கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

காமாட்சி பாட்டிக்குத் துக்கமாக இருந்தது. நெஞ்சில் அறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும் போன பின்னால், பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய் இப்படியாவது ஏன் வாழணும்? செத்துப் போனால்தான் என்ன? ஆனா அதுக்கும்கூட திட்டமிடவோ, சமயோசிதமாய்க் காரியம் சாதிக்கவோ துப்பு இல்லை. புத்தியும் இல்லை.

இத்தனைக்கும் பாட்டி ஒன்றும் மலடி இல்லை. கல்யாணமாகி 10 வருஷங்களுக்குப் பின்னால் கருத்தரித்து, ஆசை ஆசையாய்ப் பிள்ளை பெற்று, பாடான பாடெல்லாம் பட்டு, வளர்த்தி ஆளாக்கிய [சாண் பிள்ளையானாலும், ஆண்பிள்ளை என்று சொல்லிக்கொள்ள] தடித் தடியாய் இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் தான். ஆனால் பாட்டியைப் பார்த்துக் கொள்ளத்தான் யாருக்குமே பொறுமை இல்லை. இத்தனைக்கும் அவர்களொன்றும் அப்படி கொடுமைக்காரப் பிள்ளைகளும் அல்ல. எல்லாமே கிரகாச்சாரம் தான், வேறென்ன சொல்ல?

பாட்டிக்கும் வயசென்ன கொஞ்ச சொச்சமா? அது ஆச்சு எழுபது கிட்டே. எழுபது வயசுக்குத் தள்ளாமை ஒரு புறம், மறதி ஒரு புறம் என, ரொம்பவே தான் ஆட்டிப் படைத்தது. என்ன சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்துவிடும். மீண்டும் ‘அடியைப் பிடிடா, பாரதப் பட்டா’ என்று, கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுத் துளைக்கும்போது யாருக்குத்தான் எரிச்சல் வராது? பெரிய மகன் சுந்தரம் வீட்டில் இதுதான் பெரிய பிரச்சினை.

குளித்து, ரெடியாயிரு, என்று மகன் சொல்லிவிட்டுப் போவான். பாட்டி தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் கசங்கிய புடவையும், கழுவாத மூஞ்சியுமாய் உட்கார்ந்திருப்பாள். எப்ப சொன்னே? என்ன சொன்னே? என்று கேள்வி கேட்பாள். பாட்டிக்குத்தான் மறதியாச்சே?

அரக்கப் பரக்கப் பாட்டியை ரெடியாக்கி, ”பாலி கிளினிக்’குக்கு அழைத்துப் போனால், அனுமார் வால்போல் நீண்ட கியூ தான் வரவேற்கும்? காத்துக் காத்துக் கடுப்பேறி, கார்டு கிட்டி, மருத்துவரைப் பார்த்து, மருந்து வாங்கி, அலுத்துக் களைத்து வீடு திரும்புவதற்குள், புக்கித் தீமாவிலுள்ள திருக்குன்றம் முருகன் சாமியிலிருந்து, கட்டின பெண்டாட்டியின் மூஞ்சி வரை, ”சே” என்று வெறுத்துப் போயிருக்கும் சுந்தரத்துக்கு.

அன்றைக்குப் பார்த்து பிள்ளைகள் ஏதாவது அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டால் போச்சு. அடி வெளுத்து வாங்கிவிடுவான். சுந்தரத்தின்  கோபம் கண்டு புருஷனிடம் கிட்டே நெருங்கவே மனைவி நடுங்குவாள்.

இதாவது தேவலை, காலையில் வேலைக்குப் போகும்போதே, யார் வந்து தட்டினாலும், கதவைத் திறக்கக் கூடாது, என்று படித்துப் படித்து மருமகள் சொல்லிவிட்டுப் போவாள். ஆனால் பாட்டிக்கு வாசலில் மணிச் சத்தம் கேட்டுவிடக் கூடாது. டபால், என்று கதவைத் திறந்துவிடுவாள். தெரிந்த அரைகுறை மலாயில் நின்று கதை பேசுவார். ஒருநேரம் போல இருக்குமா? என்று மருமகளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று.

இதுவும் கூட பரவாயில்லை.. இரவில் முழிப்பு வந்தவுடனேயே முட்டிக்கொண்டு வந்துவிடும் பாட்டிக்கு. உடனே போகாவிட்டால் படுக்கை நனைந்துவிடும். ஒருமுறை அப்படித்தான் வயிறு நிறைந்துபோய், அவசரம் அவசரமாய் எழுந்த பாட்டி, சடாரென்று போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்துவிட்டாள்.

எந்தச் சீமான் எந்தப் பட்டணம் போனாலும், அதிகாலையிலேயே முழித்துக்கொள்ளும் பாட்டிக்கு, அன்றைக்குப் பார்த்து நல்ல தூக்கம். பொழுது நன்றாக விடிந்தும் கூட வெளியில் ஏதோ சத்தம் கேட்டுத்தான் எழவே முடிந்தது. பார்த்தால் மருமகள் ‘காச் மூச்,’ என்று கத்திக்கொண்டிருந்தாள். என்னடா சேதி ? என்று பேரனிடம் கேட்க, அவன் தரதரவென்று பாட்டியின் கையை இழுத்துக்கொண்டு போய், பாத்ரூமுக்கு முன்னால் தான் நிறுத்தினான். பாத்ரூம் வாசலில் தேங்கியும் சிதறியும் கிடந்த சிறுநீரின் வீச்சத்தில் குமட்டிக்கொண்டு வந்தது. இது என்ன கண்றாவி? என்று ஒரு வினாடி பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.

”வீடே நாறிப் போச்சே? இதுகூடவா உறைக்கலை? என்று மருமகள் நாக்கைப் பிடுங்கறாப்பில கேட்டப்ப தான், விஷயமே புரிந்தது. வயிறு முட்டிய அவசரத்தில், இருட்டில் பாத்ரூம் என்று நினைத்து, பாத்ரூம் வாசலில், வெளியிலேயே மூத்திரத்தைப் பெய்து விட்டு வந்திருக்கிறாள் பாட்டி. நிதர்சனம் உறைத்தபோது, அப்படியே அவமானத்தில் குன்றிப் போனாள். இப்படிப் பண்ணிப்புட்டோமே, என்று தலைகுனிந்து நின்றபோது அழுகையே வந்துவிட்டது.

ஆனால் பாட்டியின் துக்கமெல்லாம், மருமகள் அந்த ஆட்டம் போட்டாளே, பெரிய மகன் சுந்தரம் அப்போது வீட்டில் தானே இருந்தான். ஒரு வார்த்தை அந்தத் தடிச்சியைப் பார்த்து, ”தா, வாயை மூடு, என்ன இருந்தாலும் அவுங்க எங்கம்மாதானே?” என்று ஒரு அதட்டல் கூட போடலையே. பிறகு, ”நான் செஞ்சது மட்டும் தப்புதான், என்னை மன்னிச்சுடுங்க,” என்று மன்னிப்பு கேட்க, பாட்டிக்கு மட்டும் என்ன தலையில்  வண்டா ஓடுகிறது?

மறுநாளே இரண்டாவது மகன் ராஜு வீட்டுக்கு வந்துவிட்டாள். ராஜு, கப்பல் பட்டறையில் இரும்பு உருக்கும் பணியாளன். சிரம தசைதான், என்றாலும் அவன் மனைவியும் பேக்டரியில் வேலை செய்து வந்ததால். இரண்டு பிள்ளைகளை வளர்க்க, எப்படியோ குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் காமாட்சிப் பாட்டியின் இங்கிதமற்ற பல செயல்களால் அவனும் கஷ்டப்படத் தொடங்கியபோதுதான், அவனாலுமே எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தாலும் பாட்டிக்கு சன் டி.வி, சீரியலை பார்த்தே ஆகவேண்டும்.

சாப்பிடும்போது அப்படித்தான், ”ஏதோ நாத்தமடிக்குதே’, என்று  சின்னப் பேரன் சொல்ல, பெரிய பேரன், ”டேய், பாட்டி, இன்னைக்குக் குளிக்கவே இல்லையே?” என்று போட்டுடைப்பான். அப்பொழுதுதான் நேற்றிலிருந்தே குளிக்கவே இல்லை என்பதே பாட்டிக்கு ஞாபகம் வரும். ஆனால் எப்படி ஒத்துக்கொள்வது? பிறகு மருமகள் முன்னால் நம்ம கெளரதை என்னாவது?

என்றாலும் பேரன் மேல் அப்படிக் கோபம் வரும். மகனாவது அந்தப் பயல் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கணும். எங்கே? புருஷனும் பெண்சாதியும் தான் அமுக்காய் அப்பால் போய்விட்டார்களே? அதைத்தான் பாட்டியால் தாங்க முடியவில்லை.

குளிப்பது மட்டுமல்ல. பாட்டிக்கு மருந்து குடிப்பதிலும் சிக்கல்தான். மருந்து குடித்தோமா, இல்லையா என்பதே மறந்துபோய்… இரண்டு முறை ஒரே மருந்தைக் குடித்துவிட்டு, நாளெல்லாம் தலை சுற்றிப்போய் மயக்கமாய்ப் படுத்துக் கிடப்பாள். சில சமயங்களில் சாப்பிடவே பிடிக்காது. ஆனால் சில நாட்களில் அகோரமாய்ப் பசிக்கும். சாப்பிட்டுவிட்டு அந்தண்டை போவதற்குள் அப்படி பசிக்கும். சத்தமிடாமல், கீழே போய் ஹாக்கர் செண்டரில் மீகோரேங் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார். வீடு திரும்பி வந்தால், வாசல் கதவு ‘வெட்டி மல்லாத்தியாய்” திறந்து கிடக்கும்.

போகும் வேகத்தில் வீட்டைப் பூட்டக்கூட பாட்டி மறந்து போயிருக்கிறாள். நல்லவேளை, அதற்குள் யாருமே வீடு திரும்பியிருக்கவில்லை. அதனால் பாட்டி அன்று பிழைத்தாள். என்றாலும் தன்னுடைய ஞாபக மறதி எங்கே கொண்டு போய் விடுமோ என்ற பயத்தில், சதா கிலிதான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பாட்டியும் பிள்ளைகளும் ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். மகனும் மருமகளும் அறைக்குள் தூங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பாட்டிக்கு இருமல் வந்துவிட்டது. விடாமல் இருமல் படுத்த, நெஞ்சில் விக்ஸ் போட்டுத் தேய்க்கணும் போலிருந்தது. விக்ஸ் பாட்டில் மகன் ரூமில் தானே இருக்கிறது என்பது ஞாபகம் வர, சடாரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் விட்டார். ஒரு கணம் கண்கள் ஏன் குருடாகிப் போகவில்லை என்று அப்படியே கூசிப் போய்விட்டது.

பதறிக்கொண்டு பெட்ஷீட்டுக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டான் மகன். அலங்கோலத்தோடேயே, பாய்ந்து சென்று பாத்ரூமுக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள் மருமகள். ”கதவைக்கூட சாத்தாமல் அப்படி என்னடி அலட்சியம்,” என்று மகன் ராஜு, மனைவியைப் போட்டு ஓங்கி அறைய, நெருப்பாய் உமிழும் சினத்தோடே, வெளியே வந்த மருமகளின் முகத்தில், பாட்டியால் விழிக்கவே முடியவில்லை.

பிறகுதான், முதியோர்களுக்கான இந்த ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் வீட்டுக்குப் பாட்டி குடி புகுந்தாள். பாட்டியின் புருஷன் நாச்சிமுத்து விட்டுப் போன பணம் போதவில்லைதான். என்றாலும் மகன்கள் ராஜு, சுந்தரம் இருவரும் கடனை உடனை வாங்கி, காசை எப்படியோ புரட்டி, முதியோர்களுக்கான இந்த வீட்டில் பாட்டியைக் குடிவைத்த அன்றுதான், பாட்டிக்கும் மகன்களுக்கும் அப்பாடா என்றிருந்தது. மருமகள்களும் சும்மா சொல்லக் கூடாது. தங்கள் பங்குக்கு, வீட்டுச் சாமான் வாங்கிப் போடவும், மற்றபடி, கையைக் கடித்த மற்ற செலவுகளுக்கும், தங்கள் நகைகளைக்கூட பாசாக் கடையில் அடகு வைத்து, காசு கொடுத்து உதவிய தாராளத்தில், காமாட்சிப் பாட்டிக்கு, பழசெல்லாம் மறந்துபோய், மனசு அப்படியே ‘குள்ளக் குளிர’ குளுந்துபோச்சு.

இப்படியாக, பெரிய தலைவலியிலிருந்து தப்பித்த நிம்மதியில் மகன்களும், இனியாவது சுதந்திரமாக மூச்சு விட முடிந்த சந்தோஷத்தில், பாட்டிக்கும் பெரிய ஆஸுவாசம் தான்.

முதல் ரெண்டு மாசத்துக்கு, பொழுதன்னிக்கும் டி.வி. பார்ப்பதுதான் வேலை. முடிந்தால் சமைப்பது. இல்லையென்றால் புளோக்கின் கீழேயே, உள்ள ஹாக்கர் செண்டரில் போய் சாப்பிட்டுவிட்டு ஆடி அசைந்து வீட்டுக்கு வந்து படுத்தால், பாட்டிக்குச் சுகமாய்த் தூக்கம் வந்தது. நினைத்தால் குளிப்பது. இல்லையென்றாலும், அப்படியே குளிக்க மறந்து போனாலும் யார் கேட்பது? பாட்டியின் வீடு அது. பாட்டியின் இஷ்டம் தானே? ராஜா மெச்சியதே ரம்பா என்பதுபோல், பாட்டி வைததுதானே சட்டம்.

சனிக்கிழமை வந்தால் பெரிய மகன் சுந்தரம், பசார் செலவு வாங்கிப் போட்டு, தேவையானால் கரண்டு பில்லும் கட்டி விட்டுப் போவான். சின்ன மகன் ராஜு வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமையானால் கோழியோ, மீனோ சமைத்துக்கொண்டு வந்து கொடுத்து, கையில் பத்தோ, இருபதோ கொடுத்து விட்டுப் போவார்கள். சதா பாட்டிக்குச் சிரிப்பு வந்தது, சின்னச் சின்ன வடிவேலு ஜோக்குக்கெல்லாம்கூட பாட்டி விழுந்து விழுந்து சிரித்தாள்.

பார்க்கிறவங்களிடமெல்லாம் வலியப் போய்ப் பேசி, விஷயம் விசாரித்தாள். அக்கம் பக்கத்திலும் கூட எல்லாருமே சீனர்களாயிருந்ததால் அவர்களிடமும், தனக்குத் தெரிந்த ஓட்டை மலாயில் பேசப் போனாள். எல்லாமே முதல் ரெண்டு மாசத்துக்கு ரொம்ப நல்லாதான் இருந்துச்சி.
ஆனால் மூணு, நாலு மாசத்துக்கு அப்புறம், பாட்டிக்கு லேசாக இந்த வாழ்க்கையிலும் அலுப்பு தட்டத் தொடங்கியது. நாள்முச்சூடும் எவ்வளவு நேரம்தான் டி.வி. பாக்கறது? பூட்டிய வீட்டுக்குள் சதா ஒண்டியாய், பேசக்கூட ஒரு நாதியில்லாமல், தானே வளைய வருவது, வர வர, பாட்டிக்கே, அலுப்பும் வெறுப்புமாய் மண்டிக்கொண்டு வந்தது.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் காலைப் பொழுதில், வீட்டு வாசலில் வந்து நின்றாள் பாக்கியம். தஞ்சாவூர்ப் பொண்ணு. ”தங்க ஒரு இடம் வேணும் பாட்டி. நான் இதோ, இப்படி ஹாலில் கூட படுத்துக்கறேன், உங்களுக்கு ஒரு தொந்தரவும் கொடுக்க மாட்டேன் பாட்டி,” என்று ரொம்ப பணிவாய்க் கேட்டபோதே பாக்கியத்தைப் பாட்டிக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.

‘வெளியிலே ரொம்ப வாடகை கேட்கறாங்க பாட்டி, என்னாலெ கொடுக்கக் கட்டுப்படியாகலை” என்று பாக்கியமே தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, பாவமாய் இருந்தது. ஆனால் பாட்டியின் கையில் டிப்போசிட் 150உம், வாடகைப் பணம் 150உமாக, 300 வெள்ளியைக் கொடுத்து விட்டாள் பாக்கியம்.

பாக்கியம் வந்த பிறகு வீடே சுத்தமாகிப் போனது. வீடுகூட்டி, அவ்வப்போது, நேரமிருந்தால் பாட்டிக்கு, எளிமையாக ஏதாவது சமைத்துக் கொடுப்பது, ராத்திரி படுக்கப் போகுமுன், நீலீ பெருங்காலித் தைலத்தை, கால் கெண்டை விரலில், மெத்து மெத்தென்று உருவிவிடுவது, என பாக்கியம் ரொம்பவே அனுசரனையாய் இருந்ததில், பாட்டி, ஒரு சுற்றுப் பெருத்துக்கூட விட்டார். முதியோர்களுக்கான வீடு என்பதால், ஆக இருந்த ஒரே அறைக்குள், பாட்டி கட்டிலிலும், பாக்கியம் கீழேயும் படுத்துக்கொண்டனர். பாட்டிக்கு மீண்டும் வாழ்க்கையில் வசந்தம் துளிர்த்தது.

அன்று காலை 11 மணிக்கு, வாசல் கதவு தட்டப்படும் ஓசை மிக விரோதமாகக் கேட்க, கதவைத் திறந்தால், பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். அதிர்ச்சி. வாசலில் போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். ஆனால் பக்கத்தில் குனிந்த தலையுடன் , கையில் விலங்குடன் பாக்கியமும் நின்றுகொண்டிருந்தாள்.
”ஏன்? என்னாச்சும்மா பாக்கியம்? கொஞ்சம் முந்தி தானே வேலைக்குப் போனே?’? என்னாச்சு? கையிலே என்னா இது?” என்று பாட்டி கேட்டு முடிக்குமுன், போலீஸ்காரர்கள் ஏதேதோ ஆங்கிலத்தில் கேட்க, பாக்கியம் பாட்டியைச் சுட்டிக் காட்டினாள். ஏதோ தலையாட்டினாள்.

அவ்வளவுதான், நின்று நிதானிக்குமுன், அடுத்த கணமே, பாட்டியையும் தள்ளிக்கொண்டு,போய், போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன பாட்டிக்கு அவர்கள் பேசிய ஆங்கிலம் புரியவே இல்லை.  விக்கித்துப்போய் ”அய்யா, அய்யா” என்று அழத் தொடங்கினாள்.

இந்தியாவிலிருந்து வந்த கள்ளக் குடியேறியான பாக்கியம், சட்டத்துக்குப் புறம்பாகச் சிங்கப்பூரிலேயே தங்கிக்கொண்டு, கிடைத்த, “அல்லற, சில்லறை” வேலையைச் செய்துகொண்டு, தங்கியிருந்த கதையோ, காமாட்சிப் பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தபோது கூட, உண்மையைச் சொல்லாமல், அப்பாவிப் பாட்டியை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து மாட்டிவிட்ட கதையோ, எதுவுமே பாட்டிக்கு தெரியாது.

கள்ளக் குடியேறிக்கு மட்டுமல்ல, அவர்களை வாடகைக்கு வைத்த வீட்டு உரிமையாளருக்கும் கூட, இந்தக் குற்றத்துக்கு [சிங்கப்பூரில்] குறைந்தது ஆறுமாத தண்டனையாவது நிச்சயம் என்பதும்கூட பாட்டிக்குத் தெரியாதுதான்.

பதறிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்த மகன்களைப் பார்த்ததும் பாட்டி கதறிவிட்டாள்.

”எய்யா! எய்யா! சுந்தரம்! ராஜு! என்னிய ஏன் போலீஸு பிடிச்சுக்கிட்டு வந்திருக்கு? நானாச்சும் பரவாயில்லை. வயசானவ. ஆனா பாக்கியம் வயசுப் பொண்ணாச்சே? அதையும் பிடிச்சுக்கிட்டு வந்திருக்காங்களே? என்ன கோராமை இது? இதைக் கேட்பாரே இல்லையா? அந்தப் பிள்ளை பாக்கியத்தையும் போயிப் பாத்து ரெண்டு வார்த்த ஆறுதலாப் பேசுங்கய்யா?”

தேம்பித் தேம்பி அழும் காமாட்சிப் பாட்டியைப் பார்த்து, சின்னப் பேரனுக்குத்தான் அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

[முற்றும்]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “முகடுகள்

 1. சேச்சி, நீங்களா எழுதினீங்க ?
  மலயாளக் கலப்பே இல்லியே,
  கதை அருமை, முதியோர் பாடு இன்றைய சூழலில் கஷ்டம்தான்

  தேவ்

 2. அன்பின் தேவ்,
  3 முதிர் பெண்மணிகளை பேட்டி கண்டு, அவர்கள் தமிழை அப்படியே
  பதிவு செய்துள்ளேன்.விரைவில் வானொலிக்கு நாடகமாக எழுத உள்ளேன்.
  பாராட்டுக்கு நன்றி
  சேச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *