நிலவொளியில் ஒரு குளியல் – 29

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஇன்னும் கோடைக் காலத்தை விட்டு நாம் வெளியேறவில்லை. கோடையில் நடக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் பயணங்கள். இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ரயில் வண்டியிலேயே தான் அமைகிறது. சொந்த ஊருக்கு வெகு அருகிலிருக்கும் பேறு பெற்றவர்கள் ஒரு பேருந்தைப் பிடித்துச் சில மணி நேரங்களில் ஊரைச் சென்று அடைந்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை.

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை மிக நீண்ட ரயில் பயணம் என்பது சாயங்காலம் தொடங்கி மறு நாள் விடியலில் முடிந்து விடுகிறது. பத்து அல்லது பன்னிரண்டு மணி நேரங்களுக்கு மேலாகப் பயணம் செய்ய நேரிடுவதில்லை எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் போவதானாலும் சரி. ரயில்கள் மிக வசதியானவை. வயோதிகர்களும் நோயாளிகளும் இதைப் பெரும்பாலும் விரும்புவதன் காரணம் அதில் இருக்கும் கழிப்பறை வசதி.

ஆனால் அவை எந்த நிலையில் பராமரிக்கப்படுகின்றன என்பது பயணித்த நம் அனைவருக்குமே தெரியும். அதற்கு ரயில் நிர்வாகத்தைக் குறை கூறுவது என்பது எவ்வளவு தூரம் நியாயம்? ரயிலில் பயணம் செய்வோர்தான் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அதைச் சுத்தமாகப் பராமரித்தால் தானே அடுத்தவர் அவற்றை உபயோகிக்கும் போது அருவெறுப்பில்லாதவையாக இருக்கும்? அதை விடுத்து நிர்வாகத்தைக் குறை கூறி என்ன பயன்? நாம் நம் மீது உள்ள குறைகளைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

ஏஸி வகுப்பில் கழிப்பறைகள் பரவாயில்லை. ஓரளவு சுத்தமாக இருக்கின்றன. ஆனால் அங்கே கரப்பான்களும் சிறு சுண்டெலிகளும் கீழே படுத்திருப்பவர் மீது ஏறி விளையாடும். அவற்றைக் கட்டுப்படுத்த ரயில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தததாகத் தெரியவில்லை. மக்களும் அந்த நேரத்திற்கு அவற்றைச் சபித்துக்கொண்டே இறங்கிப் போனவுடன் மறந்து விடுகின்றனர். நம்முடைய இந்த மறதியைத்தான் அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

ரயில் பயணங்கள் என்றதும் எனக்கு ஒவ்வொரு முறையும் நான் புவனேஸ்வரிலிருந்து திருநெல்வேலி வருவது தான் நினைவில் நிற்கிறது. புவனேஸ்வரில் இருந்த 12 வருடங்களில் முதல் நான்கு வருடங்கள் சென்னை வந்து, பிறகு நெல்லை எக்ஸ்ப்ரெஸ் பிடித்து திருநெல்வேலி போய் அங்கிருந்து தென்காசி போக வேண்டும். பயணம் முடிவதற்குள் ஒரு முழு ஆயுள் கடந்த களைப்பும் அலுப்பும் ஏற்பட்டுவிடும்.

பிறகு ஹவுரா – கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயிலைப் புவனேஸ்வரில் பிடித்தால் நேரே திருநெல்வேலி வந்து இறங்கிவிடலாம். மிகவும் சவுகரியம். மிகவும் சவுகரியம் என்றா சொன்னேன்? தப்புத் தப்பு! ஒரு முறை நாங்கள் அதில் வரும்போது ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் ரயிலில் ஏறவே பயமாயிருக்கிறது.

trainவிளக்கமாகச் சொல்லுகிறேன். ஒவ்வொரு வருடமும் மே மாதம் தொடங்குவதற்கு முன் நான் என் மகளோடு (அப்போது 3 வயது குழந்தை) எங்கள் ஊருக்கு வந்து விடுவேன். ஏனென்றால் ஒரிஸ்ஸாவில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். 47 டிகிரி வரை போகும். இதில் ஆச்சரியப் படவேண்டிய விஷயம் என்னவேன்றால் கொஞ்சம் கூட வேர்க்காது. அதனால் சன் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இக்காரணத்தாலும், பள்ளி விடுமுறை விட்டு விடுவார்கள் என்ற காரணத்தாலும் நான் கிளம்பி விடுவேன். என் கணவருக்கு அலுவலகப் பணியில் விடுப்பு நிறைய நாள் எடுக்க முடியாது என்பதால் அவர் முதலில் வர மாட்டார். எங்களை வந்து அழைத்துப் போவார்.

அப்படித்தான் ஒரு முறை என் 3 வயதுக் குழந்தையோடு வண்டியேறினேன். அந்த வண்டி புவனேஸ்வரிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலியை அடைய 36 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். வழக்கம் போல அரை அல்லது ஒரு மணி நேரத் தாமதமிருக்கலாம். நீண்ட பயணம் என்பதால் உணவு ஒரு பிரச்சினையாகவே இருக்கும். என்னதான் ஏஸியில் இருந்தாலும் கொண்டு செல்லும் உணவுகள் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் குழந்தைக்குத் தேவையான இட்லியும் தயிர் சாதமும் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

மூன்று வேளைகளுக்குப் பிறகு வண்டியில் வந்து ஆர்டர் எடுக்கும் ரயில் உணவையே வாங்கிக்கொள்ளலாம் என்பது என் நினைப்பு. அன்று அந்த வண்டியில் என்னுடன் ஒரு பீஹார்க் குடும்பம் பயணித்தது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் எல்லாம் பார்த்து வரச் சுற்றுலா கிளம்பியிருந்தது, அந்தக் குடும்பம். எனக்கு ஹிந்தி மிகச் சரளமாக வரும் என்பதால் அவர்களோடு பேசிப் பழகிவிட்டேன். அந்த பீஹார் தம்பதியருக்கு மொத்தம் 6 குழந்தைகள். ஆம்! நிஜமாகவேதான். +2 படிக்கும் மூத்த பெண்ணிலிருந்து 3 வயது கடைக்குட்டி பெண் வரை எல்லா வயதிலும் ஆண், பெண் எனக் குழந்தைகள் இருந்தனர்.

என் மகளுக்கும் ஹிந்தி வரும் என்பதால் அவளும் அந்தக் குழந்தைகளோடு ஒன்றிவிட்டாள். நாங்கள் திங்கள் இரவு 9 மணிக்கு வண்டியேறினால், புதன் காலை 9 மணி வாக்கில் திருநெல்வேலி சென்றடையும். இது தான் வழக்கம். செவ்வாய் காலை வரை கழிந்துவிட்டது. மதிய உணவுக்கு ஆர்டர் எடுத்தார்கள். நானும் சொல்லியிருந்தேன். ஒரு மணி அளவில் வண்டி ராஜமுந்திரி  (அது ஆந்திராவில் உள்ளது) என்ற ஊருக்குப் போகும்என்றும் அங்கு எங்களுக்கு உணவு கிடைக்கும் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தார்கள். அப்போது காலை 11 மணி இருக்கும்.

திடீரென்று 11:30க்கெல்லாம் வண்டி நின்றுவிட்டது. நாங்களும் ஏதோ சிக்னலுக்காக நிற்கிறது என்று நினைத்து எங்கள் அரட்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். மணி 12 ஆயிற்று, 12:30உம் ஆகிவிட்டது வண்டி கிளம்புகிற வழியாயில்லை. எங்களோடு வண்டியிலிருந்த ஆண்கள் சிலர் விவரம் அறியச் சென்றனர். இதனிடையே குளிர் சாதனத்தை வேறு நிறுத்திவிட்டார்கள். வெக்கை தாங்க முடியவில்லை.

ரயில் நின்றிருந்த இடம், சரியான காடு. சில தோப்புகள் மட்டுமே இருந்தன. சுற்றிலும் 5 கிலோ மீட்டருக்கு ஊர் இருப்பதற்கான அடையாளமே இல்லை. ஆந்திரா வெயில் பிளந்து கட்டிக்கொண்டிருந்தது. எங்கள் முதல் பிரச்சனை குடிநீர். வண்டியில் ஸ்டாக் இருந்த குடிநீரெல்லாம் தீர்ந்து விட்டது. நாங்கள் பயணம் செய்தது மே மாதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் தவிக்க ஆரம்பித்தன. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விவரம் கேட்கச் சென்றவர்கள் வந்து அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் கவிழ்ந்து அதன் பெட்டிகள் எங்கள் ரயில் சென்றுகொண்டிருக்கும் தண்டவாளத்தின் மீதும் விழுந்திருப்பதால் அதை அகற்றும் பணி நடக்கப் போகிறது என்றும் அது முழுவதுமாக அகற்றி முடிக்கப்பட்ட பின்னரே எங்கள் ரயில் கிளம்பும் என்றும் வந்து சொன்னார்கள்.

எங்கள் எல்லோருக்கும் பெருத்த அதிர்ச்சி. எவ்வளவு நேரம் இப்படியே நிற்போம்? தண்ணீர், உணவு முதலிய தேவைகளுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை எங்களைச் சூழ்ந்து கொண்டது. அப்போதுதான் நாங்கள் நின்றிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருந்ததைக் கவனித்து, அதன் உரிமையாளரும் அதிருஷ்டவசமாக அங்கே இருக்கவே தப்பித்தோம் என்று நினைத்தோம்.

train

அந்தத் தோப்பு உரிமையாளர் எங்கள் நிலைகளைப் புரிந்துகொண்டு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவர் தெலுங்கில் பேசியது எங்களுக்குப் புரியவில்லை. எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு சிலருக்குத் தெலுங்கு தெரிந்திருந்தது. அவர்கள் உதவியோடு எங்கள் தேவைகளைப் பெற்றுக்கொண்டோம். அவர் பெண்களையும் குழந்தைகளையும் தோப்பின் மரத்தடிகளில் வந்து அமருமாறு உபசரித்தார். வெயிலில் காய்ந்து போயிருந்த எங்களுக்கு அந்த மாமர நிழலும் அந்தக் காற்றும் இதமாக இருந்தன.

அடுத்தது உணவு. அவரால் எங்கள் அனைவருக்கும் உணவு வழங்குவது என்பது முடியாத காரியமாதலால், நாங்கள் ஒரு ஆலோசனை செய்தோம். அந்த பீஹார்ப் பெண்மணி தான் சொன்னார். நம்மிடம் இருக்கும் உணவுகளைப் பகிர்ந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவோம். அவை எப்படியும் இரண்டு வேளை வரும். பெரியவர்கள் மாம்பழங்களைச் சாப்பிட்டு பசியாறிக்கொள்வது என்ற அவரது யோசனையை ஏற்று, நாங்கள் அப்படியே செய்தோம். குழந்தைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இட்லி, பூரி, சப்பாத்தி என்று கதம்பமாகச் சாப்பிட்டார்கள்.

குழந்தைகள் வயிறு நிறைந்ததும், அந்தக் காற்றில் அப்படியே உறங்க ஆரம்பித்து விட்டார்கள். அன்று நாங்கள் அனைவரும் அந்தத் தோப்பிலிருந்த மாம்பழங்களைத்தான் சாப்பிட்டோம். அதற்கான காசை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டோம் என்றாலும் அவர் காலத்தால் செய்த அந்த உதவியை என்னால் மறக்கவே முடியாது. வண்டி எப்போது கிளம்பும் என்ற கவலை ஒரு பக்கம், மாம்பழங்களை மட்டும்மே தின்றதால் வயிற்றில் வலி ஒரு பக்கம், வெயிலின் தீவிரம் ஒரு பக்கம் என்று நாங்கள் களைத்துப் போனோம்.

ஆண்கள் பம்பு செட்டைப் போடச் கொல்லி குளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாங்களும் முகம் கை கால் கழுவியதும் கொஞ்சம் தெம்பு வந்தது. ஒரு வழியாக சாயங்காலம் 5 மணியளவில் எங்கள் வண்டி கிளம்பியது. வண்டி கிளம்பி ஏஸியின் குளிர்ச்சியும் பரவியவுடன் படுத்தவர்கள் தான். மற்ற ஊர்கள் வந்தது எதுவும் தெரியாமல் உறங்கிவிட்டோம். நான் உறங்கிக்கொண்டிருக்கும் போதெல்லாம் என் மகளை அந்த பீஹார்க்காரரின் மூத்த மகள்தான் பார்த்துக்கொண்டாள். அந்த உதவியெல்லாம் இன்று நினைத்தாலும் கண்ணில் நீர் வருகிறது.

இப்படித் தூங்கி ஊர்களைத் தவற விட்டதாலோ, அல்லது எங்கள் வண்டி அகாலமாகச் சென்றதாலோ எங்களுக்குச் சரியான உணவு கிடைக்கவேயில்லை. கிடைத்தவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்து, டீ , பிஸ்கட்டிலேயே பொழுதை ஓட்டினோம். புதன் கிழமைக் காலை 8:30க்குப் போக வேண்டிய வண்டி, மதியம் 3 மணிக்கு வந்தது. ரயிலிலிருந்து இறங்கியவுடன் என்னை வரவேற்க வந்திருந்த அப்பாவிடம் நான் சொன்ன முதல் வார்த்தை “பசிக்குது, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுங்க” என்பது தான்.

அன்று நடந்த சம்பவம், யாராலும் தவிர்க்க முடியாததுதான். ஆனால் குறைந்த பட்சம் ரயில்வே நிர்வாகம் எங்களுக்கு குடிநீருக்காவது ஏற்பாடு செய்திருக்கலாம். செல்ஃபோன்கள் அதிகம் இல்லாத காலக்கட்டம், அது. தகவல் தொடர்பு சாதனகளையுடைய நிர்வாகம் எங்கள் அடிப்படை வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். என்ற ஆதங்கம் தான் எனக்கு. ஆனால் அந்த அனுபவத்தின் மூலமாக மக்களின் மனத்தை நான் புரிந்துகொண்டேன். முன்னே பின்னே பார்த்திராத அந்தத் தோப்பு உரிமையாளரும் தன் குழந்தைகள் மட்டுமல்ல எல்லாக் குழந்தைகளும் பசியாற வேண்டும் என்று நினைத்த அந்த பீஹார்ப் பெண்மணியும் நெருக்கடியை ஒருமித்து எதிர்கொண்ட ஒற்றுமையும் என்றும் என் நினைவில் வாழும்.

நெருக்கடியான காலக்கட்டங்களில் நிதானம் இழக்காமல் செயல்பட்டு, மனிதாபிமானத்தை மறக்காத நம் இந்திய உள்ளங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

===========================================================

படங்களுக்கு நன்றி: http://www.flickr.com/photos/sewage, http://chennai-roundup.sulekha.com

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 29

  1. மிகவும் நல்ல கருத்து. மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் பெரும்பாலும் வெளிநாட்டினரை ஒப்பிடுகையில் இந்தியர்களிடம் அதிகம்.

  2. ரயில் கட்டுரை மிகவும் அற்புதம். ரயில் பயணம் என்பது ஒரு சுகமான பயணம். அனைவரும் விரும்புவர். தங்களின் ரயில் அனுபவம் அற்புதம். நெருக்கடியான காலக்கட்டங்களில் நிதானம் இழக்காமல் செயல்பட்டு, மனிதாபிமானத்தை மறக்காத நம் இந்திய உள்ளங்களுக்காக என்று தாங்கள் எழுதியது மிகவும் அருமை.

    நன்றி

    திருச்சி ஸ்ரீதரன்

  3. Very nice article. Helping others is like a service to God. Helping others is very good habit.

  4. அந்த பீஹார் பெண்மணி யதார்த்தவாதி. நீங்களும் புவனேஸ்வரமா? ரொம்ப நாள் முன்னால், சென்னை வருவதே கஷ்டம். அதிகாலை 3 மணிக்கு கொரமாண்டல் எக்ஸ்பெரஸ் பிளாட்ஃபார்ம் மாறி, ‘ஜிகு புகு, ஜிகு பிகு’ என்று 3 நிமிஷம் நின்று ஓடோடி விடும். ரிஸெர்வேஷன் எல்லாம் வேஸ்ட். ஏதோ ஒரு வண்டியில் ஏறி எப்படியோ வரணும்.
    இந்தக் கழிப்பறை சமாச்சாரம் சிக்கலானது. பயணிகளும் அசட்டை; ரயில்வேகாரனும் அசட்டை.

  5. Really interesting article. I enjoyed and recollected my childhood days, particularly when travelled thro rail during summer vacation along with my parents. Till date, I used to go to my native place and prefer train journey only.

    Thank you very much
    Srirangam Saradha Sridharan

  6. Public hygiene awareness is to pickup in our country. But we Indians raise to the occasion to protect women and children. A good anectode. Best wishes.To put travel experience in a lucid way is her style.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.