பத்திகள்

ஏப்ரல் 7 – மறக்க முடியாத தினம்

விசாலம்

Vishalamஏப்ரல் 7ஆம் தேதி என்னால் மறக்க முடியாத தேதிதான். ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தத் தேதியில் தான் “உலக சுகாதார நாள்” கொண்டாடப்படுகிறது. இது மறக்க முடியாத நாளாக இருக்கக் காரணம், என் கணவர் அந்த அலுவலகத்தில் தான் வேலை செய்து வந்தார். மார்ச் மாதத்திலிருந்தே வேலை சக்கைப் போடு போடும். இன்றைய தினம் தில்லி W.H.O. காரியாலயத்தின் பெரிய மண்டபத்தில் ஒரு பெரிய திருவிழாதான் நடக்கும். ஓர் அரண்மணைக்குள் புகுவது போல் மிகப் பிரமிப்பாக இருக்கும். வருடா வருடம் எனக்கும் சேர்த்து அழைப்பு வந்துவிடுமாதலால்  அங்கே போவதைத் தவிர்க்க முடியாது.

மாலை சுமார் 6 மணிக்கு விழா ஆரம்பிக்க, இரவு 11 வரை போகும். இந்த விழாவிற்கு எல்லோரும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள். இந்தியாவின் சுகாதார மந்திரியும் வருவார். தவிர W.H.O. டைரக்டரும் வருவார். அன்றைய வருட தீர்மானம், ஸ்லோகன் எல்லாம் பேசி முடித்த பின்,  எல்லோரும் அழகான கண்ணாடிக் கோப்பையை எடுத்து, அதில் ஷிவாஸ் ரீகல் என்ற மிக உயர்ந்த மது வகையை நிரப்பிக்கொள்வார்கள். கூடவே
சூடான பக்கோடா வகைகளும் வறுத்த முந்திரிப் பருப்பும் மேலும் பல அசைவ விஷயங்களும் வரும்.

அந்தச் சூழ்நிலை, எங்களைப் போன்றவருக்குச் சற்று சிரமம் தான். அந்த நேரத்தில் என்ன செய்வது? தமிழ்ப் பெண்மணிகள் சிலரைக் கண்டுபிடித்து   அவர்களுடன் பேசவேண்டும். என்ன பேசுவது? அதுவே ஒரு கலைதான்.

“மாமி, நீங்கள் மிஸஸ்……?”

“நான்தான் மிஸஸ் வேணுகோபால்”

“உங்கள் ஸாரி மிகவும் எடுப்பாக இருக்கிறது”

“தாங்க்ஸ்….. இது பிரகதி மைதான் எக்சிபிஷனில் வாங்கினேன்”

“உங்கள் வீடு எங்கே……. கரோல் பாக்தானா?”

“இல்லை, நாங்க ஜனக்புரியில் இருக்கோம். ஆமாம் நீங்க யாருன்னு சொல்லலையே!”

“நான் தான் மிஸஸ் ராமன்”

WHO“ஒரே ஆபீஸிலே நம்ம கணவன்மாரெல்லாம் இருந்தும் நம்ம ஒருத்தருக்கொருத்தர் contact இல்லை” என்று சொன்னபடியே அந்த மாமியின் கண்கள், தன் கணவர் இருக்கும் திசையில் செல்லும். அவர் கோப்பையை ரசித்து, கையில் பிடித்திருப்பார். ..பின் அந்த மிஸஸ்  என்னிடம் கேட்பாள்.

“உங்கள் பையன் இப்போ என்ன செய்யறான்?’ .

“அவன் இப்போ பிலானியில் நாலாவது வருஷம் படிக்கிறான்”

இதுபோல் அர்த்தமில்லாமல் மேலுக்காகப் பேசிக் காலங்கழிக்கும் ஒரு குழுவும் தங்கள் கணவருடன் சேர்ந்து கொட்டம் போட்டபடி மதுவை ருசி பார்க்கும் வடநாட்டுப் பெண்மணிகள் சிலரின் குழுவும் கலந்து பார்ட்டி நடக்கும். நாசூக்காக ஒன்று அல்லது இரண்டு முந்திரி, பாதாமை எடுக்கும் ரகமும் இருக்கும். ஒவ்வொரு தடவையும் கையில் முந்திரியை அள்ளிக்கொள்ளும் ரகமும் இருக்கும்.

உதட்டளவில் அன்பும் உள்ளத்தில் பொறாமையும் இருக்க உலவும் குழுவும் “சம்சா” என்று சொல்லும் தொண்டர்கள் கூட்டமும் தனக்கு எதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற நினைவில் மேலதிகாரிகளின் வீட்டு வேலையும் செய்யத் தயங்காத நபர்களும் அங்கு வந்து “மஜா” செய்வார்கள்.

ஒரு மணி நேரம் பொழுதை எப்படியோ கழித்தாலும் பாக்கி மூன்று மணி நேரத்தைக் கழிப்பது என்னைப் பொருத்த வரையிலும் ஒரு தண்டனைதான். ஆண்கள் தங்கள் ஆபீஸ் நிர்வாகம் பற்றியோ, அரசியலைப் பற்றியோ அல்லது கிரிக்கெட் மாட்ச் பற்றியோ பேச, நேரம் போவதே தெரியாது.  அதுவும் கையில் மதுக் கோப்பையும் ஏற, அந்த உலகமே தனிதான் .

வருடம் முழுவதும்  உழைத்துப் பின் தன் இஷ்டப்படி எல்லோரும் சமமாக ஒரே ஹாலில் கூடி, இசை, ஜோக்குகள் என்று ஆரம்பித்து, எல்லோரும் ஒன்றாகப் பழக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறதே. இந்த அலுவலகம், அதைப் பாராட்ட வேண்டியதுதான்.

இந்த உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு பிரிவாகும். உலக சுகாதாரக் கூட்டம், 1948இல் ஆரம்பித்தது, பின் 1950இலிருந்து (ஏப்ரல் 7ஆம் தேதி) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களிடையே சுகாதார விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நோய்களைத் தடுக்கத் தக்க நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதன் தலைமை அலுவலகம், ஜெனிவாவில் உள்ளது.

World_Health_Organisation_building

இந்த அமைப்பு எடுத்த சில தலைப்புகள்

 • சுகாதாரக் கேடு,  இன்று செயலில்லை என்றால் நாளை குணமில்லை
 • நோயைக் குணமாக்கக் கூடுதல் வசதி
 • ஒன்றுபட்டு உடல்நலத்திற்காக உழைப்போம்
 • தாய்க்கும் சேய்க்கும் இரு பாதுகாப்பு
 • தெருவின் சுத்தம்
 • சுற்றுச் சூழ்நிலை
 • பிறந்த குழந்தைக்கு மூன்று முக்கிய ஊசிகள்
 • மனக் கலக்கம், மன அழுத்தம், மனச் சிதைவு
 • தொற்று நோய்
 • இளம்பிள்ளை வாதம்
 • எய்ட்ஸ் நோய்

இது போல் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதற்கென்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து, அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன், அவர்களிடம் இருந்து வருகிறது.

இதேபோல் சிக்கன்குனியா, ஸ்வைன் ப்ளூ போன்ற நடுநடுவே தலைக்காட்டும் பயங்கர நோய்களையும் ஆய்வு செய்து, அதற்குத் தகுந்த வைத்திய முறைகளையும் ஆராய்ந்து, மக்களிடம் அந்தந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாகச் சேர்ப்பிக்கிறார்கள்.

இந்த வருடம் அவர்கள் எடுத்த தலைப்பு, “Anti micodrial resistance”. அதாவது ஆங்கில மருந்துகளின் நச்சுப் பொருட்கள், நம் உடலில் நாம் உட்கொள்ளும் போது இரத்தத்துடன் கலக்க,  அதைத் தாங்கும் சக்தியை {immunity} அதிகப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்? என்ற விஷயத்தை இந்த வருடம் எடுத்துக்கொண்டிருக்கிறது  என  நினைக்கிறேன். மருத்தவர்கள் இதைப் பற்றி நன்கு கூற இயலும்.

உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன், மனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

===========================

படங்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  ‘உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன் மனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.’

  – அதைச் சொல்லுங்கோ. நாள்தோறும் உடல் சுத்தம், மனச் சுத்தம் வேண்டும். நடைமுறைக்குக் கொண்டு வரலாம். எப்படிங்கிறேளா? எக்ஷ்ஸென்ஷியலிஸ்ட் தத்துவத்தில், ஹைடிகர், ‘இருப்பதில் நிலைப்பாடுகள்’ என்று வகைப்படுத்துவார். இந்த உலகில் ஆஷாடபூதியாகவும் வாழலாம்; மெய்யுணோர்ந்தனாகவும் நெறியுடன் வாழலாம். இரண்டாவது உடல், ஆவி, மனம், மூளை எல்லாவற்றையும் ‘அசல்’ பிரும்மமாக வாழ வைக்கிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க