அஜித் நடிக்கும் 50ஆவது படம் ‘மங்காத்தா’

0

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50ஆவது படத்திற்கு ‘மங்காத்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப்படம், வாரணம் ஆயிரம், பையா, நான் மகான் அல்ல ஆகிய படங்களைத் தொடர்ந்து, கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தைச் சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அஜித்குமார் தமிழ் சினிமாவுக்குள் வந்த நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடிப் பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’ படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஸ்வரி  திரையரங்கின் படப்பிடிப்புத் தளத்தில் பூஜையுடன்  தியேட்டர்களில் திரையிடப்படும்  முன்னோட்டக் காட்சிக்கான படப்பிடிப்புடன் ஆரம்பமானது.

படத்தைப் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது…

அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தைத் தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50ஆவது படமான ‘மங்காத்தா’ படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம். முதல் நாளான இன்று தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற்காகவே அஜித்குமார் தோன்றி நடிக்கும் காட்சிகள் இந்தப் படத்தின் டிரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. மிக விரைவில் ரசிகர்கள் இந்தப் படத்தின் முன்னோட்டத்தினைத் திரையரங்கில் காணலாம்.

‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனாக இருக்கும் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். படத்தின் எண்பது சதவீத காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

இம்மாத இறுதியில் இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற 2011இல் ரசிகர்களுக்குக் கோடை விருந்தாக இந்தப் படம் வெளிவர உள்ளது என்றார்.

முன்னதாக, படத்தின் தொடக்க விழாவில் கிளவுட் நைன்  மூவீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விவேக் ரத்னவேல், கங்கை அமரன், எஸ்.பி.பி. சரண், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பார்கள் ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம் சண்முகம் உட்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

ஒளிப்பதிவு: சக்திசரவணன், படத்தொகுப்பு: பிரவீன்,
இசை: யுவன் ஷங்கர் ராஜா, சண்டைப் பயிற்சி: செல்வா,
கலை: விதேஷ்,
நிர்வாகத் தயாரிப்பு: கே.சுந்தர்ராஜ்,
தலைமைநிர்வாகி: சுஷாந்த் பிரசாத்,
தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இந்த விவரங்களை இந்தப் படத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் சுரேஷ் சந்திரா, வி.கே.சுந்தர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.