காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: இந்த வாரம் வியாபாரிகள் நினைத்த இலக்கை அடைய அதிகத் தன்னம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த வந்த பிரச்னைகளின் தாக்கம் குறைவதால் பெண்களுக்கு மகிழ்ச்சிக்குக் குறைவிராது. வேலையில் இருப்பவர்கள் பண விஷயங்களில் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விட்டால், பிரச்னைகள் வராமலிருக்கும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம். மாணவர்கள் விரும்பிய ஆடைவகைகள், வாசனைத் திரவியம் ஆகியவற்றை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

ரிஷபம்: பெண்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நலம். வியாபாரிகள் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இந்த வாரம் இரட்டிப்பு லாபம் வந்து சேரும். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்த்துப் பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம். மாணவர்கள் நண்பர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம்.

மிதுனம்: முதியவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் சிறு உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம். சுய தொழில் செய்பவர்கள் நிதானமான போக்கை மேற்கொண்டால் பண நெருக்கடிகள் தானே குறைந்து விடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிர்பாராத பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். பயணங்களால், சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தலை காட்டுவதைத் தவிர்க்க வியாபாரிகள் சத்தான உணவைச் சாப்பிடவும். ஞாபக மறதிக்கு இடமளிக்காமலிருந்தால், மாணவர்களின் கைப்பணம் கரையாது.

கடகம்: இந்த வாரம் நண்பர்கள் வகையில் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதால், மாணவர்கள் வாக்குறுதி கொடுக்கும் முன் யோசிப்பது அவசியம். புதிதாக வேலையில் சேர்பவர்கள் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வேண்டியதிருக்கும். புதிய ஒப்பந்தங்களும் பாராட்டும், புகழும் கிடைக்க சுய தொழில் புரிபவர்கள் கடுமையாக உழைப்பை நல்க வேண்டி இருக்கும். பெற்றோர்களுக்குப் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் வியாபாரிகள் புத்துணர்ச்சியுடன் திகழ்வார்கள்.

சிம்மம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவதோடு, தன் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். சுய தொழில் புரிபவர்கள் சிரத்தை எடுத்து வேலை செய்தால் விரும்பிய பலனைப் பெறலாம். பணப் பிரச்னை காரணமாகப் பணி புரிபவர்கள் இடையே பிணக்குகள் வரலாம். வியாபாரிகள் நல்ல வருமானம் கண்டாலும் அதற்காக ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும். கலைஞர்கள் பங்கேற்கும் விழா, விருந்து ஆகியவற்றில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் சுய தொழில் புரிபவர்களுக்கு அவ்வப்போது, குழப்பம் வந்து போகும் என்றாலும், தைரியம் குறையாமல் செயலாற்றினால், பிரச்னைகள் பெரிதாகாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் புறம் கூறுபவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது புத்திசாலித்தனம். கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்லும் கலைஞர்கள் சூழலுக்கேற்றவாறு செயல் படுவது புத்திசாலித் தனம். சிறு தொழில் புரிபவர்களுக்குப் பொருளாதார நிலை சற்று இறுக்கமாக இருந்தாலும், மனம் தளராமல் செயல்பட்டால், நிலைமையை ஓரளவு சமாளித்து விடலாம்.

துலாம்: இந்த வாரம் கருத்து வேறுபாடு கொண்டு விலகிய உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணையும் சூழல் உருவாகும். மாணவர்கள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து செயலில் இறங்கினால் எடுத்த காரியங்களில் வெற்றி விளையும். தொழில் தொடர்பான பிரச்னைகள் பெருமளவு தீரும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் தெளிந்த மனதுடன் செயல்படலாம். பெண்கள் ஆடம்பரச் செலவுகள் செய்வதற்குச் செலவாகும் தொகையைச் சேமிப்பாய் மாற்றி வைத்தால், வருங்காலம் வளமாகவும், நலமாகவும் இருக்கும். முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்: புதிய சொத்து வாங்க இருப்பவர்கள் சிறிது காலம் பொறுத்திருந்தால் மனம் விரும்பியபடி மனை அமையும். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் உயர்வான நிலையில் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு அதிகரிக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எனவே பொறுமையாக இருப்பது அவசியம். கலைஞர்களுக்கு வெளியுலகத் தொடர்பு மூலம் புது அறிமுகங்கள் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகள் வகையில் தொல்லைகளைச் சந்திக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குப் பிரச்னைகளின் தாக்கம் குறையும்.

தனுசு: மாணவர்களுக்கு எதிர்பார்த்தது போல் வேலைகள் நடக்காததால், சில ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் பெண்களுக்கு. இந்த வாரம் சுய தொழில் புரிபவர்கள் எதிர்பாராமல் சந்திக்கும் திருப்பங்கள் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாக அமையும். வியாபாரிகளுக்கு வேலையாட்கள் பிரச்சினை, கடன் போன்ற தொந்தரவுகள் வந்து விலகும். கலைஞர்களின் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெற உழைப்பு கை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும், உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பால் வேலைகள் யாவும் சீராய் நடந்து விடும்.

மகரம்: வேலையில் இருப்பவர்கள் சிரமங்களுக்கிடையில், உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற வேண்டியிருக்கும். மனைக்கடனுக்கான விண்ணப்பங்களைக் கொடுப்பதில் அவசரம் வேண்டாம். பணியில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் சலுகை என்பது பெயரளவிலேயே இருக்கும். கருத்துப் பரிமாற்றத்தில் இனிமை இருக்குமாறு பார்த்துக் கொண்டால், மாணவர்கள் எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கவனமாய் இருந்தால், வேண்டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறிய சச்சரவுகளுக்காக மனம் வருந்தும் சூழல் உருவாகும்.

கும்பம்: பிள்ளைகளால் பெற்றோரின் மன அமைதி கெடும் வாய்ப்பிருப்பதால், பிள்ளைகளிடம் பக்குவமாகப் பழகி வரவும். இந்த வாரம் மாணவர்கள், கூட்டு முயற்சி மூலம் செய்யும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டாமல் போகலாம். வேலையில் இருக்கும் பெண்கள் அலுவலக அளவில் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும். கலைஞர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சபலங்களுக்கு இடம் கொடுக்காமலிருப்பது அவசியம். வியாபாரிகள் வெறும் வார்த்தைகளை நம்பிப் பிறருக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்த்து விடவும்.

மீனம்: இது வரை உதவிகரமாய் இருந்தவர்கள் சற்றே விலகிச் செல்ல ஆரம்பிக்கும் சூழல் இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்ககளின் திறமைக்கு உரிய வாய்ப்புகள் வந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்ள சற்றே அதிக முயற்சி வேண்டியிருக்கும். கலைஞர்கள் நல்ல நட்புக்கு நடுவே வீண் சந்தேகத்திற்கு இடமளிக்க வேண்டாம். வியாபாரிகள் ஒப்பந்தங்களில் உள்ள விதி முறைகளை அறிந்து கொண்டு திட்டமிடுதல் மூலம் வீண் பணக் கஷ்டத்தைத் தவிர்த்து விடலாம். மாணவர்கள், பெண்கள், பயணங்களின்போது புதியவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *