மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சீட்டுக் குறிப்பு

அருண் காந்தி
jayalalitha

ஆண்டுகள் ஐந்து கடந்து ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் இந்த வேளையில் வாழ்த்துகளுக்கும் விருந்துகளுக்கும் இடையே தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.

‘இந்தத் தேர்தல் வெற்றியானது என்னுடையதோ / எங்களுடையதோ அல்ல மக்களுடையது’ என்று கூறிய தங்களின் உணர்தலும் அந்த மனப்பாங்கும் பாராட்டுதலுக்கு உரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை அவர்கள் வாக்குச் சீட்டில் பதிய முற்பட்டு, அது முடியாமல் போக ஒற்றை அழுத்தில் குறியீடாகக் காட்டினர். அவர்கள் பதிய நினைத்தது, சிறு குறிப்புச் சீட்டாக இங்கே.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஐந்து ஆண்டுகள் முடியும் முன்னரே மக்கள் வெறுப்படைந்து, முடிவில் மாற்று அரசைத் தேடி ஓடுவதே முறையாகக் காணப்படுகிறது. பொறுப்பை அதிமுகவிடம் பிடுங்கி திமுகவிடமும் திமுகவிடம் பிடுங்கி அதிமுகவிடமும் கொடுப்பது தமிழக மக்களாகிய எங்களின் வாடிக்கை.

மக்கள் எந்தக் கட்சி மீதும், தலைவர்கள் மீதும் பற்று கொண்டவர்கள் அல்லர் என்பதோடு ஒவ்வொரு முறையும் அநீதிகளுக்கும் அதர்மங்களுக்கும் ஆளாகும் பொழுது அவற்றிற்கு நிவாரணம் தேடி மாற்றத்தை வேண்டுகின்றனர் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழர்களும் தங்களின் மன உணர்வு, பாதுகாப்பு, நம்பிக்கை, வாழ்வாதாரங்களின் மீதான தேவை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற அதி முக்கியமானவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றனர்.

விளங்கக் கூறினால் தமிழக மீனவர்களின் மீதான அடுத்தடுத்த வன்முறை, இலங்கைத் தமிழர்களின் மீதான அக்கறையின்மை, கூட்டுச் சதி, ஊழல், விவசாயம் மற்றும் இன்ன பிற உழைக்கும் வர்க்கத்தை ஊக்குவிக்காமை, அனுதினமும் கிராமப்புறங்களில் கிட்டத் தட்ட அரை நாளுக்கான மின்வெட்டு இன்னும் பல…..

இந்த ஏமாற்றங்களுக்கு மாற்றாகவே இன்று மாற்றமாக ஆட்சிப் பொறுப்பு உங்கள் கையில்…

தமிழகத்தை இந்தியாவின் முதல் தர மாநிலமாக உருவாக்குவீர்களோ, இல்லையோ, நிலையான நீதி வழுவாத ஆட்சி அமைந்தால் அதுவே எங்களின் நிம்மதி மூச்சாக இருக்கும். கடந்த ஆட்சியை அன்றாடம் குறை கூறுவதும் வெறுமனே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடும் வரும் ஐந்தாண்டுகளைக் கடந்தால் நாங்கள் மீண்டும் மாற்றத்தை தேடி ஓடும் அதே நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அல்லாமல் மேற்கண்டவை போன்ற மக்களின் அதி அவசிய தேவைகளைப் போர்க்கால நடவடிக்கையில் பூர்த்தி செய்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டால் அடுத்த தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர்களைப் பரிந்துரைத்து நீங்கள் ஒரு சுவரொட்டி கூட ஒட்ட வேண்டிய அவசியமில்லை!

========================================

படத்திற்கு நன்றி: http://www.indianexpress.com

3 thoughts on “மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சீட்டுக் குறிப்பு

  1. “… நமது அரசியல்/சமூக வாழ்வியலில் தார்மீகத்துக்கு (எதிக்ஸ்) நாம் இடம் கொடுக்காவிடின், மக்கள் நம்மை விரும்பமாட்டார்கள். அவர்கள் பாமர மக்கள் தாம்; ஆனால், நன்மக்களின் ஆழ்ந்த கவனம், அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் தரம் பார்க்க உதவுகிறது. ஜோடித்ததெல்லாம் அவர்கள் நம்பமாட்டார்கள்…”
    =>ராஜாஜி (1957)

  2. அருமை! நிதர்சனம்! அனால் அம்மையாருக்கு இது புரிய வேண்டுமே! அழகிரியின் இடத்தைச் சின்னம்மையும் அவரின் கணவரும் பிடித்து விடுவார்கள்! இன்னமும் ஒரு மாதத்திற்குள்! சொன்ன வாய்க்கு சர்க்கரை என்று நீங்கள் எனக்குக் கற்கண்டு ஊட்டுவீர் பாருங்களேன்! “When POWER is at hand CORRUPTION is INEVITABLE!”

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க