வெண்ணிலவில் ஒரு கருமுகில் (14)

1

பவள சங்கரி திருநாவுக்கரசு

காலம் என்பது சில நேரங்களில் மின்னல் வேகத்திலும்,பல நேரங்களில் ஆமை வேகத்திலும் கடந்து செல்வது அவரவர் மன நிலையைப் பொறுத்ததுதானே! மனது உற்சாகமாக இருக்கும் வேளையில் நேரம் துள்ளிக் கொண்டு தன்னையறியாமலேயே சென்று விடும் ஆனால் குழப்பமும், சலிப்பும் இருக்கும் நேரத்தில் நேரம் எப்படி விரைவாக கடக்கும்? அப்படித்தான் மாறனுக்கும் ஒவ்வொரு நொடி போவதும் ஒரு யுகம் போவது போல பாரமாக இருந்தது. சில விசயங்கள் கற்பனையைவிட நேரில் சந்திப்பது மிகக் கடினம்.ஆம், மாறன் இப்போது இருப்பதும் அதே நிலைதான்! இது போன்று ஒரு சூழல் வராதா, என்று ஏங்கிய காலம் போய் இன்று அவந்திகாவை நேரில் சந்திக்கும் அந்தக் கணத்தைத் தவிர்க்கவே அவன் உள்ளம் விழைந்தது. தன் மனசாட்சியிடமிருந்து தான் தப்பிக்க வேண்டிய கட்டாய சூழலில் அல்லவா இருக்கிறான். சுயநலம் என்ற ஒன்றின் அடிப்படையில் நடத்தும் வாழ்க்கை அமைதியை கொடுக்காதே.இருந்தாலும் இது கூட ஒரு கோழைத்தனமான செயலாகப்பட்டது அவனுக்கு.

ரம்யா அவனை பார்த்த பார்வையில், அவனுக்கு விளங்கியது தன்னுடைய முகத்தின் போக்கு எப்படி இருக்கின்றது என்பது..அவனை மேலிருந்து கீழாக அவள் பார்த்த பார்வையின் பொருளும் விளங்கியது .முதன் முதலில் தன் மனதிற்குப் பிடித்த ஒரு பெண்ணை பார்க்க வரும்போது இப்படி ஒரு அழுக்கு சட்டையும் பழைய ஜீன்சும், கலைந்த தலையும், என்று அககரையில்லாத ஒரு ஒப்பனையுடன் வந்தது கூட அவனுடைய மன நிலையையும் வெட்ட வெளிச்சமாக்கியது. தன்னையறியாமல் த்லை தாழவும் செய்தது.விமானம் வந்து இறங்கி விட்டது என்ற அறிவிப்பும் வந்து மணித்துளிகளும் கடந்து உடைமைகளை பெற்றுக் கொண்டு, வெளியே வந்தாள். நாய்க்குட்டியைப் போல ஒரு, சக்கரம் வைத்த கைப்பையை இழுத்துக் கொண்டு, சாவதானமாக  வந்து கொண்டிருந்தாள்.

மாறனின் கண்கள் தன்னையறியாமல் இமைகளும், இதயமும் ஒருசேரத் துடிக்க அவள் வரவை எதிர் நோக்கியிருந்தது…..தனக்குப் பிடித்த இளம் மேக வண்ண ஆடை அணிந்து வர வேண்டுமே என்ற எண்ணமும் தோன்ற, அடுத்த வினாடி, தானே தனக்குள் ‘என்ன அபத்தமான நினைவு இது’ என்று நொந்து கொண்டு, திரும்ப நினைத்தவன், அதே இளம் மேக வண்ணத்தில் சுடிதார் அணிந்து, அழகுப்பதுமையென அமைதியாய் நடந்து வரும் அவந்திகாவைப் பார்த்தவுடன் ஆச்சரியம் அவனுக்கு!

அவந்திகாவைப் பார்த்தவுடன், அவள் தான் அவந்திகா என்று கண்டு கொள்வதில் பெரும் சிரமம் இருக்கவில்லை அவர்களுக்கு.காரணம் நம் தென் தமிழர்களுக்கே உரிய அந்த தனிப்பட்ட முக அமைப்பு.லேசான ஒரு நாணம். நடையில் ஒரு தயக்கம்……இப்படி பல. இரு கைகளையும் பரவலாக விரித்து அவளை அணைத்து வரவேற்றாள் ரம்யா. மாறனைப் பார்த்த அவந்திகாவின் கண்களில் லேசான ஒரு மின்னல் தோன்றினாலும்,மேலும் குழப்பம் தான்…மாறன் அந்த ‘மாறன்’ஆக இருக்குமோ? எப்படி கேட்பது? போகப் போக தானே தெரிந்துவிடப் போகிறது அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும் என்று லேசாக ஒரு புன் முறுவலை உதிர்த்து வைத்தாள்.

” போகலாமா, அவந்திகா, உங்கள் பயணம் எப்படி இருந்தது?” என்று ரம்யா கேட்டுக் கொண்டே நடக்க மாறனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான. .

வழிப்பயணத்தில் ரம்யாவின் பல வினாக்களுக்கு அவந்திகாவின் பதில் ஒற்றை வார்த்தையில், தன்னைப் பற்றிய அறிமுக வார்த்தையாகவே இருந்தது. மிக அதிகம் பேசும் வழக்கம் இல்லாதவள் போல நடந்து கொண்டாள்.

”என்ன, அவந்திகா,பேசவே மாட்டீர்களா….வார்த்தையை அளந்து கொடுக்கிறீர்கள். எப்பவுமே இப்படித்தானோ, இல்லை என்னைப் பார்த்தவுடன் பயந்து விட்டீர்களோ”

“ரம்யா ஆரம்பிச்சிட்டியா…..உன் ரேகிங்கை..பாவம் விடு பயந்துடப் போறாங்க”

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையான அக்கரையும், பரிவும் தன்னையுமறியாமல் மாறனை திரும்பிப் பார்க்கச் செய்தது, அவந்திகாவிற்கு!

சொகுசு உந்து சுகமாக மிதந்து கொண்டிருந்தது போல அவரவர் மனதும் அவரவர் கற்பனை உலகின் வழியே பயணித்துக் கொண்டிருந்தது போலும்!

காற்றின் மொழி………. இசையா ஒலியா?
பூவின் மொழி ……….நிறமா மணமா?

காற்று வீசும் போது திசைகள் தெரிவதில்லை!
காதல் வீசும் போது மொழிகள் தெரிவதில்லை!

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

குறுந்தகடின் வழியாக மென்மையாக வருடிச் சென்ற அந்த இனிய கீதத்தின் இனிமையில் மௌனம் பல கதைகள் பேசிக் கொண்டிருந்தன.

ரம்யாவின் வீடு நெருங்கும் போது,”உங்கள் ஏரியா மிக அழகாக இருக்கிறது. இங்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது’? என்றாள் அவந்திகா.

மெல்லிய அந்தக் குரலின் ஓசையில் மாறனின் மௌனமும் சற்றே கரைய, அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.அவந்திகாவின் ஓவியங்களின் பேக்கிங் சற்று கவனமாக எடுத்து வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் மாறனின் உதவி அவளுக்கு மகிழ்ச்சியளித்தது.ஏனோ அவன் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் படிந்திருப்பதை அவளால் உணரவும் முடிந்தது. அதற்குள் உரிமை எடுத்து காரணம் கேட்க இயலாமல் ஒதுங்கி நின்றாள். மதிய உணவு ரம்யாவின் கலகலப்பான அரட்டையுடன் இனிதே முடிந்தது.

மனதிற்குள் இருக்கும் அத்துனை சோகத்தையும் முகமூடி கொண்டு மறைக்கும் சாலம் அவளுக்கு மட்டுமே கைவந்த கலை.இதில் அவளை வெற்றி கொள்ள இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என்பது மாறனின் எண்ணம்.

அன்று ஞாயிற்றுக் கிழமையென்பதால் அனு காலையிலேயே, தன் மாமாவிற்கு தேவையான பழங்கள் , அவர் விரும்பி வாசிக்கும் ரமணிசந்திரன் மற்றும் லட்சுமியின் நாவல்கள் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.

அனுவைப் பார்த்தவுடன் அவர்கள் இருவர் முகத்திலும் பகலவனைக் கண்ட அல்லியைப் போன்றதொரு மலர்ச்சி! இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து இன்னொரு அன்பான சீவன், அதுவும் தங்கள் மகனின் இல்லத்தரசியாக வரப் போகிறவள் என்ற மகிழ்ச்சி வேறு. தங்களுக்கு வாழ்க்கையில் ஆண்டவனின் ஆசிகள் முழுமையாக கிடைத்து விட்டது என்ற மன நிம்மதி என்று இப்படி அனைத்தும் சேர்ந்து அவர்கள் மனதில் நிலையானதொரு அமைதியை வழங்கியிருந்தது.

”வாம்மா, அனு என்ன இவ்வளவு காலையிலேயே வந்திருக்கே, விடுமுறை நாள் சற்று நேரம் கூட தூங்கி நன்னா ரெஸ்ட் எடுக்கலாமோன்னோ, ஏன் இப்படி அடிச்சி பிடிச்சிண்டு ஓடி வரே”

“இல்லை மாமி, அம்மா எங்கே தூங்க விட்றா, இன்னைக்கு உங்களை அங்கே அழைச்சுண்டு வரச் சொன்னா. அங்கே வந்து உங்களை சாப்பிடலாம், இங்கே சமைக்க வேண்டாம்னு சொல்லச் சொன்னா, இன்னைக்கு அப்பாவிற்கு பிறந்த நாள். அதனாலே நாம் எல்லாமா சேர்ந்து அட்ட லட்சுமி கோவிலுக்குச் சென்று வரலாம்னு சொல்லச் சொன்னா…உங்களுக்கு இப்ப போன் பண்றேன்னு சொன்னாங்க. நீங்க சமைச்சுடப் போறேள்னுதான் நான் சீக்கிரமா ஓடி வந்தேன் மாமி”

அவளுடைய அன்பான இந்த கட்டளைக்கு மறுப்பேதும் அவர்களால் சொல்ல இயலவில்லை.அதனாலேயே அமைதியாக இருவரும் கிளம்பத் தயாரானார்கள். அது மட்டுமில்லாமல் மாறன் அனுவின் திருமணாம் குறித்தும் பேச வேண்டும் என்றும் இருவரும் முன்பே முடிவு செய்து வைத்திருந்ததால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர்.ராமச்சந்திரன் பூசை அறையில் அமர்ந்து அமைதியாக, எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கும் போதே, அவர் சகோதரியும் தொலைபேசியில் அழைக்க,எல்லோரும் கிளம்பினார்கள்.

விட்டைவிட்டு கிளம்ப நினைத்து அனைத்து  வேலைகளையும் முடித்து மங்களமும் கிளம்பியாகி விட்டது. வீட்டைப் பூட்டப் போனவர்களை,அடுத்த வீட்டிலிருந்து ‘அய்யோ’ எனற  பெருங் கூச்சல் அப்படியே நிறுத்தி வைத்தது.. பக்கத்து வீட்டில் ஒரு வயதான பாட்டி ரொம்ப நாட்களாகப் படுத்துக் கொண்டிருந்தது. அவருக்குத்தான் ஏதாவது ஆகியிருக்கும் என்று எண்ணி ராமச்சந்திரன்  சென்று பார்த்தார்.அந்தப் பாட்டிதான் சிவலோகம் சென்றிருந்தார்.உடனே கிளம்பினால் நன்றாக இருக்காது என்று கிளம்புவதை தள்ளிப் போட்டார்கள். ராமச்சந்திரனுக்கு இது சற்று அப சகுனமாகப் பட்டது. திருமணப் பேச்சு எடுக்கும் போது இப்படி ஆனது…..கொஞ்ச நாட்கள் தள்ளிப் போடலாம் என்ற கட்டாயமும் வந்தது.

தொடரும்.

null

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் (14)

  1. விறு விறுப்பான நடை; இயல்பாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *