இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
பவள சங்கரி
ஒவ்வொரு நாளும் பொழுது புலரும் போது, ’ இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று நினைக்கத் தொடங்கினாலே ஒரு உற்சாகமும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் உடனே வந்துவிடும் அல்லவா.
மனித நாகரீகத்தின் வரலாற்றை படித்து பதிவு செய்யும் பொருட்டு தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த உலகின் மிகப் பெரிய சரித்திர ஆசிரியர்களுள் ஒருவர் அவர். அவரிடம் சென்று, ’வரலாற்று சம்பவங்களை நீங்கள் படித்ததிலிருந்து அறிந்து கொண்ட முக்கிய விசயம் என்ன ’ என்று வினவிய போது அவர்,
“ மிகவும் இருண்டு விடுகின்ற போது நட்சத்திரங்கள் வெளிவருகின்றன”, என்று கூறினாராம்! எவ்வ்ளவு உற்சாகம் அளிக்கக் கூடிய வாசகங்கள் இவை!சற்றே சிந்தித்துப் பாருங்கள்.இந்த வாசகத்தை ஆழ் மனதில் போட்டு வைத்தால் நம்முடைய இருண்ட காலங்களில் கட்டாயம் நமக்கும் இந்த வாசகம் பெரிய பலமளிக்கக் கூடும்.
இதற்கான ஆதாரங்கள் நம் கண் முன்னே எண்ணற்றவை இருக்கின்றன.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கான பாதைகளை ஒளியூட்டிய ஒரு மகத்தான மனிதர் ஆப்பிரகாம் லிங்கன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்கக் கொடியின் நீலப்பகுதியில் இன்றும் மின்னிக் கொண்டிருக்கின்ற அந்த வாசகங்களான,
“ஒரே தேகம், பிரிக்க முடியாதது, சுதந்திரமும், நீதியும் அனைவருக்கும் கிடைக்கும் படியாக” என்பது லிங்கனுடையவை.ஆனால் இத்தகைய பெரும் வரலாற்று நாயகனுக்கும் ஒரு இருண்ட பகுதி வாழ்க்கையில் இருந்துள்ளது. ஆம், அவர் பல முறை மனம் தொடர்பான நோய்களுக்கு ஆளானவர் என்றும், அவருடைய நெருங்கிய உறவினர் கூட அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லுகிற அளவிற்கு அவர் மன நோய் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று டாக்டர் கார்ல் மெனிங்கர் என்ற உலகப்புகழ் பெற்ற மனவியல் நிபுணர், தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து , அனைவரும் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் மணமகனான அவர் மட்டும் வரவில்லையாம். அவரைக் காணாமல் தேடி அலைந்த போது, மிகவும் மனச் சோர்வுற்ற நிலையில் எங்கோ ஓர் இடத்தில் தனிமையில் இருந்தாராம்!.பல நேரங்களில் சம்பந்தமில்லாத வாக்கியங்களை பேசிக் கொண்டிருப்பாராம், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூடச் சொல்வாராம். ஆனாலும் அப்படிப்பட்ட லிங்கனின் இருண்ட வாழ்க்கையிலும் நட்சத்திரங்கள் தோன்றத்தான் செய்தன.அந்த நட்சத்திரங்கள் பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் இருக்கத்தான் செய்தன.
வாழ்க்கைப் பாதையைத தேர்ந்தெடுப்பது என்பதும் அவரவர் கையில் தான் உள்ளது.மகாத்மா காந்தியடிகள் அவர்கள் முதன் முதலில் ஒரு வழக்கு நடத்துவதற்காக தென் ஆப்ப்ரிக்கா சென்ற போது அவர் புகை வண்டியில் நிற பேதம் காரணமாக உயர் வகுப்பில் பயணம் செய்ய தடை செய்யப் பட்டார். அன்று அவர் நிற வெறிக்கு எதிராக போரிட ஆரம்பித்தார். தனக்காக எதையும் சிந்திக்காமல், தன்னலமற்ற பொது நோக்கோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தார். தண்டி யாத்திரை மூலம் உப்பு சத்தியாகிரகம் செய்து, வெள்ளையனே வெளியேறு, என்ற பேரியக்கத்தையும் நடத்தினார். அவருக்குப் பின் புலமாக பல தியாகச் செம்மல்கள் அணி வகுத்தனர்.அந்தப் போராட்டத்தில் பொது நலம் மட்டுமே மையமாக இருந்தது.சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத போராட்டமாகவே அது இருந்தது.
சில நாட்களுக்கு முன் திரு அன்னா ஹசாரே அவர்கள் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றும் பொருட்டு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட போது ஒவ்வொரு இந்தியரும் அதில் பங்கு கொள்ள விரும்பியதோடு, பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அதனை உறுதியும் செய்தனர். ஆனால் திரும்பவும் விரைவில் உண்ணாவிரதம் என்று அறிவித்திருக்கும் இந்நிலையில் மக்களின் மன மாற்றம் குறித்து சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!
படங்களுக்கு நன்றி.
இந்த மாதிரியான கட்டுரைகளை கை கொட்டி வரவேற்கவேண்டும். சான்றோர்களின் மனோதிடம் தான் நமக்கு டானிக். அமெரிக்காவில் அவருடைய ஊரிலிருக்கும் நினைவிடம் (அந்த சின்ன ஊர் முழுதுமே) நன்றாக பராமரிக்கப்படுகிறது. மெய்மறந்து அவரை நினைத்து வணங்குகிறோம். உலகெங்கும், அவருக்கு என்றும் உள்ள மரியாதைக்கு ஒரு உதாரணம். அவருடைய மேற்கோள்களை சுவடி போன்ற பார்ச்மெண்டில் இருப்பதை,அங்குள்ள அஞ்சலகத்திலிருந்து என் இங்கிலாந்து டாக்டருக்கு பரிசாக அனுப்பியிருந்தேன். வந்து பார்த்தால், தன் அறையில் சட்டம்போட்டு மாட்டி வைத்திருந்தார்.கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. சான்றோருக்கு என்றுமே, எங்குமே, தரணி முழுதும் சிறப்பு.