‘இங்கே எல்லாம் இலவசம்; ஓட்டுதான் காசு!’ – சீமான்

0

ஜனநாயகத்தைக் காக்க நடப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் தேர்தல் சிதைத்துவிட்டது. இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு என்றாகிவிட்டது, என்றார் இயக்குநர் சீமான்.

seemaan in nellai

இந்தத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை வீழ்த்தப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தனது 17 நாள் சூறாவளிப் பிரச்சாரத்தை, காங்கிரசுக்கு எதிரான போராட்டமாக அறிவித்துள்ள சீமான், நெல்லையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

திசையைன்விளை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் 6 மணிக்குத் தொடங்கியது.

இக்கூட்டதின் தொடக்கமாக வீரத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாருக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

“தமிழனின் தாய் நிலமான ஈழ மண்ணில் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி, ஈழத்து உறவுகளைக் கொன்று குவிக்கச் சிங்கள இனவெறி அரசுக்குத் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதை லட்சியமாய் ஏற்று, காங்கிரசைக் கருவருக்க அடித்தளமாக இப்பொதுக் கூட்டத்தை அமைத்துள்ளோம்” என்று அறிவித்து  சீமான் தனது  போர் முழக்கத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த நாட்டில் எல்லாமே இலவசமாகிவிட்டது. சாப்பாடு, துணி, வீடு, மனைவி என எல்லாமே இலவசமாகத் தருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வது கூட இலவசம்தான். வலி மட்டும்தான் உங்களுக்கு. ஒரு மொத்த சமுதாயத்தையே சோம்பேறிகளாக்கிவிட்டதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லாமே இலவசம்… ஓட்டு மட்டும் காசு. இப்படியும் ஒரு தேசம்.

மக்களே, இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிறைய பணம் தருவார்கள். தாராளமாக வாங்கிக்கொள்ளுங்கள். காரணம் அது உங்கள் பணம்தான். 2 ஜி ஸ்பெக்ட்ரமில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிதான் அது. ஆனால் வாக்களிக்கும்போது மட்டும், மீண்டும் இப்படி ஒரு கொள்ளை அரங்கேறி, நாடே நாசமாகப் போக வேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

காங்கிரஸ் கட்சி, பஞ்சமா பாதகங்களைக் கொஞ்சமும் கூசாமல் செய்து வரும் கட்சி. என் அன்பான திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரியும். அவர்களும் குமுறலோடுதான் காங்கிரஸைப் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இந்தத் தேர்தலோடு, காங்கிரஸ் கட்சி தடம் தெரியாமல் அழிந்து போகவேண்டும். அதுதான் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு தீர்வாக இருக்கும். இனி வரும் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க, அத்தனை கட்சிகளும் அச்சப்பட்டு ஒதுங்கி ஓட வேண்டும். அந்த நிலையை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்…” என்றார்.

கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ஆன்றோர் அவைக்குழு உறுப்பினர் அறிவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன், கோவை கார்வண்ணன், வழக்கறிஞர் நல்லதுரை, தலைமைக் கழகப் பேச்சாளர் ஜெயசீலன், பேச்சாளர் திலீபன், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி அமுதா நம்பி, திருமதி வெற்றிக்கொடி உட்பட, நாம் தமிழர் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

=============================
தகவல் – மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.