புது மின் திட்டங்களுக்கு ரூ.4029 கோடி
புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய மின் துறை அமைச்சகம் ரூ.4,029 கோடி வழங்கியுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாடு மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பெரு நகரங்களுக்கான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மின் திட்டங்கள் (பிரிவு அ) மற்றும் முறையான விநியோக மேம்பாடு மற்றும் மின் திட்டங்கள் மேம்பாடு (பிரிவு ஆ) என்ற இரு பிரிவுகளாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் ரூ.3,903 கோடி, மாநில பயன்பாடுகளுக்கான கடனாகும். ரூ.126 கோடி திட்ட மானியமாகும். இந்த மின் திட்டப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பிரிவு-அ திட்டங்களின் தகவல் தொழில்நுட்பச் செயல்பாட்டு நிறுவனங்களை நியமிக்க அனைத்து மாநிலங்களும் திட்டப் பரிசீலனைகளை வரவேற்றிருப்பதாகக் கூறினார்.
இது வரை 21 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தகவல் தொழில்நுட்பச் செயல்பாட்டு நிறுவனங்களை நியமித்துள்ளன. மறுசீரமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாட்டு மற்றும் சீர்திருத்தத் திட்டமானது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.51,577 கோடியாகும். இதில் பிரிவு-அ திட்டங்களின் திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடி. பிரிவு-ஆ திட்டங்களின் மதிப்பீடு ரூ.40,000 கோடி. சிறப்புப் பிரிவு மாநிலங்களில் 10,000 மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
=====================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை