நிலவொளியில் ஒரு குளியல் – 28

9

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshகோடைக் கால நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே இந்தப் பத்தியையும் எழுதுகிறேன். என்னுடைய சிறு வயது கோடைக் கால நினைவுகளில் புத்தகங்கள், நீங்கா இடத்தைப் பெற்றிருக்கின்றன. புத்தகங்கள் என்றவுடன் நீங்கள் நவீன இலக்கியங்கள், மாய யதார்த்த நாவல்கள் ஆகியவற்றைக் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நாங்கள் படித்த புத்தகங்கள் எல்லாம் அப்போது மாதா மாதம் வெளி வந்து கொண்டிருந்த ரத்ன பாலா, பால மித்ரா மற்றும் அம்புலி மாமா போன்றவையே. சில வருடங்கள் கழித்து கோகுலமும் வெளி வரத் தொடங்கியது.

இப்படி எல்லாப் புத்தகங்களையும் விலைக்கு வாங்கிப் படிப்பதென்பது இயலாத காரியம். எனவே எங்களுக்குக் கை கொடுப்பது அப்போது சுழல் படிப்பகம் நடத்திக்கொண்டிருந்த அண்ணாதுரை அண்ணன் தான். ஆழ்வார் குறிச்சியில் அவர் மட்டுமே அத்தைகைய படிப்பகத்தைத் தொடக்கி நடத்தி வந்தார். வாரம் மூன்று முறை வருவார். மாதக் கட்டணத்திற்கு ஏற்றபடி ஒன்றோ அல்லது இரண்டோ புத்தகங்கள் கொடுப்பார். படித்த புத்தகத்தைத் திருப்பி வாங்கிச் சென்றுவிடுவார்.

ratnabala magazineஅவர் ஒரு பட்டதாரி. அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் இதைச் சுய தொழிலாகச் செய்து வந்தார். எங்கள் தெருவில் அநேகமாக எல்லா வீடுகளும் அவருடைய வாடிக்கையாளர்கள் தான். எங்களைப் போன்ற சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அவரிடம் புத்தகம் வாங்கிப் படித்தனர். ரத்ன பாலா என்ற இதழ், எங்களைப் போன்ற சிறுவர்களை மிகவும் கவர்ந்தது. வழவழவென்ற அட்டைப் படமும் கதைகளுக்கு கலர் ஓவியங்களுமாய் ரசிக்கத் தக்கதாய் இருக்கும். அப்போது வெளி வந்துகொண்டிருந்த அம்புலி மாமாவில் ராஜாராணிக் கதைகள், மிருகங்களும் மனிதர்களும் பேசும் கதைகள் போன்றவையே வந்துகொண்டிருந்தன.

அதிலிருந்து மாறுபட்டு அன்றைய சமூகச் சூழலில் நிகழும் கதைகள் ரத்ன பாலாவில் வந்தது, எங்களுக்கு மிகவும் பிடித்தது. இன்றைய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய முதல் கதை, ரத்ன பாலாவில் வெளி வந்ததாகப் பதிவு செய்திருக்கிறார். பிறகு கோகுலம் வந்து எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. அவை தவிர, எங்கள் ஊர்ப் பொது வாசக சாலையில் சில புத்தகங்கள் எங்களுக்குக் கிடைத்தன. வாண்டு மாமா என்பவர் எழுதியவை என நினைக்கிறேன். அந்தக் கதைகள் எங்களை மாயாஜால உலகிற்கும் அற்புதங்கள் நிறைந்த தீவுகளுக்கும் அழைத்துச் சென்றன.

அப்போது குழந்தைக் கவிஞர் என்று புகழப்பட்ட அழ.வள்ளியப்பா என்பவர், பல கவிதைகளை குழந்தைகளுக்காகவே எழுதினார். அவை கோகுலத்தில் வெளிவரும். எங்கள் தெருவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணன்மார்கள் அந்தக் கவிதைகளைப் பிழையில்லாமல் ஒப்புவிக்கும் போட்டி நடத்தி, எங்களுக்குப் பரிசு கொடுப்பார்கள். பரிசு என்னவோ ஒரு பென்சில் இல்லை பேனா அவ்வளவுதான். அதற்கு நாங்கள் மிகவும் கடுமையாகப் போட்டி போடுவோம்.

Ambulimamaஅப்போதெல்லாம் குழந்தைகளுக்கான மாத இதழ்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான வார இதழ்களும் ஏராளம் வந்துகொண்டிருந்தன. அவற்றின் தரம் பற்றி நான் பேசப் போவதில்லை. ஏனெனில் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. பெரியவர்களுக்கான இதழ்களை நான் படிக்க, என் அம்மா அனுமதித்தது இல்லை. சாவி, தாய், குங்குமம், குமுதம், இதயம், ஆனந்த விகடன், கல்கி என்று பல வாரப் பத்திரிகைகள் பார்த்ததாக ஞாபகம்.

இவை தவிர கணையாழி என்றொரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அது எங்கள் ஊர் தமிழாசிரியருக்கு மட்டும் தபாலில் வரும். நிறையக் கவிதைகள் இருக்கும். ஒரு சில கதைகளும் உண்டு என நினைக்கிறேன். பெரும்பாலும் எனக்குப் புரியவே புரியாது. இரவு நேரங்களில் சில சமயம் தமிழாசிரியர் அந்தக் கவிதைகளையும் கதைகளையும் மிகவும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்போது அவர் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள் அவர் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை எங்களுக்கு உணர்த்தும்.

இன்று பார்த்தால் அந்தப் பத்திரிகைகளில் பாதி கூட வெளி வருவதில்லை. ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்றவை மாறும் காலத்தில் எதிர் நீச்சல் போட்டு எப்படியோ நிலைத்துவிட்டன. ஏதோ இப்போது இணையத்தளம் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருப்பதால் இணைய இதழ்களுக்குப் பஞ்சமில்லை. அவைதான் பெரும் ஆறுதல் அளிக்கின்றன. குழந்தைகள் இதழ் என்று பார்த்தால் தமிழில் இப்போதும் கோகுலம் மட்டுமே வெளி வருகிறது. டிங்கிள், அமர் சித்ர கதா போன்றவை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வெளிவருகின்றன.

Ambulimamaதமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி என்று கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் ஒரு கோடிக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருக்குமாக இருப்பது ஒரே ஒரு மாத இதழ். ஆனால் அதே ஒரு கோடிக் குழந்தைகளுக்கு இருக்கும் டிவி சேனல்கள், நிகழ்ச்சிகள் எத்தனை என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. டிவியும் விடியோ கேம்ஸும் புத்தகங்களின் இடத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டன. ஏன் இந்த நிலை? ஏன் இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை? படிக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இல்லாததற்கு யார் காரணம்?

இப்படிக் கேள்விகளாய் அடுக்கிக்கொண்டே போகலாம். எப்பொழுதுமே குழந்தைகளுக்கு பெற்றோர்தான் வழிகாட்டி. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு ஒரு தோழி. அவளுடைய மகனுக்குக் கோடை விடுமுறை விட்டு, பல நாட்களாகி விட்டன. பொழுது போகாமல் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறான். இவ்வளவுக்கும் காலை இரண்டு மணி நேரம் ஏதோ ஒரு கிளாஸ் போகிறான் என்று நினைக்கிறேன். அவன் தாய், அதாவது என் தோழி, அவனைப் பற்றிக் குறை கூறினாள். “என்னை நிம்மதியாகவே இருக்க விடுவதில்லை. ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ” அப்படி இப்படியென்று அரை மணி நேரம் பேசினாள்.

நான் நிறைய நல்ல புத்தகங்கள் (ஆங்கிலம் தான். பின்னே இந்தக் காலத்தில் மகன் தமிழில் படிப்பதை நம் தமிழ்ப் பெற்றோர் விரும்புவதில்லையே) கிடைக்கும் கடைகளைக் கூறி அங்கே சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும்படி சொன்னேன். சில நாட்கள் கழித்து தோழி மீண்டும் என்னிடம் பேசினாள். “நீ சொன்ன படி புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தேன், இரண்டு நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்து படிக்க மாட்டேன் என்கிறான்” என்றாள். இவ்வளவுக்கும் அவன் மிகச் சிறிய பையனும் அல்ல. பெரிய புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு வயதானவன் தான்.

ஏன் அவனால் பொருந்தி உட்கார்ந்து படிக்க முடியவில்லை என்று எனக்குக் காரணம் புரியவில்லை. சிறிது யோசித்து விட்டு “அவன் புத்தகம் படிக்கும் போது நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டேன். “புக்கை அவங்கிட்ட குடுத்துட்டு அன்னிக்கு ஒரு நாளாவது அவன் தொந்தரவு இல்லாமே டிவி பாக்கலாம்னு நெனச்சேன்” என்றாள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

chutti tvபெற்றோர்கள் டிவி பார்ப்பதைக் கண்டே வளரும் குழந்தைகள் தாங்களும் அதைத்தான் செய்ய விரும்புவார்கள். அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுக்கும் போது நீங்களும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்குங்கள், அவர்களும் ஆர்வமாகப் படிப்பார்கள். படிக்கும் ஆர்வத்தை நாம்தான் நம்குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக அமெரிக்கன் கான்சலேட் கோடை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சனிக் கிழமையன்று “குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது எப்படி?” என்ற ஒருகலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது (The Hindu – 9.5.2011).

அதில் துணை கான்சல் திரு. பிராக் (David A Brock) தலைமை தாங்கி, தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது “தன்னைச் சுற்றி நிறையப் புத்தகங்கள் இருந்தால் குழந்தைகள் படிக்க ஆர்வம் காட்டுவார்கள்” என்றார். மேலும் இரண்டரை வயது முதலே குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம் என்கிறார். நிறைய படங்கள் போட்ட கெட்டி அட்டைப் புத்தகங்கள் இந்த வயதிற்கு ஏற்றவை. அவை தவிர பெற்றோர்கள் ஏற்கெனவே ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு, அதைப் பற்றிப் பேசினால், குழந்தைகள் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கூறினார்.

ஆரம்பம் எங்கேயிருக்கிறது என்று விளங்குகிறது அல்லவா? எத்தனையோ செலவு செய்வோம். ஆனால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தரமான வார இதழோ, மாத இதழோ வாங்க மனம் வராது நமக்கு. இந்த எண்ணம் மாற வேண்டும். நல்ல புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பர்கள் மட்டுமல்ல வழிகாட்டிகளும் கூட. இந்தக் கோடைக் காலத்தில் நாமும் புத்தகங்கள் வாங்கிக்கொள்வதோடு நம் குழந்தைகளையும் புத்தகம் படிக்க ஊக்குவிப்போம்.

திலகர் ஞாபகமிருக்கிறதா? (பால கங்காதர திலகர்) அவருக்கு சிறு வயதிலேயே திருமணம் பேசி விட்டார்கள். வரதட்சணை வாங்கக் கூடாது என்ற கொள்கையில் இருந்தவரை அவர் மாமனார் மன்றாடி மாற்றிவிட்டார். அப்போதும் திலகர் என்ன வரதட்சணை கேட்டார் தெரியுமா? தன் மாமனார் தர உத்தேசித்திருக்கும் பணம் முழுமைக்கும் புத்தகமாக வாங்கிக்கொண்டார்.

அவரைப் போல இல்லாவிட்டாலும் மாத வருமானத்தில் ஒரு சிறு பகுதியைப் புத்தகம் படிக்கச் செலவிடலாம். இணையத் தளத்தில் உள்ளதை பிரிண்ட் எடுத்து தொகுத்து வைத்துக்கொண்டீர்களானால் அதுவும் ஒரு புத்தகம் தான்.

ஒரு நல்ல புத்தகம் படிக்கும் போது ஏற்படும் அனுபவம் இருக்கிறதே அதை நிலவொளியில் ஒரு குளியலுக்குத்தான் ஒப்பிட முடியும். அந்த அனுபவத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

(மேலும் நனைவோம்…..

=============================================

படங்களுக்கு நன்றி: http://hajatalks.blogspot.com, http://www.comicology.in, http://blogs.jambav.com

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 28

  1. ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்கள் கூறியது போல குழந்தைகளிடம் பாட புத்தகத்தை தவிர மத்த புத்தகங்கள் படிக்கும் ஆவல் குறைந்து கொண்டு தான் வருகிறது. அதனால் Creativityயும் குறைய வாய்ப்பு இருக்கிறது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளை படிக்க ஊக்குவிக்கவேண்டும்.

  2. Nowadays children are not intrested even in reading their school books due to lack of reading habits. They want everything in the form of visual media. They don’t even read moral stories. This topic was the need of the hour. Thank you madam.

  3. இந்தப் பொருத்தமான கட்டுரை மீது கருத்துத் தெரிவிக்க வேண்டுமானால், ஒரு நீண்ட கட்டுரை வடிக்க வேண்டும். யாராவது /ஆசிரியர் கேட்டால், பார்த்துக்கொள்ளலாம்.

  4. மிகவும் பயனுள்ள கட்டுரை. நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து நாம் தான் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.. நல்ல புத்தகம் ஒரு நல்ல பல்கலைக்கழகம். படிப்பு அறிவுடன் பொது அறிவும் வளர்க்கப்பட வேண்டும் .

    நன்றி
    திருச்சி ஸ்ரீதரன்

  5. Really very interesting. Though the children are not interested in reading books we have to create habit of reading good books then only they will shine not only in academic but also in other activities.

    Thanks a lot

    Yours
    Srirangam Saradha Sridharan

  6. நன்றி ஐயா. நீங்கள் கூறியபடி மற்றொரு நீண்ட கட்டுரையைத் (மக்களின் படிக்கும் ஆர்வம் மற்றும் சுழல், படிப்பகங்களின் இன்றைய நிலை) தாங்கள் எழுதினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதை எனது வேண்டுகோளாக ஏற்றுக்கொண்டு எழுதவும்.

  7. Itis rightly pointed out that reading habit is to start from childhood.Parents must be rolemodels in this respect.TV channells -acuttural war in the drawingroom.

  8. கோகுலம் என்ற பத்திரிகையானது ரத்னபாலா, பாலமித்ரா வருவதற்கு முன்பே வந்து கொண்டிருந்தது என்பதினைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கோகுலத்தில் வரும் செய்து பார் என்ற பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நந்து மந்து சிந்து என்ற ஒரு படக் கதை தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. அதுவும் மிகவும் பாப்புலர். அம்புலிமாமாவின் விக்ரமாதித்தன் கதைகள் வெகுவாக கவர்ந்தன.

  9. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *