தாய்மை ஒரு வரமா அன்றி சாபமா?
பவள சங்கரி
தலையங்கம்
ஒரு உயிரை அழிப்பது என்பது பாபமான செயல்தான் என்றால், அழிந்து கொண்டிருக்கும் அந்த உயிரினால் பெரிய உயிர் போவதைத் தடுக்காமல் இருப்பதும் பாவம்தானே. இதற்கு சட்ட திட்டங்கள் என்ற பெயரில் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த, சவீதா என்ற 31 வயதான பல் மருத்துவர், கொடூரமாக உயிரிழந்தது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அயர்லாந்து
நாட்டில் கால்வே எனும் நகரில் பொறியாளராகப் பணிபுரியும் பிரவீன் என்பவரின் மனைவியான இவருக்கு வயிற்றில் உண்டான கரு இயல்பான நிலையில் இல்லையென்பதை, வயிற்று வலி ஏற்பட்டபோது, மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. 17 வார கருவே என்பதனால் கோளாறு உள்ள கருவை கலைத்து விடும்படி வேண்டியும், தங்களுடைய கத்தோலிக்க கிறித்துவ நாட்டின் சட்டப்படி கருவைக் கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்ட நிலையில் அக்கரு வயிற்றிலேயே இறந்துள்ளது. அதன் விடம் தொப்புள் கொடி வழியாக தாயின் இரத்தத்தில் பரவி, அவர் உயிரையேக் குடித்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவிற்கு இப்பிரச்சனை பெரிதாகி, இந்தச் சட்டத்தின் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று 2000 மக்கள் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். சவிதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கருக்கலைப்பு செய்யாததால் இந்தியப் பெண் மரணமடைந்துள்ளது. துர்பாக்கியமாதென்றாலும், இது இந்த நாட்டு மக்களின் பன்னெடுங்கால நம்பிக்கை என்பதால் கருக்கலைப்பு சட்டத்தில் தீடீர் என்று எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். சட்டங்கள் என்பது மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக என்பது போய், அச்சட்டத்தின் காரண்மாகவே இது போன்று இன்னும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது. வளர்ந்த நாடுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்கள்கூட அம்பலமாகி பலத்த எதிர்ப்பும் கிளம்புவது, இனி இதுபோன்ற பிரச்சனைகள் எழாமல் இருப்பதற்கான ஆரோக்கியமான சூழலாகவே இருப்பதோடு இது. மனதிற்கு ஆறுதல்ளிக்கக்கூடிய விசயமாகவும் இருக்கிறது.
இது ஒரு புறமிருக்க இதே துர்பாக்கிய நிலை நம் நாட்டின் பல பிற்பட்ட கிராமங்களிலும், கல்வியறிவற்ற மக்களின் மத்தியிலும் விழிப்புணர்வற்ற நிலையில் எத்தனையோ சவிதாக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். சமீபத்திய உலக சுகாதார மைய கணக்கெடுப்பின்படி, தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல பின் தங்கிய கிராமங்களில் சுகாதாரமற்ற முறையில் கருக்கலைப்பு செய்யும் முறை இன்றளவிலும் புழக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முரட்டுத்தனமான மற்றும் சுகாதாரமற்ற பல வழிமுறைகளில் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் தொற்று மற்றும் இரத்த இழப்பினால் சில காலங்களிலேயே நோய்வாய்ப்பட்டு காரணம் அறியாமலேயே இறந்து போகும் அபாயமும் கூட ஏற்படுகிறது.
நம் நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படி தவறானதொன்றில்லையென்றாலும் பல காரணங்களுக்காக கிராம மக்கள் மருத்துவமனைகளில் சென்று கருக்கலைப்பு செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள். சுகாதாரமற்ற முறையில் சில பழக்கங்களைத் தொடர்வதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவருகிறது. நம் இந்தியாவில் மத்திய பிரதேசம், தமிழ்நாடு, உ.பி.போன்ற பல மாநிலங்களின் பிற்பட்ட கிராமங்களிலும் இது போன்ற கருக்கலைப்புகள் பல உயிர்களை பலி வாங்குவது வெளியில் தெரியாமலே போய்விடுவதும் உண்டு. இதன்அபாயம் எந்த அளவிலானது என்ற விழிப்புணர்வும் கூட இல்லாமலே மக்கள், குறிப்பாக பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலையே காணமுடிகிறது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வே சுத்தமாக இல்லாத நிலையும் இதற்கொரு முக்கியமான காரணம். நுகர்வோர் உரிமைச் சட்டம் குறித்து அறிந்துள்ள அளவிற்குக்கூட இலவச மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி அறியாதவர்கள் உள்ளனர். “அட இப்படி ஒரு திட்டம் இருக்கிறதா, அதனால் என்ன பயன்?” என்று கேட்பவர்களே இன்று கனிசமாக இருக்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் பெண்களைச் சென்று அடைந்தால்தான் கருக்கலைப்பினாலோ அல்லது பிரசவத்தினாலோ, குழந்தைகளுக்கோ ஏற்படும் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையின் உதவியை நாடுவார்கள். இல்லையென்றால் அரசாங்க மருத்துமனைகளில் பல மணி நேரங்கள் காத்திருப்பதற்கு அஞ்சியும், தனியார் மருத்துவமனைகளின் அதிகமான கட்டணங்களுக்கு அஞ்சியும் தம் உயிரைப் பற்றியும் கவலைப் படாமல் முறையான பயிற்சி இல்லாதவர்களிடம் கருக்கலைப்பும், பிரசவமும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் சேவை மையங்கள் என்ற நிலை மாறி இன்று வியாபார மையங்களாக மாறியுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு தாய்மை என்பது ஒரு சாபமாக ஆகும் நிலையே ஏற்படுகிறது. ஏட்டளவிலேயே பிரகாசித்துக் கொண்டிருக்கும் சில திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லையெனில் அதற்குரிய பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேராமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும். சவிதாவின் மரணம் இந்த அவல நிலைகளுக்கு ஒரு அபாய மணியாக ஒலிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
மனதைப் பிழியும் செய்தி. தனிமனித விழிப்புணர்வு அவசியமாக ஏற்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. சிந்திக்க வைக்கும் கட்டுரைக்கு நன்றி.
இரண்டு வகை அறியாமையால் இங்கே உயிரிழப்புகள்.
மருத்துவம் என்பது பிணிநீக்கத்திற்கு உதவ வேண்டியது என்ற அடிப்படைக் கொள்கையை மத நம்பிக்கையுடன் குழப்பியடித்த அறியாமை ஒருபுறம்.
அரசாங்கம் உதவ முன்வந்தாலும் அதைப்பற்றிய விழிப்புணர்வு இன்றி தவறான பாதையில் சென்று உயிரைவிடும் அறியாமை மற்றொருபுறம்.
அந்தக் காலத்தில் திரைப்படத்திற்கு முன் செய்திகள் காண்பிப்பார்கள்.
அதுபோல இன்று தொலைக்காட்சி செய்திகளுக்கு முன் அரசு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று உருவாக்கும் விளம்பரங்களை காட்ட வேண்டும்.
டெங்கு காய்ச்சல், மருத்துவக் காப்பீடு, அவசர ஊர்தி என அவ்வப்பொழுது சில அறிவிப்புகள் வெளிவரத்தான் செய்கிறது.
ஆனால் இவை ‘உங்களுக்கும் லட்டு திங்க ஆசையா?’ விளம்பரங்கள் போல மக்களை சென்றடைகிறதா எனத் தெரியவில்லை.
முக்கியமான செய்தியைப் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் கட்டுரை.
நல்ல கட்டுரை. நல்ல கவனங்கள். அமெரிக்காவில் இந்த சாபம் சில மாநிலங்களில் உண்டு. என் கருத்துக்கள் காட்டமானவை. நீங்கள் பதிவு செய்வீர்களோ இல்லையோ?