தமிழ்த்தேனீ

Tamil theneeஆயிற்று அறுபது வருட காலமாக வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வாழ்ந்தாயிற்று. சொர்க்கம், நரகம் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று. இனி என்ன? இந்த ஒரு கேள்வி அவர் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டியது வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? எதற்காக வாழ்கிறோம். இந்த உலகின் மாயங்களிலிருந்து, வழக்கமான நடைமுறைகளிலிருந்து எப்போது எப்படி விடுபடுவது? மூச்சு முட்டியது.

முடிவே தெரியாமல் வாழ்வது கொடுமை! சலிப்பு தட்டிவிட்டது வாழ்க்கை! நினைத்தவுடன் ஏறிப் போக ஏணியா இருக்கிறது இல்லையே! ஏணி கிடைத்தாலும் எங்கே போவது என்னும் இலக்கு தெரியாத வாழ்க்கை. தினமும் காலையில் எழுந்து இயற்கை உபாதைகளைக் கழித்து, குளித்து இறை வணக்கம் செய்து, உணவு உண்டு, மற்ற பொழுதுகளை வாழ்க்கையின் அன்றாடப் பொய்களிலும் உண்மைகளிலும் பெருமைகளிலும்பாராட்டுகளிலும் பொறாமைகளிலும் பயத்திலும் கவலைகளிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும் கழித்து, இரவு படுத்து உறங்கி மீண்டும் காலையில் எழுந்து……………!

ஹூம்! இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து எப்போது விடுபடுவது? அப்படி விடுபட்டால் அப்போது கிடைக்கும் சக்கரம் எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும்? அந்தச் சக்கரமும் இதே போன்று சுழல்தானா? விடுபட முடியுமா? முடியாதா? இதென்ன பள்ளிப் பாடம் போன்றதா என்ன? அந்தந்த வகுப்புப் பாடத்தை முறையாகப் படித்து அடுத்த வகுப்புக்குச் செல்வது போல்? எப்போது விடுதலை? விடுதலை நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? கேள்விகள், கேள்விகள்………… முடிவில்லாத கேள்விகள். விடையறியாத கேள்விகள்?

வெளியே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்ளேயே எப்போது சுயத்தை அடைவோம், சுயம் என்பது என்ன? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு, எதற்காக ஏங்குகிறோம் என்பதே தெரியாமல், எதை அடையக் காத்திருக்கிறோம் என்றே தெரியாமல் செயற்கையாக வாழ்ந்துகொண்டு பயந்து கொண்டிருக்கிறோம்.

அவர் பார்வை அவரையறியாமல் குழந்தையிடம் சென்றது. குழந்தை பொம்மையால் தானே தன் தலையில் இடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது.  அவருக்குத் தோன்றியது நாமும் இதே நிலையில்தான் இருக்கிறோம். வாழ்க்கை என்னும் விளையாட்டில்  எதன் மேலாவது அவ்வப்போது இடித்து  மோதிவிட்டு அது இடித்துவிட்டது என்று அதன்மேல் பழியைப் போட்டு, அழுதுகொண்டு, யாராவது வந்து சமாதானம் சொல்வார்களென்னும் எதிர்பார்ப்பில் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

குழந்தை அழும் குரல் கேட்டு  நினைவிலிருந்து மீண்டார் ராமசேஷன். குழந்தையைத் தூக்கி, “வேண்டாண்டா கண்ணு. அழாதே. பொம்மை  இடிச்சுடுத்தா? இப்போ தாத்தா அந்த பொம்மையை அடிக்கிறேன் பாரு” என்று சொல்லி, அந்தப் பொம்மையை அடிப்பது போல் பாவனை காட்டினார். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சற்றே சமாதானமாகி கண்களில் நீருடன் சிரித்தது. “அச்சு” என்று சொல்லி அதுவும் அந்தப் பொம்மையைத் தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்துவிட்டு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சிரித்தது..

மீண்டும் அதே பொம்மையை எடுத்து விளையாட ஆரம்பித்தது குழந்தை. “வேண்டாம் மறுபடியும்  இடிச்சுக்குவே. அதை வெச்சிரு” என்று அதனிடமிருந்து வாங்கி வைத்தார். அந்தப் பொம்மைதான் வேண்டும் என்று அழ ஆரம்பித்தது குழந்தை. அதன் பிடிவாதம் தாங்காமல் மீண்டும் அந்தப் பொம்மையை அதனிடமே கொடுத்தார். மீண்டும் அந்தப் பொம்மையுடன் விளையாட ஆரம்பித்தது குழந்தை. மீண்டும் கணினியிடம் வந்து உட்கார்ந்தார் ராமசேஷன்.

தொலைபேசி அழைத்தது. மறுமுனையில் அவருடைய தர்மபத்தினி, “ஏங்க குழந்தை அழாமே இருக்கானா? அப்பிடி அழுதா போன் பண்ணுங்க.  உடனே வந்துடறோம். குழந்தைக்குச் சரியா பத்து மணிக்குப் பசிக்கும். மேஜை மேலே பால் வெச்சிருக்கேன், அழுதா குடுத்திருங்க” என்றாள்.

“சரிம்மா, நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்பை அறுத்தார்.

பால் பாட்டிலை எடுத்து, குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பித்தார். ஜிர் ஜிர்ரென்று உறிஞ்சிவிட்டு, பாதி பால் இருக்கும் போதே உறங்க ஆரம்பித்தது குழந்தை. சற்றே பாட்டிலை அசைத்ததும் மீண்டும் அரைத் தூக்கத்திலேயே உறிஞ்சியது. மொத்தப் பாலையும் குடித்ததும் குழந்தையைக் கீழே விட்டார். தலையணையைப் பக்கவாட்டில் அணைத்து வைத்துவிட்டு, சத்தம் போடாமல் தள்ளி வந்து நாற்காலியில் உட்கார்ந்து குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு விசும்பல், உடனே விசும்பலை நிறுத்திவிட்டு அழகாக ஒரு சிரிப்பு, மீண்டும் ஆழ்ந்த தூக்கம். திடீரென்று மிரள மிரள விழித்தல், மீண்டும் ஒரு சிரிப்பு என்று தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தது குழந்தை. சிறிது நேரம் மௌனத்தின் விகசிப்பில் மூழ்கி இருந்தார், எந்த எண்ணங்களுமே இல்லாமல் வெறுமையாக. நேரம் போனதே தெரியவில்லை.

திடீரென்று குழந்தை நினைவு வரவே எட்டிப் பார்த்தார். குழந்தையைப் படுக்கையில் காணவில்லை. டேய் கண்ணா எங்கே இருக்கேன்னு தேடிக்கொண்டே எல்லா அறைகளிலும் பார்த்தாயிற்று. காணவில்லை. பகீரென்றது! மீண்டும் மும்மரமாகத் தேடினார். குழந்தை  பதிலே சொல்லாமல்  இருந்தது. உண்மையிலேயே அவருக்குள் ஒரு திகில் பரவியது. எங்கும் போக, சாத்தியம் இல்லையே. வாயிற்கதவு தாழிட்டு இருக்கிறது.  தேடினார்.

“டேய் கண்ணா, எங்கே இருக்கே? பதில் சொல்லுடா கண்ணு… தாத்தா தேடிண்டே இருக்கேன் பாரு.”

ஹுஹும்… பதிலே காணும்.

அவருக்குத் தலை சுற்றியது! பதற்றம் அவருடைய ஒவ்வொரு செல்லிலும் தொற்றிக்கொண்டது! என்னதான் அவரோட பிள்ளையின் குழந்தை, அவருக்குப் பேரன் என்றாலும். அந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ளும் உரிமை இருக்கும் அளவுக்கு அந்தக் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அந்த உரிமையைப் பற்றியோ, அவ்வளவு நேரம் அவர் மிகவும் பாதுகாப்பாகக் குழந்தையைக் கவனித்துக்கொண்டதைப் பற்றியோ கவலைப்படாமல் அவரை உலுக்கி எடுத்துவிடுவார்கள் என்னும் நினைப்பே அவருக்குப் பதற்றத்தை அதிகப்படுத்தியது. அப்படியே தலை சுற்றி கீழே உட்கார்ந்தார். அதையும் தவிர அந்தக் குழந்தைக்கு  ஏதேனும் ஆகிவிட்டால்  அவருடைய மனமே அவரைத் தண்டிக்கும். குற்ற உணர்வு என்னும் கருவியாகி, நரகத்தைத் தோற்றுவிக்குமே. உண்மையிலேயே பயந்து போனார் ராமசேஷன்.

திரைச்சீலையின் பின்னே இருந்து அரைகுறையாக வெளியே வந்து  முகத்தை மட்டும் காட்டி, “காணும்……  அட்டாச்சு தாத்தா” என்று மழலைக் குரலில் அழைத்துவிட்டு, தன் பொக்கை வாய் திறந்து சிரித்தது குழந்தை!

நிம்மதிப் பெருமூச்சுடன் பாய்ந்து ஓடி, குழந்தையை எடுத்துக்கொண்டு, “செல்லப் பையா, தாத்தா இவ்வளவு நேரமா தேடிண்டு இருக்கேன். நீ காணும் அட்டாச்சு பண்றியா?” என்று அதன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார்.

அந்தக் குழந்தையின் முகத்தில் எல்லா விடையும் கிடைத்தாற்போல் ஒரு உணர்வு அவருக்கு. வாழ்க்கை செய்யும் மாயங்கள் எப்போதும் புரிவதில்லை! அது புரியத் தொடங்கும்போது வாழ்க்கை என்பது மாயமாகிவிடுகிறது. அல்லது கடைசி வரை புரியாமலேகூட வாழ்க்கை  மாயமாகி விடுகிறது.

ஆகவே மாயம் எப்போதும் புரியாதோ என்று அவருக்கு ஒரு எண்ணம் வந்தது.

திரும்பிப் பார்த்தார்.

குழந்தை கைகளைக் கூப்பி, “உம்மாச்சி காப்பாத்து” என்றது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மாயா

  1. இது கதையா! தத்துவமா! யான் அறியேன். அன்றாடம் எல்லா இல்லங்களிலும் நடப்பதை, ஆனால் அகக்கண்ணில் அகப்படாததை, எடுத்துரைத்திருக்கிறார், கதாசிரியர்.

  2. Peek a Boo! I saw you! :)))))))) வாழ்க்கையும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுத் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *