அன்பே சிறந்த மருந்து

1

விசாலம்

Vishalamதொன்று தொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத் தெருவிலும் வியாபித்து, பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்….. அப்பப்பா.. என்ன இன்பம்… நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைம்மாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். அன்பே கடவுள் என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் இறைச்சக்தியை ரஹீம் என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.

“அன்பிலர் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்
என்பும் உரியர் பிறர்க்கு,”

இது திருவள்ளுவரின் வாசகம்.

அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? பெற்றோர்கள் சிலர், குழந்தைகளுக்குச் சில பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, தங்கள் காரியாலயம் சென்றுவிடுகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார்கள். பரிசுப் பொருட்களுக்கும் மேலாக, குழந்தைகள் எதிர்பார்க்கும் அன்பை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
இங்கே பள்ளியிலிருந்து வந்த குழந்தை, தாயின் அன்புக்காக ஏங்குகிறது. டிவி முன் அமர்கிறது. டி.வி. அந்த அன்பைத் தருமா?

அப்பா பெரிய செல்வந்தர். அவரை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை. இரவில் தாமதமாக வரும் நிலை. அவரைப் பார்க்கவும் பேசவும் துடிக்கும்  மகள், மகன்.

அப்பாவை தன் பள்ளி ஆண்டு விழாவிற்கு வரும்படி, மகன் அழைக்கிறான். “எனக்கு அவசர மீட்டிங் இருக்கு கண்ணா. என்னால் வர இயலாது” என்கிறார் அப்பா. அவன் தாய் பரிதாபமாகப் பார்த்தபடி நிற்கிறாள். பையனுக்கு ஏமாற்றம்தான். அவன் எதிர்பார்த்த அன்பு, வீட்டில் கிடைக்காத நிலையில் அவன் அன்பை வெளியே தேட ஆரம்பிக்கிறான்.

சந்தோஷம் என்பது, பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை. குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு அல்லது கட்டாயம், நேர்மாறான விளைவை ஏற்படுத்தும்.

என்  மகன் பிட்ஸ் பிலானியில் சேர்ந்த போது, ஒரு மாணவன், திருச்சியிலிருந்து வந்து சேர்ந்தான். நான் அப்போது பிலானி இஞ்சினியரிங் காலேஜ் ஹாஸ்டலில் என் மகனுடன் தங்கியிருந்தேன். அந்தத் திருச்சி மாணவன், தன் தந்தையுடன் வந்திருந்தான். அவன் தந்தை மிகக் கண்டிப்பாக இருந்தது, அவரது பேச்சில் தெரிந்தது. அவனுக்குப் பல அறிவுரைகள் சொல்லிய வண்ணம் இருந்தார். வெளியில் அனுப்பாமல் காவல் போல் இருந்தது, அந்த மாணவனுக்கே எப்படியோ இருந்தது. நானும் அந்த மாணவனுடன் பேசினேன். ஒரு ஆறு மாதம் கழித்துத் திரும்பவும் நான் அந்த ஹாஸ்டலுக்குச் சென்ற போது, நான் பார்த்த அந்தச் சாது பிள்ளை, தொடர் புகைக்காரன் (சைன் ஸ்மோக்கர்) ஆகி இருந்தான். பல வேண்டாத பழக்கங்கள், அவனைத் தொற்றிக்கொண்டன. மாணவர்கள் ஆரோக்கியமாய் வளர, அன்பு கலந்த கண்டிப்பு தேவை.

நமது உடலில் மிகச் சக்தி வாய்ந்த இடம், நமது தோல். அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதில் ஆறு லட்சம் திசுக்கள் உள்ள்ன.   தொடு உணர்வு தோலில் செயல்பட்டு, உடலில் பரவுகிறது. குழந்தை, தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான். தாயின் அரவணைப்பு, பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தைப் போக்குகிறது. நெற்றியினிலோ, கழுத்தின் பின்புறத்திலோ, தோளிலோ நாம் அன்பாகத் தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும்.

அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும். தனக்குத் தானே அன்பைச் செலுத்திக்கொள்ள வேண்டும். நமது குறைகளையும் நிறைகளையும் கணக்கிட்டு ஒவ்வொரு நாளாக நிறைவுகளை அதிகப்படுத்தி, குறைகளைக் குறைத்து,  மற்றவர்களின் தவறுகளைக் கண்டுக்கொள்ளாது அல்லது மன்னித்து, இயல்பாக அன்பின் ஊற்றைப் பெருக்க வேண்டும்.

தன்னைத்தானே நேசித்து, கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தைச் சுத்தமாக அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு ஊற்றாகப் பெருகி, மற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி, அன்பு பாய்ச்ச அதைப் பெறுபவர், கோப நிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். தாயின் அன்புக்குக் குழந்தையும் தன் பிள்ளைகளின் அன்புக்குப் பெற்றோரும் ஏங்குகிறார்கள்.    காதலன் தன் காதலியின் அன்புக்கு, .மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக் குழந்தைகளின் அன்புக்கு, நண்பன் நல்ல நட்பின் அன்புக்கு, கடைசியாக, பக்தன் கடவுளின் அன்புக்காக…. என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள்.

இந்த அன்பு கிடைக்காவிட்டால்  தவறான பாதையில் மனிதன் இறங்குகிறன்.  இதன் விளைவாக விவாகரத்து கொலை ,தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது.

மனிதனின் ஆரோக்கியத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லையென்றால் மகிழ்ச்சியில்லை… மகிழ்ச்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை. ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம், பண்பு ஆகியவை இருந்தன. இப்போது அவை எங்கே? தேடுவோம் அன்பை,   இணைவோம் அன்பினால்.

“துன்பம் இலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி”

பாரதி மொழிந்த “அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம். அன்பே சிவம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்பே சிறந்த மருந்து

  1. ஒரு ஆறு மாதம் கழித்துத் திரும்பவும் நான் அந்த ஹாஸ்டலுக்குச் சென்ற போது, நான் பார்த்த அந்தச் சாதுப் பிள்ளை, தொடர் புகைக்காரன் (சைன் ஸ்மோக்கர்) ஆகி இருந்தான்.

    => பாயிண்ட் மேட். என் மகனுக்கு உகந்த அளவு சுதந்திரம் கொடுத்து இருந்தோம். கட்டுப்பெட்டி குடும்பத்தில் இருந்து வந்த அவனுடைய சகபாடி, போன இடத்தில் சிக்கனுக்கு அலைந்தான். கட்டுப்பாடும் அன்பில் கட்டுப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *