சமச்சீர்க் கல்வி – ஒரு குறுநாடகம்

3

மு. மா. மங்கையர்க்கரசி

mangaiarkkarasiஅந்தி சாயும் நேரம். பெரியார் காலனியைக் கடந்து அனுப்பர்பாளையத்தில் நுழையும் போது, ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு.

நமது கருப்பராயன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆடிக் கலக்கிய அந்தக் குழந்தைகள், சமச்சீர் கல்வி பற்றி ஒரு குறுநாடகத்தை முன்னால் படைக்கிறார்கள் என்ற அந்த அறிவிப்பைக் கேட்டேன்.

தாய்த் தமிழ்ப் பள்ளியா? அது எங்கிருக்கிறது? சமச்சீர்க் கல்வி என்கிறார்களே அது என்ன? அரசு சமச்சீர்க் கல்வி என்கிறது. ஆங்கில வழிப் பள்ளிகள் அது வேண்டாம் என்கிறார்கள். அது என்ன சமச்சீர்க் கல்வி என்ற குழப்பம் ஏற்கெனவே இருந்தது. சமச்சீர்க் கல்வி பற்றிய நாடகம் என்றவுடன் வண்டி தானாகவே மேடையை நோக்கிச் சென்றது. மேடையை நோக்கிச் செல்லும் முன்பே நாடகம் தொடங்கிவிட்டது. வண்டியை நிறுத்திய இடத்திலே நின்று நாடகத்தைக் கவனித்தேன்.

மேடையில் 6 குழந்தைகள். ஆளுக்கொரு பள்ளிச் சீருடையில் வரிசையில் நின்றிருந்தனர். மூன்று குழந்தைகள் இடப் பக்கம் அமர்ந்து இருந்தனர். ஒரு குழந்தை பேட்டியைத் தொகுத்து வழங்கும் செய்தியாளராக கையில் ஒலிவாங்கியுடன் தனது உரையைத் தொடர்ந்தார். “இதோ இந்த மேடையில் 10 வயது கொண்ட சிறுவர் சிறுமியர் பலர் உள்ளனர். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வோமா?” என்று கூறியவர் வரிசையில் நின்றிருந்த முதல் குழந்தையை, “இங்கே வாங்க” என்று அழைத்து, “உங்க பேர் என்ன?” என்று கேட்க அக்குழந்தை, தனது பெயரைச் சொல்ல,

அடுத்த கேள்வி “எந்த ஊர்?” பதில் “திருப்பூர்”,
அடுத்த கேள்வி “எந்த மாவட்டம்?” பதில் “திருப்பூர்”,
அடுத்த கேள்வி “எந்த மாநிலம்?” பதில் “தமிழ்நாடு”,
அடுத்த கேள்வி “எந்த நாடு?” பதில் “இந்தியா”,
அடுத்த கேள்வி “என்ன வயது?” “10 வயது”,
அடுத்த கேள்வி “எந்தப் பள்ளில படிக்கிறீங்க?” “அரசுப் பள்ளியில்”
இக்கேள்வியோடு நிறுத்தி அடுத்த குழந்தையை அழைக்கிறது, அந்தக் குழந்தை.

அந்தக் குழந்தையிடமும் இதே கேள்வி.

அடுத்த கேள்வி “எந்த ஊர்?” பதில் “திருப்பூர்”,
அடுத்த கேள்வி “எந்த மாவட்டம்?” பதில் “திருப்பூர்”,
அடுத்த கேள்வி “எந்த மாநிலம்?” பதில் “தமிழ்நாடு”,
அடுத்த கேள்வி “எந்த நாடு?” பதில் “இந்தியா”,
அடுத்த கேள்வி “என்ன வயது?” “10 வயது”,
அடுத்த கேள்வி “எந்தப் பள்ளில படிக்கிறீங்க?” “மெட்ரிக்குலேசன் பள்ளியில்.”

அவரைத் தொடர்ந்து அடுத்த குழந்தைக்கும் அதே கேள்வி. அதே ஊர், அதே மாவட்டம், அதே மாநிலம், அதே நாடு, அதே வயது, ஆனால் எந்தப் பள்ளி என்பதற்கு மட்டும் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, நான்காம் குழந்தை சி.பி.எஸ்.சி என்கிறது. ஐந்தாவது குழந்தை நவோதயா என்கிறது. ஆறாவது குழந்தை சைனிக் பள்ளி என்கிறது. எனக்கோ ஒன்றும் புரியவில்லை.

ஆறு குழந்தையிடமும் ஒரே கேள்வி. ஒரே மாவட்டம், வயது, நாடு என்ற கேள்விக்கு ஒரே பதில். கடைசி கேள்விக்கு மட்டும் வெவ்வேறு பாடத் திட்டம் கொண்ட பள்ளிகள். குழம்பியபடியே நாடகத்தை உற்றுக் கவனித்தேன். பேட்டியாளர் மேடையில் இடதுபுறம் அமர்ந்திருந்த குழந்தைகளைப் பார்த்து இப்போது உங்களிடம் சில கேள்வி. இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, கேள்வியைத் தொடங்கினார். இவர்கள் எல்லோரும் ஒரே ஊர், ஒரே மாவட்டம், ஒரே நாடு, ஒரே வயது இப்படி இருக்க, கல்வி முறை மட்டும் மாறுபடுகிறதே இது எப்படிச் சாத்தியம்? ஏன் இந்த ஏற்றத் தாழ்வு எனக் கேள்வி கேட்டார்.

மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை ஒலிவாங்கியை வாங்கி, கோபத்தோடு கூறியது. “ஏழைக்கொரு கல்வி, பணக்காரனுக்கொரு கல்வி. இந்தக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும்” என்றது.

அடுத்த குழந்தை, “உயர்சாதிக்கொரு கல்வி, அதிகார வர்க்கத்திற்கொரு கல்வி. இந்தக் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்” என்றது.

அடுத்த குழந்தை, “ஜாதி ஏற்றத் தாழ்வைவிட, இந்தக் கல்வி ஏற்றத் தாழ்வு கொடுமையானது. இந்தக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும்” என்ற கோபக் குரலை ஓங்கி ஒலித்தபடியே பத்துக் குழந்தைகளும் ஒரே வரிசையாக நின்று ஒன்றாய்க் குரல் கொடுத்தனர்.

“எல்லோரும் ஒரு தாய் மக்கள். எல்லோருக்கும் ஒரே கல்வி. அதுதான் சமச்சீர்க் கல்வி. அது தான் சமச்சீர்க் கல்வி. அந்தக் கல்வி முறை உடனே வேண்டும். அந்தக் கல்வி முறை உடனே வேண்டும். அந்தக் கல்வி முறை உடனே வேண்டும்” என்றபடி நாடகத்தை முடித்தனர்.

குழந்தைகள் என் செவிப்பறையில் ஓங்கி அறைந்ததது போன்று ஓர் உணர்வு. இன்றைய கல்வி முறை பற்றி ஒரு நல்ல விளக்கம். சமச்சீர்க் கல்வி பற்றிய என் குழப்பத்திற்கு தீர்வு. அதன் உடனடித் தேவையைப் புரிந்துகொண்டேன்.

அலுவலகத்திலிருந்து அலைபேசி அழைப்பு வர, அடுத்த நிகழ்வைப் பார்க்க நேரமில்லாததால் வண்டியைக் கிளப்பியபோது ஒலிபெருக்கியில் மீண்டுமோர் அறிவிப்பு. இந்தக் குழந்தைகளின் நிகழ்ச்சியைப் பாராட்டி பள்ளி வளர்ச்சிக்காக 100 ரூபாய் நன்கொடையென ஒரு பெரியவர் அறிவித்துக் கொடுத்தார்.

என் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தேன். 40 ரூபாய் இருந்தது. “என் பிள்ளைகளுக்கு எந்த வகையான கல்வி தேவையென என்னை முடிவெடுக்க வைத்த இந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுங்கள். என் பெயர் சொல்ல வேண்டாம்” எனச் சொல்லி அறிவிப்பாளரிடம் கொடுத்துவிட்டு அலுவலகப் பணியைப் பார்க்கச் சென்றேன். தெளிந்த சிந்தனையோடு. கனத்த இதயத்தோடு.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சமச்சீர்க் கல்வி – ஒரு குறுநாடகம்

  1. வாழ்க! திருமதி. மு. மா. மங்கையர்க்கரசி. இங்கு, இது ஒரு நவீன உத்தி என்றாலும், இலக்கியங்களில் தென்படும் ஒரு பிரசார உத்தி எனலாம். நல்ல விஷயங்களுக்கு பிரசார இலக்கியம் நிச்சயமாக உதவும். அதில் தவறு ஒன்றுமில்லை. கல்வி ஒரு எளிய, ஆனால், சிக்கலான கருவி. சிறப்பை அளிக்கும் கல்வி வேறு; சமச்சீர்க் கல்வி வேறு. நான் இந்தக் குறும்நாடகத்தை உருவாக்கியிருந்தால், அரசுப் பள்ளி மாணவனின் விடையும், சைனிக் ஸ்கூல் மாணவனின் விடையும் வெவ்வேறு விதமாக அமைந்திருக்கும். நம் மக்கள் விரும்புவது எல்லாருக்கும் கல்வி உரிமையும், சிறந்து விளங்கும் மாணவர்களை மேன்படிப்பு அளித்து ஊக்குவதும். ஊர் சுற்றித் திரியும் அம்பியும், இன்று திருவண்ணாமலை கொண்டாடும் மின்னல்தேவியும் ஒரே ரகம் அல்ல.

  2. உயர் சாதிக்கு ஒரு கல்வி மற்றவர்களுக்கு ஒரு கல்வி என்பது தவறான கருத்து. இப்பொழுது பணம் இருந்தால் தான் நல்ல பள்ளியில் admission கிடைக்கும். அந்த அளவிற்கு பீஸ். எனக்கு தெரிந்து உயர் சாதிக்கு எங்கும் தனியாக கல்வி கற்பிப்பதில்லை. அவர்களுக்கு Quota system படி நல்ல பள்ளியிலும் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைப்பதே அரிது.

  3. நல்ல நாடகம் தான். ஆனால் பாடத் திட்டத்தில் ஜாதி எங்கிருந்து வந்தது? பள்ளிகளில் உயர் ஜாதிக்கென்று இடம் எதுவும் சிறப்பாகக் கொடுப்பதில்லை.ஏன் இந்த வயதிலேயே குழந்தைகள் மனதில் ஜாதி என்ற விஷத்தை விதைக்க வேண்டும்? கல்வியில் ஏற்றத் தாழ்வு என்பது மிகவும் கேவலமான விஷயம் தான். அவற்றை இல்லாததாக ஆக்க வேண்டியது நம் கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *