கொள்வதால் பற்று ஏற்படுகிறது. பற்றிலிருந்து ஆசை; ஆசையிலிருந்து கோபம்; கோபத்திலிருந்து மோஹம்; மோஹத்தால்; நினைவு பிறழ்தல்; நினைவு பிறழ்தலால் விவேகநாசம்; அத்தோடு அழிகிறான் மனிதன்.’ (2: 62/63)

எனவே, சினத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமென்றால்,

* சினத்தால் விளையும் கேடுகளை உணர்ந்திருக்க வேண்டும்

* நமக்குச் சினம் வருகிறது என்பதை நமக்குள் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும்

* அழகிய மலர் திடீரென்று ஒரு பேய்த் தோற்றமாக மாறிவிடுவது போல, சினம் நம்மை அறவே விகாரப்படுத்தி விடுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்

* புற உத்திகள், சினத்தை வெல்வதற்குப் போதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

* சினம் என்பது உணர்ச்சி. அது அகத்தே எழுவது. புறத்தே உள்ள பொருட்களில் வரம்பு மீறிப் பொருந்திக் கொள்வதால் தூண்டப்படுகிறது என்பதைத் தெளிவாக அறியவேண்டும்

* மனத்தை வசக்குவதன் மூலமே சினத்தை வெல்ல முடியும் என்பது அப்போது புரியும். தப்பிக்க முயல்வதும், ஓட எத்தனிப்பதும் மடமை என்பது புலனாகும். விட்டு விடுவதல்ல, விலகி இருத்தலே விடுதலைக்கான வழி என்பது நேரடியாகப் புரிந்துவிடும்

மனமடங்கும் போதே சினமடங்கும்; தன்னந்
தனிமை தவத்தின் தரு.

(நிறைந்தது)

======================
படங்கள்: அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *