தமிழ் சினிமாவின் புதிய சண்டைக் காட்சி
ஆர்.கே. வேர்ல்ட்ஸ் தயாரிப்பில் நட்சத்திர இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் ஆர்.கே. நடிக்கும் ‘புலி வேஷம்’ படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
சண்டைக் காட்சிகள் இதுவரை ரெஸ்டாரண்டில், பாழடைந்த குடோன்களில் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் முதல் முறையாக மரத்தில் மரத்தை விட்டு இறங்காமலேயே எதிரிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகள் அதிக சிரமம் எடுத்துப் படமாக்கப்பட்டுள்ளன.
அதாவது காட்சிப்படி கதாநாயகியை அழைத்துக்கொண்டு கதாநாயகன் சென்னை வரும் போது, தங்க இடமில்லாமல் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகியைத் தங்க வைக்கிறான். அவள் மீது பாசம் அதிகம் கொண்ட கதாநாயகன் அவளின் உறக்கத்திற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவன். வில்லன் அடியாட்கள் கொடுக்கும் தொந்தரவை மரத்திலிருந்து இறங்காமலேயே முழுக்க, பெரிய மரக் கிளைகளில் தாவித் தாவி அவள் விழிக்கா வண்ணம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
‘புலி வேஷம்’ படத்துக்காக இக்காட்சிகள் படமாக்கப்பட அமைப்புள்ள ஒரு மரத்தை மகாபலிபுரம் அருகே கண்டுபிடித்து அதில் ஐந்து நாட்கள் படமாக்கப்பட்டது. புதிய வகை கேமராவான “ஸ்கார்பியோ’ ‘கேமரா இதற்குப் பயன்படுத்தப்பட்டது. சண்டைக் காட்சிகளை மாஸ்டர் இராஜசேகர் அமைத்தார்.
இது குறித்து சண்டைப் பயிற்சி இயக்குநர் ராஜசேகர் கூறும்பொழுது இயக்குநர் வாசு, இப்படியொரு காட்சியைச் சொன்னபோது உண்மையிலேயே இது சண்டைக் காட்சிகளில் நிச்சயம் புதியதொரு அமைப்பு என்று பட்டது. ஆனால் படமாக்குவது சண்டைக் கலைஞர்களுக்கு ரிஸ்க்தான். சாதாரணத் தரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம். மரத்தில் சண்டை போடும் பொழுது நினைத்தபடி துள்ளிக் குதிக்கவோ, அடிபட்டு விழுவதோ, கிளைகளில் சிக்கி, பலமாகக் காயம்பட நேரிடும். ஆனாலும் ரிஸ்க் எடுத்துப் படமாக்கினோம். 25 சண்டைக் கலைஞர்கள் இதில் பயன்படுத்தப்பட்டனர். நடிகர் ஆர்.கே. ஐந்து நாட்களில் அதிக நேரம் மரத்திலேயே இருந்தார். ரிஸ்க் எடுத்துச் சிறப்பாகச் செய்தார். இந்தக் காட்சி நிச்சயம் பேசப்படும் என்றார்.
‘புலி வேஷம்” படத்தின் கதாநாயகனாக ஆர்.கே. நடிக்க, நாயகிகளாக சதா, திவ்யா விஸ்வநாத் (அறிமுகம்) நடிக்கின்றனர். மிக வலிமையான காவல் துறை அதிகாரியாகக் கார்த்திக் நடிக்கிறார். மன்சூரலிகான், கஞ்சா கருப்பு, எம்.எஸ். பாஸ்கர், ஆசிஷ் வித்யார்த்தி, இளவரசு, மயில்சாமி, மனோபாலா, ஒ.ஏ.கே. சுந்தர் என நட்சத்திரப் பட்டாளத்தின் பங்களிப்புடன் ‘புலி வேஷம்’ தயாராகி வருகிறது.
இந்த விவரங்களை இந்தப் படத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் தெரிவித்துள்ளார்.