வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 2

4

பவள சங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariரு மனிதரின் மன ஓட்டத்திற்கு அவருடைய வயது என்றுமே தடையாக இருப்பதில்லை. அவ்வாறு ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது அவருடைய பழக்கத்தின் குறையே தவிர இயற்கையின் விதி அல்ல. ராமச்சந்திரன் சற்றே கரடு முரடாக வெளித் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், தன் குடும்பம் என்று வந்துவிட்டால் மனிதர் சொக்கத் தங்கம்தான், அந்த ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உருவமும் அதற்குத் தகுந்தாற்போன்ற கட்டையான குரலும் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதும் உண்மைதான். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஒரு தலைவலி, காய்ச்சல் என்றால் கூட துடித்துப் போய்விடுவார். மனைவி பள்ளியில் உயர் வகுப்பு ஆசிரியையாக இருந்தாலும கணவர் முன்பு பெட்டிப் பாம்பாக அடங்கி இருப்பவர்.

குலதெய்வத்தைக் கும்பிடுவது, ராமச்சந்திரனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசயம். குடும்பத்தில் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் தன் குலதெய்வமான அங்காள அம்மனைத் தரிசித்து, ஆசி வாங்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். குலதெய்வம் வரம் கொடுத்தால் அந்தக் காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையும் கொண்டவர். இன்று மகன் இளமாறனின் திருமணம் பற்றி அம்மனின் நல்வாக்கு பெறவே கோவில் நாடி வந்திருக்கிறார். கோவிலில் அம்மனுக்கு விசேச பூசை செய்வதற்காக முன் கூட்டியே பூசாரியின் மூலமாக ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருந்தார்.

பொதுவாகவே அவருடைய குணம் அப்படி. எந்தக் காரியமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டது போல் நடக்க வேண்டுமென்பதில் கட்டுப்பாடாக இருக்கக் கூடியவர். சென்ற முறை கோவில் வந்தது, மூத்தவன் முத்துமாணிக்கம் திருமணப் பேச்சின் போது தான். ஆச்சு அவன் திருமணம் முடிந்தும் 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே. அவனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இந்நேரம் குழந்தைக்கு மொட்டை போடவேனும் கோவிலுக்கு வந்திருக்க வேண்டும். இன்னும் அம்மன் அந்த விசயத்தில் கருணை காட்டவில்லை.

யார் கண்டது இந்தக் காலத்துப் பிள்ளைகள் குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட்டு, பிளானிங் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பிறகு 4 அல்லது 5 ஆண்டுகள் ஆன பின்பு பொறுமையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் போது அது சில நேரங்களில் காலங்கடந்த செயலாகப் போவதாலோ என்னவோ, பிறகு மருத்துவமனையே கதியாகக் கிடந்து பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பல விசயங்களை அவர்கள் பெற்றோரிடம் கலந்து கொள்ளவதில் கூட நாட்டம் கொள்ளாமல், தாங்களே முடிவு எடுக்கும் பழக்கமும் ஏற்படுத்திக்கொள்கின்றனரே. எல்லாம் கால மாற்றம். எது எப்படியோ, குடும்பத்தில் அமைதி வேண்டுமென்றால் சிலவற்றைக் கண்டும் காணாமல் இருந்துகொள்வதுதான். நல்லது.

பூசாரி பூசைக்குத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டார். சுவாமிக்கு பாலபிசேகம் செய்யப்பட்டு, மங்களா, தானே அழகாகக் கட்டி எடுத்து வந்த செவ்வரளியும் மஞ்சள் கொன்றையும் இடையே பச்சை மருகும் (அம்மன் வாசனை மலர்கள் பிரியையாயிற்றே) சேர்த்துக் கட்டிய மாலையும், ஒற்றை நந்தியாவட்டை பூவினால் ஆன மாலையும் கொண்டு, புத்தாடை சாத்தி, அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்தி, கண் கொள்ளாக் காட்சியாக அம்மன் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார், தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், இப்படித்தான் அங்காளம்மன் போல் அழகே உருவாய் இருந்திருப்பாளோ. ஏனோ தன் குடும்பத்தில் மட்டும் பெண் வாரிசுகள் பிறப்பது அரிதாக இருக்கிறது என்று அம்மா கூட சொல்லிக்கொண்டே இருப்பாள்.

ராமச்சந்திரனுக்கு உடன் பிறந்ததும் ஒரே அண்ணன் மட்டும்தான், தன் குடும்பம் போலவே. மாறனின் நினைவு வந்தது. என்ன பண்ணிக் கொண்டிருப்பான் இந்தப் பயல். ஊருக்கு வரும் போது கூட பேச நேரம் வாய்க்கவில்லை. இங்கிருந்து சிக்னலும் கிடைக்காது. இந்நேரம் மகன் பெண்ணின் போட்டோ பார்த்திருப்பானோ என்னவோ. இரவு நேரத்தில் அனுப்பியதால், சரியாகக் கூட கவனிக்கவில்லை. பெண் நல்ல கலராக இருப்பதாகத்தான் தெரிந்தது. நல்ல படிப்பு, வேலை, நல்ல சொந்தம், தனக்கு ஒன்னுவிட்ட அக்கா முறை. எல்லாவற்றிற்கும் மேலாக பெண் நன்கு பாடுவாள், வீணை வாசிப்பாள், நல்ல ஜாதகப் பொருத்தம் எனப் பல பிளஸ் பாயிண்ட்கள், மாறனுக்குப் பெண் பிடிப்பதற்கு..

ஊருக்குப் போனதும் இது பற்றி மாறனிடம் பேசலாம் என்று முடிவு செய்து, மங்களத்திடம்,

“என்னடி மங்களா, ஒன்னுமே பேசாம உட்கார்ந்திண்டிருக்கே. உன் பையன் என்ன சொல்லப் போறான்னு யோசிக்கிறயா?”

“இல்லண்ணா, இதுல யோசிக்க என்ன இருக்கு. அவன் பெண் பிடிச்சாத்தான் மேற்கொண்டு பேசுவான். இல்லாவிட்டால், எந்த காம்ப்ரமைசும் பண்ணப் போறதில்ல. இதுல அலட்டிக்க என்னண்ணா இருக்கு? அவனுக்குப் பிடிச்சா மேற்கொண்டு பேச வேண்டியதுதான்.”

“அது சரிண்ணா………” என்று ஏதோ பேச வாயெடுத்தவள், அலங்காரம் முடிந்து, திரை விலகியவுடன், பேச வந்ததை மறந்து, அம்மன் அலங்காரத்தில் சொக்கி நின்று, தன்னை மறந்த நிலையில்,

“சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயே, மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இறங்கி மிகவும் அகிலமதில், நோயின்மை, கல்வி, தன தான்யம், அழகு, புகழ், இளமை பெருமை, வளி, துணிவு, சந்தானம், வாழ்நாள், வெற்றி, ஆகு நல்லூழ் நுகர்ச்சி, தொகைதரும், பதினாறு பேறும், தந்தருளி, சுகானந்த வாழ்வளிப்பாய்,சுகிர்த குணசாலி பரிபாலி, அனுகூலி, மங்கலி, விசாலி, மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை, வளர் திருக்கடவூரில் வாழ்நாமி. சுபநாமி, மகிழ்வாமி அபிராமி, உமையே!”

என்று அழகாக மோகன ராகத்தில் மெய் மறந்து பாடி வழிபட்டாள். அம்மன் திருமுன் நின்றாலே தன்னையறியாமல் இந்தப் பாடலை அவள் வாய் ராகம் போட ஆரம்பித்துவிடும். சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கம் அவளுக்கு. எத்துனை கருத்தாழம் மிக்க பாடல் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வாள்.

காலை எழுந்திருக்கும் போதே ஒரே பரபரப்பு, மாறனுக்கு. இரவு சரியான தூக்கமே இல்லை. அந்த அழகு பிம்பமே கண்ணில் நின்றது அவனுக்கு……… இது என்ன வேடிக்கை, ஒரே முறைதானே அவளைப் பிம்பமாகப் பார்த்தேன். அதற்குள் எப்படி இப்படி பல்லாண்டுகள் பார்த்துப் பழகி, குடும்பம் நடத்தியது போல ஓர் உணர்வு. இதுதான் முன் ஜென்மத் தொடர்பு என்பார்களோ……… சே அவனுக்கே இது சற்று அதிகப்படியாகத் தெரிந்தது.

‘என்னைத் தாலாட்ட வருவாளோ…..’ செல் பேசி சிணுங்கியது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே கையில் எடுத்தான்.

“ஹலோ, என்னடா மச்சி, இவ்ளோ நேரமா போன் எடுக்காம என்ன பண்ற……. சரி சரி, இப்ப கிளம்பி இங்க வர, நம்ம சூர்யா, இன்னைக்கி இரு சூப்பர் ஐட்டம் குக் பண்றான், நீயும் வாடா இங்கே சாப்பிடலாம்” என்றான்.

“இல்லடா மச்சி, கொஞ்சம் வேலை இருக்குடா…….”

“என்ன வேலைடா, வாஷிங் போகனுமா? நாளை போகலாம்…….”

“இல்லடா, சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக்கு ஒரு வேலையாகப் போக வேண்டும்…….”

“இல்லேன்னா, நாங்க அங்கே வரோம்டா……”

“இல்லடா, நிசமாத்தான் போகணும், போயிட்டு, சீக்கிரம் வந்துடுவேன்…..”

“சரிடா மச்சி…….என்னமோ முழுங்கறே….. நடத்து…… தெரியாமத்தான் போகுமா என்னா…….”

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா…… ம்…….”

“சரி உடு……ஜாக்கிரதையா டிரைவ் பண்ணு, சரியா……பை.”

அப்பாடி ஒரு வழியா போனை வச்சான்…… மளமளவெனக் கிளம்ப வேண்டியதுதான்.

புறப்படத் தயாராகியும், ஒரு தடுமாற்றம், போகலாமா, வேண்டாமா என்று. ஒரு வேளை அப்பா ஏதாவது சொன்னால் என்ன செய்வது. எப்படியோ சமாளிப்போம். இனி மனத்தைக் கட்டுப்படுத்த இயலாது. எதற்குக் கட்டுப்படுத்த வேண்டும். திருமணம் என்பதே இரு மனம் இணைந்த, ஒரு சுதந்திர நிலைதானே. இதில் தேவையில்லாத கட்டுப்பாடு எதற்கு?

அவந்திகா……….. இத்தோடு காலையிலிருந்து இந்தப் பேரை ஒரு 50 முறையாவது சொல்லிப் பார்த்திருப்பேனா……. அது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது…… பார்க்கலாம் எப்படிப்பட்ட பெண் என்று. ஒரே முறை பார்த்தால் என்ன, குணம் தெரிந்து விடவா போகிறது? ஓரளவிற்கு தெரியலாம் என்றாலும் பழகப் பழகத்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வளவு தூரம் தனியாக வந்து தங்கி வேலை பார்த்து, ஓவியக் கண்காட்சி நடத்தி, இதெல்லாம் சாதாரண விசயமா, நல்ல துணிச்சலான பெண்ணாகத்தான் இருப்பாள். நாம் திடுமென்று போய் நின்றால் அதிர்ச்சியாகி விடுவாளோ. சே, அப்படி இருந்தால் அவள் வீட்டில் ஏன் போன் நம்பர், விலாசம் எல்லாம் தரப் போகிறார்கள். ஆச்சு இன்னும் 30 நிமிடத்தில் வாஷிங்டன் சென்று சேர்ந்து விடலாம். பின்பு அட்ரஸ், G.P.S. இல் வந்துவிடப் போகிறது. வேறு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது. திடீரென்று போய் நின்றால் நன்றாக இருக்காதே. ஒரு வேளை எங்காவது வெளியே சென்றிருந்தால் என்ன செய்வது. சரி எதற்கும் ஒரு போன் செய்து விடலாமே என்று தோன்றியது. அதுதான் சரி என்றும் உள் மனதும் கூறவும், அடுத்த ரெஸ்ட் ஏரியாவில் வண்டியை நிறுத்தி விட்டு போனை எடுத்துப் பேச முயன்றான்.

கொஞ்சம் தொண்டை வறண்டது போல இருந்ததால், வண்டியில் இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஒரு சிப் குடித்து விட்டு தொண்டையை ஒரு முறை கணைத்துக்கொண்டு,

“ஹலோ………..”

“ஹலோ….. எஸ்…. ஹூஸ் திஸ்……..”

தேனினும் இனிய நாதமாக ஒலித்தது அவன் காதுகளில்…… குரல் கூடவா இவ்வளவு இனிமையாக இருக்கும்……..

“ஹலோ……ஹலோ…….ஹூஸ் ஆன் த லைன்…………”

அவனுக்கு அப்பதான் சுய நினைவு வந்தவனாக, “ம்ம் குட். ஐ டாக் டு மிஸ் அவந்திகா ப்ளீஸ்” என்றான், குரலை மிகவும் மென்மையாக்கிக் கொண்டு………

“யா……..மே ஐ நோ, ஹீ ஈஸ் ஆன் த லைன்………”

“நான் மாறன், …….நானும் சென்னைதான்.”

“ஓ, அப்படியா, வாட் கேன் ஐ டூ ஃபார் யூ…”

“உங்கள் அப்பா ஒன்றும் சொல்லவில்லையா என்னைப் பற்றி” என்றான்…….

“இல்லையே, நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றாள்.

“எனக்கு உங்கள் போட்டோவும் விலாசமும் என் அப்பா கொடுத்தார்கள். ஜாதகம் சரியாக இருப்பதாகச் சொன்னார்கள்.”

“என்ன சொல்றீங்க ஒன்னுமே புரியலயே.. என் அப்பா எதுவும் சொல்லலையே.?”

“சரி பரவாயில்லை, சீக்கிரம் சொல்வார்கள். இப்போது நீங்கள் ஃப்ரீயாக இருந்தால், என்னோடு சற்று வெளியே ரெஸ்டாரெண்ட் வர முடியுமா, உங்களிடம் பேச வேண்டும்.”

“என்னது என்ன சொல்கிறீர்கள். முன்ன பின்ன தெரியாத பெண்கிட்ட எப்படி இப்படி கேட்கிறீர்கள்? எனக்கெல்லாம் யாரையும் தெரியாது. தேவையில்லமல் பேசாதீர்கள்” என்று போனை கட் பண்ணச் சென்றவள்,

“ஹலோ…… ஒரு நிமிடம்” என்ற தாழ்வான குரல் கேட்டுச் சற்றே தயங்க, கிடைத்த இடைவெளியில், மாறன் அவசரமாக, “சாரி, உங்கள் அப்பாவை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன், என்னைப் பற்றி. என் பெயர் மாறன், இங்கு இன்ஃபோசிஸ் எம்ப்ளாயி…..” என்று இழுத்தான், மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல்.

அதற்குள் அவள், “இருங்கள் நானே என் அப்பாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்…” என்றாள்.

10 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் போனைக் காணோம். ஒரு வேளை பண்ண மாட்டாளோ, என்று யோசிக்கும் போதே, போன் ஒலிக்க ஆரம்பித்தது……. வழக்கமாகக் கேட்கிற ‘தாலாட்ட வருவாயா’ பாட்டு அன்று மட்டும் என்னவோ மிக வித்தியாசமாக ஒலித்தது…….

கோவிலில் பூசை முடிந்து, பிரசாதம் கொண்டு வந்து கொடுத்த பூசாரி, “ஐயா, உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும்” என்று மிகவும் தயங்கினார்.

“என்ன ஐயரே, சொல்லுங்கள்” என்றார் ராமச்சந்திரன்.

“ஐயா, சொல்லச் சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் மறைத்தால் பாவம் அதனால்தான்…… வந்து தாங்கள் வாங்கி வந்த தேங்காய் அழுகி இருந்தது……. நான் வேறு தேங்காய் உடைத்து விட்டேன். ஆனாலும், தம்பி திருமணத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது ஐயா…. எல்லாம் அந்த அம்மா பார்த்துப்பாள்…….. கவலை வேண்டாம் ஐயா. சென்று வாருங்கள்” என்றார் ஐயர்.

ராமச்சந்திரனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை… ‘இது என்ன இப்படி ஆகிவிட்டதே…………. என்ன செய்வது….?’

(தொடரும்……………..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 2

  1. ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஅ

    தேங்காய் செண்டிமெண்டை கொண்டு வந்து
    ஒரு மர்மத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்
    சபாஷ்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. அட ஆண்டவா, தாலாட்ட வருவாளானு காத்து இருக்கும் தம்பி தலையிலே தேங்காய் வடிவில் ஒரு குண்டா…………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.