ஆக்சன் கிங் அர்ஜுனின் ‘காட்டுப் புலி’
கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் டினு வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படம் காட்டுப் புலி.
இயக்குநர் டினு வர்மா, இந்தியில் சண்டைப் பயிற்சி இயக்குநராக இருப்பவர். கத்தார், பார்டர், வீர், குதா கவா உள்ளிட்ட 50 படங்களுக்கு மேல் ஆக்சனில் கலக்கியவர், டினு வர்மா. அதற்காக 7 பிலிம்பேர் விருதுகளையும் அள்ளியவர். இப்போது முதல் முறையாக அர்ஜுனுடன் இணைந்து, காட்டுப் புலியில் அனல் பறக்க வைக்கப் போகிறார்.
ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில்தான் முதல் முறையாக அர்ஜுனைச் சந்தித்தார் டினு வர்மா. அர்ஜுன் பணிபுரியும் விதம் பிடித்துப் போக, அவரையே தனது படத்தின் நாயகனாக்கி இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தல் காட்டு வேட்டை (ஜங்கிள் திரில்லர்) என்று ‘காட்டுப் புலி’யைச் சொல்லலாம். அத்தனை அதிரடி ஆக்சன் காட்சிகள் படம் முழுவதும். படம் பார்ப்பவர்கள் காட்டுக்குள் மாட்டிக்கொண்ட உணர்வு நிச்சயம், இந்தப் படத்தில் கிடைக்கும்.
ரஜினீஷ் – சாயாலி பகத், அமீத் – ஹனாயா, ஜஹான் – ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் பயணிக்கிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது அர்ஜூன் – பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். அவர்களை நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி காப்பாற்றிக் கொண்டு வருகிறார் என்பது கதை.
தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து, இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். அனைத்து நட்சத்திரங்களுமே இங்கே தங்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் எனக் காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தைப் படமாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் 50 குதிரைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க, ஏராளமான காவலர்களை நியமித்து, குதிரைகளைப் பார்த்துக்கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.
பிரியங்கா தேசாய் இதில் மருத்துவராக, அர்ஜுனின் மனைவியாக, மகளுக்காக மருத்துவத் தொழிலையே தியாகம் செய்யும் தாயாக நடித்துள்ளார்.
முன்னாள் ‘மிஸ் இந்தியா’ சாயாலி பகத்தும் முன்னாள் ‘மிஸ்டர் இந்தியா’ ரஜ்னீஷும் இதில் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னொரு நாயகியான ஹனாயா ‘மிஸ் அஸாம்’ பட்டம் வென்றவர். .
அர்ஜூனின் ஆக்சன் வேட்கைக்குச் செம தீனியாக அமைந்துள்ளது, இந்தப் படம். பொதுவாகவே காட்டுப் பகுதியில் ஆக்சன் காட்சிகள் அமையும் வகையில் வந்த அர்ஜுன் படங்கள் அனைத்துமே பெரும் வெற்றி பெற்றவை. உதாரணம் ஜெய்ஹிந்த். அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடரும் என நம்புகிறார் அர்ஜூன்.
காட்டுப் புலிக்காக அண்டர்வாட்டர் பயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் மயிர்க்கூச்செறியும் சாகஸங்களைச் செய்துள்ளார் ஆக்சன் கிங்.
சண்டைக் காட்சிகளின் பிரியர்களுக்கு காட்டுப் புலி நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
========================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் அ.ஜான்