நாடு அதை நாடு….
கவிஞர் காவிரி மைந்தன்
காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு வேட்டையில் நாட்டம்! அன்று தொடங்கிய நாட்டம் வேட்டையில் மட்டும்! நாட்டில் வாழும் மனிதர்களுக்கோ ஆயிரம் நாட்டங்கள்! அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடுதல் தேவையே!
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நமக்கெனப் பொதுவான நாட்டம் இருக்க வேண்டும்!
சுதந்திர வேட்கை உருவானதும் அப்படித்தான்! மொழியின்மீது நாட்டம்.. தாய்மொழியென்றும் தமிழ்வழியென்றும் நாடுதலும் இஃதே!
நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பென்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே உணர்வில்.. உரத்த குரலில் எழுந்து நின்றால்.. பகை திசைமறந்து ஓடும்! எங்கெல்லாம் ஒரு இனம் நசுக்கப்படுகிறதோ.. அங்கெல்லாம் இப்பாடல் தலைமை தாங்கும்!
வீரம், பண்பாடு, நெறிகள் என அனைத்திலும் தழைத்திடும் நம் பாரத தேசம் – அதன் மாண்புகள் இவையணைத்தையும் ஒற்றைப்பாடலில் கவியரசர் வரைந்துள்ளார் பாருங்கள்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அற்புத விளைச்சல்!
டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா குரல்களில் நாடோடி படப்பாடல்!
”நாடு அதை நாடு”
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”
பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
திரைப்பாடல் என்பது எப்படி மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்கு இலக்கணமாய் இப்பாடலை வையுங்கள்! ஏதோ எழுதுபவர்களை சற்றே வையுங்கள்! ஒதுக்கி வையுங்கள்!!