அன்பென்னும் பாதுகாப்பு வளையத்தில்…

6

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

Subashini_Thirumalaiஅன்று (2011 மே மாதம் 5ஆம் தேதி) அமரர் தேவனின் அறக்கட்டளை விருது வழங்கு விழா. அதில் ஞாநியின் நாடகம் நடைபெறவிருந்தது. எனது அலுவலகம் முடிந்த மறுநிமிடம் நான் ஆட்டோவில் புறப்பட்டுவிட்டேன். ஆட்டோ, வங்கத்தின் மெரினாக் கடற்கரையை அளந்துகொண்டு ஆழ்வார்பேட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நடிகர் சிவாஜி சிலையருகே வரும்போது அலைபேசியின் குறுஞ்செய்தி அழைப்புக் கூவியது. அன்பை தன் எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் வண்ணதாசனிடமிருந்துதான் செய்தி வந்திருக்கின்றது.

2011 மே மாதம் 3ஆம் தேதி உயிர்மைப் பதிப்பகம் அளித்த சுஜாதா விருதினைப் பெற, நம் சென்னைக்கு வந்திருந்து, நம்மை ஒளிரச் செய்தார். அவர் தன் ஊருக்குப் பேருந்தில் திரும்புவதாகக் கூறியதும் எனக்கு ஒரு சின்ன கவலை இருந்தது. எனவே “பத்திரமாக ஊர் சேர்ந்தீர்களா?” என்று வினவியிருந்தேன். “ஆமாங்க! வீட்டிற்கு வந்தாச்சுங்க! அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும்தானே” என்று செய்தி.

எனக்குப் படிக்கப் படிக்கச் சந்தோஷமாகவும், அன்பின்பால் அவருக்கு இருக்கும் அசைக்க முடியாத பாதுகாப்பு நம்பிக்கையும் பற்றி நினைந்து நினைந்து உருக உருக, ஆட்டோ சிட்டி சென்டர் தாண்டி, சில்ரன் கார்டன் பள்ளி தாண்டியது….

இம்முறை அலைபேசியின் அழைப்பு… என் அன்பான தோழி… அவசர அழைப்பாக இருக்கிறது…. அவர் குரலில் பதற்றம்… “எனக்கு ஜுரமும், தொண்டை வலியும் இருக்கிறது. மிகவும் சோர்வாக இருக்கிறேன் சுபா! எனக்குக் கொஞ்சம் மாத்திரையும் பழங்களும் வாங்கித் தர இயலுமா?” என்று… ஐயோ! தயவுசெய்து வாங்கிக் கொடுத்திடேன் என்ற கெஞ்சல் அதன் அடிநாதத்தில் இருந்தது. ஞாநியின் நாடகம் மறந்து விட்டது. ஆட்டோவை அவர்கள் வீட்டுப் பக்கம் திருப்பச் சொன்னேன். வழியில் பழங்களும் படிக்கட்டில் ஒரு அட்டையும் வாங்கிக்கொண்டு சென்றேன்.

 

vannadasanஅவள் வீடு பூட்டியிருந்தது. அவள் இருப்பதோ இரண்டாவது மாடியில். நல்லவேளை, பக்கத்து வீட்டில் வாசல் கதவின் சாவி இருப்பது நினைவில் வந்தது. எனவே அவர்களை அழைத்துத் திறந்து விடச் சொன்னேன். நாடகம் போகவேண்டிய அவசரம், அறிவுக்கு இருந்தது. வேகமாய்ப் போனேன்! அடுத்த நிமிடம் அவரிடம் இருந்தேன்.

பாவம்! மிகவும் தளர்வின் உருவாய்ப் படுத்து இருந்தாள். சில நிமிடங்கள் அவருடன் உரையாடிவிட்டு, கவனமாக இருக்கச் சொல்லி, மருந்தையும் பழங்களையும் கொடுத்தேன். அவருக்கு என்னை அனுப்ப மனமில்லை என்பது புரிந்தது. உடல்நலமில்லாதபோது நமக்கு வேண்டியவரின் இருப்பு மிகவும் ஆதரவாக இருக்கும்தான். நான் கிளம்பித்தானே ஆக வேண்டும். “அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும்தானே” என்ற வண்ணதாசன் வரிகளை அவர் அருகில் பாதுகாப்பாய் விட்டுவிட்டு, படியிறங்கி விட்டேன்.

பக்கத்து வீடடுக்காரர்களிடம் வாசக் கதவைப் பூட்டிக்கொள்ளுமாறும் அவர்களைப் பார்த்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். உடல் நடுங்கியது, ஏதோ தவறான செயல் செய்துவிட்டு மாட்டிக்கொண்ட மாதிரி, நெஞ்சு படபடவென அடித்தது. மேல்மூச்சு வாங்கியது. இடுப்பிற்குக் கீழ், மிகவும் பலவீனமாய் உணர்ந்தேன். உடம்பு தன்னிலையில் இல்லை. ஆட்டோ டிரைவர் சீனிவாசன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அமர்ந்தார். நான் வேண்டாம் என்று தடுத்தேன். என்னுடைய 82 கி.கி. உடலும் குலுங்கி நடுங்கியது. பாதங்களால் வண்டியில் ஊன்ற முடியவில்லை. எப்படி அதை வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை. காலைத் தொங்கப் போடுவதா? இல்லை மடக்கி வைத்துக் கொள்வதா? என்று அறிவிற்குப் புலப்படவில்லை.

மாடி ஏறியிருக்கக் கூடாதோ? நாடகம் தொடங்கியிருப்பார்களோ? பரீக்சா நண்பர்கள் எதிர்பார்ப்பார்களே! அத்துணை பேரும் அன்பால் என்னை உயிராய் வைத்திருப்பவர்கள். இதற்கிடையில் அவர்களுக்காக சாக்லேட் வேறு வாங்கி வைத்திருந்தேன். ஒவ்வொரு நாடகம் முடிந்தவுடன் ஏதோ ஒரு மிட்டாயுடன்தான் பார்ப்பேன். நாடகத்தில் பேசி நா வறண்டு போயிருக்கும். இது அவர்களுக்கு இதமாக இருக்கும். எண்ணங்கள் இப்படி ஓடிக் கொண்டிருக்க, ஒரு மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது. இப்போது தேவையில்லாமல் ஒரு நினைவு. இந்த நினைவிற்கு விவஸ்தையே கிடையாது.

 

பாலகுமாரன்பாலகுமாரன் ஒரு கதையில், “சிறுநீரகத்தில் உள்ள கல்லால் ஏற்பட்ட வலியைப் பற்றி விலாவாரியாய் விளக்கியிருப்பார். அந்தக் காலக்கட்டத்தில் எழுத்தை எளிமையாக்கி தங்கு தடையின்றி ஒரு நீரோட்டம் போல் எழுதுவார் அவர். அப்போது பாலகுமாரன் அலை வீசிக் கொண்டிருந்தது. ஆண்களுக்கு, பெண்ணை, மனைவியை மதிக்கக் கற்றுக் கொடுத்தது அவர் எழுத்து. ஒரு வலி எப்படி உருவாகிறது? அது எவ்வாறு பயணிக்கிறது? அதன் அடர்த்தி என்ன? என்றெல்லாம் உற்று நோக்கும்படியாய் அந்தக் கதையை அவர் அமைத்திருப்பார்.

இதை வலுப்படுத்தும் வண்ணம், தமிழினி பத்திரிகையில் மே மாத இதழில் ஜெயமோகனின் “யானை டாக்டர்” என்றாரு கதையைப் படித்தேன். அதில் வன விலங்கு அதிகாரிக்கு ‘செந்தட்டி’ என்றும் செடி, அவர் உடலில் பட்டு அரிப்பெடுக்கும். அவரது உதவியால், அவரை யானை டாக்டரிடம் அழைத்து வருவார். அப்போது இவரது நிலைமையை அறிந்துகொண்டு, ஊசி போட்டால் சரியாகி விடும். அதைவிட இந்த அரிப்பை, இதனால் உடலில் ஏற்படும் விளைவைக் கவனித்து, ஒரு அனுபவமாக ஆக்கிக்கொள்ளுங்களேன். இரண்டு மணி நேரத்தில் இயல்பாகி விடுவீர்கள் என்று கூறுவார். வன விலங்கு அதிகாரியும், அதற்கு உடன்படுவார்.

“இதல்லாம் ஏன் இப்போது நினைவில் வருகிறது? நான் இதை அனுபவமாக்கிக்கொள்ள வேண்டுமா” என்று சிந்தித்து, இதனின்று என்னை விடுவித்தேன்.

ஒரு மூச்சிற்கும் அடுத்து மூச்சிற்கும் இடையே ஓய்வு எடுக்கும் என்ற தகவலை நாஞ்சில் நாடன் ஒரு முறை கூறியது பளிச்சிட்டது. பாவம்! ஒரு மூச்சு எடுக்கவே நேரமாகிறது. அடுத்த மூச்சு முடிவதற்குள்…. அப்படியானால் இதயம் எப்படி ஓய்வு எடுக்கும்?

மெதுவாக என் இடது தோள், கையைப் பார்த்தேன். அதில் வலியோ, பாதிப்போ இல்லை. எழுந்து நிற்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் எழ முடியவில்லை. காலில் பலமில்லை. விழுந்து விடுவேனோ என்றிருந்தது. இன்னமும் இவ்வுலகில் எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று என் மனம் கணக்குப் போட்டது.

இரண்டாவது மகளின் திருமணம், என் குடும்பத்தின் அடுத்த தலைமுறையை இன்னமும் சந்திக்கவில்லை என்று தொடங்கி, நண்பர்களைப் பற்றிய கவலைகள் என்று கடந்து வரும் தேர்தல் முடிவு, அதன் விளைவு என்று பட்டியல் போட்டது. வாழ்வில் இத்துணைப் பிடிப்பு இருக்கும் போது, சுபா! நீ எங்கே இதைவிட்டு விட்டுக் கிளம்பப் போகிறாய்?” என்று எனக்கு பளிச்சிட்டது. எங்கிருந்தோ வலு வந்துவிட்டது. “சீனிவாசன்! ஆழ்வார்பேட்டைக்குப் புறப்படுங்கள்” என்று கூறிவிட்டேன்.

ஆட்டோ, பெத்தாச்சி ஆடிட்டோரியம் வந்ததும், சீனிவாசனை அனுப்பிவிட்டேன். அப்போது நான் அறியவில்லை. ஆட்டோவை அனுப்பியது, முட்டாள்தனம் என்று. எப்பொழுதும் என்னை வீட்டில் விட்டுத்தான் சீனிவாசன் செல்வார் பாவம். அவர் எனக்காகத்தான் ஆட்டோ ஓட்டுகிறாரோ என்று சமயத்தில் நினைக்க வைக்கும். அவர் என் குடும்பத்தில் ஒருவர். அவரைப் போல் அவர் மனைவியும் மக்களும் இனிமையானவர்கள். எப்போதும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் என் நண்பர்கள். முனிசிபல் தேர்தலில் நான் நின்றால், இந்த ஏரியா ஆட்டோ டிரைவர்கள் ஓட்டு அனைத்தும் எனக்கு நிச்சயம் என்று என் மகள்கள் என்னைக் கேலி செய்வார்கள். எவ்வளவு தூரமாயினும், எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து, எங்களைக் கவனமாய் அக்கறையாய் வீடு கொணர்ந்து சேர்ப்பார்கள். “ஆட்டோ போகும் தூரம்” ஆயின் எங்கும் வருவேன் என்று நான் எப்போதும் கூறுவேன்.

தடங்கலுக்கு மன்னிக்கவும். ஆட்டோ விளம்பர இடைவேளை ஆகிவிட்டது.

ஆடிட்டோரியத்தில் நுழைந்தேன். அப்பாடா! நாடகம் இன்னும் தொடங்கவில்லை. தேவன் அறக்கட்டளை விருது வழங்கியபின், ஞாநி, விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். அங்கு ஏ.சி. நன்கு வேலை செய்ததால் உடம்பு கொஞ்சம் தன்னிலை வந்து விட்டது போல் தோன்றியது. நான் நாடகம் தொடங்கி, அதில் ஒன்றியபோது அலைபேசியில் மகள் அழைத்தாள். அறையைவிட்டு வெளியில் வந்தேன். அவ்வளவுதான்! மறுபடியும் உடம்புத் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அங்கு புத்தகம் விற்றுக் கொண்டிருந்த பரிசில் செந்திலை நாடகம் பார்க்க அனுப்பிவிட்டு, நான் அவர் நாற்காலியில் அமர்ந்தேன். படபடப்பு, மூச்சு வாங்குதல் என மாறி மாறி…  உணர்ந்தேன். என்னால் என்னைச் சரிபண்ணிக்க முடியும் என்கின்ற நம்பிக்கைத் தளர்ந்தது. நாடகம் முடிந்தது. உள்ளே சென்று அனைவரையும் பார்த்தேன். அவர்களை பாராட்டிவிட்டு வெளியில் வந்தேன். ஆட்டோவை அனுப்பிவிட்டோமே என்று மனத்தில் உறைத்தது.

Jeyamohanஅங்கு நின்று கொண்டிருந்த என் தோழி திலகவதியிடம் என் நிலையைப் பற்றிக் கூறினேன். உடனே அவள், “சுபா! விஜூ பக்கத்திலிருக்கும் டாக்டரிடம்தான் சென்று இருக்கிறார். வாருங்கள் நாமும் போகலாம்” என்று என்னை அங்கு அழைத்துச் சென்றார். விஜு தன் நண்பருடன் அங்கு இருந்தார். அங்கு காத்திருக்க வேண்டியிருந்தது. என்னைவிட திலகவதிதான் மிகவும் பதற்றமாய் இருந்தாள். என் மேலுள்ள அக்கறையும் அன்பும்தான் இப்பதற்றத்திற்குக் காரணம் என்று நான் புரிந்துகொண்டேன். அவள் கணவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். எங்கள் முறை வந்ததும் டாக்டரைப் பார்த்தோம். அவர் என்னைச் சோதித்துப் பார்த்ததில், பி.பி. அதிகமாக இருக்கிறது என்றார். கவனமாகப்

பார்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

மறுநாள் எடுத்த எக்கோ கார்டியோகிராமின் சோதனை முடிவு கொஞ்சம் மனத்தை அதைரியப்படுத்தியது. மகள்கள் இருவரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு என்னை அழைத்துச் சென்று, மேலும் சில சோதனைகளாக டிரெட்மில், ஈசிஜி, இரத்தம் பரிசோதனை எனச் செய்ய வைத்தனர். அதன் ரிஸல்ட் சரியாக இல்லை. ஆஞ்சியோ பண்ணி விடலாம் என்றதும் எனக்கு கலவரமாகிவிட்டது. வீணான மன உளைச்சலையும், பண விரயத்தையும் அளிக்குமே என்பது என்னை அழுத்தியது. அன்றைய பொழுது அதில் கரைந்தது.

வார இறுதியான ஞாயிறு அன்று அதிகாலையே எனக்கு விழிப்புத் தட்டிவிட்டது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் அலைபேசியும் விழித்துக்கொண்டு நின்றது. அதில் நிறைய குறுஞ்செய்திகள் வந்திருந்தன. அதைத் திறந்து பார்த்தேன். அத்தனையும் ‘அன்னையர் தினம்’ வாழ்த்துச் செய்திகள். அன்பில்தான் எத்துணை வகை வெளிப்பாடுகள், எவ்வளவு ஆசையாய், அன்பாய் அனுப்பியிருக்கிறார்கள் என வியந்து மகிழ்ந்து போனேன். என்னுடைய அப்போதைய பலவீனமான உடல் நிலைக்கு அவை மிகவும் இதமாகவும், ஆதரவாகவும் இருந்தன.

இந்த அன்னையர் தினம், என்னை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்றது. அன்றுதான் நாங்கள் இத்தினத்தை வரவேற்ற ஆண்டு. அப்போது என் முதல் மகள், கல்லூரியில் சேர்ந்த ஆண்டு.

நாங்கள் அப்போது திருவல்லிக்கேணியில் நான்கு அடுக்கு மாடி வீட்டில் குடியிருந்தோம். கடற்கரையின் அருகே அது அமைந்திருக்கும். நல்ல காற்று, வெளிச்சம், மிகவும் வசதியான, ஆனால் சிறிய வீடுதான். நாங்கள் குடியிருந்தது மூன்றாவது மாடி. அப்பொழுது நன் காலையில் விழித்தெழுந்ததும், என் வீடே வேறு விதமாக ஒளிர்வதாய்த் தெரிந்தது. எங்கள் வீட்டின் தொலைக்காட்சித் திரையில் எனது புகைப்படம். அதன் கீழ் அன்பின் வரிகள். அறை முழுவதும் விதவிதமான சுவரொட்டிகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. அத்தனையும் அன்பின் பகிர்தல்கள். அவர்கள் இருவரும் சிறப்பாக ஓவியம் வரைவார்கள். அவர்களே தயாரித்தது என்பதால் கூடுதல் சிறப்பாக அவை மிளிர்ந்தன.

nanjil_nadanஅப்படியே சமையலறை சென்றேன். வாவ்! சமையலறை மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு, அழகுபடுத்தியிருந்தனர். சமையல் மேடையில் எனக்காக ஒரு பரிசுப் பொட்டலம் காத்திருந்தது. அதைப் பிரிக்கும் பொழுது, என் மேல் ஒரே வெளிச்சம். ஆம்! என் இரு மகள்களும் புகைப்படம் எடுத்தனர். என்னுடைய ஒவ்வொரு ரியாக்சனையும் படம் எடுத்திருந்தனர். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

என்னுடன் கூடவே, ஒரு வருத்தத்தின் இழை பயணித்தது. ஆம் என் அன்னையிடம் நான் என் அன்பை இவ்வாறு பகிர்ந்துகொண்டதே இல்லையே என்று. அவர் எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தார். அதை அவர் கர்மம் போல் செய்தார். ஆம், அவர் ஒரு கர்ம யோகிதான். ஆனால் அவருக்கும் ஒரு அன்பின் அணைப்புத் தேவைப்பட்டது என்பதை அவர் நோய்வாய்ப்பட்ட போதுதான் நான் உணர்ந்தேன். ஒரு வாரம்தான் காய்ச்சல் என்று படுத்தார்கள் (என் தந்தையும் அவ்வாறுதான் ஒரு வாரம்தான் காய்ச்சல் வந்து படுத்தார். என் தந்தைக்குப் பிறகுதான் என் தாய். அவரது இழப்பை அவர் இயல்பாய், மறைவாய் எடுத்துக் கொண்ட விதம்… இன்னமும் எனக்கு வியப்புக்கு உரியதே).

அப்பொழுது அவர்களுக்காக ஒரு நைட் கவுன் தைத்து அவர்களுக்கு, அணிந்துகொள்ள உதவினேன். அப்போது அவர்களை அணைத்து அதை அணிவித்தேன். அந்த அணைப்பில் அவர் ‘எவ்வளவு இதமாக இருக்கிறது சுபா!’ என்றார்கள். அதைத் தவிர, நான் வேறொன்றும் செய்யவில்லை. அவர் எங்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார். அந்த வருடம்தான் என் தாயை நான் இழந்திருந்தேன். அன்றிலிருந்து வயதான எந்தத் தாயைச் சந்தித்தாலும் அவர்கள் கரம் பிடித்துத்தான் பேசுவேன். இதற்கு வலு சேர்ப்பதுபோல், வண்ணதாசனும் ‘கேணி’ கூட்டத்தில் இதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அடுக்கடுக்காகப் பல அன்னையர் தினங்கள் வந்து போயின. ஒரு தினத்தன்று என்னுடைய இளவயது படத்தைப் பெரிது பண்ணி பரிசாக அளித்தனர். இப்படி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சிறப்புடன் இத்தினம் சிறப்புறும்.

நான்கு வருடங்களுக்கு முன், நாங்கள் மைசூரில் இருந்தோம். அது என் வாழ்வின் பொற்காலம் என்றே சொல்வேன். அவ்வருட அன்னையர் தினத்தன்று, அங்கு படித்துக்கொண்டிருந்த இரண்டாவது மகளின் தோழிகள் தங்கள் அறைக்கு என்னை அழைத்துச் சென்று, அலங்கரிக்கப்பட்ட அறையில் என்னையும் இன்னொரு தோழியின் அன்னையையும் நிறுத்தி, ‘கேக்’கை வெட்டச் செய்து, பரிசுகள் கொடுத்து எங்களைப் பெருமைப்படுத்தினர்.

இன்னொரு நிகழ்வும் அப்பொழுது நிகழ்ந்தது. என்னுடன் வேலை செய்யும் இரு ஆய்வாளர்கள் (அவர்களுடன் வேலை செய்வதைத்தான் பெருமையாகக் கொள்கிறேன். ஏனெனில் அங்கு அத்துணை பேரும் சான்றோர்கள். மொழித் துறை, தமிழ்த் துறை வல்லுநர்கள்) என்னை அவர்களது தாயாகவே கருதினர். அவர்களில் ஒருத்தி, எனக்கு பொற்குழை (தங்கக் காதணி) அணிவித்து மகிழ்ந்தாள். இன்னமும் என் காதில் அதுதான் அழகு சேர்க்கின்றது. அன்பைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. இறக்கும் வரை என்னுடன் இருக்கும். அதில் இரண்டு கற்கள் விழுந்து விட்டன. அவருடன் சென்று அவருக்குப் பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் நான் நிற்கின்றேன்.

இவ்வாறு, நினைவுகளின் ஆழத்தில் அமிழ்ந்து, புள்ளும் சிலம்புகின்ற காலை வண்ணத்தில் காலை வண்ணத்தில் கரைந்துகொண்டிருக்கும்போதே, என் கரங்கள் என் அலைபேசியில் தாய்மையைக் கவிதையாய் வடித்தன. வல்லமை.காமிற்கு அனுப்பி வைத்தேன். அதற்கு ‘மாரியாய்ப் பொழியும் தாய்மை’ எனப் பெயர் சூட்டி, தன் இணையத் தளத்தில் வெளியிட்டுச் சிறப்புச் செய்து, செய்தியை உடனே எனக்குத் தெரிவித்தும் விட்டார். இப்படி யாரும் கட்டளையிடாது அன்பு தன் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.

வெளியில் வெய்யில் ஏற ஏற, மனத்தில் கலவரம் ஏற்படத் தொடங்கிவிட்டது. முதலில் என் அருமைத் தோழி பத்மாவின் நினைவு வந்தது. அவள், என்பால் அக்கறையும் அன்பும் கொண்டவள். அவள்தான் என் உடலின் நலத்திற்காகக் கவலைப்பட்டு, என்னை எச்சரிப்பவள். வேலையை, அநாவசிய அலைச்சலைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்குவாள். நிச்சயமாக எனக்காகக் கவலைப்படுவாள். அன்பில் கடிந்து கொள்ளவும் செய்வாள்.

gnaniஅன்று, மாதத்தின் இரண்டாவது ஞாயிறல்லவா! ‘கேணி’யின் கூட்டத்திற்கு சாகித்திய அக்காதெமி விருது பெற்ற சா.கந்தசாமி அவர்கள்தான் சிறப்பு விருந்தினர். என் விருப்பம் தெரிந்து, என் மருமகன் என்னை அலுங்காது, காரில் ஞாநி வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அன்றைய ‘டீ தயாரிக்கும் வேலை’ நண்பர் விஜுவும், அவர் மனைவி திலகவதியும் எடுத்துக்கொண்டனர். என்னை ஒரு வேலை செய்ய விடவில்லை. நண்பர்கள் அனைவரும், “உங்களுக்கு சரியாகிவிடும்” என்று என்னை ஆற்றுப்படுத்தி, என்னைச் சுற்றியே இருந்தனர். என்னை மிகவும் பாதுகாப்பாய்ப் பொத்தி பொத்திப் பார்த்துக்கொண்டனர்.

ஞாநியின் ஆலோசனைப்படி, ‘இரண்டாவது மருத்துவரின் கருத்துக்கு’ உட்படலாம் என்று திட்டமிட்டிருந்தால், மறுநாள் திங்கட்கிழமை, நானும் ஞாநியும் மலர் மருத்துவமனையில் மருத்துவருக்காகக் காத்திருந்தோம். அங்கு முன்பதிவு கிடையாது. “முதலில் வந்தவர் முதலில் செல்லலாம்”  என்ற வகைப்படி வரிசைப்படி நோயாளிகளை அனுப்பிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருவரும் காலை 11 மணிக்கு அங்கு வந்திருந்தோம். மணி 2 ஆகிவிட்டது. எங்களது முறை இன்னமும் வரவில்லை.

இடைஇடையே ஞாநி போய் வரிசையைச் சரிபார்த்து, எங்கள் முறை எப்போது என்று பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாய் இருந்தது. ஏனெனில் சாப்பிடாமல் ஞாநிக்கு சர்க்கரை அளவு குறைந்து, பிரச்சினைக்கு உள்ளாகிவிடுவாரோ என்றுதான். பாவம்! நல்நட்பு! எனக்காக மூன்று மணி நேரமாய்க் காத்துக் கிடந்தது.

எங்கள் முறை வந்தது. இருவரும்  உள்ளே போனோம். ஸ்டூலில் அமரச் சொன்னார் டாக்டர். ஞாநி என் பிரச்சனையை விவாதித்துவிட்டு, டெஸ்ட் ரிஸல்ட்களை அவரிடம் கொடுத்தார்.

“நல்லவேளை! இவங்களைச் சரியான நேரத்தில் அழைத்து வந்தீர்கள் ஞாநி! நான் அவசரத்திற்கு ஒரு இன்ஜெக்சன் எழுதித் தருகிறேன். உடனே போட்டுக்கொள்ளுங்கள். உடனே இங்கு அட்மிட் செய்யுங்கள். தாமதிக்கத் தாமதிக்க பேஷண்ட்டுக்கு ஆபத்து” என்று கூற, நான் அட்மிட் ஆகி, மருத்துவமனை டாக்டர்கள் அனைவரும் என்னைச் சுற்றி, பரபரப்பாக நர்சுகள் அங்கும் இங்குமாய் பரவி ஓட, என் நண்பர்கள் வெளியே காத்திருக்க….”

‘‘சுபாஷிணியா இவங்க பெயர்? வயது என்ன?” என்கின்ற குரல், என்னைச் சுண்டி இழுத்தது.

என் எதிரில் இருதய நிபுணர் சிரித்துக்கொண்டு இருக்கிறார். ஞாநியும் பரபரப்பில்லாமல் இருக்கிறார். ஒன்றும் புரியவில்லை.

‘ம்…ம்… புரிந்து விட்டது. கற்பனைக் குதிரை என்னை யதார்த்தத்திற்கு இறக்கிவிட்டு, அது ஓடிவிட்டது. சுபாஷிணி! பயப்பட ஏதுமில்லை. ஏற்கெனவே உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதால், ஹார்மோனின் ஏற்ற இறக்கங்கள் தாம். ஏற்கனவே எடுக்கும் எல்ட்ராக்ஸினுடன் ஒரு மாத்திரை எழுதியிருக்கிறேன். 3 மாதம் எடுத்துக்கொண்டுவிட்டு, வாருங்கள். கலவரப்பட வேண்டாம் என்றார் டாக்டர்.

அப்பாடா நிம்மதி! இல்லாவிட்டால் என் இயக்கத்தைத் தடுத்துவிடுமே என்ற கவலை எனக்கு. அதற்குத்தான் நான் பயந்தேன். இச்செய்தி, என் மகள்கள், என் உடன்பிறப்புகள், என் நண்பர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.

இதனால் அநாவசியமான கவலைகள், நம் சேமிப்பில் கணிசமாய்க் குறையும் தொகை, அல்லது கணிசமாய்க் கடனாளியாக்கும் செயல், எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றி விட்டது.

‘‘அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும்தானே சுபா” என்ற வண்ணதாசனின் வரிகள், என்னை அதன் பாதுகாப்பு வளையத்தில் வைத்தும் பத்திரப்படுத்திக் கொண்டது.

============================================

படங்களுக்கு நன்றி – http://vannathasan.wordpress.com, http://actorprithviraj.blogspot.com,

http://nanjilnadan.wordpress.com, http://www.tamilveli.com, http://www.jeyamohan.in/

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “அன்பென்னும் பாதுகாப்பு வளையத்தில்…

  1. எனன ஒரு ஆற்றொழுக்கான நடை ,
    பாராட்டுகள்
    அன்பு ஒரு பாதுகாப்பு வளையம் மட்டுமா ?
    அதுவே உலகை இயக்கும் விசை !
    அன்புடன்
    சுகுமாரன்

  2. உங்கள் உடல்நலத்திற்குக் கீழ்க் கண்ட வழிமுறைகளைக் கையாண்டு உடல் நலத்துடன் என்றும் ஆற்றல் மிகுந்த உற்சாகமாய் இருக்க சில தர்மநெறிகள்.

    – இரவினில் 9 மணிக்கு தூங்கிவிடுங்கள்.
    – அதிகாலையில் 5 மணிக்கு துயிலெழவும்
    – முதல் வேலையாக 1 லிட்டர் குடி தண்ணீரைக் குடிக்கவும்
    – சிறு நடைபயிற்சி / பிரணாயாமம்.
    – நீர்க்காய்கறிகள்(சுரைக்காய், பீர்க்கங்காய்,புடலங்காய் மாதிரி) எது கிடைக்கின்றதோ அது, தக்காளி, காரட் + பீட்ரூட் துருவல்கள் தலா 1 ஸ்பூன். (நீரிழிவு நோயாளிகள் கூட பயப்படாமல் சேர்த்துக்கொள்ளவும்), கருவேப்பிலை இலை, கொத்தமல்லி இலை, முள்ளங்கித் துருவல் 1 ஸ்பூன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறினை ஒரு தம்பளரில் வடித்து காஃபி குடிப்பது போல் மெதுவாக உமிழ்நீருடன் கலந்து குடிக்கவும்
    – குளியல்
    – காலை சிற்றுண்டி முளைகட்டிய தானியம் ஏதாவது.
    – காலை சிற்றுண்டி முடிந்த 2 மணி நேரம் கலந்து நீர் அருந்தவும். மதிய உணவிற்கு 1 மணிநேரம் முன்பு வரை கொஞ்சம் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொள்ளவும் தேவைக்கேற்ப. காஃபி, டீக்கு, பால், ஹார்லிக்ஸ், மற்றெல்லாவற்றிற்கும் மிகப்பெரிய தடா விதியுங்கள்.
    – மதிய உணவு.
    சமையல் முறையில் MOSS Free (Masala / Milk products, Oil, Sugar, Salt) கடைபிடிக்கவும். தினமும் மதிய உணவு கீரை இருக்கவேண்டும். அரிசிச் சாதம் எவ்வளவு சாப்பிடுவீர்களோ அதே மாதிரி கீரையை சாப்பிடுங்கள். இனிமேல் சாதத்திற்கு பதில் 2 புல்கா ரொட்டி (உப்பு, எண்ணெய் இல்லாமல் செய்யவும்).
    – 2 மணிநேரம் கழித்து நீர் அருந்தவும்.
    – மாலையில் ஏதாவது ஒரு பழம். சர்க்கரை நோய் இருப்பின் அதற்கேற்றாற் போல் ஏதாவது ஒன்றினைத் தெரிவு செய்யலாம். உதாரணம் கொய்யா, வெள்ளரி.
    – மாலையில் தவம் செய்யுங்கள்
    – 7 மணிக்கெல்லாம் இரவு உணவினை முடித்துக் கொள்ளவும்
    இரவு உணவு:

    ஏதாவது கிடைக்கும் பழங்களில் ஒன்றினை எடுத்துக்கொள்ளுங்கள். 1/2 கிலோ ஒரே ரக பழங்களை உண்டுவிட்டு இரவு 9 மணிக்குத் தூங்கிவிடுங்கள்.

    சர்க்கரை நோயாளிகள் சாலட் + புல்கா ரொட்டி தேவைக்கேற்ப.
    சாலட்டிற்குப் பதிலாக Green Vegetablesஐ MOSS Free முறையில் சமைத்து உண்ணவும்.

    தினமும் உங்கள் காலடியால் 10,250 காலடிகளால் உங்கள் நடைபயணம் இருக்கட்டும். (இது காலையிலிருந்து இரவு படுக்கும் வரை நீங்கள் காலடி எடுத்து வைக்கும் மொத்த எண்ணிக்கை). தனியாக நடைபயிற்சித் தேவையில்லை.

    இனி வாழ்நாளில் எப்பொழுது எவரொருவரும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகள், உடல் பருமன் என எந்த ஒரு நோய் நொடியும் இன்றி 100 வயது வரை ஆரோக்கியமாய் வாழலாம்.

    முடிந்தால் வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை உடற்பயிற்சி + காயகல்பம் கற்றுக்கொள்ளலாமே…!

    அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்.

  3. பசுமையான இனிய நினைவுகளுள் பயணித்து இருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அவரது அன்பென்னும் பாதுகாப்பு வளையத்திற்குள் வளைய வந்த எனக்கு அவரது எழுத்தில் இருக்கும் உண்மை மனோபலத்தை அளிக்கின்றது, உள்ளத்திற்கு வலிமை சேர்த்திருக்கின்றது. அன்பிற்கு முன்னர் ஆய்வும் முனைவர் பட்டமும் ஒப்பாகாது. இதனை ஆசிரியர் உணர்ந்து கொண்டால் நலம். அப்போது அன்பென்னும் பாதுகாப்பு வளையத்தின் பிடி இன்னும் இறுகும். இந்தத் தொடர் யாருக்குப் புரிகிறதோ இல்லையோ ஏன் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பது ஆசிரியருக்குப் புரியும். அவரது எழுத்துலகப் பயணம் இனிதே தொடர எனது வாழ்த்துக்கள்!

  4. u joined the list of writers sujatha, jnani, who wrote their heart ailment experiences.
    as your vanna dasan wrote
    vaalndhu enna seiya pogirom
    seththu tholaikkalaam

    seththu enna seyya pogiraom
    vaalndhu tholaikkalam

    nee seekkiram saaga maatae subha
    i am searching your adhiyaman with nellikkani.

  5. //அன்பை தன் எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் வண்ணதாசனிடமிருந்துதான்// இதை விட வண்ணதாசனைப் பற்றி சிறப்பாகச் சொல்லிவிட முடியாது…ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது பக்கத்தில் இருந்தது போல இருந்தது. சுபாஷிணி உங்களின் கள்ளமில்லாத அன்புப் பிரவாகத்தில் நனைந்த மகள்களுள் நானும் ஒருத்தி என்று பெருமிதப் படுகிறேன். //

    //‘‘அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும்தானே சுபா” என்ற வண்ணதாசனின் வரிகள், என்னை அதன் பாதுகாப்பு வளையத்தில் வைத்தும் பத்திரப்படுத்திக் கொண்டது.// மிக மிக அருமையான வரிகள்…ஆழமான கட்டுரை. பகிர்தலுக்கு நன்றி சுபா

  6. இந்தக் கட்டுரையை உங்களுக்கு அனுப்புவதற்காக தேடப் போனதில், உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்து திரும்பிச் செல்கிறேன் உமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.