— சு.கோதண்டராமன்

அரவிந்தர் எழுதிய வேதத்தின் ரகசியம்

அரவிந்தர், வேதத்தின் ரகசியம் என்ற நூலில் வேதம் முழுவதும் மனவியல் குறியீடுகளைக் கொண்டது என்று சொல்லி அதற்கேற்ப சில மந்திரங்களை மொழி பெயர்த்துக் காட்டினார். அக்னி என்பது ஞான சக்தி, தெய்விகமான அறிவுத் துணிவு (illuminated divine will). இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி (pure illuminated intelligence). பசு என்பது ஞான ஒளி என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார். அவரது சீடர்கள் அவர் வழி நின்று ரிக் வேதம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். ஓரிரு மந்திரங்களில் அவரது குறியீடுகள் பொருத்தமாக உள்ளன என்பது உண்மை என்றாலும் எல்லா இடங்களிலும் அக் குறியீடுகள் பொருந்த வில்லை. மேலும் ஞான சக்தி, விஞ்ஞான சக்தி என்பவை பாமரர்களுக்குப் புரிவதில்லை.

சொற்களுக்குப் பொருள் காண்பதில் அபிதா (நேர்ப் பொருள்), லக்ஷணா (உருவகப் பொருள்) என இரு வகை உண்டு. ஒரு உதாரணம் பார்ப்போம்.

எங்கள் வீட்டு நாய் குரைப்பதே இல்லை. யாரேனும் வந்தால் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும். இந்த வாக்கியத்தில் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்த அந்த நாலு கால் பிராணியைத் தான் குறிக்கும். இது அபிதா-நேர்ப்பொருள்.

ஐயா, நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன். என்றும் உங்கள் காலடியில் நாயாக இருப்பேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு நேர்ப் பொருள் பொருந்தாது. இங்கு அதற்கு நன்றி உடையவன் என்பது பொருள். இது லக்ஷணா எனப்படும்.

லக்ஷணாவில் ஒரு சொல்லுக்கு ஒரு உருவகப் பொருள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்.

ஊரைச் சுற்றி வெள்ளம். வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நூறு பேர் ஒரு மேடான இடத்தில் கூடி நின்றனர். எல்லோருக்கும் பசி. உணவுக்கு வழி இல்லை. அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் வந்தது. இருபது உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவு தான். மனிதர்கள் நாய்கள் ஆயினர். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு தந்நலமே பெரிதாகக் கருதிச் சண்டை போடுபவர் என்று பொருள்.

வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய்விட்டார்கள். நான் தான் இங்கு நாயாக காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு காவல் காப்பவர் என்று பொருள்.

வேலை தேடி நாயாக அலைகிறான். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்குப் பயனின்றி அலைபவர் என்பது பொருள்.

இப்படி வேதத்திலும் ஒரு சொல்லுக்குப் பல உருவகப் பொருள்கள் உள்ளன. அரவிந்தரின் சீடர்களின் உரை இந்த வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும், அபிதாவாக வரும் இடங்களில் கூட, ஒரே உருவகப் பொருளைக் கூறுகிறது.

பசு என்பதற்கு ஒளிக் கிரணம் என்பது ஒரு உருவகப் பொருள். இந்த அரசன் எனக்கு 100 பசுக்களைக் கொடுத்தான் என்று வரும் இடத்தில் 100 ஒளிக் கிரணங்களைக் கொடுத்தான் என்று பொருள் சொல்வது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும்.

மேலும், லக்ஷணாவில் சொல்லுக்கும் உருவகப் பொருளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். அரவிந்தர் பசுவை ஞான ஒளி என்றும், நெய்யை அறிவுத் தெளிவு என்றும் பொருள் கொள்கிறார். எப்படித் தொடர்பு படுத்துகிறார் என்பது விளக்கப்படவில்லை.

******** ************************************ ******************************** *********

VedicAstrology

வேத மொழியோ வழக்கிழந்தது. இலக்கணமும் மாறுபடுகிறது. இடைச் செருகல்களும் பல உள்ளன. மந்திரங்களில் பல விடை தெரியாத புதிர்களாக உள்ளன. நமக்குக் கிடைக்கும் பழமையான ஒரே உரையோ ஒரு சார்பு உடையது. பிற்கால உரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. இவ்வாறு, வேதத்திற்குப் பொருள் பார்க்க முனையும் போது சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. இத்தனை காலம் இத்தனை பேர் முயன்று பார்த்து இயலாத காரியம் என்று கை விட்டு மூலத்தை மட்டும் அதன் ஒலி வடிவில் காப்பாற்றி வந்தால் போதும் என்று முடிவு கட்டி விட்ட நிலையில் பாமரன் மட்டும் என்ன சாதிக்க முடியும்?

எல்லா உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான் பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு, அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான் பாமரன்.

வேதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரதானமானதாக இருக்கும், மிகுதியாகப் பயன்படுத்தப்படும். சில இடங்களில் பொருள் மாறுபடும். பிரதானமான பொருளை விட்டு ஓரிடத்தில் சிறப்பான பொருள் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வழக்கமான பொருள் இந்த இடத்தில் பொருந்துமா? பொருந்தாது என்றால் வேறு எந்தப் பொருள் பொருந்தும்? அந்தப் புதுப் பொருளைப் பயன்படுத்த வேதத்தில் முன் உதாரணங்கள் உண்டா? என்பனவற்றை ஆராய வேண்டும். வேதச் சொல்லின் பல விதமான பொருள்கள் கூடியவரை வேதத்திலேயே தேடப்பட வேண்டும். பிற்கால நூல்களில் வழங்கும் பொருளை வேதத்தில் நுழைப்பது தவறு. இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான வழிமுறையே இந்நூலில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, அசுரர் என்ற சொல்லுக்குப் பல வகையான பொருள்கள் சாயணரால் தரப்பட்டுள்ளன. அவற்றில் வலிமையானவர் என்ற பொருள் பிரதானமானதாக இருக்கிறது. சாயணர் சில இடங்களில் ராட்சசர் என்றும் யாகங்களை அழிப்பவர் என்றும், சில இடங்களில் நேர் மாறாக, அசுரர்களை அழிப்பவர் என்றும் பொருள் கூறுகிறார். அந்த இடங்களிலும் வலிமையானவர் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் போது புதிய பொருள் காண அவசியமே இல்லை. தேவை இல்லாமல் யாகச் சார்பு திணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அசுரர் பற்றி எழுதப்பட்டுள்ள அத்தியாயத்தில் இதைக் காணலாம்.

இதுவரையில் நாம் பார்த்தது முன்னுரை தான். இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியம் தானா?

வேதத்தின் பேரளவையும், அதைப் படிப்பதில் உள்ள சங்கடங்களையும் எடுத்துக் காட்டி, இத்தனைக்கும் நடுவில், ஒருவன் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது மிக மிகச் சொற்பமானது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு வேதத்தில் இருப்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டக் கூடாது என்பதற்குத் தான் இவ்வளவு நீண்ட முன்னுரை அவசியமாயிற்று. வேதத்தில் என்ன இருக்கிறது என்ற விவரம் இனி வர இருக்கிறது. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்வோம்.

படம் உதவி: www.hinduhistory.info – http://www.skjainastro.com/VedicAstrology.JPG

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *