‘அப்பச்சி’ முப்பது / காமராசருக்கு ஒரு வெண்பா மாலை
துரை.ந.உ.
ஒரு சிறு அறிமுகம்
பொறியாளர் / நிறுவனர் : விசி எஞ்சினியரிங் ப்ராஜெக்ட்ஸ் , கட்டுமான நிறுவனம் ,
ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன . வடக்கு மாவட்டங்கள் தவிர பரவலாக கட்டுமானவேலைகள் செய்துகொண்டு இருக்கிறேன் .
மாதத்தில் 15 நாட்கள் வேலைசம்பந்தமாக சுற்றுப்பயணத்தில் இருப்பேன்.
வயது :41
மனைவி : சாந்தி துரை,
குழந்தைகள் : உமா பாரதி , கார்த்திக் காந்தி ,
கூட்டுக் குடும்பமாக அம்மாவின் தலைமையில் , தம்பி , தங்கை குடும்பங்களுடன்
தூத்துக்குடியில் இருக்கிறோம்.
தமிழ் ஆர்வம் : கடந்த 2 ஆண்டுகளாக …இணையத் தொடர்புக்குப் பின்னரே தமிழுடன் அறிமுகம் எனக்கு….அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆசை ….
குறளுக்கு விளக்கமாக எளிமையாய் புதல்வாசிப்பிலேயே புரிந்துகொள்ளும் வகையில் வெண்பா இலக்கனத்தில் விளக்கக் குறள்கள் அமைத்துள்ளேன் ….
எதையும் கொஞ்சம் மாற்றி யோசிக்கவாவது முயல்வேன் 🙂
காமராசருக்கு ஒரு வெண்பா மாலை :
-அப்பச்சி முப்பது –
காமராசர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இன்னிசை வெண்பாவில் எளிமையாகத் தர முயன்றிருக்கிறேன் .
பெரியார் வைக்கும் பெயர் :
பிறந்த குழந்தைக்கு நல்லபெயர் சூட்ட
பெரியார்தாம் கேட்டிடுவார் ரூபாய் இரண்டு;
சரியாய்க் கிடைத்தால் சிரித்தபடி வைப்பார்
சிறந்தபெயர் ’காமராஜ்’ என்று. (01)
கதர் ஆடை :
பட்டாடைக் கட்டிப் பகட்டாய் பவனிவரும்
பட்டணத்து மாந்தர் பரிவாரம் மத்தியில்
காந்தியம் காத்துக் கதராடை போற்றிடும்
காந்தியின் பக்தர் அவர். (02)
1934ல் ’விருது’ :
விருதுநகர் கூட்டத்தில் காந்தியைத்தாம் பெற்ற
விருதினைப்போல் தோளின்மேல் தூக்கி உயர்த்தினார்;
காந்தியின் கொள்கையையும் தோளின்மேல் தாங்கினார்;
காந்தியத்தின் செல்வம் அவர். (03)
ஆகட்டும் பார்க்கலாம் :
ஆண்டவனே வந்திறங்கி ஆவன செய்யுமா(று)
ஆணவத்தால் தேவையை ஆவணம் செய்யுமா(று)
ஆணையிட்டுக் கேட்டால் அமைதியாய்ச் சொல்வாராம்
‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று. (04)
இந்தியா வந்த அமெரிக்க அதிபரின் ஆசை :
’நம்மஊர் அண்ணாவை அங்கே மதிக்காத
நிக்சன் விரும்புகிறார் என்றாலும் இங்கேநான்
சந்திக்க மாட்டேன்னேன்’ என்று மறுத்துரைத்த
சிங்கத் தலைவர் அவர். (05)
பெரும்தலைவர் :
நாமாகச் சென்றடையும் பட்டத்தைக் காட்டிலும்
தானாக வந்தடையும் பட்டங்கள் வாழும்;
பெரும்தலைவர் என்றால் பிறந்த குழந்தை
அறியும் அதுஅவர்தான் என்று. (06)
அதிசய நிகழ்வு :
குடியாத்தம் சட்டமன்றத் தேர்தல் களத்தில்
பெரும்தலைவர் போட்டியின்றி வெல்லக் கிடைத்த
எதிரணியின் ஆதரவு எப்போதும் இன்றும்
அரசியலில் வாய்த்திடா(த) ஒன்று. (07)
முதல்வராம் இவர் :
அரசமைத்து அற்புத ஆட்சிசெய்தார்; ஆனால்
அரசாங்க வாகனத்தில் ஏறியது இல்லையாம்;
சொந்தமென மக்களெல்லாம் போற்றும் அவருக்குச்
சொந்தமாம் வாடகை வீடு. (08)
எட்டாம் அதிசயம் :
கையில் கடிகாரம் கட்டவில்லை; பித்தெனப்
பையில் பணமெதையும் வைத்ததில்லை; சொத்தென
எங்கும் தனெக்கெனச் சேர்த்ததில்லை; ஆம்;அவருக்கு
வங்கியிலும் இல்லை கணக்கு. (09)
கல்விக்குப் பொற்காலம் :
கல்விநிதி சேர்த்தளித்தார்; பள்ளிகளைக் கூட்டி
இலவசச் சீருடை யோடு மதிய
உணவளிக்கும் திட்டம் கொடுத்தார்; தமிழகத்திற்(கு)
உண்மையில் பொற்காலம் அது. (10)
தொடரும்…..
அருமை துரை சார், வாங்க வாங்க.