வல்லமை – சிந்தனை , செயல் , முன்னேற்றம் – தலையங்கம்

2

பவள சங்கரி

இயற்கை அன்னையின் இதய வாசல்!
வாழ்வே தவம். அன்றாட வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஆழ்ந்து, அதன் ஊடே ஒன்றி இருந்து செய்தலே ஒரு தவம் இல்லையா. அந்த வகையில் நம் தோட்டத்தில் வாடிக்கையாக குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் பணிகள் நம் ஆரோக்கியத்தைக் காக்கக் கூடிய ஒரு அரு மருந்து!

தோட்டப் பராமரிப்பு என்பது உணர்வுப் பூர்வமான ஒரு அனுபவம். ஆம் இளையவரோ, முதியவரோ, ஆணோ, பெண்ணோ அவர் யாராக இருப்பினும் தோட்டக் கலை என்பது ஒரு ஆழ் நிலை தியானம் எனலாம். நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய ஒரு செயல். பசுந்தளிர்களின் மென்மையான தொடு உணர்வு, மெல்லிய நறுமணம் மற்றும் ஒரு பாச உணர்வு இவையெல்லாம் ஒரு அமைதியான உலகிற்கு இட்டுச் செல்லும் என்பதும் நிதர்சனம்.இயற்கையோடு உறவாடி, ஓர் உயிரை உருவாக்கும் இன்பம் ஒரு தவம்தானே.

தோட்டக்கலை வைத்திய  முறை என்பது 1873 ஆம் ஆண்டிலேயே மன நோய்களைக் குணப்படுத்தக் கூடிய ஒரு உபாயமாகவே பின்பற்றப் பட்டிருப்பது, அக்காலத்தில் ஆஸ்திரேலிய நாட்டின், சிட்னி மாநகரத்தில் கேலன் பார்க் என்ற மாபெரும் மணற்கற்களாலான புகலிடம் ஒன்று கட்டப்பட்டிருந்ததே அதற்கான ஆதாரம்.நோயாளிகள் அங்கு தோட்டங்களைப் பராமரிப்பதும்,மாட்டின் மடியில் பால் கறப்பதும் ஒரு வைத்திய முறையாகவே தொடர்ந்திருக்கிறார்கள். இடையில் மருத்துவ முறைகள் நவீனமான காலக்கட்டத்தில் இந்தப் பழமையான முறைகள் மறைந்தாலும், இன்று திரும்பவும் இந்த தோட்டக்கலை வைத்திய முறை  திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதும் ஆறுதலான விசயம்.

சில காலம் முன்பு ஒரு அதிர்ச்சியான அனுபவம் காரணமாக பேசும் திறனை இழந்த ஒரு மனிதர் , ராயல் டாஸ்மேனியன் பொட்டானிகல் கார்டன் [Royal Tasmaniyan Botanical Gardens] எனும் தோட்டத்தில் ஒரு செடிக்கான விதைகள் அளிக்கப்பட்டார்.அடுத்த முறை அவர் அந்த தோட்டத்திற்குச் சென்ற போது அந்த விதை அழகாக முளை விட்டு பசுந்தளிராக வெளி வந்திருப்பதைக் கண்டவரின் முகத்தில் பூரிப்பு! அது மட்டுமல்ல அவர் தன்னால் பேச முடியாது என்பதையும் மறந்து ‘ கடவுளே, அந்த விதை முளைத்து விட்டது’ என்று உற்சாகமாகக் கூவியுள்ளார் என்ற இந்த சம்பவத்தை பீட்டர் குண்டால் என்ற ஒரு தொலைக்காட்சி பிரபலம் நினைவு கூறுகிறார்.

ஆம், தோட்டத்தில் ஓர் விதையை முளைக்கப் போடும் போது ஒரு இன்பமான எதிர்பார்ப்பும், அது முளைவிடும் போது ஏற்படுகிற ஒரு பரவசமும் தியானத்திற்கு ஒப்பான ஒரு நிகழ்வு மட்டுமல்லாமல் ஒரு நோய் தீர்க்கும் வைத்திய முறையாவதிலும் ஆச்சரியமில்லையே! இன்று நம் கிராமங்களில் பல முதியவர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை தோடத்தில் ஓயாது உழைப்பதைக் காணலாம். தங்கள் என்பது வயதுகளில் கூட தன்னால் இயன்ற வேலையைச் செய்து கொண்டு மருத்துவமனை பக்கமே செல்ல வேண்டிய தேவை ஏற்படாமலே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

சற்றே கற்பனை செய்து பாருங்களேன். நம் தோட்டத்தில் பயிர் செய்யப்பட்ட காய் கனிகளை பூச்சி மருந்து அடிக்காமல் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டவைகளை சமையல் செய்யப் போகும் நேரத்தில் போய் பசுமையாக பறித்து வந்து சமைக்கும் போது அதன் சுவையும்,, நம் தோடத்தில் முளைத்தது என்ற இன்ப உணர்வும் எத்தகைய மன நிறைவை ஏற்படுத்தக் கூடியது என்பதை!

ADHD [hyperactivity] என்கிற மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கூட இது ஒரு நல்ல வைத்திய முறையாம். அது மட்டுமன்றி தோட்டக்கலை ஒரு மென்மையான உடற்பயிற்சி முறை என்கிறார்கள் வல்லுநர்கள். இயற்கையோடு கைகோர்த்து உறவாடி பணி புரியும் அந்த உன்னத அனுபவம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லையே.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனச் சரகங்களில் ஒன்றரை இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்க, வனத்துறை தயராகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பட்டா நிலம் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக சில்வர் ஓக் மற்றும் தேக்கு ஆகிய இரண்டு வகை மரக்கன்றுகளையும் வழங்குகிறது. ஐந்தாண்டுகளில் பலன் தரக்கூடிய வகையைச் சேர்ந்தவைகள் இவை. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் சிட்டா அடங்கலை வனத்துறையினரிடம் காண்பித்தால் ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்படும். ஒரு நபருக்கு அதிகபட்சமாக, 500 மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்றுகளை உரிய முறையில் பாதுகாப்புடன் வளர்த்து வர வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வனத்துறையினர் மரம் வளர்க்கும் இடத்தை தணிக்கை செய்ய வருவர். மரங்களை சரியான முறையில் வளர்த்திருந்தால், அவர்களுக்கு மரத்துக்கான பராமரிப்பு செலவை, வனத்துறை வழங்கும். கரும்பு தின்ன கூலி கிடைக்கிற நற்செய்தி அல்லவா?

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வல்லமை – சிந்தனை , செயல் , முன்னேற்றம் – தலையங்கம்

  1. அசத்தலான , அருமையான தலையங்கம்
    கேட்டிராத புதிய செய்திகளைத் தாங்கி ,இயற்கையின் முக்கியத்துவத்தை ,மகத்துவத்தை ,தாவரங்கள் வளர்ப்பதின் விஞ்ஞான அனுபவங்களை பகிர்ந்த பவள ஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் , நன்றியும்

    என்றும் அன்புடன்
    சா.கி.நடராஜன்.
    கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.com/
    குழுமம் : தமிழ் சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal

    ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
    அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

  2. அருமையான விழிப்புணர்வைத் தரக்கூடிய கட்டுரை

    அடிக்கடி மரம் நடுவது எக்ஸ்னோரா மூலமாக எங்களுக்கு பழக்கம்

    இயற்கையிலேயே மரம் செடி கொடிகளைக் கண்டு மனம் மகிழ்பவன் நான்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.