என்னைக் கவர்ந்த 4 நவீன நாடகங்கள்
அண்ணாகண்ணன்
தியேட்டர் லாப் நாடக அமைப்பின் 6ஆம் ஆண்டினை முன்னிட்டு, 2011 மார்ச்சு 6ஆம் நாள், இரு நாடகங்கள் அரங்கேறின. சென்னை நுங்கம்பாக்கம் அல்லயன்ஸ் பிரான்சைஸ் அரங்கில் இவை நிகழ்ந்தன. வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள், பம்மல் சம்மந்த முதலியாரின் ‘சங்கீதப் பைத்தியம்’ ஆகிய இரு நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
சப்தங்கள்
எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரைத் தேடி, இராணுவ வீரன் ஒருவன் வருகிறான். தன் வாழ்க்கை அனுபவங்களை அவரிடம் சொல்கிறான். விதவிதமான அனுபவங்கள். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டுப் பலரையும் கொன்றது; வலியுடன் துடிக்கும் நண்பனை கருணைக் கொலை செய்தது; வேசி ஒருத்தியின் குழந்தையை எறும்புகளிடமிருந்து அவன் காப்பாற்றியது; அவனுடைய காம இச்சைகள், உடல் உபாதைகள்…. இப்படியாக விட்டு விட்டுச் சொல்கிறான்.
இதில் பஷீராக நடித்தவர், பாரதி மணி. மலையாளம் கலந்த தமிழை இலாகவமாக உச்சரித்தார். மனிதநேயத்துடன் இராணுவ வீரனை வரவேற்று உபசரித்தார். அவன் கதையைப் பொறுமையாகக் கேட்டுக் குறிப்பெடுத்துக்கொண்டார். மதுப் புட்டி முன்னிருக்க, பைப் புகைத்துக்கொண்டு, ஊன்றுகோலைப் பற்றிக்கொண்டு அவர் உரையாடியதைப் பார்க்கையில், பாரதி மணியே தன் இயல்புடன் அங்கிருப்பதாகத் தோன்றியது. ஆனால், இந்த இயல்புகள், பஷீருக்கும் அப்படியே பொருந்திவிட்டன. பின்னர் இணையத்தில் பஷீரின் படத்தைத் தேடிப் பார்த்தால், இருவருக்கும் முகத்தில் சற்று வேறுபாடு தெரிந்தது. ஆயினும் செயல் அடிப்படையில் பாரதி மணி, பஷீரை முழுமையாக உள்வாங்கியிருந்தார்.
இராணுவ வீரன் ஒருவன் என்றாலும் கிட்டத்தட்ட 10 பேர்கள் அந்த வேடத்தில் நடித்திருந்தார்கள். ஒரு கதையின் தொடர்ச்சியே என்றாலும் வெவ்வேறு நபர்கள் வந்து அதைச் சொன்னபோது, அது வெவ்வேறு கதையாகவே தோன்றியது. இத்தகைய அனுபவங்கள், இராணுவ வீரர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, ஒருவனுக்குள் பலரை நடிக்க வைத்ததன் மூலம் இதை ஒரு பொதுக் கதையாகவே இயக்குநர் கையாண்டார். வேசியின் கதாபாத்திரத்தில் நடித்த சபரி, சுழன்று சுழன்று ஆடி, அனைவரையும் கவர்ந்தார்.
சப்தங்களின் கதைக் களம், மேடை நாடகத்துக்குச் சற்று சவாலானது. ஆயினும், அதை இயன்ற வரை சிறப்பாக இயக்குநர் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
சங்கீதப் பைத்தியம்
பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடக உலகின் முன்னோடிகளுள் ஒருவர். தமிழ் நாடக உலகில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர். நடிகர் கமல்ஹாசனுக்கு இவர் மீது மிகுந்த மதிப்பு உண்டு. அதனால்தான் தன் திரைப்படம் ஒன்றுக்கு பம்மல் கே. சம்பந்தம் எனத் தலைப்பிட்டார். பத்மபூஷண் விருது பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தை 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தலைமுறைக்கு மீண்டும் அறிமுகம் செய்ததன் மூலம் தியேட்டர் லாப், அருஞ்செயலைச் செய்துள்ளது.
இவரின் சங்கீதப் பைத்தியம், சுவையான நகைச்சுவை நாடகம் ஆகும். இதில் அரசன் ஒருவனின் தாய், திடீரென இறந்துவிடுகிறார். சங்கீதத்தில் நாட்டம் கொண்ட தன் தாயின் ஆத்மா சாந்தியடைய, நாட்டு மக்கள் அனைவரும் சங்கீத மொழியில் பேச வேண்டும்; மீறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணையிடுகிறான். தங்கள் பெயரை ராகங்களின் பெயரில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவன் ஆணை. இந்தக் கடினமான ஆணையை அதிகாரிகளும் காவலர்களும் தீவிரமாக நிறைவேற்றுகிறார்கள்.
பண்டம் விற்போர் முதல், படை வீரர் வரை அனைவரும் சங்கீதமாகவே பேசுவதும் பேச முயல்வதும் மிக நல்ல கற்பனை. அப்படிப் பேச இயலாதவர்கள், தண்டம் அழ வேண்டிய நிலை. இதனால், மக்கள் யாரிடமாவது சென்று அவசரமாகச் சங்கீதம் கற்க முயல்கிறார்கள். அப்போது அந்தப் பகுதிக்குச் சாமியார் ஒருவர், பாடிக்கொண்டே வருகிறார். அருகருகே வீடுகளைக் கொண்ட அண்ணன் – தம்பி ஆகிய இருவர், அவரிடம் இசை பயில விரும்புகிறார்கள். நான்தான் முதலில் இசை பயில்வேன் என இருவரும் சண்டையிட, காவலன் விசாரிக்கிறான். தம்பியின் கையூட்டினால், சாமியார், தம்பியுடன் செல்ல வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறான்.
தன் மனைவி மீது சாமியார் மையல் கொண்டதாக ஐயுற்று, அவரைத் தம்பி அடிக்க, சாமியார் மயங்கி விழுகிறார். சாமியார் இறந்துவிட்டதாக நினைத்து, பழி அண்ணன் மேல் சேரட்டும் என அண்ணன் வீட்டில் சாமியாரைக் கொண்டு வந்து வைக்கிறான். அண்ணனோ பயந்து, தம்பி வீட்டில் கொண்டு இடுகிறான். இருவரும் சந்நியாசியைப் பந்தாட, பிரச்சனை அரசனின் கவனத்திற்கு வருகிறது. யாருக்குத் தண்டனைக் கொடுக்கலாம் என ஆலோசிக்கையில், சாமியார் கண்விழிக்கிறார். பிரச்சனை ஒரு வழியாகத் தீர்கிறது. இசையில் தான் பேச வேண்டும் என்ற ஆணையை விலக்கிக்கொள்ளுமாறு சாமியார் சொன்ன யோசனையை மன்னர் ஏற்கிறார். நாடகம் இனிதே நிறைவடைகிறது.
இதில் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். நாடகத்தின் தொடக்கத்தில் சந்தைக் காட்சியைக் காட்டும் விதமாகப் பல்பொருள் விற்பவர்கள், அரங்கம் முழுவதும் சுற்றி வந்து, கூவிக் கூவி விற்றது மிக இயல்பாக இருந்தது. கடலை மிட்டாய், முறுக்கு, சோன் பப்டி, கொய்யா… எனத் திரையரங்கில் என்னென்ன விற்பார்களோ அவை அனைத்தையும் அந்த நடிகர்கள், அரங்கில் விற்றார்கள். பார்வையாளர்களுக்குச் சிற்சில பண்டங்களையும் கொடுத்தார்கள். எனக்கு ஒரு கொய்யாப் பழம் கிடைத்தது.
ஒவ்வொரு காட்சியும் இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் அமைந்திருந்தது. சாமியாராக நடித்த கார்த்திக், கலக்கிவிட்டார். சிரித்த முகமும் சபலச் சாமியாருக்கு ஏற்ற உடலசைவுகளும் அவருக்கு மிகப் பொருத்தமாய் அமைந்துவிட்டன. மன்னராக நடித்தவரும் சிறப்பாகவே நடித்தார். அண்ணன் – தம்பியர், அவர்களின் மனைவியர் உள்பட அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். தியேட்டர் லாப் நடத்திய இந்த இரு நாடகங்களையும் சி.எச். ஜெயராவ் இயக்கியிருந்தார். ஒவ்வொரு நாடகத்திற்கும் ரூ.100 கட்டணம் விதித்திருந்தனர்.
பரீக்ஷா வழங்கிய இரண்டு நாடகங்கள்
ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழு நடத்திய பல்லக்கு தூக்கிகள், நாங்கள் ஆகிய இரு நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 2011 பிப்ரவரி 26 – 27 ஆகிய நாட்களில் சென்னை, பெசன்ட் நகரில் கடற்கரையோரம் உள்ள ஸ்பேசஸ் என்ற அரங்கில் இந்த நாடகங்கள் அரங்கேறின.
பல்லக்கு தூக்கிகள்
அமரர் சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்த நாடக வடிவம், இது. ஆள்வோர் ஆளப்படுவோர் பற்றிய நாடகம். பல்லக்கு ஒன்றினை நான்கு பேர், தயார்ப்படுத்துகிறார்கள். அதில் யார் வரப் போகிறார்? எப்போது வருவார்? அவர் என்ன கனம் இருப்பார்? அவருக்கு இணையான கனத்தை வைத்துத் தூக்கி, ஒத்திகை பார்ப்பது எப்படி?…. எனப் பல்லக்குத் தூக்கிகள் தங்களுக்குள் கலந்துரையாடுகிறார்கள். முழுக்க முழுக்க அங்கதமும் நுணுக்கமான கேள்விகளும் கொண்ட இந்த உரையாடல், நடப்பு அரசியலை, அரசியல்வாதிகளைக் கடுமையாக விமரிசிக்கிறது. 20 நிமிடங்களில் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார்கள்.
நாங்கள்
இது, தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு ஆகும். ‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது.
வீட்டில் சிறைப்பட்ட பிராமணக் கைம்பெண், வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண், காதலிக்கப் பெண் கிடைக்காத கல்லூரி இளைஞன், மனைவியுடன் உடலுறவுக்குத் தடையாக இருக்கும் என்பதால் குழந்தையைக் கிணற்றில் எறிந்த மேல்தட்டுக் கணவன், பேருந்தில் தன்னிடம் வம்பு செய்த இளைஞர்கள் மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி, கணவனுக்குத் துரோகம் செய்த மனைவி… என இதில் அமைந்த ஒவ்வொரு கதையும் அருமை. நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். வசனங்களும் ஒலி-ஒளி அமைப்பும் இசைச் சேர்க்கையும் பொருத்தமாக அமைந்திருந்தன.
ஆறு கதைகளை ஞாநியும் இரண்டை ’மா’வும் எழுதியிருந்தனர். 110 நிமிடங்கள் நீண்ட இந்த நாடகம், மகத்தான வரவேற்பைப் பெற்றது.
இந்த ஸ்பேசஸ் என்ற அரங்கம், இயற்கையான சூழலில் நவீன நாடகங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது. இந்த இடம், நடனமணி சந்திரலேகாவிற்குச் சொந்தமானது. நவீன நாடகத்திற்காகக் கட்டணமின்றி, வழங்கியிருந்தார்கள். ஆயினும், தங்கள் சொந்தச் செலவில் நாடகம் போடுவதால், பார்வையாளர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்க வேண்டும் என ஞாநி வேண்டுகோள் விடுத்தார். நாடகத்தில் நடித்தவர்களே ஒரு பெட்டியை எடுத்துவந்து, நிதி சேகரித்தனர்.
திறமையான கலைஞர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்காத நிலையிலேயே தமிழ்ச் சமூகம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. அவர்களும் தங்களால் இயன்ற அளவில் போராடி வருகிறார்கள்.
ஒரு நல்ல நாடகத்திற்கு நடிகர்கள், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் ஆகியோர் கிடைத்தாலும் கூட போதா. நல்ல அரங்கங்கள், ஒலி-ஒளி வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள், அரங்கப் பொருள்கள், தொடர்ச்சியான பயிற்சிகள், போக்குவரத்து வசதிகள், ஊக்கத் தொகைகள்…. என எவ்வளவோ தேவைகள் உள்ளன. இவற்றை நிறைவாக அளித்தால்தானே நவீன நாடகங்கள் வளர முடியும். வெறுங்கையைக் கொண்டு எவ்வளவு நாள்கள் முழம் போடுவது? அரசும் பொருளாதார வளமுள்ள நிறுவனங்களும் செல்வாக்குள்ளவர்களும் செல்வந்தர்களும் இவர்களின் கோரிக்கைகளைச் செவி மடுக்கலாமே.
=======================
படங்கள்: அண்ணாகண்ணன்
1.வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள்:சில சமயஙகளில் தி.ஜா. போலும், சில சமயங்களில் மெளனி போலும் எழுதும் இவரது படைப்புகளைத் தமிழகம் மேலும் படிக்க வேண்டும்.
2.பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சங்கீதப் பைத்தியம்’. நல்லதொரு பரிகாசம்.
‘பல்லக்கு தூக்கிகள்’: இது சிறந்ததொரு எள்ளல் இலக்கியம். நாடகத்துக்கு உகந்தது.