உணர்வை உணர்வு அறிந்துகொள்ளும்
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
எனது இருபது ஆண்டுக் காலத் தாபம்; இயன்ற போதெல்லாம் முயன்று முயன்று தோல்வி கிட்டி, துவண்ட பொழுதுகளே அதிகம். தோல்விக்குத்தான் எத்தனை சந்தோஷம்! அது ஒவ்வொரு நழுவலையும் ஆனந்தமாய் அனுபவித்துக்கொண்டு என்னைக் கேலி செய்துகொண்டிருந்தது! இதற்கொரு முற்றுப் புள்ளியை என் அன்புச் சகோதரன் விப்ரநாராயணன் சென்ற மாதம் வைத்தார். ஆம்! மானுடர்க்கல்லாது மாயனுக்காகப் படைக்கப்பட்டவள் என்று செம்மாந்து, காதலால் நெக்குருகி நோன்பு நோற்று, தான் சூடிப் பின் கொடுத்த சுடர்க்கொடிக் கோதை பிறந்த ஊர்; கோவிந்தர் வாழும் ஊர், எங்கள் திருவில்லிபுத்தூர். அம்மண்ணை ஸ்பரிசிக்க, ஆண்டாளைத் தரிசிக்க, அவள் காதலில் உருகிய வடபத்ர சாயியைக் கண்ணாரக் காண, இவைதாம் என்னுடைய இருபது வருட காலத் தாபம், தவம் எல்லாம்.
என் அண்ணன் செய்த புண்ணியம், என்னை அழைத்துச் சென்று மேலும் புண்ணியவானாகிவிட்டார். குருவாயூர் விரைவு வண்டியில் மதுரை வந்து, உடனே புறப்படும் செங்கோட்டை பாஸஞ்சரில் திருவில்லிபுத்தூர் வந்து இறங்கினோம். திருவில்லிபுத்தூர் மண்ணைத் தொட்டவுடன் உடலும் உள்ளமும் சிலிர்த்து, பரபரத்தது. பரவசத்தில் தடுமாறியது. “மனமே அமைதியாய் இரு” என அதட்டி, அதை நிலைகொள்ளச் செய்துவிட்டேன்.
முதலில் ஆண்டாளின் தரிசனம்தான். அவள் உதித்த நந்தவனத்தில் அழகுச் சிலையாய் நின்றிருந்தாள். சிவப்பு நிறப் புடவை அவளுக்கு மேலும் அழகூட்டியது. அழகின் பொருள் அமைதியோ என எண்ணும் வகையில் அமைதியின் வடிவமாய் நின்றிருந்தாள். இன்று நீ என்னைக் காண வருவாயென எனக்குத் தெரியும் என்பது போல் நிதானமான பார்வை; அப்படியே என்னுள் வாங்கிக்கொண்டு, அவள் ரெங்க மன்னாருடன் வீற்றிருக்கும் அழகைக் காண கோவிலினுள் நுழைந்தேன்.
அப்பப்பா! ஆயிரம் நிலவுகளைக் கொட்டி அமைத்த வடிவழகு! ஈண்டு அழகின் வடிவம் பிரகாசம். அந்தக் கொண்டையும், கிளி அமர்ந்த தோளும், ரங்கநாதரை அடைந்த பரவசமும், ஒருங்கே கொண்டவளாய்த் தோற்றமளித்தாள். இத்துணை அழகையும் அனுபவித்த பரவசத்தில், வடபத்ர சாயியின் தரிசனம், என்னை அப்படியே மிரட்டிப் புரட்டிப் போட்டுவிட்டது. என்ன கம்பீரம்! மிடுக்கு! ஆண்மை! ஆளுமை! ஏன் ஆண்டாள் உருகமாட்டாள்! இவ்வனுபவத்தால் அன்றைய இரவு மிகவும் ஒளிர்ந்து காணப்பட்டது.
மறுநாள், மடவாகுள வைதீஸ்வரனின் அபிஷேக அழகு, அக்காலையைச் சிறப்படையச் செய்து ஆரோக்கியமாக்கியது. அங்குள்ள நடராசர் சிலையில் ஓர் இயக்கம் இருக்கின்றது. அப்பொழுதுதான் ஆடி முடித்த அசைவும் மந்தஹாசமும் முகத்தில் நின்ற உணர்வு. நடராசரின் முகமும் சிறிது நீளவாக்கில் இருந்தது, தனித்துவமாகத் தோன்றியது. சிவபெருமானிடம் உடல் வளத்திற்கான வேண்டுதல் முடித்துக்கொண்டு, திருத்தலங்களில் அப்பன் நின்ற நாராயணனிடம் உள்ளத்தின் மேன்மைக்காக வேண்டி நின்றோம்.
திருவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசிக்குப் போகும் வழியில் பச்சை நிற மேனியாய் நின்ற கோலத்தில் நாராயணன் காட்சியளிக்கிறான். அவனுடனுறைத் தாயாரின் நிற்கும் அழகும், தினமும் திருமஞ்சனம் கண்டு அவள் மேனி மிளிரும் பிரகாசத்தையும், கருணைக் கசியும் கண்களையும் கண்டு உருகித்தான் போனேன். அங்கேயும் என் ஆட்டோப் பயணம் என்னை விடவில்லை. ஆட்டோவில்தான் பயணப்பட்டோம். இங்கும் ஒரு திருப்பதி உண்டு. திரு அண்ணாமலையென்று பெயர். மலைமேல் வேங்கடவன் அழகாய்க் காட்சி தருவான். தன் கருணையால் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான். மலையேறி அவனது நலம் விசாரித்து விட்டு, எல்லோருடைய நலனையும் காக்குமாறு வேண்டிக்கொண்டு இறங்கினோம்.
பின், பிறந்த தெரு, வீடு, திருவில்லிபுத்தூரின் திருமுக்குளம் எல்லாவற்றையும் கண்டு களித்தேன். அந்த வயதில் பெரிய அகலமான வீதியெல்லாம் குறுகியதாய்த் தோற்றமளித்தது. நான் பிறந்த பாட்டி வீடு, முற்றிலும் மாறியிருந்தது. எங்கள் வீடு தாண்டி நான்காவது வீட்டில் ஒரு பாட்டி இருப்பார்கள். அவர்கள் வீட்டு எதிரில்தான் ஓர் அழகான சின்ன மண்டபம் உண்டு. இன்னமும் அங்குதான் இருக்கின்றது. அதன் முன்தான் நாங்கள் விளையாடுவோம். விளையாடிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பாட்டி எங்களைக் கடைக்கு அனுப்புவார்கள். கடைக்குப் போய்விட்டு வந்தால், கனிந்த வாதாம் பழங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு பங்கு போட்டு உண்போம். இந்த மண்டபத்து முன், பாண்டி, நொண்டி, நாலு முலைத் தாய்ச்சி எனப் பலவகை விளையாட்டுகள் விளையாடி, சலிக்காது சந்தோஷமாய் இருந்திருக்கின்றோம்.
இதோ இம்மண்டபத்தின் நடுவில், களிமண்ணில் பசுவும் கன்றுமாய் செய்து, பூசை செய்து இருக்கிறோம். தாயும் கன்றுமாய் என்ன அழகாய் இருக்கும் தெரியுமா? காலையில் தோழியர், தோழர்கள் அனைவரும், எங்கள் தெருவின் மேற்குக் கடைசியில் இருக்கும் ஒரு வீட்டிலிருந்து தங்க அரளி, அருகம்புல் எல்லாம் பறித்துக்கொண்டு வருவோம். மாட்டிற்கு அளித்துப் பஜனை செய்வோம். பின்தான் பள்ளிக்குச் செல்லுதல் எல்லாம். பத்து நாட்கள் தீவிரமாய் நடக்கும். பத்தாவது நாளான கோலாட்ட ஜோத்ரை அன்று ‘பசுவன் பிள்ளை’யைத் தூக்கிக்கொண்டு, பெண்களும், சிறுமியர்களும் கோலாட்டம் அடித்துக்கொண்டு, திருமுக்குளத்திற்குச் சென்று, பசுவையும் கன்றையும் கரைப்போம். “மழை வேண்டி செய்யும் விழா” என்பர். புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற சித்ரா அன்னங்கள் எடுத்துச் சென்று, குளத்தங்கரையில் கூடி அனைவரும் உண்போம். எனது பத்து வயதுப் பிராயம் வரைதான் அங்குவாசம்.
அப்போது இரண்டு விஜயாக்கள் உண்டு. கிழக்குப் பக்கம் வசிப்பவர் கிழக்கு விஜயா என்றும் மேற்கில் வீடு இருக்கும் விஜயாவிற்கு மேற்கு விஜயா என்றும் பெயர். கிழக்கு விஜயாவின் தங்கை லலிதா. அவளது நோட்டைத் தெரியாமல் கிழித்துவிட்டேன். உடனே வாங்கிக் கொடு என்று கேட்டாள். அப்போது எனக்குத் தேவையான நோட்டையே அம்மாவால் வாங்கித் தர இயலாது. இதற்கு அம்மா என்ன செய்வாள் பாவம்? மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்ல லலிதா என் வீட்டிற்கு வந்தாள்.
நான் ‘அம்மாவிடம் ஒன்றே கால் அணா’ கேட்டேன்.
அம்மா ‘எதற்கு?’ என்றாள்.
‘தெரியாமல் லலிதாவின் நோட்டைக் கிழித்துவிட்டேன். அவளுக்குக் கொடுக்கணும்’ என்றேன்.
‘இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள். யாராவது சட்டை தைக்கக் கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து நான் வாங்கித் தருகின்றேன்’ என்று அம்மா கூறியவுடன், லலிதாவிற்கு எங்கள் நிலைமை புரிய, ‘பரவாயில்லை! நான் வாங்கிக் கொள்கிறேன், சிரமப்படாதீர்கள்’ என்று கூறிவிட்டாள்.
அன்றிலிருந்து லலிதா, எனக்கு மிகவும் நெருக்கமான தோழியானாள். இப்பொழுது அவள் பெங்களூரில் இருப்பதாகக் கேள்வி. அவளின் பெரிய அக்காவும் எங்கள் சித்தியும் மிகவும் பிரியமான தோழிகள். ஒவ்வொரு முறை சித்தி எங்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களைப் போய் பார்த்துவிட்டு வருவார்கள். இப்படிக் காட்சிகளை நினைவூட்டத் தொடங்கியது மண்டபம்.
அதற்குள் ஆட்டோ திருமுக்குளம் பார்க்கப் போகலாம் என்று அழைத்துவிட்டது.
தெருவே மாறிவிட்டது.
தெருவின் முக்கில் நாங்க உமிக்கறி எடுத்தது, அண்ணன் ஹாக்கி விளையாடிய இடம், பொதுக் கிணற்றில் தண்ணீர்க் கஷ்டம் வந்தபோது பாட்டியுடன் சென்று இரவு இரண்டு மணிக்குத் தண்ணீர் எடுத்து வந்தது என்று பல நினைவுத் தடங்களின் வழியே ஜிலுஜிலுவென்று அடிக்கும் காற்றின் இதத்தில், நிறைந்த திருக்குளத்தைக் கண்டேன். அந்தப் பக்கம் நீராழி மண்டபம் இருக்கிறது. அதில்தான் ஆண்டாள் மார்கழி மாதத்தில் நீராட்டு உற்சவம் நடக்கும். அது ஒரு தனி அழகு. ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடக்கும் பாருங்கள் – அதைப் பட்டர் நடத்தும் நிகழ்வின் அழகு அனுபவித்துதான் உணர முடியும். வெறும் சொற்கள் அதற்குப் போதாது.
திருமுக்குளத்தைப் பிரதட்சணம் பண்ணிவிட்டு நாடக சால் தெரு, கந்தாடைத் தெரு வழியாக வந்து, இந்து உயர்நிலைப் பள்ளியை அடைந்தோம். அண்ணா படித்த பள்ளி, அங்கு சில ஆண்டுகள் ஆசிரியராய் பணியாற்றிய பள்ளி. அப்பாவும் அங்குதான் படித்திருப்பார் என்றே எண்ணுகின்றேன். சென்னை, திருவல்லிக்கேணியில் இருப்பது போல்தான், இங்கும் இந்து மேல்நிலைப் பள்ளி தெருவின் இருபக்கமும் எதிரும் புதிருமாக அமைந்திருக்கின்றது. இங்கு கூடுதலாய் இருப்பது, பெண்களுக்கான பள்ளி ஒன்று.
இப்படியாகத் திருவில்லிபுத்தூர் விஜயம் இனிது நடைபெற்றது. பிறந்த மண்ணின்பால் கொண்ட தாபம் நிறைவேறியது. ஆசைகள் ஆயிரம், தாபங்கள் பல்லாயிரம் அல்லவா? ஒரு ஆசை நிறைவேற, அடுத்த ஆசை தயாராகக் காத்திருந்தது. திருவில்லிபுத்தூர் வரை வந்ததால் இரசிகமணி வாழ்ந்து கம்ப ரசத்தில் திளைத்த தென்காசியைத் தரிசிக்க விருப்பமுற்றேன். அண்ணன் தனக்கு இவ்வளவு புண்ணியம் போதும்; கொஞ்சம் நம் நண்பர் இராசாராமுக்கு அளிப்போம் என்று கூறிவிட்டு அவர் விடைபெற்றுச் சென்றார்.
நானும் இராசாராமும் இராசபாளையத்திற்கு, ஆண்டாள் கோவில் முன்பிருந்து பேருந்தில் பயணப்பட்டோம். இரசிகமணி டி.கே.சி.யின் கொள்ளுப் பேரன் திரு.தீத்தாரப்பன் இராசபாளையத்தில் இருப்பதால் முதலில் அவரைப் போய்ப் பார்த்தோம். மேலும், நானும் என் தோழியர் இருவரும் சேர்ந்து எழுதிய நூலை (ஹைக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள்) மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதனால் நேரில் பார்த்து என் மகிழ்ச்சியைத் தெரிவிக்க விழைந்தேன். அவரிடமிருந்து முன்பே ஒரு கடிதமும் வரப் பெற்றேன். அதனை அவரின் தாத்தாவிடமிருந்து பெற்றதாக எண்ணி மகிழ்கிறேன்.
அவரது இல்லத்தை அடைந்தோம். அவர் “சென்ற முறை, காந்தியின் காலடி தேடி, உங்கள் அண்ணன் வந்தார். நீங்கள் டி.கே.சியின் காலடி தேடி வந்து இருக்கிறீர்கள்” என்று மகிழ்ச்சியாய் வரவேற்றார். அவரின் மனைவி, காப்பி பலகாரத்துடன் உபசாரம் செய்து, தடபுடலாக்கி விட்டார். பின் திரு. இராசாராமின் செயலர், டி.கே.சியுடன் பெரும்பொழுது கழித்து, இரசிகமணியின் இலக்கிய இன்பத்தைப் பருகி ஆனந்தமடைந்த திரு.பலராம் இராஜா அவரின் குடும்பத்தின் அன்பையும் அள்ளிக்கொண்டு, வழியில் டி.கே.சியைக் காணாமலே அவர்பால் பக்தி கொண்டிருக்கும் திரு.ஜெயபால் அவர்களின் மாண்பிற்கு வணக்கம் செலுத்திவிட்டு, தென்காசி செல்லும் செங்கோட்டைப் பாஸஞ்சரைப் பிடிக்க, இரயில்வே நிலையம் விரைந்தோம்.
அதற்குள் திரு.தீத்தாரப்பன், தம் மனைவியுடன் இரயில் பயணச் சீட்டு எடுத்து வைத்து, எங்களுக்காகத் தயாராய்க் காத்திருந்தார்கள். (அன்பு சகோதரி! நீங்கள் அன்று கொடுத்த டப்பர்வேர் டப்பாவில்தான் அலுவலகத்திற்கு மதிய உணவு எடுத்துச் செல்கிறேன். பயனுள்ள பரிசு) இரயில் வந்துவிட்டது. அன்பிற்குப் பிரியா விடை கொடுத்துவிட்டு நானும் இராசாராமும் இரயிலில் ஏறினோம்.
திரு.பல்ராம் ராஜா, என் தந்தையுடன் பழகியவர். நாங்கள் வருகிறோம் என்றதுடன், அவர்கள் மகளை அழைத்து இருந்தார். அவர் பல்துறையிலும் திறமை மிக்கவராவார். ‘இராசபாளையம் டைம்ஸ்’ எனும் பத்திரிகையொன்று நடத்தி வருகிறார். “நிற்க அதற்குத் தக” எனும் நூலை யாத்திருக்கிறார். மானுட மாண்பினைப் பகர்கின்ற சிறப்பான நூலாகும். எங்களுக்கும் ஒன்றை அளித்தார் என்பது மிகவும் சிறப்புடைத்தாகும். டி.கே.சியின் கம்பனைக் கண்டு, ரசித்த பின், அவருக்கு எந்தக் கம்பனும் கம்பனாய்ச் சிறக்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் இராசா பகிர்ந்துகொண்டார்.
திரு.இராசாராம், தற்போது ஆண்டாள் கோவிலில் முக்கியமான பொறுப்பில் பணி புரிகின்றார். என் அண்ணனுடைய மாணவர்க்கு மாணவர். வைணவத்தில் ஆழ்ந்த புலமை உண்டு. அதுகுறித்த சொற்பொழிவாற்றும் இளம் சொற்பொழிவாளர். பக்தியால் பணிவைப் பெற்றவர். பண்பாளர். திரு. டி.கே.சி. வீட்டுச் செல்லப் பிள்ளை. இவரின் தாத்தாவும் என் தந்தையும் சம காலத்தவர், நண்பர்கள். டி.கே.சி.யுடன் படிக்கும் பயன் பெற்றவர்கள். அன்பான நண்பன்.
தடங்கலுக்கு மன்னிக்கவும்.
இரயில் வரவே, அதில் ஏறி அமர்ந்துவிட்டோம். சன்னலோர இருக்கைக்கு ஒரு சிறுவன் வந்தமர்ந்தான். அவனுக்கு எதிராக அவனின் அம்மாவும் பாட்டியும் அமர்ந்தார்கள். அவர்கள் குல தெய்வத்திற்குப் பூசை செய்வதற்குப் போகிறார்கள் என்றார்கள். அவர்கள் பக்கத்தில், எங்கள் எதிரே டிபன் கேரியருடன் இருவர் வந்தமர்ந்தனர். இருவரும் உறவினராய், இல்லை தெரிந்தவராய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், ஏற்கெனவே பேசிய விஷயத்தைத் தொடர்வது போல்தான் இருந்தது.
இரயில் பெட்டியில் சன்னலோரத்தில் சிறுவன், அவன் பக்கத்தில் நான், என்னருகே இராசாராம் என அமர்ந்திருந்தோம். என்னிடமிருந்த பையை சீட்டுக்கடியில் வைத்துவிட்டேன். இராசாராமிடம் சிறிய பை. அதை மேல் பெர்த்தில் வைத்துவிட்டார். எங்கள் எதிர் இருக்கையில் சிறுவனுடைய பாட்டி, அம்மா, பின், அந்த அம்மாக்கள் ஆகியோர் அமர்ந்திருந்தோம். நெருக்கடி இல்லாத சூழ்நிலை. எனவே இனிமையான காற்றோட்டமான சூழ்நிலை. இரயில் புறப்பட்டது. வெளிக்காற்று உள்ளே வந்து உலாவத் தொடங்கியது. மிகவும் விருப்பமாய் இருந்தது.
திரு. இராசாராம் ஸ்ரீசூர்ணம் தரித்து, வைஷ்ணவ ஒளி பொருந்திய முகம் உடையவர். அவரைப் பார்த்ததும், சிறுவனின் அம்மா அவரிடம், உங்களைப் போல் வீர வைஷ்ணவ வேடம் அணிந்து, பள்ளியில் பரிசு வாங்கினான் என்றார். ‘அப்படியா’ என்றோம். மேலும், “நான் வ.உ.சி. குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கின்றேன்” என்று அவராய் ஒரு கூடுதல் தகவல் தந்தார்.
“அப்படியென்றால் உங்கள் பையன் வ.உ.சி. தாத்தா வேடமல்லவா போட்டிருக்க வேண்டும்” என்றார் இராசாராம். மேலும், “கூடியமட்டும் உங்கள் பையனுக்கு அவரைப் பற்றி சொல்லுங்கள்” என்றார்.
அப்போது, எதிர் ஓரத்தில் இருந்த அம்மாவிடம் பரபரப்பு தெரிந்தது. இரயில் சங்கரன்கோயிலுக்கு அருகில் போய்க்கொண்டிருந்தது. அந்தம்மா, சிறுவனைக் கூப்பிட்டார்.
“தம்பி! சன்னலோரத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்கிறேன். என் மகள் எதிர்பக்கத்தில் வரும் பொதிகை எக்ஸ்பிரஸில் வருகிறாள். சங்கரன் கோயிலில் நிற்கும். அப்பொழுது பார்க்க இயலும். அதனால் அங்கு உட்கார்ந்து கொள்ளவா தம்பி!” என்று அந்தத் தாய் கேட்டாள். அச்சிறுவனுக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. உடனே அச்சிறுவன் அவனது அம்மா மடியில் அமர்ந்துகொண்டான்.
அந்த அம்மா வந்து அமர்ந்ததும், “என் மகளும் மருமகனும் பொதிகை விரைவு வண்டியில் தென்காசியிலிருந்து சென்னைக்குப் போகிறார்கள். அது சங்கரன் கோயில் இரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் நிற்கும். ‘கைகாட்டுகிறேன் பாரும்மா’ என்றாள்” என்று விளக்கினார்கள். இதோ! இரயில் நின்றுவிட்டது. சங்கரன் கோயில் இரயில் நிலையம்தான்.
எதிர்பக்கம் வண்டி இன்னும் வரவில்லை. அம்மாவின் கண்கள் வெளியில்தான் இருந்தன. முகத்தில் ஒரே பரபரப்பு. பதற்றம், கன்னங்களின் தசைகள் துடிப்பதைக் காண்கின்றோம்.
பார்த்துக்கொண்டிருக்கும்போதே… “உங்களுக்குப் பிராப்தம் இருந்தால் கிடைக்கும்” என்று இராசாராமின் அருள்வாக்கு. கடவுளே! பலிக்கட்டும்! தாயின் மனம் தாயறியாதா என்ன?
சில மணித் துளிகள் கழிந்தது. இரயில் பெட்டியின் நிசப்தம். அனைவரும் அத்தாயின் அதிர்வில் இருக்கின்றோம். எதிர்ப்பக்கம் இரயில் வரும் சத்தம் கேட்கிறது. அதைவிட அந்த அம்மாவின் அதிர்வு அதிகமாக இருக்கின்றது. இதோ! இரயில் வந்துவிட்டது. எங்களைக் கடக்கிறது. கடந்துகொண்டே இருக்கிறது. “தடக், தடக்” என்று நம் துடிப்பு அதிகரிக்கின்றது. பெட்டியினுள் ஒரே அமைதி. எல்லோருடைய கண்களும் எதிரில் சென்று கொண்டிருக்கும் பொதிகை எக்ஸ்பிரஸில்தான் இருக்கின்றது. மெது, மெதுவா இரயில் தடக் த..ட..க்… சடாரென்று இரயில் நின்றுவிட்டது. எங்கள் பெட்டியின் எதிரில் ஒரு பெட்டி நிற்கின்றது. 60 டிகிரி கோணத்திலிருந்து “அம்மா” என்றொரு அழைப்பு. அப்பாடா! நாங்கள் அனைவரும் சிலையாகிப் போனோம். என்னே! கடவுளின் செயல்? அந்தச் சங்கர நாராயணன் மகளுக்கும் தாயுக்கும் அருள் தந்துவிட்டான். கடவுளுக்கு மதம் உண்டா என்ன? நிச்சயமாக இது கோமதித் தாயின் வேலைதான். ஏனெனில் தாயின் மனம் தாய்தானே அறிவாள்!
“மகளும் மருமகனும்” அன்புப் பூவாய் மலர்ந்து நிற்கிறார்கள். அம்மா பதிலுக்குக் கோடிப் பூ பூத்தாற்போல் பூத்து நிற்கின்றாள். சன்னலுக்கு கம்பி இருந்துவிட்டது. இல்லையெனில் ஒருவரை ஒருவர் தொட்டுத் தடவி, அன்பைப் பகிர்ந்துகொண்டிருப்பார்களா?
“பெரீம்மா, அக்கா சாப்பிட்டாளா? என்ன சொல்லுதா?” என்று மகள் வினவ, தாயும் ‘‘சாப்பிட்டாள். உன்னையும், உன் வீட்டுக்காரரையும், நன்றாகப் பார்ததுக்கிடச் சொல்லுதா” என்ற அம்மா பதிலுக்கு, ‘‘மருமகளை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள்’’ என்றாள்.
மகமகனும், ‘‘அத்தை! போய்விட்டு வர்ரோம். சீக்கிரம் நீங்க எங்களைக் காண வாங்க” என்று மருமகன், அத்தையைத் தன் வீட்டிற்கு அழைத்தார்.
‘தடக்’ என்று ஒரு சப்தம். இந்த அன்பு நாடகம் நிகழ்ந்துகொண்டிருக்கும் பொழுதே, இரயில் தன் வேலையைத் தொடங்கிவிட்டது. இரயில் நிலையத்தை விட்டுப் புறப்படத் தொடங்கியது. அத்தாயும் கண்ணிலிருந்து மறையும் வரை மகளையும் மருமகனையும் பார்த்துக்கொண்டார். இரயில் புறப்பட்டு வெகுநேரமாயும் அந்த வெறியில் தன் மக்களை இன்னமும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒரு உறவின் நாடகம் உன்னதம் பெறும்போது பிரித்து எடுத்துச் செல்கிறோம் என்று அந்த இரயிலுக்குத் தெரியுமா என்ன? ‘அதான், மீண்டும் கொணர்ந்து விடுவேனே கவலைப்பட வேண்டாம்’ என்று செல்வது போல் இருந்தது இரயில். இரு நிமிடம் கடந்தது எங்களது இரயில் புறப்பட்டது. பின்தான் அந்தம்மா தன்னிலை கொண்டார். மீண்டும் வந்தமர்ந்தாள். இந்த நிகழ்வு எங்களை எங்கேயோ ஆழத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.
சில மணித் துளிகளுக்குப் பின் நாங்களும் நிலை கொண்டோம். அந்தாயிடம் கேள்விகள் கேட்டோம்.
“வந்தவள் உங்கள் மகளா? அல்லது மருமகளா?” என்றதற்கு, “என் மகள் தான். என் கொழுந்தனாரின் மகள்” என்றாரே பார்க்கலாம்.
நாங்கள் சிந்தையடைத்துப் போனோம். மனம் சிலிர்த்தார்.
“என்ன உங்கள் மகள் இல்லையா? கொழுந்தன் மகளா?” என்றோம் ஒரே குரலில்.
“ஆமாம்! எனக்குத் திருமணமாகிப் புகுந்த வீடு வரும்போது பத்துப் பேர்கள் மச்சினர்களும் நாத்தனார்களும்” என்றார். “இன்னமும் நாங்கள் ஒரே குடும்பமாய்த்தான் வாழ்கின்றோம். இப்போது போனாளே அவள் என் கடைசிக் கொழுந்தனாரின் மகள். திருமணமாகி மறுவீட்டு விருந்துக்கு எங்கள் வீடு வந்திருந்தாள். விருந்து முடித்து, சென்னைக்கு புருஷன் வீட்டிற்குச் செல்கிறாள். என் மகள் இராசபாளையத்தில் இருக்கிறாள். மகளுக்கு பரிட்சை சமயமாதலால் அவளால் விருந்துக்குத் தென்காசி வர முடியலை. நான் அவருக்கு விருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு இராசபாளையம் வந்தது. கொடுத்துவிட்டு திரும்பி போய்க்கொண்டிருக்கிறேன்” என்றார் அந்தத் தாய்.
“பெரியம்மா நீ என்னை வழியனுப்ப இருக்க வேண்டாம்மா?” என்றது அந்த மகள்.
“உன் அக்காளுக்கு விருந்து சாப்பாடு கொடுக்க வேண்டாமா?” என்றாள் தாய்.
“ஆமாம்! ம்… ம்… இரு நிமிடம் சங்கரன் கோயில் இரயில்வே ஸ்டேஷனில் நான் போகும் பொதிகை நிற்கும். அப்போது நான் அந்த வழியாகக் கையை நீட்டிக் காட்டுகிறேன். பார்த்துக்கொள்ளலாம் பெரிம்மா” என்றாள் அவள்.
“அதுதான் விரைவாக இருந்த மகளுக்கு விருந்து சாப்பாட்டைக் கொடுத்துவிட்டுச் செங்கோட்டை பாசஞ்சரைப் பிடிக்க ஓடோடி வந்தேன்” என்றார் அந்தம்மா.
கண்கள் கசிந்தன. கன்னங்களின் தசைகள் துடித்தன. உதடுகள் கோணி வார்த்தைகள் வராது தவித்தன. தாய்மையின் தவிப்பை அது பறை சாற்றியது. உழைத்து உழைத்துத் தேய்ந்த உடலில் வெய்யில் தன் இருப்புக் கோடுகளை வரைந்து இருந்தது. உணர்வின் பளபளப்பு மேனியில் மிளிர்ந்தது. நான் அவர் அவர் அருகில் சென்று, அவர் கையைப் பற்றினேன். அவர் உள்ளங்கை கூறியது – ஆயிரம் அனுபவங்களை அதை உணர்த்தியது – அனுபவித்தேன். அத்தனையும் அவள் வாழ்வின் வேதம்.
எங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. உணர்வை உணர்வறிந்து கொள்ளும் என்பது கண்கூடாகக் கண்ட பிரம்மிப்பு. எங்கோ தவிக்கும் மகளைக் கண்டு காணத் துடிக்கும் தாயுடன் இணைத்துப் பார்த்த மறு நிமிடமே ஓடிய இரயில் போல், அந்த இரயிலைத் தூண்டி “தாயும் மகளும்” இருக்குமிடத்தில் நின்று சந்திக்க ஏற்பாடு செய்த அந்த இறைவன் தாயுமானவன் அல்லவா? அவன் அறிய மாட்டானா, ஒரு தாயின் துடிப்பை! அவன் உணரமாட்டானா, ஒரு தாயின் உணர்வை! அவன் புரிந்துகொள்ள இயலாதவனா, ஒரு மகளின் தவிப்பை!
இந்நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியில் இருந்தபோது, பலகாலம் முன் நடந்த நிகழ்வொன்றை என் மனம் நினைவூட்டியது.
தான்மட்டும் கரையேறாது, இவ்வுலகே இப்பிறவிப் பெருங்கடல் கடந்து கரையேற வேண்டுமென, தனக்குக் கிடைத்த மகாமந்திரத்தை உலகறிய ஓதிய ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த காலம்.
அவருடைய பக்தர்களில் கணவன் – மனைவி இருவர், தங்கள் ஊரில் வறட்சி ஏற்பட்டதால் ஸ்ரீ ராமானுஜர் ஆதரவில் வந்து சேர்ந்தார்கள். அவருடைய ஆதரவில் மனைவியை விட்டுவிட்டு, கணவன் தன் ஊர் சென்றுவிட்டார். மனைவியோ, இராமனுஜர் மடத்தில் தங்கிப் பணிகளைச் செய்து வந்தார். நாட்கள் பல ஆகின. அன்றாடப் பணிகள் அங்கு நடைபெற்று வந்தன.
ஒருநாள் ஸ்ரீராமானுஜர் மடத்தில் ஆராதனை நடந்துகொண்டிருக்கின்றது. பக்தர்கள் கூட்டமோ அதிகம். மனைவியைக் கூப்பிடக் கணவன் வந்து விட்டார். ‘கிராமத்தில் மழை பெய்து நீர் நிறைந்துவிட்டது என்றும் நீ அங்கு வரவாம். எனவே இப்போதே கிளம்பு. அப்புறம் இருட்டி விடும்’ என்று அவசரப்படுத்துகிறார்.
மடத்தின் வாசலில் இந்த அம்மாள் நிற்கின்றாள். உள்ளே ஆராதனை நடந்துகொண்டு இருக்கின்றது. எப்படி இராமானுஜரிடம் சொல்லாமல் ஊருக்கு கிளம்புவது? கூப்பிடுவது தன் கணவன். அது நாள் வரை மடத்தில் குருவின் ஆதரவில் இருந்துவிட்டு, குருவிடம் விடை பெறாது எங்ஙனம் கிளம்புவது! மனம் அங்கலாய்க்கிறது. கண்கள் உள்ளேயே பார்த்துக்கொண்டிருக்கின்றது. உடலும் உணர்வின் வெளிப்பாடாய், பதற்றமாய் இருக்கின்றது. இந்த உணர்வின் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
உணர்வின் அதிர்வு யாரை அசைக்கணுமோ அவரை அசைத்துவிட்டது. ராமானுஜர் கண் விழிக்கிறார். தீர்த்தப் பாத்திரம் எடுத்து வாசலில் வந்து அந்த அம்மா அருகில் நிற்கிறார். “இந்தா தீர்த்தம்! கணவனுடன் சந்தோஷமாய்ப் போய்வா” என்கிறார்.
அம்மாவின் கரங்களில் குருவின் தீர்த்தம்! கண்களில் ஆன்மாவின் நீர் தாரையாய் வழிகின்றது.
“உணர்வை உணர்வு அறியும் தாயே” என்றார் குரு.
ஆம்! குருவும் சீடர்களும் ஒரு தாயும் மக்களும்தான். அந்தக் கனிவும் அனுசரணையும் புரிந்தலும் இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சிக்காகவே எனக்கு ராமானுஜரை மிகவும் பிடிக்கும்.
இவ்விரண்டுத் தாய்மார்களின் உணர்விற்கு “ஓ” போட்டுக்கொண்டு செங்கோட்டைப் பாஸஞ்சர், தென்காசி நோக்கி குதுகலமாகப் போய்க்கொண்டிருந்தது.
================================
படங்களுக்கு நன்றி: http://www.oocities.org/venkatsi, http://www.uyirmmai.com, http://filmmania.ru, http://veeravynavam.blogspot.com
திருமதி சுபாஷிணியின் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தென்காசி
பயணம் அன்பையும் அனுபவத்தையும் ஆன்மீகத்தையும்
பறை சாற்றுகிறது. பசுமையான பழைய நினைவுகளையும்
படம் பிடித்துக் காட்டுகிறது. அருமையான அழகான
இதய பூர்வமான கட்டுரை வழங்கியதற்குப் பாராட்டுக்கள்!
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.
at last subhasihni also fell in love with the great passenger train of Indian railways, in which her father’s guru mk gandhi also tried to study the mind of common mans of india.
really subhashini can became a travellogue writer in tamil which is vacant for long time after the death of “‘kalki, saavi, etc