என் பார்வையில் கண்ணதாசன்
–கவிஞர்.கொழப்பலூர் ம. பாபு.
என் பார்வையில் கண்ணதாசன்!!!
கவிஞன் என்பவன் காலக்கண்ணாடியாக இருந்து சமுதாயத்தின் கூறுகளை தன் கவிதைகளில் பிரதிபலித்து மக்களை நல்வழிப்படுத்தக் கூடியவனாக இருக்க வேண்டும். சிறந்த ரசிகனே உயர்ந்த கவிஞனாக முடியும். அந்த வகையில் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் உயர்ந்த கலைஞராக, இயற்கையை நேசிக்கும் வித்தகராக, தத்துவவாதியாக, பகுத்தறிவு வாதியாக, ஆன்மீகவாதியாக, சிறந்த கவிஞராக, மக்கள் மனம் அறிந்த பாடலாசிரியராக விளங்கி தன் திரைப்படப் பாடல்கள் மூலம் அன்பு, பாசம், காதல் ஆகியவற்றையும் தனிப் பாடல்களின் மூலம் சமூக அக்கறை, உலகில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் எழுதினார்.
கட்டுரைகள், புதினங்கள், கதைகள் வாயிலாக சமூக விழிப்புணர்வையும் ஊட்டினார். மேலும் குறுங்காப்பியங்கள், அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியன இவரது உயர்ந்த எழுத்தாற்றலை உலகிற்கு அடையாளம் காட்டும் பொக்கிசங்கள் எனில் இது மிகையில்லை. இவர் எழுதிய சுமார் ஐயாயிரம் திரைப்படப்பாடல்கள் மனித மன வெளிப்பாடாகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு துணையாகவும் இருந்தன என்பதே உண்மை. ஆகவே அவர் ஒரு உயர்ந்த கவிஞராகத் திகழ்ந்தார், திகழ்கிறார், திகழ்வார்.
இவரைப்பற்றி மூத்த தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இரங்கற்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம், கரம்நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ, நிலையில்லா மனம் உனக்கு! நிலைபெற்ற புகழ் உனக்கு! இந்த அதிசயத்தை விளைவிக்க – உன்பால், இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்! என்று சிறப்பித்துக் கூறுவதிலிருந்து இவரது எழுத்தாற்றல் விளங்கும்.
தாய்மையைப்பற்றி கவிஞர் :-
“பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால்தரும் கருணை அது – பிறர்,
பசித்த முகம் பார்த்து பதறும் நிலை பார்த்து,
பழம் தரும் சோலை அது
இருக்கும் பிடிசோறு தனக்கென்று எண்ணாமல்,
கொடுக்கின்ற கோயில் அது – தினம்
துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடந்தந்து,
அணைக்கின்ற தெய்வம் அது!”
என்று பாடி தாய்மையை தெய்வத்திற்குச் சமமாக்குகின்றார்.
பெண்கல்வி பற்றி :-
“பூவாடை வீசபுதுமலர்போலே,
புறப்படு பள்ளிக்கு மகளே! – உன்,
பாவாடையோடு பழகிய தமிழில்,
“பா”வாடை வீசட்டும் மலரே”
என்று பெண்கல்வியின் அவசியம் கூறுகிறார்.
மக்கள் தொகை பெருக்கம் பற்றி :-
“இருக்கிற நிலையில் பிறக்கிற பிள்ளைக்கு,
நிற்கவும் இடமில்லை என்றும்,
அடுக்கடுக்காகப்பிள்ளை பெறுபவர்,
எந்நாளும் கோமாளி”
என்றும் கவிதை பாடி மனிதனை சிந்திக்கச் சொல்கிறார்.
வாழ்க்கையை எதிர்கொள்ள துணிவு வேண்டும். இதையே கவிஞர் அழகாக,
“வாழ்வை யறிந்தவன் சம்சாரி,
வாழப் பயந்தவன் சந்நியாசி,
கண்ணீர் வடிப்பவன் மூடனடா,
காலத்தை வென்றவன் வீரனடா!
நல்லின்பத்தைத் தேடி உறவாடு,
நீ எழுந்திடு மனிதா விளையாடு!”
என்று பாடி கோழையாக வாழ்வதையும், பிரச்சினை கண்டு கலங்குவதையும் அழகாக சாடுகிறார்.
கவிஞரின் கடவுள் கொள்ளை :-
“கடலுக்குள் பிரிவுமில்லை, கடவுளில் பேதமில்லை என்றும்
கருணை பொங்கும் உள்ளம் – அது கடவுள் வாழும் இல்லம்”
என்றும் சமுதாய அன்பை, ஒற்றுமையை வலியுறுத்திப்பாடுகிறார். மேலும்
“இராமன் என்பது கங்கைநதி,
அல்லா என்பது சிந்துநதி,
ஏசு என்பது பொன்னிநதி,
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்,
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்”
என்றும் பாடி மத வேறுபாடுகளை கலையும் மனங்களை சுமக்க மனிதர்களை அழைக்கிறார்.
சாதி ஒழிப்பு :-
“இரக்கம் மிகுந்தவன் மேல்பிறவி – அது,
இல்லாதொழிந்தவன் கீழ்பிறவி,
பிறப்பின் ரகசியம் இதுவல்லவா –
இதுபேசும் தெய்வத்தின் பொருளல்லவா?”
என்று பாடி சாதியில்லை என்று பிரகடனம் செய்கிறார். தொடர்ந்து,
“ஆணென்றும், பெண்ணென்றும்,
ஆண்டவன் செய்துவைத்த ஜாதியும் இரண்டேயடா –
தலைவன் நீதியும் ஒன்றேயடா என்கிறார்”.
பொதுவுடைமைத் தத்துவம் :-
“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்,
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி,
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”
என்று சமநீதிக் கொள்கையை அருமையாக விளக்குகிறார்.
உண்மையான அவமானம் :-
“வால் பிடித்தே வயிறு வளர்த்து – உயிர்,
வாழாமல் இருப்பதுமானம்,
கால்பிடித்தே கை கூப்பியே,
கண்டோரைக் கொண்டாடி, பொன்தேடவே –
தினம், காக்காய் பிடிப்பதவமானம்”
என்று வேதனையோடு பாடுகிறார் கவியரசர்.
கவிஞரின் கூற்றில் உண்மையான காதல் எது?
“இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும் –
உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும்,
வாழும் காலம் வாழும் வரைக்கும், மனது ஒன்றுபடும் –
தினம் மயங்கி மயங்கி வளரும் காதல், உலகை வென்றுவிடும்”
என்று உண்மையான அன்புடன் கூடிய காதல் எது என்று அடையாளம் காட்டுகிறார் கவிஞர்.
இன்றைய இளைஞர்களுக்கு!
“மணமாலை தனைச்சூடி உறவாடுவோர் – மனம்
மாறாமல் பலகாலம் உறவாடுவோர்
ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா – இதை
உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”
என்று இன்றைய பொய்க்காதலில் மூழ்கிச் சீரழியும் இளைஞர்களைப் பார்த்து வேதனையுடன் பாடுகிறார் கவிஞர்.
கவிஞரின் ஏக்கம் :-
“விலைவாசி ஏறாத நாடொன்று கூறுவாய்,
விரைவில் நான் செல்ல வேண்டும்!
வீறாப்புப் பேசாத அரசியலைக்காட்டுவாய்
வேதமாய் ஆக்க வேண்டும்!
கொலைகாரர் இல்லாத ஊரொன்று சொல்லுவாய்
குடியேறிப் பாhக்க வேண்டும்!
குடியைக் கெடுக்காத அரசொன்று கூறினால்,
கோசத்தில் வாழ்த்த வேண்டும்!
சிரித்துக் கெடுக்காத நபரொன்று தோன்றினால்,
தினமும் வணங்க வேண்டும்!”
என்று நாடு விளங்க வேண்டிய முறையையும், மனிதன் வாழ வேண்டிய நிலையினையும் அழகாகப்பாடுகிறார்.
இவ்வாறு மனித சமுதாய வெற்றிக்குத் தேவையான பண்புகளை தன் கவிதைகள் மூலமாகவும், திரை இசைப்பாடல்களில் மூலமாகவும் பாடிய ஓப்பற்ற கவிஞரே “என் பார்வையில் கண்ணதாசன்” ஆவார்!