பெண் எனும் சக்தி!

1

பவள சங்கரி

தலையங்கம்

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தோழிகளே! பெண் என்றாலே முதலில் தோன்றுவது, இறைவன் பெண்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ள தாய்மை வரம். இதனை அவரவர்கள் தத்தம் சூழலுக்கேற்ப, வயதிற்கேற்ப, மன  ஓட்டத்திற்கேற்ப, ஒரு பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, காதலியாகவோ, பணிப்பெண்ணாகவோ, மனைவியாகவோ ஏதோ ஒரு கோணத்தில் நேசிக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவள் தம் வாழ்நாளில் கடந்து கொண்டுதானிருந்தாலும், தாய்மை என்ற அந்த உணர்வு மட்டும் ஒரு பெண்ணின் அனைத்துச் செயல்களின் அடிநாதமாக ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதன் வழி நடப்போரின் வாழ்க்கை அமைதியாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இயற்கை குணத்தை மீறும்போது அதற்கான சில எதிர் விளைவுகளைச் சந்திக்கவும் நேருகிறது. நேற்று ஈரோட்டின் அருகில் ஒரு பெண் பிறந்த தன் ஆண் குழந்தையை துணியில் சுற்றி தெருவில் எறிந்து விட்டுச் சென்றிருக்கிறாள். அங்கு அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்துவிட்டு, எறும்பு கடித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்.   குழந்தைக்கு இப்போது மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படியும் ஒரு தாய்.  நினைக்கவே மனம் பதறுகிறது.

தாய்மை என்றால் தாலாட்டு என்பதுதான் நினைவிற்கு வரும். குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகி மெல்ல மெல்ல உயிரோட்டம் பெறும்போதே அன்னையின் உணர்வுகளை பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அந்தத் தாய்க்கான பொறுப்பு ஆரம்பிக்கும் தருணமாகிவிடுகிறது. தொப்புள் கொடி உறவு பிரிந்து, தனி மனிதனாக அக்குழந்தை உருவாகும் நேரமும் சிலகாலங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் முழுமையாக இருக்கையில் நல்ல உணர்வுகளை விதைக்கக்கூடிய வாய்ப்பாக அமைகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் போன்றே, இந்தப்பருவத்தில் நல்ல உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது. இப்பருவத்தில் மனதில் பதியும் நல்ல எண்ணங்கள், வாழ்நாள் முழுவதும் உடன் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த வகையில் முழுமையாக பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய அந்தப் பருவம் அக்குழந்தையின் எதிர்காலத்தை பெரும்பாலும் நிர்ணயிக்க வல்லது என்பதும் கண்கூடு. இந்தப் பொறுப்பை பெற்றோர் உணர்ந்து நடந்து கொண்டாலே குழந்தை ஆணோ அல்லது பெண்ணோ அதனை சரியான பாதையில் வழி நடத்த முடியும்.

பெண் குழந்தையாய் பிறந்து விட்டதே என்று வெதும்பிய காலம் மாறிவிட்டது இன்று. பெண்ணிற்கு வரதட்சணை கொடுத்த காலம் போய் இன்று வரதட்சணை வாங்கும் காலம் வந்திருக்கிறது. பெண்களின் பல்துறை சாதனைகள் அதற்கு அச்சாரம் போட்டுள்ளது. மாபெரும் சக்தியாக இன்று மகளிர் சக்தி உருவாகிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்தச் சக்தி்யை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகவும் உள்ளது. பருவத்தில் நல்ல விதைகளைப் பயிர் செய்யப் பழக வேண்டும். பழம்பெரும் நாடான நம் பாரத நாடு, கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக நெறி, என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கி இன்று உலகளவில் அனைத்து நாட்டவரையும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளது.

இந்த நவீன யுகத்தில் பெண்களுக்கான பல வாயில்கள் திறக்கப்பட்டுள்ளனவாயினும், எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாத அன்றைய காலகட்டங்களிலும் சாதித்த பெண்மணிகளையும் அவர்தம் ஆர்வமும், ஈடுபாடும், கடின உழைப்பும் கண்டு உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது.  நம் வருங்காலச் சந்ததியினர், இளம் பிராயத்தினர் இதனை உணர வேண்டும். இன்றைய மகளிர் வந்துள்ள இந்த உன்னத நிலைக்கு அன்றைய மங்கையர் எத்துனை போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். பல்வகையில் ஆண்களுடன் இணைந்து தோள் கொடுத்து அவர்தம் சாதனைகளுக்குத் துணை நின்றோர் பலர். இன்று மகளிர்தம் உரிமையை நிலைநாட்ட எத்துனையோ சட்டங்களும், திட்டங்களும் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வும் வேண்டும். சமூக ஆர்வலர்கள் இதற்கான பெரு முயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும். அந்த வகையில் இன்றைய நம் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களும் பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது. அவைகள் அனைத்தும் நல்ல வகையில் மக்களைச் சென்று அடைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..

பெண் குழந்தைகளுக்கு கல்வி தேவையில்லை என்ற பெரும்பாவச் செயலை செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தானில் ஒரு மலாலா தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி பல ஆயிரம் மலாலாக்களை உருவாக்கிவிட்டாள். அவருக்கும் நம் வீர வணக்கத்தை இன்று தெரிவிப்போம்.

இன்று மகளிர் இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் விமானம் வரை  ஓட்டுவதிலிருந்து, அணு விஞ்ஞானியாகவும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமை கொள்ளும் அதே வேளையில் பெண்கள் சுய கட்டுப்பாடும், நம் பாரதக் கலாச்சாரமும், பண்பாடும் காக்கும் தீவிர எண்ணமும் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதே இன்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெண் எனும் சக்தி!

  1. மகளிர் தின வாழ்த்துக்கள் .

    இந்த
    பெண்ணினம் இல்லாது
    எந்த மண்ணினமும் கிடையாது.

    கட்டுரையில் ஆசிரியர் சொன்னது போல், விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலத்திலேயே சாதித்த பெண்ணினம் இது.இந்தக்காலத்தில் கேட்கவேண்டுமா .

    ஆனால் இந்த மகளிர் இன்னும் கூடுதல் சக்தி பெற ஆண் இனம் நாம் செய்யவேண்டியதுதான் செய்வதில்லை . ஆதரவு தர வேண்டிய நம் கரங்களாலேயே அவர்களை அழிக்கிறோம் .நிறைய உதாரணங்கள் ஆதாரங்கள். தலை நகர் டில்லியில் பெண்கள் வெளியில் வர அஞ்சுகிறார்கள் .இது இன்றைய தினமலர் செய்தி.

    பிறந்த பெண் குழ்ந்தைக்கு ஆண், அப்பாவாகவும்,அண்ணன், தம்பியாகவும், நண்பனாகவும்,கணவனாகவும் ,மகனாகவும் உறவு முறைகள் அமைகின்றன .இந்த அத்தனை உறவு முறையுலும் அந்த பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது பாசத்தையும் பாதுகாப்பையும் தான் .
    நாம் தருகிறோமா ?

    மீண்டும் டெல்லியையே சொல்லவேண்டி உள்ளது,.நண்பனுடன் பஸ்ஸில் சென்ற பெண்ணுக்கு இந்த ஆண் இனம் தந்த பரிசுதான் அது.

    மூர்க்கத்தனமான ஒரு பேரழிவை அந்த பெண் சந்தித்த போது இந்த ஆண் இனம் பற்றிய மதிப்பு அவள் மனதில் எந்த இடத்தில் இருந்திருக்கும் .உலத்தின் மொத்த ஆண் இனமும் தலைகுனிய வேண்டிய சம்பவம் தானே அது.

    இந்த மகளிர்க்கு ஆண் கொடுக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது நம்பிக்கை. இந்த நம்பிக்கையை மட்டும் நாம் கொடுத்துவிட்டால் அந்த பெண்ணினம் நம்மை மிஞ்சுவது நிச்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *